தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் இனியாவது நியமனங்கள் சரியாக முறையாக நடக்குமா?

நீங்களாக அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியாது. யாரும் சொல்லாமல் தாமாக நினைத்துக்கொள்வது, பின்னர் அய்யோ ஏமாந்துட்டோமே என புலம்புவது, சரி அவரு திருந்திருப்பாரு, எனவே அவராவது வந்து சரி செய்யுறாரான்னு பார்ப்போம்னு தேத்திக்கிறது. இப்படியே தான் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளும் கடந்திருக்கிறது. தலைமுறைகள் மாறினாலும் நம்பிக்கைகளும், தவறுகளும் மீண்டும் மீண்டும் தொடரவே செய்கின்றன.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். இது தான் தமிழக அரசியல். இதில் யாரு மருமகள், யாரு மாமியார்னு நீங்கள் கேட்கக்கூடாது. ஆட்சியில் இருப்பவர் மாமியார் அவ்வளவுதான்.

கடந்த ஆட்சியில் 3484 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வில் 10 லட்சம் பேர் எழுதினார்கள். 6695 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 405 பேர் எழுதினார்கள். வினாத்தாள் வெளியீடு உட்பட ஏராளமான குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன. ஆனால், அரசு நடவடிக்கை எடுப்பதாக பாவனை கூட காட்டவில்லை. தற்போது, திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அத்தேர்வாணையத் தலைவர் மற்றும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் வீட்டில் அதிமுக ஆட்சியில் சோதனை நடந்திருக்கிறது. அவ்வளவுதான் தற்போதைய செய்தி.உடனே, அவசரப்பட்டு இனி தேர்வாணைய தேர்வுகள் முறையாக நடக்குமா, நியமனங்கள் முறையாக இருக்குமா என இப்போது கேட்கக்கூடாது. இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறையின் கீழ் வராத இத்துறை இப்போது அத்துறையின் கீழ் வந்திருக்கிறது அவ்வளவுதான். உடனே, லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ் ஏற்கனவே உள்ள துறைகளில் எல்லாம் லஞ்சமே ஒழிக்கப்பட்டுவிட்டதாக உணர்ச்சிவசப் படக்கூடாது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பது மட்டுமல்ல தீர விசாரிப்பது கூட மெய்ன்னும் நம்பிடக்கூடாது என்பதுதான் தமிழக அரசியல். காத்திருந்து காலத்தால் அறிவது மட்டுமே மெய்யாகும்.

ரூ.30,984 கோடி மோசடி, ஊழல், ஏமாற்று, நம்பிக்கை மோசடி என சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு வழக்குமேல் வழக்கு போடப்பட்டு பல மாதமாக இந்தியாவின் முன்னணி சிறைச்சாலையில் இருப்போரை நிரபராதிகள் எனக்கூறி வாதாடுவோர், ரூ.65 கோடி ஊழல் வழக்கில் உள்ளோரை குற்றவாளிகள் எனக் கூறுகின்றனர். நான் வளர்கிறேனே மம்மி என்பதுபோல் இங்கு ஊழல் தொகை என்பது காலத்திற்கு ஏற்ப காம்ப்ளான் குடித்து வளர்ந்திருக்கிறது அவ்வளவுதான். தொகை அதிகம்-குறைவு என்பதால் வாதாட வாய்ப்புகளை இருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், என்ன நடக்கிறது? அவரை குடும்பத்துடன் கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று கூறுவோர், தங்கள் மேலுள்ள வழக்குக்கு நீதிமன்றம் செல்லக்கூட விரும்புவதில்லை. அவர் ஊழல் செய்தால் அது ஊழல். அதுவே எனக்கு என்றால்... அது பொய்க் குற்றச்சாட்டு.. அவ்வளவுதான். இதில் நேர்மை, நீதி, உண்மை என நீங்கள் தேடினால், தேடியவரை நாம் என்னவென்று சொல்வது?

ஒரு நாள் வழக்கு விசாரணைக்கு சென்று வந்த செலவு என்ன தெரியுமா? பாதுகாப்பு கொடுத்த கர்நாடக காவல்துறைக்கு மட்டும் ரூ.30 லட்சமாம். அப்படின்னா, தமிழக காவல்துறைக்கு எவ்வளவு செலவாகியிருக்கும்? பாதுகாப்புக்கே அவ்வளவுன்னா, தனி விமானத்தில் போனதற்கும், 26 வாகனங்களில் சென்றதற்கும் என மொத்தச் செலவைப் பார்த்தால் விசாரணையின் செலவு 14 வருடத்தில் எவ்வளவு ஆகியிருக்கும். “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சலை” என்பதை “ஊழல் வழக்கை கணக்கு பார்த்தால் ஊழல் தொகையே தேவலை” என தமிழகப் பழமொழி கூறும். அவ்வளவு தான்...

Pin It