வெனிசுலாவில் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க (அசா) நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாடு நடந்துள்ளது. 49 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும், 12 தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இடைவெளியை நிரப்புதல், வாய்ப்புகளை உருவாக்குதல் என்பதுதான் இந்த உச்சிமாநாட்டின் முழக்கமாகும். அமெரிக்காவை (யு.எஸ்) மட்டுமே நம்பியிருந்த ஆப்பிரிக்க நாடுகள் புதிய, புதிய பாதைகளைத் தேட இந்த உச்சிமாநாடு உதவுகிறது.

தென் அமெரிக்க நாடுகள் ஏற்கெனவே செய்திருந்த முடிவின்படி தெற்கு வங்கி உருவாக்கத்தை இந்த உச்சிமாநாட்டில் துவக்கிவிட்டார்கள். அர்ஜெண்டினா, சிலி, பொலிவியா, பிரேசில், உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்த வங்கியை ஆரம்பித்துள்ளார்கள். இதில் வெனிசுலாவின் பங்கு மட்டும 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கப்போகிறது. இதன் தலைமையகம் வெனிசுலாவின் தலைநகர் காரகாசில் அமைகிறது. மேலும் பயனோஸ் அயர்ஸ் (அர்ஜெண்டினா) மற்றும் லா பாஸ் (பொலிவியா) ஆகிய இடங்களில் தலா ஒரு கிளையும் அமைகின்றன.

வங்கியைத் துவக்கி வைத்து உரையாற்றிய வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், நாம் இதோடு நின்று விடக்கூடாது. அசா வங்கியை உருவாக்கியே தீர வேண்டும் என்றார். மாநாட்டில் பங்கேற்ற பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் இதை ஆமோதித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க யூனியன் மாநாடு நடக்கையில் அவர்கள் விவாதித்து முடிவு செய்வார்கள்.

அப்படி என்ன இந்த வங்கியில் உள்ளது..? கிட்டத்தட்ட எல்லா ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுமே உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) ஆகிய இரண்டின் கைகளிலும் சிக்கிச் சின்னாபின்னமானவைதான். இனி அந்த திருதராஷ்டிர ஆலிங்கனத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றுதான் தங்களுக்கென்று ஒரு வங்கி ஆலோசிக்கிறார்கள். அதனால்தான் ஆப்பிரிக்க நாடுகளின் ஒவ்வொரு தலைவரும் கூறுகிறார்கள், இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு என்று.

மனித சமூகமே அஞ்சும் கொடுமைகள்

நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை குண்டு போட்டுத் தகர்த்துள்ளார்கள். முட்டை உற்பத்தி நிலையங்களை அழித்துள்ளார்கள். விவசாய நிலங்களை தரைமட்டமாக்கியுள்ளார்கள். 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளார்கள். இதெல்லாம் பாலஸ்தீனிய காசாப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் செய்த அட்டகாசம்தான். இது ஒன்றும் காசாப்பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் சாட்டிய குற்றச்சாட்டல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கைதான் இஸ்ரேல் ராணுவத்தின் கொடுரங்களைப் புட்டு புட்டு வைக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று துவங்கி, நடப்பாண்டு ஜனவரி 18 ஆம் தேதி வரையில் காசா மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்திருந்தது. இது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிச்சர்டு கோல்டுஸ்டோன் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா.சபை நியமித்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு மனித சமூகத்திற்கே எதிரான கொடுமைகளை இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது என்று ரிச்சர்டு கோல்டுஸ்டோன் கூறுகிறார்.

வழக்கம் போல இந்த ஆய்வறிக்கையும் பாரபட்சமானது என்று இஸ்ரேலும், அதற்கு முட்டுக்கொடுத்து நிற்கும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிரானவர் என்ற ரிச்சர்டு கோல்டுஸ்டோனை நீக்கி இந்த நாடுகளின் விரல்கள் நீளுகின்றன. இது குறித்து கோல்டுஸ்டோனிடம் கேட்டபோது, காசாவைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலிய அப்பாவிகள் மீது கொடுரமான தாக்குதல்களை நடத்தியது. அது பற்றி ஏன் வாயைத் திறக்க மாட்டேனென்கிறார்கள் என்று என்னை நோக்கி அமெரிக்கா கேள்வி எழுப்புகிறது.

இந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது இஸ்ரேலிடம்தான். இஸ்ரேலுக்குள் சென்று விசாரிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. அப்புறம் எப்படி என்னால் மாற்றுத்தரப்பினர் கொடுமைகளை செய்தார்கள் என்று கூற முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார்.

செருப்பாஸ்திரம்

நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் எல்லாம் விட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறிப்போய் மனித சமூகம் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டு என்று தளவாடங்களில் பெரும் மாற்றத்தைக் கண்டுவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு பிரிவுபச்சார பயணமாக இராக் வந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட காலணி பல மக்கள் விரோத தலைவர்களின் கனவுகளில் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் இந்த அஸ்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது என்றாலும் எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக செருப்பாஸ்திரம் பயன்படத் துவங்கியுள்ளது. துருக்கியில் உள்ள பில்கி பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் சமீபத்திய இலக்காக இருந்திருக்கிறார். மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, ஐ.எம்.எப். வெளியேறு என்றொரு சிம்மக்குரல் கேட்டது. அந்தக்குரல் கம்மும் முன்பாகவே குரலை எழுப்பியவரின் கைகளிலிருந்து செருப்பாஸ்திரம் விடுபட்டு ஸ்டிராஸ்கானை நோக்கிச் சென்றது.

அவரது பையை சோதனையிட்ட காவல்துறையினர் மற்றொரு பேரழிவு(!) ஆயுதத்தை அந்தப் பையிலிருந்து எடுத்தார்கள். முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கக் கிளம்பியுள்ள கம்யூனிசத்தத்துவ நூல் ஒன்று அவரது பையில் இருந்திருக்கிறது. அதே அறையில் மற்றொரு பெண்ணும் ஐ.எம்.எப் வெளியேறு என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஒரு பதாகை ஒன்றை விரிக்க முயன்றார். இருவரையும் காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். குறி தவறியது. ஆனால் செல்சுக் ஒஸ்பெக் என்ற அந்த மாணவப் பத்திரிகையாளர் சொல்ல வந்த செய்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது.