மேற்கு மாம்பலம் பன்னீர் செல்வம் நகரைச் சேர்ந்த தம்பதியினரின் மகனான ஐந்து வயது சிறுவன் ஸ்ரீதர், தினமும் 'அதிகாலை" 6 மணிக்கு கட்டாயம் எழுந்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் அவனது தாய் புரட்டி எழுப்பி அவசரஅவசரமாக குளிப்பாட்டி, வாயில் உணவை திணிக்கிறாள். சூ, டை, பெல்ட் என குழந்தையை மூட்டை போல் கட்டி அத்தோடு முதுகிலும் ஒரு புத்தக மூட்டையை ஏற்றி, 7.30 மணிக்கு வாசலில் வந்து நிற்கும் மினிவேனில் ஏற்றி விடுகிறாள்.

அந்த பள்ளி வாகனம் சுமார் 25கிமீ பயணித்து அண்ணா நகர் மேற்கில் இருக்கும் பிரபல பள்ளியில் 8.50மணிக்கு அவனை கொண்டு சேர்க்கிறது. அந்த வாகனத்தில் இருந்து இறங்குவதற்குள்ளேயே அவன் பாதி களைத்து விடுகிறான். இந்தக்களைப்பால் பாடங்களைக் கூட கவனிக்க முடியாமல் அந்த பிஞ்சு தூங்கி விடுகிறது. அந்தப் பள்ளி சிறுவர்களை விளையாடக் கூட விடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதுபோன்றுதான் ஸ்ரீதர் போன்ற பால்மணம் கூட மாறாத லட்சக்கணக்கான குழந்தைகள் சீர் கெட்ட கல்வி முறையால் சீரழிந்து வருகிறார்கள்.

மருத்துவர், என்ஜினீயர் என்ற தங்களது கனவுகளை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமாகவே திணிக்கின்றனர். இதன் விளைவுதான் இதுபோன்ற சிரமமான தொலைதூரம், பயணிக்க வேண்டிய கல்வி முறையை இந்த பிஞ்சுகள் அனுபவித்து வருகின்றன. ஒட்டுமொத்த தேசத்திலும் அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தொலை தூரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு பெற்றோர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. கொத்துக்கொத்தாய் முளைக்கும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த வக்கில்லாத, அதேசமயம் அருகமைப்பள்ளி என்ற திட்டத்தை கொஞ்சம் கூட யோசித்து பார்த்திடாத அரசுகளே இதற்கு முழுக் காரணம்.

இந்த நிலைமை மாற பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசு சமச்சீர் கல்வியை கொண்டுவர உறுதி அளித்தது. ஆனால், எந்த நோக்கத்திற்காக 2009ல் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்ததோ அதற்கு நேர்மாறாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய்மொழியில் கல்வி, அனைத்து வாரியங்களையும் கலைத்து ஒரே வாரியத்தின் கீழ் அனைத்து பள்ளிகளையும் கொண்டு வருதல், அருகமைப்பள்ளிகளை ஊக்குவித்தல் போன்ற முக்கிய ஷரத்துக்களை இன்னும் இந்த அரசு முழுமையாக அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் கல்வியாளர்களின் ஓயாத குற்றச்சாட்டு.

அதேபோல் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துதல் சட்டம் 2009 தமிழகத்தில் வெறும் வெற்று பேப்பராகவே உள்ளது. அரசின் எந்த நிபந்தனைகளையும் தனியார் பள்ளிகள் இதுவரை ஏற்கவில்லை ஏன் நீதிமன்றங்களின் உத்தரவுகளைக் கூட பணத்திமிர் பிடித்த தனியார் பள்ளிகள் பின்பற்ற மறுத்து வருகின்றன. இந்த லட்சணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவித்தொகையாக வழங்கி வருகிறது, ஆனால், இந்தப்பள்ளிகளை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டண முறைகேடுகளை களைய வேண்டிய அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, அந்த பள்ளிகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ளக்கூட அரசு தயாராக இல்லை. இந்த நிலையில் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி ஆகியவை வெறும் பெயரளவிலேயே செயல்படுகின்றன. கோவிந்தராஜன் கமிட்டி அரசுக்கு கொடுத்த கட்டணம் குறித்த அறிக்கை இன்னும் இருட்டிலேயே இருக்கிறது. அதை செயல்படுத்த வேண்டிய ரவிராஜபாண்டியன் குழு வெறும் 3பேர் மட்டும் கொண்ட பொம்மையாக உள்ளது.

வசூலித்து குவித்துக் கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பலர் நேரடியாக அந்த குழுவைச் சந்தித்து புகார் அளித்தும் வருகிறார்கள். ஆனால் இதுவரை அந்தக்குழு எந்த பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி இதுவரை பரிந்துரைக்கவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழகத்தின் குக்கிராமத்தில் இருக்கும் மாணவனின் நிலைமை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அரசு இப்படியே தூங்கிக் கொண்டு இருந்தால், விரைவில் மேற்கு மாம்பலம் மாணவன் நிலவுக்கு சென்று படித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Pin It