மரங்கள் - நம் புவிப் பந்தின் சூழல் சரியான விகிதத்தில் இருக்க முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. மரங்கள் தான் காட்டுயிர்கள் மற்றும் மனிதர் உள்ளிட்ட சமூக மொத்தத்திற்கும் மையப் புள்ளியாக விளங்குகிறது.

மழை பொழிவதற்கும், நீராதாரத்திற்கும், மண்சரிவு ஏற்படாமல் தடுப்பதற்கும், இன்னும் எண்ணற்ற வழிகளில் மரங்கள் பயன் அளிக்கின்றன. இலை தழைகளை உண்ணும் தாவர உண்ணிகளுக்கு மரங்களே முக்கியமெனில், தாவர உண்ணிகளை இரையாகக் கொல்லும் இரைகொல்லி விலங்குகளான புலி, சிங்கம், சிறுத்தை மற்றும் கொறி விலங்குகளுக்கும் மறைமுக ஆதாரமாக விளங்குகிறது.

நம் உலகில் கண்டறியப்பட்டுள்ள 10,000 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு மரங்களே உறைவிடம். மனிதர் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ இயலாது. என்றார் பறவையியல் அறிஞர் சலீம் அலி.

அவரது வார்த்தையில், பறவைகள் வாழும் இடங்களில் மரங்கள் நிறைந்து காணப்படும், மரங்கள் நிறைந்த நிலப்பரப்பில்தான் பறவைகளும் அதிகளவில் காணப்படும்.இந்திய சமூகத்தில் கண்டறியப்பட்டுள்ள 1300 க்கும் மேற்பட்ட பறவை இனங்களில் பல பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் மரங்கள் வெட்டப்படுவதாலும், காடுகளின் பரப்பளவு சுருங்குவதாலும் தான்.

இன்றைய மனித சமூகத்தின் அனைத்து பொருட்களிலும் ஏதேனும் ஒரு விதத்தில் மரங்களின் பங்களிப்பு இருக்கிறது. அந்த வகையில் நம் சூழலின் அச்சாணியாக விளங்கும் மரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தினந்தோறும் ஏக்கர் கணக்கில் வெட்டப்படும் நிலையில், தினந்தோறும் மரக்கன்றுகளை நட்டு அதைத் தொடர்ந்து பராமரிக்கிறார் தேக் பகதூர் இராணா எனும் பெரியவர். தனி நபராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் களமாற்றி வருகிறார்.

நேபாளத்தை தாயகமாகக் கொண்ட இராணா குடும்ப வறுமை காரணமாக 1962 ஆம் ஆண்டு வடசென்னையில் உள்ள எண்ணூரில் குடியேறி எண்ணூர் அனல்மின் நிலையத்தில் காவலாளியாக பணியில் அமர்ந்ததையும், அந்த காலகட்டத்தில் கடும் வெயிலுக்கு தொழிலாளர்கள் பட்ட அவதி காரணமாக முதன் முதலாக இரண்டு மரக்கன்றுகள் நட்டதையும், கன்றுகள் மரமாகி நிழல் தருவதை அனைவரும் பாராட்டியதையும் பழைய நினைவுகளில் இருந்து நினைவு கூறுகிறார்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தான் பணிபுரிந்த 15 ஆண்டு காலத்தில் சற்றேறக்குறைய 300 மரக்கன்றுகள் நட்டது, இன்று மரமாகி அனைவருக்கும் நிழல் தருவது மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக கூறும் இராணா, காவலாளி பணியை விட்டபிறகு கன்றுகள் நடுவதை முழு நேரப் பணியாக மேற்கொண்டதாக கூறுகிறார்.

பஸ் நிறுத்தம், இரயில் நிலையம், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்று மக்கள் கூடும் இடங்களைத் தான் மரக்கன்றுகளை நடுவதற்காக தேர்ந்தெடுக்கும் இடங்களாக இராணா சொல்கிறார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து, மரங்கள் இல்லாத சூழலில், தான் நடும் மரங்கள் மக்களுக்கு பயன்பட்டால் அதுவே எமக்கு பெரிய மகிழ்ச்சி என மனம் நிறைந்து கூறுவது இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மாறிய மனித சமூகத்தை சம்மட்டியால் அடிக்கிறது.

2 அடி ஆழத்தில் மரக்கன்றுகளை நட்டு, செம்மண், எரு மற்றும் தழைகளைச் சுற்றிக் கொட்டி முள்குச்சிகளை வேலியாகக் கட்டி பாதுகாப்பு ஏற்படுத்துவதாகக் கூறும் இராணா, கன்று வளர்ந்து மரமாக ஆகும் வரை கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் வரை பாராமரித்து வருவதாக கூறுகிறார்.

மதில் சுவர்களில் வளரும் சிறு செடிகள், மரங்களில் இருந்து விழும் விதைகளை சேகரித்து தான் செல்லும் இடங்களில் நடுவதாகவும், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புங்கமரம், நாவல்மரம், போன்ற மரங்களை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி வரை நட்டு வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

ஆரம்ப காலங்களில் எதிர்ப்பை தெரிவித்த மக்கள் இன்று பெரும் ஆதரவு தெரிவிப்பதாக அவர் மகிழ்கிறார். (இலைகள் கொட்டுவதால் குப்பையாகிறது என்பதே எதிர்ப்புக்கு காரணம்.)மரக்கன்றுகளை நடுவதற்கு இதுவரை அரசு அனுமதி என்று தனியாக வாங்கியதில்லை என்று கூறும் இராணா சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை வெட்டும்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முதல் ஆளாக தான் அங்கிருந்து பெரும் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கிறார்.

வேப்ப மரம், பூவரச மரம், போன்றவை எளிதில் வளரும் மரவகைகள், இவைகளை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது என்றும் கூறுகிறார். மக்கள் இயக்கமாக மாற வேண்டிய மரம் வளர்க்கும் பணி, இன்று தன்னலமற்ற இராணா போன்ற சில தனிநபர்களால் முன்னெடுக்கும்போது, நாகரிக சமூகமாக எண்ணிக் கொள்ளும் மனித சமூகம் வெட்கி தலைகுனிகிறது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை சற்றேறக்குறைய 10000 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து தானே ஒரு இயக்கமாக, முன்னோடியாக, வழிகாட்டியாக மனித சமூகத்திற்கு விளங்குகிறார்.

4 ஆண், 1 பெண் குழந்தைகள் என பெரிய குடும்பம்,வறுமையின் பிடியில் சுழலும் போதும், தான் கொண்ட பணியில் இருந்து சற்றும் பின் வாங்காமல் தொடர்ந்து சேவை செய்யும் இராணா போன்றவர்கள்தான் இன்றைய இளைஞர்களின், எதிர்கால மாணவர்களின் வழிகாட்டி.

“மனிதர் பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை, வாழும் காலத்தில் இச்சமூகத்திற்கு நல்ல செயல்களை செய்ய வேண்டும்” என்பதே இளைஞர்களுக்கு சொல்லும் செய்தி..

“மரங்களை வெட்டும்போது வேடிக்கை பார்க்காமல் அதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும். மரங்களை காக்க வேண்டும். மரங்களை நாம் காத்தால், மரங்கள் நம்மை (மனித சமூகத்தை) காப்பாற்றும் ” என்ற எளிய உண்மையை தனது தள்ளாத வயதில் மக்களுக்காக பதிவு செய்கிறார்.

மகன்கள் பெரியவர்களாகி வேலைக்குச் சென்று குடும்ப பொறுப்பை ஏற்றபிறகு, மரம் வளர்ப்பதை முழு நேரப்பணியாக மேற்கொள்கிறார். வயது முதிர்ந்த நிலையில் இரண்டு குடங்களுடனும், தோளில் பையுடனும் கும்மிடிப்பூண்டி, மீஞ்சுர் சாலைகளில் இவரைப் பார்க்கலாம். காலை 6 மணிமுதல் 9.30மணி வரையிலும், மாலை 3 மணிமுதல் 6.30 மணி வரையிலும் தொடர்ந்து மரம் வளர்த்து பராமரித்து வருகிறார். நீர் ஊற்ற குடங்களும், விதைகள், வேலி அமைக்க தேவையான கயிறு, சிறுகத்தி போன்றவை அடங்கிய பையும் இவருடன் எப்பொழுதும் காணப்படும்.

இவருடைய பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அசோக் லேலண்ட், எண்ணூர் பகுதி இளைஞர் அமைப்புகள், நகர சங்கங்கள் இணைந்து அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் “பசுமை இல்லம்” என்ற பெயரில் ஒருவீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.

பரந்து விரிந்த காடுகள், இன்று தீவுகள் போல சுருங்குவதும், கணக்கு வழக்கற்ற முறையில் மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரித்துள்ள சூழலில் இராணா போன்ற தன்னலமற்றவர்களின் பணியை போற்றி அதை மக்கள் இயக்கமாக மாற்றும் போது மட்டுமே கான்கிரீட் காடுகளின் நடுவில் சிக்கித் தவிக்கும் நமது சமூகம் பசுமையான சூழலில் அறிவார்ந்த சமூகமாக மாறும் என்பது உறுதி.....

ஒசோனில் ஒட்டை விழுந்தது பற்றியோ, புவிப்பந்தில் வெப்பம் அதிகமாகி வருவது குறித்தோ, சூழலியல் குறித்தோ பெரிய வார்த்தைகள் கூட பேசத்தெரியாத ஒரு சாதாரண மனிதர், பத்தாயிரம் மரங்களை நட்டதாக கூறுகையில் நமக்கு கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. எப்போதும் சுற்றுப்புறம் குறித்து பேசிக்கொண்டே இருக்கும் சிலர் கூட நேரடி களப்பணியில் இறங்குவதில்லை. பலர் சூழலியல் ஆர்வமிருந்தும் மரம் நடுவதற்கும், அது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கும் நேரமும், வாய்ப்புமில்லை என முயற்சி எடுக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் நம் சொந்த நிலத்தில் அல்லது வீட்டில்தான் மரம் நட வேண்டும் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அந்த வாய்ப்பு கட்டாயம் கிடைக்கப்போவதேயில்லை. விரிந்த இப்புவியில் நாம் மரம் நட இடம் இல்லாமல் இல்லை. நேரம் ஒதுக்கி, முயற்சி எடுப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிடவும் முயற்சிப்பதே காலத்தின் தேவையாகும்.

Pin It