கொலையில் உதித்த தெய்வங்கள் - 8

நாம் அதை எந்த விதத்திலும் கெடுக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே அந்த மாமனிதருக்கு செய்யும் மரியாதையாகும். செய்வோமா? ஓட்டப்பிடாரம் கிராமத்திற்கு வடமேற்காக உள்ள கிராமம் கீழமங்கலம். இவ்வூருக்கு வடக்கே உள்ள கண்மாய்க்கரையின் தென்பகுதியில் மாப்பிள்ளை மாடன் கோயில் ஒன்றுள்ளது. இவனும் கொலைக்கு ஆளாகித் தெய்வமாக்கப்பட்டவன் தான்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனிடம் போர் வீரனாகப் பணியாற்றி வந்தான். கீழமங்கலம் கிராமத்திற்கு வடக்கிலுள்ள ஈராச்சி என்ற ஊரில் பெண்பார்த்து இவனுக்குத் திருமணம் உறுதி செய்திருந்தனர். மணமகனின் ஊரான கீழமங்கலம் கிராமத்தில் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மணநாளுக்கு சில நாள்களுக்கு முன்னர், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்திற்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே சண்டை தொடங்கிவிட்டது. இதனால் மாடனும் போரில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. திருமண நாளன்று கீழமங்கலம் கிராமத்திற்குச் செல்ல அனுமதி பெற்று மணக்கோலத்தில் ஊருக்குப் புறப்பட்டான்.

அந்நேரத்தில் கயத்தாறிலிருந்து கும்பினிப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தன. மாடனுக்கு உறுதி செய்யப்பட்ட பெண்ணை அழைத்துக் கொண்டு பெண்வீட்டாரும் வந்து கொண்டிருந்தனர். அக்காலத்தில் மங்கலம் கண்மாயில் புன்னைமரங்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன. இம்மரங்கள் கண்மாய்க் கரையில் வருவோரைப் பார்க்க இடையூறாக இருந்தன.

தூரத்தில் வருபவர்களை அடையாளம் காண வாய்ப்பாக இருக்கும் என்பதால் உயரமாக வளர்ந்திருந்த புன்னை மரம் ஒன்றில் ஏறி இவன் அமர்ந்து கொண்டான். இவன் மரத்தில் ஏறுவதைக் கும்பினிப் படையினர் பார்த்து விட்டனர். கட்டபொம்மனின் ஒற்றன் என்று முடிவு செய்து மரத்தின் அருகில் வந்ததும் ஈட்டியால் வயிற்றில் குத்தினர். குடல் சரிந்து கீழே விழுந்த மாடன் தன் துண்டால் வயிற்றைக் கட்டிக் கொண்டு குளத்தின் நீர்போகும் மடை வழியாக நுழைந்து சென்று கரையின் தென்பகுதியில் விழுந்து இறந்துபோனான். அந்நேரம் அங்குவந்த மணமகள் வீட்டார் அவனது பிணத்தைப் பார்த்துக் கலங்கி அழுதனர். அவன் உடலை எரிக்கும் போது அவனுக்கு மணமகளாக உறுதி செய்யப்பட்டிருந்த பெண் உடன்கட்டையேறி உயிர்துறந்தாள். மாப்பிள்ளைக் கோலத்தில் உயிர் துறந்த மாடன் மாப்பிள்ளை மாடன் என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்படுகிறான்.

மாடசாமி:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் மேல்மாந்தை. தூத்துக்குடி, ராமேஸ்வரம் சாலையில் இது அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்ட பாளையங்களுள் இதுவும் ஒன்று. கட்டபொம்மனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் இப்பாளையத்தைப் பறிமுதல் செய்த கிழக்கிந்தியக் கம்பெனி இதை ஏலத்தில் விட்டது. மராத்தியராயர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார். பாளையப்பட்டு முறையை ஒழித்து ஜமீன்தார் முறையைக் கிழக்கிந்தியக் கம்பெனி அறிமுகப்படுத்தியதால் இது மேல்மாந்தை ஜமீன் என்றாயிற்று.

இங்கு ஜமீன் அரண்மனைப் பகுதியிலும் புரத வண்ணார் குடியிருப்பிலும் மாடசாமி என்ற தெய்வத்திற்குப் பீடம் அமைத்து வழிபடுகின்றனர் இத்தெய்வம் குறித்து வழங்கும் கதை வருமாறு :கம்பளத்து நாயக்கர் ஒருவர் மேல்மாந்தையின் பாளையக்காரராக இருந்தார். இவர் மந்திரங்கள் கற்று அதில் வல்லவராக இருந்தார். இதனால் அரண்மனைக்குத் தேவையான அரிசியைக் குத்திக் கொடுக்கும் பணியையும், தாம் வெயிலில் செல்லும் போது குடைபிடிக்கும் பணியையும் பேய்கள் செய்யும்படி செய்து விடுவார் என்று நம்பிக்கை பரவலாயிருந்தது.

இதே ஊரில் வாழ்ந்து வந்த புரத வண்ணார் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் மந்திர ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். பாளையக்காரரின் தீண்டாமை தொடர்பான நம்பிக்கைகளும், செயல்பாடுகளும் இவனுக்குப் பிடிக்கவில்லை. பாளையக்காரனுடன் ஒரே இலையில் உணவுண்டு அவனை மட்டம் தட்ட விரும்பினான்.

இதனை நிறைவேற்ற மந்திர மையைத் தன் நெற்றியில் தடவி பாளையக்காரன் சாப்பிடும் போது அவன் அருகில் அமர்ந்து கொண்டான். மந்திர மையின் ஆற்றலினால் பிறர் கண்ணுக்கு இவன் தெரியவில்லை. பாளையக்காரன் இலையில் பரிமாறியதும் இவன் விரைவாக அதைச் சாப்பிட்டு முடித்தான். இதனால் உணவு பத்தாமல் போனது. தொடர்ந்து சில நாட்கள் இவ்வாறு நடக்கவே பாளையக்காரனிடம் பணிப்பெண்கள் இதைத் தெரிவித்தார்கள்.

மறுநாள் சோறு குழம்பு எல்லாவற்றையும் ஆவி பறக்கப் படைக்கும்படி அவன் கூறினான். வழக்கம் போல் உணவருந்த வந்த புரத வண்ணார் இளைஞனின் முகத்தில் ஆவிபட்டு நெற்றியில் இருந்த மந்திர மை கரைந்து அவன் உருவம் தெரிந்தது. உடனே அவனைப் பிடித்துக் கழுவிலேற்றிக் கொன்றான். பின்னர் கழுவேற்றி அரண்மனைப் பகுதியில் பீடம் போட்டு அவனை வழிபட்டனர். இங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்று புரத வண்ணார் குடியிருப்பிலும் பீடம் அமைத்தனர். கொலையுண்டு தெய்வமானோரை மாடன்என்றழைக்கும் பழக்கத்தின் அடிப்படையில் இவன் மாடசாமி என்ற தெய்வமாக்கப்பட்டுள்ளான். இவனது இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை.

இக்கதையில் இடம்பெறும் இயற்கை பிறழ்ந்த நிகழ்ச்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் பாளையக்காரரை எதிர்த்த ஓரு இளைஞன் கொலை செய்யப்பட்டு பின்னர் தெய்வமாக்கப்பட்டுள்ளான் என்ற உண்மை வெளிப்படுகிறது.

மேலும் உதிக்கும்.

Pin It