அன்னா அசாரே, இன்றைய மகாத்மா, இந்தியாவின் விடிவெல்லி ஜனநாயகத்தை காக்க வந்த இரும்பு மனிதர். இப்படித்தான் இன்றைய நவீன ஊடகங்களும், பத்திரிகைகளும், Elite class எனச் சொல்லப்படக்கூடிய மேல்தட்டு வர்க்கத்தினரும், அவரை புகழ்ந்து வருகின்றனர். பொதுவாகவே இந்தியச் சூழலில், யாரும் எழுப்பாத அதிகம் எழுப்ப தயங்குகிற பிரச்சனையை ஒரு தனி மனிதன் எழுப்பும் போது (நிற்க: அது நிச்சயம் ஒரு இடதுசாரியாக இருந்தால் கதைவேறு) அவருக்கு புனிதர் பட்டம் கட்டி மகாத்மாக்களின் வரிசையில் சேர்த்து விடும் வழக்கம் உள்ளது. அந்த வரிசையில் அசாரேவை மனிதராக பார்க்கப்படுவதிலோ புதிய மகாத்மா எனப் போற்றப்படுவதிலோ ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால், அசாரேவுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்திகளை நாம் பார்க்க மறுப்பதே இங்கு பிரச்சனை. ஏன் எனில் பெரும்பான்மையினரால் புனிதராக பட்டம் சூட்டப்பட்ட ஒருவர் தானாகவே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக மாறிவிடுகிறார். அவர்மீது ஆரோக்கியமான விமர்சனத்தை வைப்பவர்கள் கூட தவறானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

இன்றைய புதிய தாராளவாத யுகத்தில் New media என்ற மாற்று ஊடகங்கள், அதில் இயங்கும் சமூக வலைத்தளங்கள் ஆகியவை பரப்பும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று நம்பும் நிலை உருவாக்கப்படுகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் எளிதில் சென்று சேரக்கூடிய இந்த வலைத்தளங்கள் மறைமுகமாக முதலாளிய சக்திகளால் தான் கட்டி ஆளப்படுகின்றன. எளிதில் ஒரு விஷயத்தை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இளைஞர்களிடையே பரவிக் கிடக்கிறது. இதன் விளைவே 4 நாட்களில் அன்னா அசாரே தேசத்தின் நாயகன் ஆனது.

சரி மீண்டும் அசாரேவுக்கு வருவோம். யார் இவர்? எதற்காக லோக் பால்? ஏன் இந்த தருணத்தில் இந்த மசோதாவிற்கு இவ்வளவு தூரம் அக்கறைகாட்டப்படுகிறது? இது போன்ற பல கேள்விகள் நம்முன் எழத்தான் செய்கிறது. சர்வதேச அளவில் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 87 வது இடத்தில் உள்ளது. உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்த 1லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு சொந்தமாகிபோன நமது நாட்டில், ஊழலுக்கு எதிரானகுரல் என்பது மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால் வளர்ந்து வரும் புதிய தாராளமய உலகில் ஊழலின் ஊற்றுக் கண்களை அடையாளம் காண மறுத்து மறந்து வெறும் சட்ட திட்டங்களை மட்டும் பலப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. மேலும் 40 வருடமாக பல கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற எந்த அரசும் முன்வரவில்லை. நாட்டின் பிரதமரை ஊழல் புகாரில் விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கும் சரத்தை லோக்பாலில் சேர்பதா? வேண்டாமா? என்பதில் தான் இழுபறி நீடிக்கிறது. நாட்டின் பிரதமர் மீது யார் வேண்டுமானாலும் ஊழல் புகார் சுமத்தலாம் என்ற நிலை வருமானால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை என்ன என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது.

சாய்பாபா என்ற சாமியார் இறந்து போகிறார் அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று பார்த்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்கிறார்கள். எங்கிருந்து வந்தது இந்த பணம் இது அரசின் கையில் இருந்தால் எத்தனை நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றெல்லாம் நாம் கேள்விகள் எழுப்ப தயங்குகிறோம். இஷாள் ஷர்மிளா என்னும் பெண் 11 வருடங்களாக தனது மாநிலத்தில் இருக்கும் ராணுவத்தை திரும்ப பெறக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் அதை எந்த அரசும் சரி, ஊடகங்களும் சரி கண்டு கொள்ளவேயில்லை. அப்படி இருக்க அசாரே நாட்டின் நாயகனானதை நாம் சற்று உற்று கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எல்லாம் சரி நாட்டிற்காய் உண்ணாவிரதம் இருந்த அசாரே தனது இருக்கைக்கு பின்னால் வைத்திருந்த பாரத மாதா படத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அருதப்பழசான கோஷமான அகன்ட பாரதத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? லோக் பாலுக்காக அசாரேவால் பரிந்துரைக்கப்பட்ட 5 பேர் தான் ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள் என்றால் அதை எப்படி ஏற்கமுடியும்? அந்த குழுவில் உள்ள சாந்தி பூஷன், பிரசாந்த் புஷன் ஆகியோர் தந்தை மகன் ஆவர். அவர்கள் மீதே மாயாவதி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் உள்ளது. இது இப்படி இருக்க ஊழலுக்கு எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்பின் பிரதிநிதிகளாக அசாரேவின் பரிந்துரைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நபர்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அன்னா அசாரேவின் ஊழலுக்கு எதிரான குரலை சிறுமைப்படுத்துவதல்ல நமது நோக்கம் எதையும் விமர்சனமின்றி, பின்புலத்தை அலசாமல் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தின் அடிப்படையை ஒடுக்குவதே நமது நோக்கம். ஒட்டுமொத்த மக்கள் எழுச்சியே ஊழலின் ஊற்றுக்களை உடைத்தெறிந்து அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கும். உண்மையான ஜனநாயகம் மலரும்....

Pin It