இந்தியப் பெருநாட்டின் அரசியல், சமூக பொருளாதார வரலாறு நெடியது. தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, இலக்கியப் பாரம்பரியமும் அவ்வாறே. மாநில அளவிலும் - அகில இந்திய அளவிலும் இந்த வரலாற்றின் பக்கங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொதுவுடைமை இயக்க வரலாற்றில், விடுதலைக்குப்பின் இந்திய மக்களின் சமூக - அரசியல், பண்பாட்டு வரலாற்றில் தியாகத் தழும்பேறிய தலைவர்களின் வரலாற்று அம்சங்கள் சமீப காலமாகத்தான் முதன்முறையாகப் பதிவுகளாக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய ஒரு காவியத்தன்மை வாய்ந்த வரலாற்று நூல்தான். என்.சங்கரய்யா - வாழ்க்கையும் இயக்கமும். தொடர்ந்து இடதுசாரி கட்சி, தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாய இயக்கத் தலைவர்கள் குறித்து 65 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள என். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

என்.எஸ், என்று ஒலிக்கும் இரண்டு எழுத்துக்களால் பெருமிதமும் -தோழமையும் - அன்பும் நிறைந்து ததும்புகிற உணர்வோடு தோழர். என்.சங்கரய்யா அவர்களை அழைக்கிறோம். இப்போது 90 வயது அவருக்கு. சமீபத்தில் ‘ப்ரண்ட் லைன்’ ஆங்கில இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான விஜய சங்கர் எழுதிய அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன என்ற நூலை வெளியிட்டுப் பேசினார் சங்கரய்யா. அன்றைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் அனைவரும் கூட்டமுடிவில் வியந்தது என்.எஸ். ஸின் கம்பீரமான, சிறிதும் பிசிறற்ற, தெளிவான குரலில் அவர் ஆற்றிய உரையைத்தான்.

பொதுவாழ்க்கைக்கு அவர் வந்தது - மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்துக் கொண்டிருந்த சமயம். இறுதித் தேர்வுக்கு 15 நாட்கள் இருக்கையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் சேதப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்.

அவரை ஒரு வழக்கறிஞராக்க வேண்டுமென்று கனவு கண்டவர் அவரது தந்தை. 1911 ஆம் ஆண்டில், பம்பாய்க்குச் சென்று கொதிகலன் சட்டத்தின் கீழ் படித்து பொறியாளராகப் பணியாற்றியவர் - சங்கரய்யாவின் தந்தை நரசிம்மலு. அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் அமைப்புக்குத் தலைமையேற்று - பல போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சங்கரய்யாவோ தனது பி.ஏ படிப்பை நிறைவு செய்யாமல் தேச விடுதலை இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.

பள்ளி நாட்களிலேயே விடுதலைப் போராட்ட நிகழ்வுகளைக் காண்கிற வாய்ப்புக் கிடைக்கிறது சங்கரய்யாவுக்கு. அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் இயக்கத் தலைமை ஏற்றபின், தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் நடுவே விடுதலை வேள்வியையும், முற்போக்கான அரசியல் திசை வழியில் தன்னலமற்றுப் போராடவும் - தியாகம் செய்யவுமான பொதுவுடைமை இயக்கச் சுடரையும் ஏற்றிவைக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றில் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று போலும்.. சங்கரய்யா மாணவர் இயக்கத் தலைமையிலிருந்த போது அவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்த்துப் போராடுகையில் தடியடிகளுக்கு ஆளாகிறார்.

விவசாயிகள் இயக்கத்தில் மாவட்ட அளவில் தொடங்கி தமிழக, அகில இந்திய அளவிலான தலைமைகளை ஏற்கிறார். கட்சியிலும் அவ்வாறே மாவட்டச் செயலாளராகத் தொடங்கி மத்தியக்குழு உறுப்பினராகவும், மத்திய கண்ட்ரோல் கமிஷன் தலைவராகவும் உயர்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளும், நமது சுதந்திர அரசின் காலத்தில் 4 ஆண்டுகளுமாக எட்டாண்டுகள் சிறைவாசம், 3 ஆண்டுக் காலம் தலைமறைவு வாழ்க்கை, (இன்றைய அரசியல்வாதிகள் ஊழல், கொலை, கிரிமினல் செயல்களுக்காக 15 நாள் ரிமாண்டில் இருப்பதையே பெரிய சாதனையாக விளம்பரப்படுத்திக் கொள்ளுவதை நாம் அன்றாடம் கண்டு வரவேண்டி நேர்கிறது... இவர்களுடன் ஒப்பிடுகையில், கம்யூனிஸ்ட்டுகள் அனுபவித்த சிறைவாசமும் அடக்குமுறைகளும் - தலைமறைவு வாழ்க்கையும் எவ்வளவு உன்னதமானது.) இந்தப் புத்தகம் ‘சங்கரய்யா’ என்ற ஓர் இயக்கப் போராளியின் இயக்க வாழ்க்கையை மட்டும் சொல்லிப் போகவில்லை. அவருக்குள் இருந்து வரும் ஒரு குடும்பத் தலைவரின் கனிந்த மனதையும் படம் பிடிக்கிறது.

கலை இலக்கியங்கள், பாடல்களின் பால் அவரது எல்லையற்ற ஆர்வத்தைக் காட்டுகிறது. விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, என்னும் பாடல் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்க கலை வரலாற்றில் ஒளிரும் வைரங்களுள் ஒன்று. அதை எழுதிய ஹிந்தி பண்டிட் மணவாளனும் இசையமைத்த எம்.பி சீனிவாசனும் இன்று நம்பிடையே இல்லை. கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், இப்பாடலை கலைஞர்கள் பாடக்கேட்டு மேடையிலேயே கண்கலங்கி நின்றார் சங்கரய்யா. இதைப் படம் பிடித்துக் காட்டும் பதிவின் பின்னால் தெரிவது - இரும்பு இதயத்திற்குள் நெகிழ்ந்து கசியும் மானுட அன்பு நீரல்லவா?கிராமங்கள் தோறும் ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டுமென மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் வற்புறுத்துகிறார் சங்கரய்யா. முதல்வர் ஏற்றுக் கொண்டாலும், ஆளுநர் உரை தயாரித்து முடித்தாகி விட்டதே என மறுக்கிறார் நாஞ்சில் மனோகரன். இரண்டு வரி தட்டச்சு செய்து ஒட்டி விடலாமே என்று சட்டென்று தீர்வு சொல்லி விடுகிறார் சங்கரய்யா. அப்படியே நடக்கிறது. இன்று கிராமங்களின் மூலை முடுக்குகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவோருக்குத் தெரிந்திருக்குமா இந்த வரலாறு...?கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டதில் என்.எஸ். ஸின் பங்கு மிக முக்கியமானது. அந்த அமைப்பின் மாநாடுகளில் அவர் ஆற்றிய உரைகளின் சில பகுதிகளை அருணன் கச்சிதமாகப் பதிவு செய்திருப்பதை இப்புத்தகம் பொருத்தமாக மேற்கொள் காட்டுகிறது.

மனிதர்கள் முக்கியம், அவர்களின் பசி முக்கியம், கோதுமை தர முன்வரும் ஜெர்மனி, ரஷ்யத் தோழர்களை ஈவினிங் சூட்டில்தான் வரணும் என்று ஆடைக் கட்டுப்பாடு விதிக்கிறது. தோழர்கள் கொந்தளிக்கையில் லெனின் அமைதிப்படுத்துகிறார். நமது மக்களின் பசி தீர கோதுமை வேண்டும். பாவாடை கட்டிக் கொண்டு போனால்தான் கிடைக்குமென்றால் அதையும் செய்வோம். கலை இலக்கியங்களில் வடிவமும் - உள்ளடக்கமும் முக்கியம் என்று வலியுறுத்துகையில் சங்கரய்யா சொல்லும் உவமை இது!புராட்டஸ்டண்ட் மதத்தவரான நவமணியைக் கரம் பற்றியவரான சங்கரய்யா இயக்க வாழ்க்கை நெடுகிலும் கனிவும் நெகிழ்ச்சியும் மிக்க குடும்பத்தலைவராக இருந்து வந்திருப்பது புத்தகத்தின் ஈரம் நிறைந்த பக்கங்கள்.

அயல்நாட்டுப் பயணங்கள், சிறைவாசம், சட்டமன்றத்தில் நடத்திய சமரசமற்ற அரசியல் பயணம், கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் ஆற்றிய பணிகள், மதுரைச் சதி வழக்கில் சிறைப்பட்டது, விவசாயிகள் இயக்கப் பணி - இப்படி படிக்கப்படிக்க விசுவரூபமெடுத்து நிற்கிறது சங்கரய்யாவின் வாழ்க்கைச் சித்திரம்.

கையூரின் வீர இளைஞர்கள் கண்ணனூர்ச் சிறையிலிருந்த போது இவரும் அதே சிறையில் இருந்த நினைவுகள் எப்படி அழியும்? அதேபோல மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய அன்றைய 32 தலைவர்களுள் இன்று தோழர்.

வி.எஸ். அச்சுதானந்தனும், சங்கரய்யாவும் மட்டுமே நம்பிடையே இருக்கிறார்கள் என்பது மற்றொரு மகத்தான செய்தி. வாசித்து மனதில், நாடி நரம்புகளில், இதயத்தில் பதியவைத்து பின்பற்றி நடக்கவும் வேண்டிய வரலாறு!

ஆசிரியர். என். ராமகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம், எண். 421 அண்ணாசலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. பக்கங்கள்: 192+4, விலை ரூ. 90/-

Pin It