அடேங்கப்பா ஆக்ஷன் படம், கதையின் சொதப்பல் காரணமாக அடேங்கப்பா... என சலிப்பைத் தரும் படமாக வந்திருக்கிறது கோ.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வந்துள்ள படம் கோ.கடைசி இருபது நிமிடம் படத்தின் மொத்த காட்சிகளையெல்லாம் தொகுத்து ஒரு கதையைச் சொல்ல முற்பட்ட படக்குழுவினரை பாராட்டத்தான் வேண்டும். இதற்கு நாம் போக முடியாத வெளிநாடு சென்றெல்லாம் நாயகனும், நாயகியும் பாடித்திரிகிறார்கள். மத்த படி படம் சென்னையைச் சுற்றி சுற்றி வருகிறது. தின அஞ்சல் பத்திரிகை மட்டும் எல்லா ஊர்களுக்கும் போகிறது.

கதை இது தான். கல்லூரி நண்பர்கள், ஒருவர் பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக வேலைக்குச் சேருகிறார். இன்னொரு நண்பர் மற்ற நண்பர்களை இணைத்துக் கொண்டு சிறகுகள் எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்குகிறார். அரசியல் இயக்கத்தை உருவாக்கும் வசந்தனை (அஜ்மல்) முதலமைச்சராக்க பத்திரிகைக்காரனால் முடியும். அதனை நான் செய்கிறேன் என செய்து காட்டுகிறார் அஸ்வின் (ஜீவா). எல்லாம் நல்லபடியாக முடிகிறது. வசந்தனும் முதலமைச்சராகி விடுகிறார். கடைசியில்தான் தெரிகிறது வசந்தனுக்கும், கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான நக்சல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது. என்ன செய்ய... நாட்டைக் காப்பாற்ற வேண்டுமே...! அஸ்வின் வசந்தனை கொலை செய்து (இது விபத்து தான். நக்சல்களே முதலமைச்சரைக் கொன்றதாக யாவரும் நம்புகிறார்கள்) சிறகுகள் அரசாங்கத்தையும், நாட்டையும் காப்பாற்றுகிறார். கேமராவோடும், தன் காதலியோடும் நமக்கு விடை கொடுக்கிறார்.

எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் படத்தில் வருகிறது. இருகட்சிகளும் மோசம், வேறு கட்சிகளே நாட்டில் இல்லை என்று கோ சொல்கிறது. இதுவே ஒரு பெரிய அரசியல். வசந்தன் நக்சல் இயக்கத்தோடு வைத்திருக்கும் தொடர்பு அவருடன் நெருக்கமாக இருந்து, ஆனால், உயிரையும் தியாகம் செய்யும் அவரது நண்பர்களுக்குக் கூட தெரியவில்லை. அனைவரும் படித்தவர்கள். ஏமாந்த படித்தவர்களை - அரசியலே என்னவென்று தெரியாதவர்களை - அப்பாவிகளாகவும், வடிவேல் பாணி “ரொம்ப நல்லவர்களாகவும்” தமிழ் சினிமா காட்டுவது வழக்கமான ஒன்று தான். நக்சல்களை பூர்ஷ்வா அரசியல்வாதிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும், நக்சல்களுக்குள் அதிகாரம் ஏற்படுத்தும் துரோகங்களையும் படம் மேலோட்டமாக எடுத்து சொல்லுகிறது. வங்கத்தில் மம்தா பானர்ஜியோடும், வலதுசாரிகளோடும் இணைந்து நிற்கிற நக்சல்களை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பது தவறாகிவிடாது. நக்சல் இயக்கத்தின் குடுமிப்பிடிச் சண்டையும் தனிநபர் வாதமும் வரலாறு நெடுகிலும் உள்ளது.

ஒரு ஆக்ஷன் படத்திற்கு குண்டு வெடிப்பும், ரத்தச் சிதறல்களும், எதிர்பாராத திருப்பங்களும் தேவைப்படுகிறது. இதற்கு மட்டுமே கோ படத்தில் நக்சல் தலைகாட்டுகிறது. ஊழல் மோசம், வர்க்கம், ஒடுக்குமுறை என்கிற வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் சுத்த ஹம்பக்.... என்று சுபா வசனம் எழுதியுள்ளார். இவர்களுக்கு இன்னமும் வர்க்கம் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது. ஜீவா கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி துருதுருவென வருகிறார். பத்திரிக்கையாளருக்கான பாவமும், காதல் பரவசமும் கார்த்திகாவிடம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா சீனிவாச ராவ், ஆளுங்கட்சித் தலைவராக பிரகாஷ்ராஜ். இருவரையும் சைக்கோ, கோமாளிகள் ரேஞ்சில் சித்தரித்துள்ளார்கள். காதல் தோல்வியுறும் பியா நாகரிக நங்கை. படப்பிடிப்பும், கேமராவும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜின் இசை என்னமோ, ஏதோ பாடல் தவிர்த்து காதில் ரீங்காரமிடவில்லை. நேரம் கிடைத்தால் இந்தப் படத்தையும் போய் பார்க்கலாம்.

Pin It