பகத்சிங் என்ற பெயரே இன்றும் இளைஞர்களுக்கு உணர்ச்சி ஊட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயரைக் கண்டு அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுங்கியதில் பொருள் உண்டு. ஆனால், இன்றும் இப்பெயரை முடிந்தவரை ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்கிறது. வெறுமே தீவிரவாதி என்ற அடைமொழிக்குள் பகத்சிங் என்கிற மாபெரும் ஆளுமையை சிறையிடுவதற்கே ஆளும்வர்க்க வரலாற்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆயினும் அனைத்தையும் மீறி சூரியனாய் இளைஞர்களின் மனவானில் பகத்சிங்கே சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறான். காரணம், அவனது ஆளுமைத் திறன்.

தற்போது தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்றொடர்கள் அரசியல் களத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய கண்ணோட்டத்தில் இச்சொற்கள் குறித்து இன்றைய பொது புத்தியில் ஒருவிதமான புரிதல் பதிவாகியிருக்கிறது. இந்த அளவுகோலை கொண்டு பகத்சிங்கை அளவிடுவது தவறாகிவிடும். ஏனெனில், பகத்சிங் வெடிகுண்டை கையில் எடுத்தவன்தான். ஆனால், வெடிகுண்டு அவனை ஆளவில்லை. அவனது அரசியலுக்கு உட்பட்டதுதான் அவன் கை வெடிகுண்டு. துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கலாம். ஆனால், அந்த துப்பாக்கியை அரசியல்தான் ஆளவேண்டும் என்கிற தெளிந்த சிந்தனை பகத்சிங்குக்கு இருந்தது.

பகத்சிங்கின் ஆளுமை இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகும். இதுகுறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்க இயலும். ஆயினும் இங்கே ஒன்றிரண்டை மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன். ஆளுமை என்பது ஆற்றின் நீரோட்டத்தோடு நீச்சலடிப்பதல்ல. எதிர்நீச்சல் போடுவதாகும். செக்கு மாடாக ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதல்ல. உழவு மாடாக ஆழமாகவும் அகலமாகவும் உழ உதவுவதாகும். ஆளுமை என்பது தொலைநோக்கு கொண்டது. சுயநலம் இல்லாதது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது. லட்சிய உறுதியோடு இருப்பது. துணிவோடு சவால்களை சந்திப்பது. ஆழமான அறிவுத் தேடலும் விசாலமான மனசும் கொண்டிருப்பது. இவை அனைத்திற்கும் பகத்சிங் எடுத்துக்காட்டாக இருக்கிறான்.

முதலாவதாக பகத்சிங்கைப் பற்றி சிவவர்மா கூறுகிறார், எழுதுவதிலும் படிப்பதிலும் அவனுக்கு வெகு விருப்பம். அவன் கான்பூருக்கு வரும்போதெல்லாம், தன்னுடன் சில புத்தகங்களையும் தவறாமல் கொண்டுவருவான். பிற்காலத்தில் தலைமறைவு வாழ்க்கையிலும் பகத்சிங்குடன் நான் இருந்தபோது அவன் எப்போதும் புத்தகங்களையும் துப்பாக்கியையும் வைத்திருந்ததை கவனித்தேன். அவனிடம் புத்தகம் ஒன்று கூட இல்லாத ஒரு சந்தர்ப்பம் கூட என் நினைவுக்கு வரவில்லை. பகத்சிங் துப்பாக்கியை மட்டும் நேசிக்கவில்லை. அதற்கு மேலாக அதை வழிநடத்தும் புத்தகங்களை சதா தேடிக்கொண்டே இருந்தான்.

அவன் சிறையில் இருந்தபோது, தன் பள்ளித் தோழன் ஜெய்தேவ் குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில் தயவு செய்து பின்வரும் புத்தகங்களை துவரகாதா நூலகத்திலிருந்து என் பெயரில் எடுத்து அவற்றை குல்வீர் மூலம் எனக்கு அனுப்பி வை என எழுதி ஒரு புத்தகப் பட்டியலையே குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதம் பகத்சிங் கொண்டிருந்த புத்தகக் காதலுக்கும் அறிவுத் தேடலுக்கும் இன்றைக்கும் சாட்சி சொல்லி நிற்கிறது. பகத்சிங் இளமையிலேயே மிகுந்த தொலைநோக்கு உள்ளவனாக இருந்தான். தனது 17வது வயதில் பஞ்சாப் இந்தி சாகித்ய சம்மேளனம் நடத்திய ஒரு கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு பஞ்சாபின் மொழி மற்றும் எழுத்து வடிவம் பற்றிய பிரச்சனை குறித்து அவன் எழுதிய கட்டுரையை இன்றைக்கு படித்தாலும் அவனின் தொலைநோக்கை புரிந்து கொள்ள முடியும். பஞ்சாபி மொழியை குருமுகி எழுத்துருவில் எழுதப்பட்டு வந்தது. ஆனால், அந்த எழுத்து வடிவம் முழுமையாக இல்லை. ஆயினும், மொழி வெறியர்கள் குருமுகி வடிவத்தையே முன்மொழிந்தனர். சிலர் உருது எழுத்து வடிவத்திற்கு மாறுமாறு கூறிவந்தனர். இன்னும் சிலர் இந்தி எழுத்து வடிவத்தை ஏற்கலாம் என விவாதித்தனர். பகத்சிங் குருமுகி எழுத்துவடிவத்தில் போதுமான ஒலி வடிவங்கள் இல்லாததை சுட்டிக்காட்டினான்.

அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் எழுதினான், தற்போது பஞ்சாபி எனக் கூறப்படுவது குருமுகி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட மொழியாகும். இது மாநிலம் முழுவதும் காணப்படவில்லை. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இலக்கியமோ அறிவியல் நூல்களோ இல்லை. இதற்கு முன் இது கேட்பாரற்றுக் கிடந்தது. இதனை மேம்படுத்த முயலுவோர் போதிய எழுத்து வடிவங்கள் இன்றி சிரமப்படுகிறார்கள். அனைத்து வார்த்தைகளையும் சரியாக உச்சரிக்க முடியவில்லை. ஏனெனில், அ உட்பட போதிய உயிர் எழுத்துகளுடன் கூடிய ஒலி வடிவங்கள் கிடையாது. கூட்டெழுத்துகளை எழுதிட முடியாது. பூரணமாக என்ற வார்த்தையைக் கூட எழுதிட முடியாது. இவ்வாறு இம்மொழியில் எழுத்து வடிவம் உருதுவைவிட முழுமையற்றதாக இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே அறிவியல் பூர்வமான எழுத்து வடிவத்தை இந்தி முழுமையாகப் பெற்றிருக்கும்போது அதை ஏன் நாம் பயன்படுத்தத் தயங்கிட வேண்டும்? என்றான் அத்துடன் இந்தி எழுத்து வடிவத்தின் சிதைந்த வடிவமே குருமுகி...என்றான். அதுமட்டுமல்ல, மொழியை ஒரு மதப் பிரச்சனையாக மாற்றக்கூடாது என்று எழுதினான். தன் தாய்மொழியேயானாலும் வெறும் பற்றோடு அணுகாமல் அறிவியல் பூர்வமாக எதிர்கால நலன் கருதி கருத்துக்களை தயங்காமல் முன்வைக்கிற; அதுவும் மொழிப் பற்றாளர்கள் எதிர்ப்புக்கு நடுவில் முன்வைக்கிற தொலைநோக்கும் துணிச்சலும் இளம் பகத்சிங்கின் ஆளுமையின் மிகச் சிறந்த அடையாளமாகும்.

பகத்சிங்கை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் தந்தை முயற்சித்தபோது எப்படியாவது விடுதலை கிடைத்தால் போதும் என்று சும்மா இருக்கவில்லை. தந்தையை கண்டித்து அன்போடு அவன் எழுதிய கடிதம் பகத்சிங்கின் மன உறுதிக்கும் தெளிந்த சிந்தனைக்கும் சாட்சியாகும். அதில் தந்தை தன்னைக் கேட்காமல் மனு அளித்தது தவறு என்றும் அது தனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும் குறிப்பிட்டான். தந்தை என்ற முறையில் அவர் மகன் மீது காட்டிய பாசத்தை பகத்சிங் புரிந்துகொண்டு அதே சமயம் தனது லட்சியத்திற்கு அந்த பாசம் இடையூறாக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த நெடியக் கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறான், எனது உயிர் அந்த அளவிற்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாகக் கொடுத்து வாங்கும் அளவிற்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையதல்ல. எனது வழக்கைப் போலவே மிகவும் கடும் குற்றச்சாட்டுகளுடனான வழக்குகள் என் சகதோழர்களுக்கும் உண்டு. தாங்கள் அனைவரும் ஒரே பொதுவான கொள்கை வழி நின்று கடைசி வரை ஒரே மாதிரி அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி செயல்படுவதென முடிவு செய்திருக்கிறோம். இதில் பகத்சிங்கின் லட்சியக் கட்டுப்பாடும் பொது வாழ்வின் இலக்கணமும் ஒரு சேர வெளிப்படுவதைக் காணலாம். இதுதானே ஆளுமையின் முக்கிய வரையறை.

எச்சரிக்கையுடன் பரிந்துரைக்கிறேன் 

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பகத்சிங்கின் மேற்கோள்கள் அனைத்தும், “விடுதலைப் பாதையில் பகத்சிங்” என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அந்நூல் சிவவர்மா, பூபேந்திர ஹூஜா ஆகியோரால் தொகுக்கப்பட்டது. வரலாறு, கடிதங்கள், கட்டுரைகள் ஆவணங்கள், சிறைக்குறிப்புகள் என 448 பக்கங்கள் கொண்ட இந்த நூலை ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது. ஏ.ஜி.எத்திராஜூலு, ச. வீரமணி, ச. தேவதாஸ், சொ. பிரபாகரன் ஆகியோர் மொழி பெயர்த்துள்ளனர். பகத்சிங்கின் ஆளுமையை முழுமையாக உள்வாங்க இந்த நூலை ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டியது அவசியம். ஆனால், எப்படிப் படிக்க வேண்டும் என்பது முக்கியம். அதற்கும் பகத்சிங்கே இந்நூலில் வழிகாட்டியுள்ளார்.

“நான் இந்நூலை குறிப்பாக இளைஞர்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஆனால், ஒரு எச்சரிக்கையுடன். இதில் எழுதப்பட்டிருப்பதை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்காகவோ, அல்லது அப்படியே ஏற்றுக்கொள்வதற்காகவோ தயவுசெய்து இதனை படிக்காதீர்கள். இதனைப் படியுங்கள். இதனை விமர்சனம் செய்யுங்கள். மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். இதன் உதவியுடன் உங்கள் சொந்தக் கொள்கைகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்”

Pin It