மீண்டும் காவல்துறை ராஜ்ஜியம் தமிழகத்தில் துவங்க ஆரம்பித்திருக்கிறதோ என ஐயம் எழுகிறது. காவல்துறையை நம்பிய ஆட்சியாளர்களெல்லாம் மக்கள் சமூகத்தால் கைவிடப்படுவர் என வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளபோதிலும் உரைக்கவில்லை ஆட்சியாளர்களுக்கு. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் காவல்துறையை முற்றிலும் சீர்குலைந்த துறை, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்த இன்றைய முதல்வர்.மாண்புமிகு. ஜெயலலிதா அவர்கள் இன்று காவல்துறைக்கு நற்சான்றிதழ்களை ஐந்தாண்டு குத்தகைக்கு விட்டுள்ளார் போலும். நான் பதவியேற்ற உடனேயே கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஒடிவிட்டனர் என பேட்டியளித்தார். ஆனால், இன்றும் குழந்தை கடத்தல், கொள்ளை, கொலை, கலவரம் என தொடரவே செய்கின்றன. என் தலைமையில் இயங்கும் காவல்துறையை யாரும் குறை சொல்லக்கூடாது என்பது மட்டுமே முதல்வரின் நோக்கமாக இருப்பின் மக்கள் இதை கட்டாயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழக காவல்துறை இயக்குநர் முதல் கடைக்கோடி காவலர் வரை அனைவரும் நான் பொறுப்பேற்ற உடனேயே நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, சிறந்தவர்களாக, உத்தம சீலர்களாக கடமை தவறாதவர்களாக மாறிவிட்டனர் என்றும், அப்படித்தான் மக்களும் நம்ப வேண்டும், எக்குறையும் சொல்லக்கூடாது எனவும் முதல்வர் நினைப்பது வியப்பாக மட்டுமல்ல வேதனையாகவும் உள்ளது.

 காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாற்றப்படும் போக்கு நாட்டின் ஜனநாயகத்துக்கும், சமூக வளர்ச்சிக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கொலை-கடத்தல் அதிகமாகி, நில மோசடி, மிரட்டி பணம் பறிப்பது போன்ற கொடுமைகளால் சாதாரண மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என மக்கள் பரிதவித்த சூழலில் காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது எனக் கேட்டால் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். அவர்கள் அனைவருக்கும் சேவை செய்து கொண்டிருந்தது என்பதே பதில். முன்னாள் அமைச்சர் பலரை தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்து இன்று விரட்டி கைது செய்யும் காவல் துறை, என்ன குற்றங்களுக்காக அவர்களை கைது செய்கிறதோ அக்குற்றங்கள் நடக்கையில் ஏன் தடுக்கவில்லை அல்லது கைது செய்யவில்லை? காரணம் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படும்போது ஏவல் துறை அவர்களுக்கு சேவைதானே செய்யமுடியும்? அது தானே நடந்துவருகிறது.

எப்போது இந்நிலை மாறும்? காவல் துறை சுயமாக செயல்பட ஆட்சியாளர்கள் வழிகாட்ட வேண்டும். ஆனால், கட்சி நலன், கட்சியினர் நலன், அதிகாரத்தில் உள்ளவர்களின் கொள்ளைக்கு பாதுகாப்பு என்று செயல்பட காவல்துறை நிர்ப்பந்திக்கப்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது தமிழகத்தில். இதனால், அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு மட்டுமல்ல, அவர்களின் உத்தரவின் படியே நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகமாகும் நிலைதான் உண்மையில் தற்போது நிலவுகிறது. ஆனால், ஆளும் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சரியாய் இருப்பதாய் கூறுவதும், எதிர்க்கட்சியாய் உள்ளபோது சீரழிந்துவிட்டதாய் கூறுவதும் தொடர் கதையானால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழக எதிர்காலம் தான்.. அந்த ஆபத்து இப்போது வரத்துவங்கியுள்ளது. குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளைக் கடத்தும் கொடூரக் குற்றங்கள், சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள், கொலையும், கொள்ளையுமான சம்பவங்கள், நில மோசடிகள் போன்ற குற்றங்கள் அதிகமாகின்றன. ஆனால், ஆட்சியில் வரும் அனைவரும் தங்களுக்குள்ள அறிக்கை விடும் அதிகாரம் மூலம் மக்கள் சுகமாக வாழ்வதாக கதைக்கின்றனர்.

 பரமக்குடி, இளையான்குடி, சிந்தாமணி ஆகிய மூன்று இடங்களில் தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும், சேலத்தில் இளைஞர்கள் மீது நடந்த கொடூர தடியடிக்கும் காரணமான காவல்துறையின் இறுமாப்பை அதிகார மமதையை முதல்வர் தொடர அனுமதித்தால் முதல் ஆபத்து அவருக்குத்தான் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையெனில், அதன் முழு விளைவையும் அவர்தான் அனுபவிக்க நேரிடும். கொள்கை என்பது ஒரு இயக்கத்துக்கு உரம் எனில் அடக்குமுறை என்பது நீருற்றுவது போலாகும். அரசே நீருற்றுகையில் இயக்கங்கள் அற்புதமாக வளரவே செய்யும். சுதந்திரப் போராட்டம் முதல் இன்று வரையான வரலாறு இதுதான். காத்திருக்கும் வரலாற்றின் செய்தியும் இதுவே தான். வரலாற்றின் விதியை மாற்றும் வல்லமை காவல்துறையின் தடிகளுக்கு கிடையாது. எனவே, அடக்குமுறையால் அழிவு என்பது அரசுக்கு தானேயொழிய இயக்கங்களுக்கும், போராளிகளுக்கும் அல்ல. யானை தன் மீதே மண் அள்ளிப் போட்டுக்கொள்வதை யானையின் மடமை என்று சொல்ல முடியாது. ஆனால், அரசு...,                                          

- ஆசிரியர் குழு

Pin It