‘வள்ளல்’ என்பது பொதுவாகக் கொடையாளர்களைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் ‘வள்ளலார்’ என்று கூறினால், அது சிறப்பாக வடலூர் இராமலிங்க அடிகளையே குறிக்கும். காலந்தோறும் அருளாளர்கள் தோன்றித் தமிழையும், சமயத்தையும் வளர்த்து வந்துள்ளனர். திருவள்ளுவர், திருமுறை ஆசிரியர்கள், தாயுமானவர், இப்படி அருளாளர் மரபு வாழையடி வாழையாக வளர்ந்து, செந்தமிழையும், சிந்தனைச் செல்வத்தையும் செழித்து வளர்க்கச் செய்துள்ளது. அதே மரபில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிச் சமரச சன்மார்க்க நெறியை வளர்த்தவர் ‘இராமலிங்க அடிகள்.’

வள்ளலார் தம் தாய்மொழியாகிய தமிழின் இனிமையையும், மனத்தால் அறிதற்கரிய நுண்பொருள்களையும், சொற்களின் புலப்பட வைக்கும் எளிமைத் திறனையும் உலகுயிர்களை இயக்கும் பரம்பொருளையும் போற்றிப் பரவுதற்கினிய தெய்வத்திறத்தினையும் நன்குணர்ந்த செம்புலச் செல்வராவார்.

இக்காலத்தில் கற்றோரேயன்றி மற்றோரும் எளிதில் புரிந்து படித்துணர்ந்து மகிழ்தற்குரிய வண்ணம் சொல்லின் எளிமையும் பொருளின் தெளிவும் உடையவனவாக வள்ளலாரின் திருவருட்பாப் பாடல்கள் அமைந்திருப்பது தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கம் தருவதாகும்.

வள்ளலார் தமிழ்மொழியிடத்து அழுத்தமான பற்று வைத்திருந்தார். தமிழ் வள்ளலாரின் தாய்மொழி. ஆனால் அதற்காக மட்டுமே அவர் தமிழ்மொழியின் பால் பற்றுக் கொண்டிருந்தார் என்று சொல்ல இயலாது. தமிழின் அருமை பெருமைகளை அறிந்தே அதனைக் காதலித்தார். வள்ளலாரின் குறிக்கோள் சாவாக் கல்வியைப் பெறுவதாகலின், அத்தகைய கல்வியைத் தரும் ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டென்பது வள்ளலாரின் நம்பிக்கை. அது காரணமாகவும் தமிழின்பால் ஆழ்ந்த பற்றுக் கொண்டார். தமிழைத் தமக்குத் தாய்மொழியாகத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துபவர் போல,

vallalar“இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது, பயிலுதற்கு மறிதற்கும் மிகவும் லேசுடையதாய்ப் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவுமினிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசிலறிவதாய்த் திருவருள் வலத்தாற் இடைத்த தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்”

என்று விண்ணப்பம் செய்கின்றார்.

வள்ளலாரின் தமிழ்ப்பற்று

ஆயிரமாயிரம் பக்திப் பாடல்களை வடமொழிச் சொற்கள் அதிகம் கலவாத தமிழிலேயே இயற்றியுள்ளார், வள்ளலார். அதற்குக் கீழ்வரும் பாடல் சான்று:

“கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும் வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிகழ் கனிந்த கனியே,

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே

உகந்த தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்த மண மலரே”

“மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே

மென்காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசே என அலங்கல் அணிந்தருளே”

இராமலிங்க வள்ளலார், தமிழ்மொழியின் பால் தமக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலால்,

“பற்றுஞ்செழுந் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும்

குற்றங் குணமாகக் கொள்ளுங் குணக்கடலே” என்றும்,

"... மெய்யடியார் சபை நடுவே

எந்தை யுனைப்பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளி

செந்தமிழில் வளர்க்கின்றாய்”

என்றும் பாடியுள்ளார்.

இசைத்தமிழ் வளர்த்தவர் வள்ளலார்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இசைத்தமிழ் வளர்த்த பெரியார்களுள் தலைசிறந்து விளங்கியவர் வள்ளலார். தமிழ்மொழியில் இசைப்பாடல்கள் இல்லை என்று சொல்வோர் இன்றுமிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இசைப்பாடல்கள் பலவற்றை வள்ளலார் தமிழில் இயற்றினார் என்றால் அதனைத் தமிழ் வளர்ச்சிக்குரிய தொண்டு என்று தானே சொல்ல வேண்டும்.

வள்ளலார், இறைவழிபாட்டின்போது இசைக்கருவி கொண்டு ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வதை அடியோடு வெறுத்தார்.

“நவின்றசங் கீதமும் நடமும்

கண்ணுறக் கண்டு கேட்ட அப் போதும்

கலங்கிய கலக்கம் நீ அறிவாய்”

என இறைவனை நோக்கிப் பாடிய அவரே,

“ஆண்டவரை நமது வாயினால் வாயார வாழ்த்துவது தவிர, பிறரைக் கொண்டு வேறு பாஷைகளில் அர்த்தம் விளங்காமல் அர்ச்சனை முதலியன செய்தல் அவ்வளவு முறையானதல்ல” என்றார் வள்ளலார். பண்ணோடு கலந்து பாடுகின்ற இசைஞானமும் வள்ளலாருக்கு இருந்ததென்று சொல்லப்படுகிறது. அவர் இயற்றிய இசைப்பாடல்களே இதற்குச் சான்றாகும்.

வள்ளலாரும் வடமொழியும் (சமஸ்கிருதம்)

வள்ளலார், சமஸ்கிருத மொழியில் திறமான புலமை பெற்றிருந்தார். அம்மொழியிலுள்ள வேதங்களையும் சாத்திரங்களையும் பொருள் மயக்கம் தோன்றா வண்ணம் பழுதறப் பயின்றிருந்தார். இதனை, “ஓது மறைமுதற்கலைகள் ஓதாமல் உணர, உணர்விலிருந்துணர்த்தி அருள் உண்மை நிலைகாட்டி” அவர் பாடிய பாடலிலிருந்து அறிகிறோம்.

வள்ளலார், “ஆரிய மொழி” எனப்படும் சமஸ்கிருதத்தை, “இடம்பத்தையும், ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் பொழுதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற மொழி” என்று கூறியிருப்பதை, அவருக்குப் பின்வந்த விவேகானந்தரும் அங்கீகரிக்கின்றார், என்பதை ம.பொ.சிவஞானம் கூறியிருக்கிறார் (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ப,302).

வள்ளலார் வடமொழி பயில்வதிலுள்ள இன்னல்களை வெறுப்புக் கலந்த உணர்ச்சியுடன் விமர்சித்தது, அம்மொழியிலுள்ள தத்துவக் கலைகளை, தருமநீதிக் கருத்துக்களை முற்றிலும் புறக்கணிக்குமாறு தூண்டியதாகாது. அவற்றையெல்லாம் தமிழின் வாயிலாகப் பயில வேண்டும் என்று கூறியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். உண்மையும் அதுதான். வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல், மகாதேவமாலை, ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை வடமொழி நூல்களிலுள்ள தத்துவங்கள் - நீதிகள் முதலியவற்றைப் பிழிந்தெடுத்த சாறு என்றே சொல்லலாம் என்று ம.பொ.சி. கூறுகிறார் (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ப-306).

வடமொழிக்கும் தென்மொழிக்கும் இடையே சமநிலையில் சமரசத்தை விரும்பினார் வள்ளலார். வடலூரில் தாம் நடத்தி வந்த சாஸ்திர பாடசாலையில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளையும் நடத்தினார். சன்மார்க்க சங்கத்தாருக்கு இம்மொழிகளை கற்பிக்க ஏற்பாடு செய்தார் வள்ளலார்.

தமிழ் -- தந்தைமொழி

வள்ளலார் சென்னையில் வசித்த காலத்தில் சங்கராசாரிய சுவாமிகள், வடமொழி நூலொன்றில் தமக்குள்ள சில ஐயங்களைத் தெளிவித்துக் கொள்ளக் கருதி தக்க வித்துவான்கள் உளரோவென வினவ, ஓர் அந்தணர் வள்ளலாரைப் பற்றிக் குறிப்பிட்டார். சங்கராசாரியாரும் வள்ளலாரைக் காண விரும்பி அழைத்தார்.

வள்ளலார், தமது மாணவன் தொழுவூர் வேலாயுத முதலியாரையும் உடனழைத்துச் சென்றார். சற்றுநேரம் அளவளாவிய பின் சங்கராசாரியார் அவ்வடமொழி நூலை அடிகளிடம் கொடுத்து தமது ஐயங்களை விளக்க வேண்டினார். வள்ளலார் அந்நூலின் உரிய ஏடுகளை ஒரு முறை திருக்கண்ணோட்டம் செய்து வேலாயுதனாரிடம் கொடுத்து “நீர் சொல்லும்” எனப் பணித்தருளினார்கள். வேலாயுதனார், வள்ளலாரின் ஆணை ஏற்று, அப்பகுதியை விரிவாக விளக்கினார். சங்கராசாரியருக்கு இருந்த ஐயங்கள் அகன்றன. சந்தேகம் தெளிவித்த நிகழ்ச்சி முடிவில் சங்கராசாரியார், உலக மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி (மாத்ருபாஷா) என்று கூறினார். வள்ளலார் சங்கராசாரியார் கூறியதை மறுத்துப் பேசாது தன் கருத்தையும் நிலைநாட்டி, சமஸ்கிருதம் தாய் மொழியெனில் தமிழ் மொழியை “தந்தைமொழி” (பித்ருபாஷா) என்று கூற வேண்டும் என்று அவருக்கு பதில் கூறினார்.

மேலும், தமிழின் மேன்மையைப் பற்றியும் அதனால் அடையக் கூடிய ஞானம் பற்றியும் சங்கராசாரியருக்கு எடுத்துக் கூறி ஒரு நீண்ட உரையே நடத்தினார் வள்ளலார்.

தமிழ் தந்தை மொழி மட்டுமல்ல. “ஆண்மை” மொழி என்கிறார் வள்ளலார். வள்ளலார், தமிழை தந்தைமொழி என்று கூறியிருப்பதன் பொருள் மிக ஆழமானது. ஒரு பெண் ஆண் உதவியில்லாமல் தாயாகிவிட முடியாது; கன்னியாகவே இருப்பாள். ஆனால் பெண் உதவியில்லாமல் ஆண் ஆணாகவே இருந்துவிட முடியும். அது போலவே எந்த மொழியின் உதவி இல்லாமலேயே தமிழ்மொழி தனித்து வாழ்ந்து செழிக்க முடியும். எனவே தான் தமிழை “ஆண்மைமொழி” என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.

இலக்கணம் மாற கவிதை புனைந்தவர் வள்ளலார்

வள்ளலார் தம் பாடலிற் பயன்படுத்திய மொழிநடை கற்றோர், கல்லாதோர் ஆகிய எல்லாரும் புரிந்துகொள்வதற்குரிய எளிமையும், இனிமையும் ஒருங்கு அமையப்பெற்றதாகும். உலக வழக்கில் மக்களால் பேசப்படும் மொழி நடையினை அவ்வாறே செய்யுளாக யாத்தமைக்கும் யாப்பின் திறன் வள்ளலார்க்கு இயல்பாகவே கைவந்த கலைத்திறமாகும்.

மக்களுக்குப் புரியாத சொற்களை வலிந்து சேர்த்து அரிதுணர் பொருளவாய்ச் செய்யுட்களைப் பாடும் ஏனைய புலவர்களைப் போலன்றி, உலகில் இயல்பாக வழங்கும் மொழி நடையினைச் சீரும், தொடையும் சிறக்க, தன்மை, உவமை, உருவகம் முதலிய அணிநலன்கள் அமைய இயல்பாகவே பாடலியற்றும் பாவவன்மையினை இறைவன் திருவருளால் பெற்ற அருட்பாவலர் இராமலிங்க வள்ளலார் ஆவர். அவர் பாடிய பாடல்களில் மோனை, எதுகை, முரண், இயைபு முதலிய தொடை நயங்களும் சொல்லும், பொருளும் பற்றிய அணிநயங்களும் இயல்பாகவே அமைந்துள்ளன என்பது திருவருட்பாப் பனுவல்களைப் படித்து மகிழும் நண்பர்களுக்கு புரியும்.

வள்ளலார் அருளிய பாடல்களில் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப்பாக்களும், தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்களும், வண்ணம், சந்தம் பற்றிய யாப்பு வகைகளும், கண்ணி, கும்மி, சிந்து, கீர்த்தனம், நாமாவளி முதலிய இன்னிசைப் பாடல்களும், தலைவியும் தோழியும் உறந்து கூறுவனவாகவும், தலைவனும் தலைவியும் உறந்து கூறுவனவாகவும் நாடக அமைப்பில் அமைந்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளமை காணலாம். இவை, வள்ளலார் தமிழ்மொழிக்கு அளித்த அணிகலன்கள் எனலாம்.

தமிழைப் போற்றுகிறார் வள்ளலார்

தமிழ், தெய்வத்திறம் பேச ஏற்றமொழி

தமிழ், இறைவனுக்கு உவப்பான மொழி

தமிழ், மனத்திற்கு அமைதி தருவது.

தமிழ், நவீனத்தை ஏற்படுத்தும்.

தமிழ், இலக்கிய நயம் மிக்கவை.

தமிழ், ஆன்ம ஞானக் கல்வியை தருவது,

தமிழ், மொழியே அதிசுலபமாக சுத்த சிவானுபூதியை கொடுக்கும்.

தமிழ் தனித்தியங்கும் மொழி, மொழிகளுக்கெல்லாம் தந்தைமொழி,

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்தது.

தமிழில் ஆரவாரம் இல்லை.

தமிழில் பிரயாசை இல்லை.

தமிழ் மறைப்பில்லாதது,

உள்ளதை உள்ளபடி உணர்த்துவது.

தமிழ் பாடுவதற்கு மிகவும் இனிமையுடையது.

தென்தமிழும் வடமொழியும் ஓதாதுணர்ந்த இராமலிங்க வள்ளலார் வடமொழி முதலிய பிறமொழிகளுக்கில்லாத எளிமையும், தெளிவும் வாய்ந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் குடும்பத்தில் தம்மைப் பிறப்பித்தருளித் தென்மொழியால் தம்மைப் பாடுவித்தருளிய இறைவனது பெருங்கருணைத் திறத்தினை நினைத்து எல்லாம் வல்ல இறைவனை உள்ளம் கசிந்து போற்றுகிறார் வள்ளலார்.

வள்ளலார் தமிழ்ப் பற்றை அரித்தாரில்லை

கவிச்சக்கவர்த்தி கம்பனுக்குப் பிறகு அவரைவிட அதிகமான பாடல்களைப் பாடிய பெருமைக்குரியவர் வள்ளலார் ஆவார். ஏராளமான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும், மாந்தர் எவரையும் மறந்தும் பாடாத மாண்பு அவருக்கே உரியதாகும். வள்ளலார் தொடங்கிய பல அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கிய பெரியவர்களைக் குறித்துக் கூட அவர் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்மொழியைப் பற்றி வள்ளலாருக்கிருந்த கருத்துக்கள் சமயம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் காணப்படுகின்றன. “மொழிசார்ந்த சுய மரியாதையானது” வள்ளலாருக்கு இயல்பாகவே இருந்தது. அதனால் தான் அவர் தமிழ் குறித்து பல்வேறு கருத்துக்களை துணிந்து உரைக்க முடிந்தது. தமிழைத் தாழ்த்திப் பேசிய அன்றைய நிலையில் தமிழுக்காகக் குரல்கொடுத்த ஞானியாக அவர் திகழ்ந்தார். ஆனால் வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே தமிழே தொன்மையானது, சிறந்தது அதிலிருந்துதான் உலக மொழிகள் யாவும் கிளைத்தன என்னும் கருத்தை வெளியிட்டார். “பற்றற்ற பரமஞானியாகிய” வள்ளலார் தமிழின் மாட்டுத் தணியாத பற்றுக் கொண்டிருந்தார். அகப்பற்று, புறப்பற்று இரண்டையும் அறவே அறுத்த வள்ளலார் தமிழ்ப்பற்றை அரித்தாரில்லை. வள்ளலார் மற்றெல்லாப் பற்றுகளைத் துறந்தும் தமிழ்ப்பற்றை துறந்தாரிலர். (பழ.நெடுமாறன், வள்ளலார் மூட்டிய புரட்சி, பக்.59-60).

தமிழ் உரைநடைக்குப் புதுவாழ்வு கொடுத்தார் வள்ளலார்

19-ஆம் நூற்றாண்டில் தமிழ் உரைநடைப் பகுதிக்குப் புதுவாழ்வு அளித்த பெரியார், மூவராவர். அவர்கள் இராமலிங்கர், யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலர், மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோராவார். இந்த மூவரும் சமகாலத்தவர் என்பதோடு, சற்றேறக்குறைய சம வயதினராகவும் இருந்தனர். நாவரைவிட வயதில் பத்து மாதம் இளையவர் வள்ளலார். வள்ளலாருக்கு மூன்று ஆண்டுகள் இளையவர் வேதநாயகம்பிள்ளை.

வள்ளலார் காலத்தில் தமிழ் உரைநடை போதிய அளவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அந்தக் குறையை அகற்றி, அதிலும் தமிழுக்குப் புதுவாழ்வு தரப்பணிபுரிந்தார் ஓதாதுணர்ந்த வள்ளல் பெருமான்.

வள்ளலார், “மனுமுறை கண்ட வாசகம்” என்ற உரைநடை நூலை 1854-இல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர், உரைநடை நூல் வெளியிடத் தொடங்கியது 1856-ஆம் ஆண்டுக்குப் பிறமாகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமது மொழிபெயர்ப்பான உரைநடைத் தமிழ் நூலை 1862-ல் தான் வெளியிட்டார். ஆகவே உரைநடைத் தமிழை வளர்த்த பெரிமைக்குரிய மூவரும் நம் இராமலிங்கப் பெருமானே முதல்வராக மற்ற இருவருக்கும் வழிகாட்டியாக நின்றார் எனலாம்.

உரைநடையில் வள்ளலார் இயற்றிய முதல் நூல் “மனுமுறை கண்ட வாசகம்” ஆகும். பாமர மக்களும் படித்துச் சுவைக்கத்தக்க வகையில் எளிமையும் இனிமையுமுடையதாகும் மற்றும் “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்ற வள்ளலாரின் அடுத்த உரைநடை நூல், அவருடைய உரைநடையின் வளத்தை காட்டுகிறது.

அடிகளார், அவர் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களால், முத்தமிழ் வல்ல ஞானாசாரியர் என்று அழைக்கப்பட்டார். (ம.பொ.சி. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பக். 310-313).

வள்ளலாரின் வெளிவராத உரைநடை நூல்கள்

உரைநடையில் தத்துவ நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் வள்ளலார். அந்த நூல்களின் பெயர்களையும் பட்டியலிட்டு தொகுத்தார். அந்தப் பட்டியலைத் தொகுத்துத் திருவருட்பா முதல் ஐந்து திருமுறை வெளியீட்டிலேயே விளம்பரப்படுத்தியிருந்தார். அந்த பட்டியல் வருமாறு:

(1)          கலாந்த விளக்கம்     

(2) யோகாந்த விளக்கம்

(3) நாதாந்த விளக்கம்  

(4) போதாந்த விளக்கம்

(5) வேதாந்த விளக்கம்  

(6) சித்தாந்த விளக்கம்

(7) அண்ட விளக்கம்    

(8) பிண்ட விளக்கம்

(9) சுத்தசிவராஜ்யம்     

(10) பரம சிவராஜ்யம்

(11) மந்திரக்கொத்து     

(12) மகாவாக்கிய வகை

(13) பொதுவேதம் 

(14) தத்துவ விருத்தி

(15) பிரகிருதி வித்தி    

(16) இயல்வகை

(17) அளவை வகை     

(18) ஞான வகை

(19) இலக்கண விருத்தி 

(20) தருக்க விருத்தி

(21) தென்மொழி விளக்கம்    

(22) வடமொழி விளக்கம்

(23) கலை மரபு

இந்த நூல்கள் எல்லாம் வள்ளலார் வெளியிட்டு முடித்திருந்தால் சமயத்துறையில் குறிப்பாக தத்துவக் கலைகளில் தமிழ்மொழி பல படிகள் முன்னேறியிருக்க முடியும். குறிப்பாக, வடமொழி விளக்கம், தென்மொழி விளக்கம் என்ற இந்த இரண்டு நூல்களேனும் வெளிவந்திருந்தால், அந்த இருமொழிகள் பற்றிய ஆராய்ச்சி அறிவு வளர்ச்சி பெற வாய்ப்புக் கிடைத்திருக்கும், தமிழின் துரதிருஷ்டம் அவை வெளிவருவதற்கு முன்பே, வள்ளலார் மறைந்து விட்டார்.

வள்ளலார் பல்வேறு உரைநடை நூல்களையும், கட்டுரைகளையும் படைத்திருக்கிறார். அவை யாவன.

1) உரைநடை நூல்கள்

1. மனுமுறைகண்ட வாசகம்

மனுநீதிச் சோழனின் வரலாற்றைக் கூறும் நூல் இது. உள்ளத்தை உருக்கும் பாடல்கள் கொண்டது.

2. ஜீவ காருண்ய ஒழுக்கம்

கொல்லாமை, புலால் மறுத்தல், உயிர்களினிடத்துக் காட்ட வேண்டிய அன்பு, பசிப்பிணி போக்குதல் என்பது பற்றி விளக்கிக் கூற எழுந்தது இந்நூல்.

2) வியாக்கியானங்கள்

1.            வேதாந்த தேசிகர் குறட்பா உரை

2.            பொன் வண்ணத்தந்தாதி 22ஆம் செய்யுள் உரை

3.            ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி

4.            “உலகெலாம்” எனும் மெய் மொழிப் பொருள் விளக்கம்

5.            தொண்ட மண்டல சதகம்

6.            “தமிழ்” என்னும் சொல்லிற்கான உரை

3) உபதேசங்கள்

1.            சுப்பிரமணியம்

2.            உபதேசக் குறிப்புகள்

3.            அருள் நெறி

4.            திருவண் மெய் மொழி

5.            பேருபதேசம்

6.            அனுஷ்டான விதி

7.            செவ்வாய்க் கிழமை விரதவிதி

8.            கணபதி பூஜா விதி

9.            நித்திய கரும விதி

4)            மருத்துவக் குறிப்புகள்

1.            மூலிகை குண அட்டவணை

2.            மருத்துவக் குறிப்புகள்

3.            சஞ்சீவி மூலிகைகள்

இது போக சமரச சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம், பெரு விண்ணப்பம், சன்மார்க்க சங்கத்தினருக்குக் கட்டளைகள், அழைப்புகள், அறிவிப்புகள், அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்.

சன்மார்க்க நெறிகண்ட இராமலிங்க வள்ளலார், பாட்டும் உரையுமாக வளர்த்த செந்தமிழ், சாதி சமய வேறுபாடற்ற நிலையில் உலக மக்கள் எல்லோரையும் ஒரு குடும்பத்தாராக அன்பினால் ஒத்துவாழும் முறையில் ஒன்றுபடுத்தும் ஆற்றல் வாய்ந்ததாகும். உலக மக்களில் ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் வேறுபாடின்றி ஒற்றுமையுணர்வினராகி உலகியலாட்சியை நடத்தும், உரிமை வாழ்வினைத் தரும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

தமிழ் உரைநடையில் பல்வேறு விண்ணப்பங்கள் எழுதி வெளியிட்டார், “விவேக விருத்தி” என்னும் பத்திரிகை ஒன்றினைத் தொடங்கினார். “சன்மார்க்க போதினி” என்கிற பாடசாலை ஒன்றினைத் தொடங்கினார்.

இவ்வாறு நூலாசிரியராகவும், போதகாசிரியராகவும், ஞானாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் விளங்கிச் செந்தமிழ் வளர்த்த செல்வர் இராமலிங்க வள்ளலார் ஆவார்.

இன்று தமிழகத்தில் வளர்ச்சி பெற்றுள்ள தமிழ் ஆராய்ச்சிக்கும், தமிழ்மொழியின் உயர்விற்கும் வள்ளலார் வளர்த்த செந்தமிழே காரணம் எனலாம்.

தேர்வு நூற்பட்டியல்

1.            டாக்டர் ச.மெய்யப்பன், வள்ளலார் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -600 108. நவம்பர், 2010.

2.            க.வெள்ளை வாரணனார், திருவருட்பாச் சிந்தனை, பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை- 600 108, மார்ச் 2009.

3.            ம.பொ.சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைபாடு பூம்புகார் பதிப்பகம், சென்னை- 600 108. மே, 2008.

4.            ப.சரவணன், நவீன நோக்கில் வள்ளலார், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629 001, டிசம்பர் 2010.

5.            பழ.நெடுமாறன், வள்ளலார் மூட்டிய புரட்சி, ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், ஜுலை 2016.

6.            திரு அருட்பா - உரைநடைப்பகுதி, திரு. அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.

7.            பா.சு.ரமணன், அருட்பிரகாச வள்ளலார் விகடன் பிரசுரம், 2010.

8.            ஊரன் அடிகள், புரட்சித்துறவி, வள்ளலார், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், 64, முருகேசன் சாலை, என்.எல்.சி. ஆபிசர்ஸ் நகர், வடலூர் - 607 303, 2014.

9.            சாமி சிதம்பரனார், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, 2013.

10.         திரு அருட் பிரகாச வள்ளலார் வரலாறு, வெளியீடு, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்-607 303 , 2001.

- டாக்டர் மு.நீலகண்டன்

Pin It