காலை ஏழு மணிக்கு டவுனுக்கு செல்லும் பேருந்துக்காக முருகன் காத்துக் கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலிருந்த டீக் கடையில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த வேலுச்சாமி, முருகனைப் பார்த்து டீ சாப்பிடலாம் என அழைத்தான். தான் உடனடியாக டவுனுக்குப் போக வேண்டுமென கலவரத்துடனும், பதற்றத்துடனும் முருகன் பதில் அளித்தான். வேலுச்சாமி முருகனிடம் சென்று என்ன நேர்ந்தது என விசாரித்தான் தனக்கு இரண்டு நாட்களாக தலைவலி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும், அது பன்றிக் காய்ச்சலாக இருக்குமெனத் தான் பீதி அடைந்துள்ளதாகவும் முருகன் பதிலளித்தான். முருகனை சமாதானம் செய்ய வேலுச்சாமி, தனக்கு சுந்தர் எனும் மருத்துவ நண்பர் இருப்பதாகவும் அவரிடம் முருகனை அழைத்துச்சென்று பரிசோதனை செய்யலாம் என்றும் உறுதி அளிக்கிறான்.

இருவரும் மருத்துவரை பார்ப்பதற்கு டவுனுக்கு பேருந்தில் செல்கிறார்கள். 52 பேரை ஏற்ற வேண்டியப் பேருந்தில் 150 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து டவுனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதில் முருகனைப் போல சிலர் தும்பவும், இரும்பவும் செய்வதை வேலுச்சாமி கவனித்துக் கொண்டிருந்தான். அப்படி இரும்பி தும்பிய சிலர் கையையோ, கைக்குட்டையையோ வைத்து முகத்தை மறைக்காமல் இருந்ததையும் முகத்தில் கையை வைத்து மறைத்த சிலரும் சளித்துகள்கள் படிந்த கைகளை துடைக்காமல் அப்படியே பேருந்தில் உள்ள கைப்பிடியை பிடிப்பதை வேலுச்சாமி கவனித்துக் கொண்டிருந்தான். பேருந்தில் கூட்ட நெரிச்சல் அதிகமாகவே பயணிகள் மேலும் மேலும் நெருக்கப்பட்டார்கள். அப்பொழுது இரும்பியவர் கைப்பிடியை பிடித்த இடத்தில் மற்றவர்கள் வந்து கைப்பிடியை பிடிக்கக் கூடிய நிகழ்வை வேலுச்சாமி பார்த்துக் கொண்டிருந்தான். தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் வேலுச்சாமியும் முருகனும் இறங்கினார்கள். வேலுச்சாமி முருகனை அழைத்துக் கொண்டு மருத்துவர் சுந்தரிடம் வந்து சேர்ந்தார்.

சுந்தரை சந்தித்து முருகனின் நிலைமையைப் பற்றி வேலுச்சாமி விளக்கினான். முருகனை முழுவதும் பரிசோதித்த சுந்தர், இது சாதாரண சளி காய்ச்சல் தான் என்றும் இதற்கு சில மாத்திரைகளும், நல்ல உணவு மற்றும் ஓய்வே போதுமானது என்றும் கூறினார். தனக்கு பன்றிக் காய்ச்சல் இருக்கும் என பயம் இருப்பதாகவும் அதற்கான பரிசோதனைகனை செய்துகொள்ள பரிந்துரை செய்யயுமாறு சுந்தரிடம் முருகன் கேட்டான். இதைக் கேட்டதும் மிகவும் எரிச்சலுடன் அது அவசியமில்லை என சுந்தர் பதில் அளித்தார். அதை கவனித்துக் கொண்டிருந்த வேலுச்சாமி, பன்றிக் காய்ச்சலைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் வந்து கொண்டே இருப்பதாவும், அதிலும் குறிப்பாக நோயிருந்து குணமடைந்தவர்களைப் பற்றிய செய்திகளை காட்டாமல் சிலர் சாதாரண மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் இருப்பதாகவும், அதனைப் பொறுமையுடன் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் சுந்தரிடம் கூறினான். வேலுச்சாமியின் கனிவான வார்த்தைகளால் சமாதானமடைந்த சுந்தர், இருவரையும் தனியே அழைத்துச் சென்று விளக்கமளிக்க சம்மதித்தார்.

எச்1 என்1 (பி1,ழி1) எனும் வைரஸ் கிருமிதான் பன்றிக் காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது இதற்கு முன்பே பலமுறை இதுபோன்ற வைரஸ் தொற்று நோய்கள் உலக அளவில் பரவியும் பலரை பாதித்தும் இருக்கிறது. இந்த முறை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தக் கிருமியானது தனது மரபணுக்களை பறவைகள், பன்றிகள் மற்றும் மனிதர்களை தனித்தனியே தாக்கும் வைரஸ் கிருமியிடமிருந்து பெற்றிருப்பதன் மூலம் புதிய வகையான நோயை ஏற்படுத்தி இருக்கிறது. முதன் முதலில் மெக்ஸிகோவிலிருந்து துவங்கிய இதன் பயணம் அமெரிக்கா வழியாக 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. முதலில் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வரும் விமானப் பயணிகள் மூலம் மட்டுமே இந்த நோய் வந்து பரவ ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் கடைப்பிடித்திருந்தால் ஓரளவேனும் நம்மால் இந்த நோயை கட்டுப்படுத்தியிருக்க முடியும். அந்த சமயத்தில் நோய் அறிகுறிகள் தென்படுபவர்களை மட்டும் பரிசோதித்து, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய முறை கடைபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து பயணித்து வருபவர்களுக்கோ, அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கோ அதிக அளவில் காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் சளி வடிதல், தலைவலி, இருமல், உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, பசியின்மை மற்றும் இரத்தம் கலந்த சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பன்றிக் காய்ச்சல் இருக்கிறா என பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்கிற செய்தி, ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சில தினங்களில் ஒன்றிரண்டு மரணங்கள் சில மாநிலங்களில் நிகழ்ந்ததை விழிப்புணர்வு செய்தியாக வெளிப்படுத்தாமல், விளம்பர யுக்தியாக பயன்படுத்தியன் விளைவாக மக்கள் மத்தியில் பயம் கலந்த பீதியை ஊடகங்கள் ஏற்படுத்தின. தனியார் மருத்துவமனைகளில் அந்த வியாதிக்கு முறையான சிகிச்சை இல்லாமல் இருந்ததும் அரசு மருத்துமனைக்கு பதற்றத்துடன் அதிக எண்ணிக்கையில் வரும் மக்களை பரிசோதனை செய்ய போதிய அளவில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் இருந்ததாலும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. அதற்கு அடுத்த சில தினங்களில், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளாத உள்நாட்டு மக்களிடையே இந்த நோய் பரவ ஆரம்பித்த பிறகுதான் மத்திய அரசு தனது அணுகுமுறையில் சில மாற்றங்களை அறிவித்தது. அதாவது, மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுடன் வருபவர்களை மூன்று வகைகளாகப் பிரிப்பது. முதல் வகை, சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகளுடன் வேறு எந்த நோயும் முன்கூட்டியே இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எவ்வித பிரசோதனையும் மருந்தும் தேவையில்லை என்பதோடு நல்ல ஓய்வுடன் வீட்டிலேயே இருந்தால் போதுமானது. இரண்டாவது வகை, அதிக காய்ச்சல், தொண்டை வலியுடன் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், நுரையீரல், சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையும், மருந்தையும் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். மூன்றாவது வகை, இரண்டாவது வகையில் குறிப்பிடடவர்களுக்கு மூச்சிறைப்பு, மார்புவலி, மயக்கம், இரத்தம் கலந்த சளி, நீல நிற விரல்நகம் போன்ற அறிகுறிகளுடன் உடனடியாக பரிசோதித்து, மருந்து கொடுத்து உள்நோயாளியாக கவனிக்க வேண்டும்.

எனவே, நல்ல உடல்நிலையுடன் இருக்கும் முருகனுக்கு ஆரோக்கியமான உணவு, குடிநீர் மற்றும் ஓய்வே போதுமானது என சுந்தர் விளக்கமளித்தார். ஆனால் பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் முகஉறை அணிந்து கொண்டு பணிக்கு செல்லும் செய்தியும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை பற்றிய செய்தியும் தினமும் வந்து கொண்டிருப்பதால் சாதாரண மக்கள் பீதி அடைந்துள்ளதாகவும், இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை பெற எவ்வளவு நாளாகும் என வேலுச்சாமி சுந்தரிடம் கேட்டான்.

பொதுவாக தொற்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வெவ்வேறு ஊடகங்களின் வழியாகத்தான் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது என்றும், அதை பற்றி சற்று விளக்கமாக கூறினால் தான் புரியும் என்றும் சுந்தர் கூறினார். தண்ணீர் மூலம் பரவும் நோய்கள். வயிற்றுபோக்கு, சீதபேதி, காலரா, போலியோ, டைபாய்டு என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஒவ்வொரு நோயாலும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கனக்கானோர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். சில வியாதிகளுக்கு எதிராக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டாலும் இன்னும் பல வியாதிகளுக்கு மருந்து இல்லாமல் இருக்கக்கூடிய சூழல்தான் இருந்து வருகிறது. என்னதான் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் புதிய புதிய வியாதிகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, நீரினால் பரவும் அனைத்து நோய்களுக்கும் பொதுவாக விளங்கக்கூடிய ஊடகமான நீரினை சுத்தம் செய்து பயன்படுத்தினாலே எவ்வித மருந்தின் அவசியமும் இருக்காது. ஆகவே, நன்றாக கொதிக்க வைத்து ஆறவைக்கப்பட்டத் தண்ணீரோ, குளோரின் மருந்து கலக்கப்பட்ட குடிநீரோ அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான முறையில் கிடைக்கத் தேவையான தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு கையாலாகாத அரசு, அணு ஆற்றலை பற்றிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு மட்டும் அமெரிக்காவின் காலடியில் விழுந்து கிடக்கிறது.

அதே போல கொசுவின் மூலம் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், சிக்குன்குனியா போன்றவைகளால் பல லட்சக்கணக்கானோர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும், கொசுவை ஒழிக்க பல மருந்துகளை பயன்படுத்தியும், கொசுவினால் பரவும் நோய்களுக்கு எதிராகப் பல மருந்துகளை பயன்படுத்தியும், இருந்தாலும், கொசுவை முழுமையாக ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை தொலைநோக்குப் பார்வையுடன் பலதுறை வல்லுநர்களின் கூட்டு செயல்பாட்டின் மூலம் செய்யாமல் இருப்பதே இன்றைய மோசமான நிலைக்கு காரணம். கொசு முட்டையிட்டு லார்வா உருவாக்கும் இடத்தை கண்டறிந்து அந்த இடங்களை சரிசெய்யக்கூடிய நடவடிக்கைகள் முழு வேகத்துடன் நடைபெற வேண்டும். ஆனால், சிக்குன்குனியா போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாகும் போது மட்டும் கொசு ஒழிப்பு பற்றி பேசுகிறார்களே தவிர மற்ற நேரங்களில் அதை பற்றி கண்டு கொள்வதே இல்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் அதை மறந்தாலும் அவர்கள் பணியே நினைவூட்டும் வேலையை விழிப்புடன் மக்கள் முன்னின்று செய்யும் அளவிற்கு சூழ்நிலை மாற வேண்டும். நோய் வருவதற்கு முன்பே தற்காத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமென சுந்தர் விளக்கமளித்தார்.

தற்போது பரவிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் காற்றின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களின் சளிதுகள்கள் படர்ந்துள்ள பொருட்களின் மூலமும் பரவக்கூடிய சூழல் இருக்கிறது. எனவே, இது போன்ற நோய்களிலிருந்து விடுதலை பெற வேண்டுமானல், மக்கள்  தொகைக்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகள் 20 மாணவர்கள் கொண்டபள்ளி அறைகள், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் போதிய இடவசதிகள், கிராமங்களிலும், நகர்ப்புற சேரிகளிலும் போதிய இடவசதியுடன் அனைவருக்கும் வீட்டு வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நடவடிக்கை மூலமே தற்காத்துக் கொள்ள முடியும். இந்தப் பணிகளை மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசுதான் செயல்படுத்த முடியும். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசுகளால் ஒருபோதும் இந்தப் பணிகளை நிறைவேற்றவே முடியாது. எனவே, இன்றைய சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான சூழ்நிலையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து நாம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று சுந்தர் விளக்கமளித்தார். சுந்தரின் விளக்கத்தினை கேட்டுக் கொண்டிருந்த வேலுச்சாமியும், முருகனும், தாங்களும் அத்தகைய நோக்கத்திற்காகப் பாடுபடுவோம் என உறுதியளித்து விடைபெற்றனர்

Pin It