இந்திய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத பல புதிய சம்பவங்கள் இன்று அன்றாடச் செய்திகளாகிவிட்டன. மாண்புமிகு என்ற பட்டத்துக்கும், மேதகு என்ற கௌரவத்திற்கும் உரித்தானவர்களாக அரசின் தலைமை பொறுப்பில் யாராவது இருக்கிறார்களா என மக்கள் வேதனை கொள்ளும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.      

ஒருவர் மீது வழக்கு தொடரப்படுவதன் பின்னணி என்ன?

குற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் உள்ளதே ஆகும். ஆனால் பழிவாங்குவதற்காக தொடரப்பட்ட வழக்கிது, ஆச்சரியத்தை கொடுக்கிறது என்று ஆட்சியாளர்களே பேசத்துவங்கியதைப் பார்த்தால் வேடிக்கையாகவே இருக்கிறது மக்களுக்கு.

ஒரு சாமான்யர் இப்படிச் சொன்னால் ஆட்சியாளர்கள் பழிவாங்குகிறார்கள் என்று அரசு மீது குற்றம் சுமத்தலாம். ஆனால் ஆட்சியாளர்களே அவ்வாறு சொன்னால் மக்களை யார் பாதுகாப்பது?     

செல்வாக்கு மிகுந்த தமிழக முதலமைச்சர் மீது திட்டமிட்டு, தொடர்ந்து இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகிறது என்று சொல்லப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. தனிப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அரசு அதிகாரத்திலோ, ஆளும் கட்சியின் பொறுப்பிலோ இருக்கக்கூடாது. அவர் மீதான குற்றச்சாட்டை தவறு என அவர் நிரூபித்துவிட்டு மீண்டும் இரு பொறுப்புக்கும் வரலாம் என்று உதாரணமாக இருந்து நீதியின் ஆட்சியை நிலைநாட்டவேண்டிய முதலமைச்சரே இப்படி பேசுவதுதான் விநோதமாக உள்ளது. கொள்கை அளவில் காங்கிரஸோடு மிக நெருங்கிய கூட்டணி கொண்டு, மத்திய அரசில் அதிகார பலம் கொண்டதாகவும், மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும் உள்ள தி.மு.க.வை அதிகாரத்தில் உள்ளவர்கள் அழிக்க முயல்கிறார்கள் என்றால் யாரந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாமே. மேலும், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அவர்கள் மீது நடவடிக்கை கூட எடுக்கலாமே. ஏன் செய்யவில்லை?    

அரசியல் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு அல்லது காலம் பல கடந்த பின்னரும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட வழக்கு என்று சொன்னால் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னிருந்து இது அரசியல் ரீதியாக போடப்பட்ட வழக்கு என அரசியல் கட்சி சார்பாக வாதிடலாம். ஆனால், 1,76,000 கோடி ஊழல் என இரண்டு வருடங்களாக பரபரப்பாக உள்ள ஒரு வழக்கில், சி.பி.ஐ. விசாரணையை உச்சநீதிமன்றமே கண்காணித்து வரும் நிலையில்,அமைச்சக துறைகளைப் பெற அரசியல் இடைத்தரகருடன் உரையாடல் நடந்த ஆதாரப்பூர்வ பின்னணியோடு இணைத்து, நீண்ட விசாரணைக்குப் பின்னர் வழக்கு பதியப்பட்டுள்ள சூழலில், அவர் பின்னால் ஒட்டு மொத்த கட்சியும் நிற்கும் என தீர்மானம் நிறைவேற்றுவது புதிய உதாரணமாக உள்ளது. இது அரசியல் உலகில் யாராலும் வரவேற்க இயலாத தீர்மானமாகும்.     

எனக்கு எதுவுமே தெரியாது என்பதை மட்டுமே நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தெரிவித்த பிரதமர் இப்போது தான் அவருக்கு என்ன தெரியும் என பேசியுள்ளார். இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி மேற்குவங்கத்தில் தான் நடைபெறுவதாக இவர் பேச, பின்னாடியே வந்த உள்துறை அமைச்சர் சிதம்பரமோ ஆமாம் ஆமாம் என பேசியுள்ளார். அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களை கட்சிக்காரர்களாக மட்டுமே நினைத்துக்கொண்டு பேசுவதைப் பார்க்கையில் ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகிறது.

தற்போது மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஆள்வது ஆளும் கட்சிக்காக மட்டுமே அதாவது, கட்சியை வளர்க்க மட்டுமே கட்சியா-நாடா என்றால் கட்சி, கட்சி, கட்சியே! நன்றி மறப்பது நன்றன்று என இவர்கள் நினைப்பார்களேயானால், அந்த நன்றியை மக்களிடம் மட்டுமே காட்ட வேண்டும். இல்லையெனில், மக்கள் ஆதரவு அந்த கட்சிக்கு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை.

- ஆசிரியர் குழு

Pin It