கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

சென்ற இதழ் தொடர்ச்சி...

இதற்குப்பின்னர் 1993 ஜனவரி 3ஆம் தேதி சீனியர் ஜார்ஜ் புஷ்ஷ¨க்கும் போரிஸ் யெல்ட்சினுக்கும் இடையே கேந்திர ஆயுதங்கள் தொடர்பாக மூன்றாவது ஒப்பந்தம் கையெழுத்தானது; கண்டம் விட்டு கண்டம் பாயும் வெகுரக, அணு ஆயுத ஏவுகணைகளை பயன்படுத்துவதை தடை செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் எனக்கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1993 ஜனவரி 26ஆம் தேதி அமெரிக்க செனட் சபையால் 87க்கு 4 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு இருக்கிற ரஷ்யா, சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டிருக்கிற ரஷ்யா. போர் மற்றும் அளப்பரிய தியாகங்களை செய்து சோவியத் ஒன்றியம் வளர்த்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பெரும் பணக்கார முதலாளித்துவ கைக்கூலிகளின் ராஜ்ஜியத்திலிருந்து தனது சொந்த ஆட்சி அதிகாரத்தை உயர்த்திப்பிடித்த சோவியத் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பாசிசத்தை வெற்றிகொண்ட மகத்தான ரஷ்ய மக்களின் பாரம்பரியங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் சொந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தன்வயப்படுத்திக்கொண்டிருக்கிற ரஷ்யா.

லோவிக் இன மக்களைக் கொண்ட நாடான செர்பியாவில் நடந்த போர், ரஷ்ய மக்களின் பாதுகாப்பை குறிவைத்து மிகக்கடுமையான முறையில் நடத்தப்பட்டது. இதைத்தடுக்க அங்கிருந்த எந்த அரசாலும் முடியவில்லை.இராக்கில் நடத்தப்பட்ட முதல் போர் மற்றும் நேட்டோ படைகளால் பல்லாயிரக்கணக்கான செர்பிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட கொசோவா போர் ஆகியவற்றால் வெகுண்டெழுந்த ரஷ்ய நாடாளுமன்றமான டூமா, அமெரிக்காவுடனான விண்வெளி மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது; 2000ஆம்ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவந்தது. அதே நேரத்தில் ஏற்கெனவே அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஏ.பி.எம். ஒப்பந்தம் எனப்படும் வெகுரக அணு ஆயுத ஏவுகணைகளை பயன்படுத்துவதை தடை செய்யும் ஒப்பந்தத்தை நீடிக்க முயற்சித்தது. ஆனால் ஏகாதிபத்திய கைக்கூலிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

இதுதொடர்பாக,உலக மக்களின் கருத்தை குழப்புவதற்கும், போலித் தகவல்களை உருவாக்குவதற்கும் தனது உலகளாவிய ஊடக ஆதாரங்களை பயன்படுத்தி அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது. தனது தொடர்ச்சியான போர்களின் விளைவாக இன்றைக்கு அந்தநாடு ஒரு கடுமையான கட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் போரில் அனைத்து நேட்டோ நாடுகளும் மிகக்கொடிய குற்றங்களை இழைத்திருக்கின்றன. இவர்களோடு இணைந்து பணக்கார தொழில்வள நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்த்ரேலியா ஆகியவையும், உலக மக்கள் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்த கொடிய படுகொலைகளை நடத்தியிருக்கின்றன. இதில் ஒருசில மூன்றாம் உலக நாடுகளும் அடங்கும்.

இந்தப்பின்னணியில் இந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தான உடன்பாட்டின் அடிப்படை அம்சம் என்ன? இரண்டு நாடுகளுமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் இருக்கும் அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கையை 1550ஆக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், பிரான்சில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற அணு ஆயுத ஏவுகணைகளைப் பற்றியோ, இங்கிலாந்திலும் இஸ்ரேலிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற அணு ஆயுத ஏவுகணைகளைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை; இந்த ஏவுகணைகள் அனைத்தும் ரஷ்யாவை தாக்கி அழிக்க வல்லவை. அதுமட்டுமின்றி, ஹிரோஷிமா மாநகரை அழித்தொழித்த சக்திவாய்ந்த அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுதங்களைப் பற்றியும் இந்த ஒப்பந்தத்தில் பேசப்படவில்லை. அமெரிக்க வசமிருக்கிற எண்ணற்ற பேரழிவு ஆயுதங்கள் பற்றியோ, வேகமாக வளர்ந்துவரும் தனது ராணுவ பட்ஜெட் மூலம் அமெரிக்கா அர்ப்பணித்திருக்கிற ரேடியோமின்னணு ஆயுதக் கட்டமைப்புகள் பற்றியோ இந்த உடன்பாட்டில் எதுவும் இடம்பெறவில்லை.

இரண்டு அரசுகளுக்குமே நன்றாகத் தெரியும்; இந்த ஆயுதங்களோடு தாங்கள் மோதிக்கொண்டால் ஏற்படப்போகிற மூன்றாவது உலகப்போரே இந்த உலகின் கடைசிப்போராக இருக்கும் என்று. இவை அனைத்திலும் நேட்டோ உறுப்புநாடுகளுக்கு இருக்கிற பங்கு என்ன? இவர்கள் நடத்திய கூட்டத்தின் மூலமாக மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மை என்ன? மூன்றாம் உலகநாடுகளுக்கு கிடைத்துள்ள பலன் என்ன? அல்லது சர்வதேச பொருளாதாரத்திற்கு இவர்கள் அளிக்கிற நம்பிக்கைதான் என்ன? இவர்களால், கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள உலகப்பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்ற சிறு நம்பிக்கையை கூட அளிக்க முடியாது. அமெரிக்க தேசத்தின் மொத்தக் கடன் இன்றைய தினம் எவ்வளவு தெரியுமா? அமெரிக்க மத்திய அரசாங்கம் மட்டுமின்றி அந்த நாட்டிலுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் மொத்தக்கடனையும் கூட்டினால், 58 டிரில்லியன் டாலர். இது 2009ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூட்டுத்தொகையாகும்.

லிஸ்பன் மாநகரில் கூடிய நேட்டோவின் உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைத்துவருகிற மிகப்பெரும் நிதியாதாரம் எங்கிருந்து வருகிறது என்பதை உணர முன்வருவார்களா? எங்கிருந்து வருகிறது இவர்களுக்கான பணம்? இதற்கு பதில் எளிமையானது; உலக நாடுகள் முழுவதிலுமுள்ள மக்களின் மிகச்சிறிய பொருளாதாரத்திலிருந்து. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணம் என்ற பெயரில் அமெரிக்காவால் வரையறை செய்யப்பட்டு அளிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை இந்த மக்களின் கைகளில் கொடுத்துவிட்டு, அந்தப்பணத்தைப் போல 40 மடங்கு மதிப்பு மிக்க தங்கத்தால் வலுவாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத்திலிருந்து. இத்தகைய நாட்டிற்குத்தான் இன்றைக்கும் சர்வதேச நிதிநிறுவனத்திலும் உலக வங்கியிலும் தடை அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஏன் நேட்டோ உறுப்பு நாடுகள் போர்ச்சுக்கல் தேசத்தில் கூடியபோது விவாதிக்கவில்லை? அமெரிக்கா, நேட்டோ மற்றும் இவர்களின் கூட்டாளி நாடுகளது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை முட்டாள்தனமானது.

ஆப்கானிஸ்தானில் தங்களை எதிர்த்து குரல்கொடுப்பவர்களிடம் அதிகாரத்தை விட்டுவிட்டு அந்த நாட்டிலிருந்து இவர்கள் வெளியேறிவிடுவார்களானால், தோல்வியடைந்துவிட்டார்கள் என்று பொருள். அங்கு போர் நடப்பதற்கு முன்பே பல்லாண்டு காலமாக இவர்கள் நிலைகொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்ஆப்கானிஸ்தானத்தோடு காலனியாதிக்கக் காலத்திலிருந்தே நீண்ட எல்லையை பகிர்ந்துகொள்கிற, மிகப்பெரும் மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இருநாடுகளிலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் பழங்குடிகள் இருக்கிறார்கள்.

நான் ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவை விமர்சிக்கவில்லை; தனது நாட்டை குறிவைத்திருக்கிற அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் மிகச்சரியான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் பாரக் ஒபாமா இதே முயற்சியை மேற்கொண்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஈரானிய ராக்கெட்டுகளிடமிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க மிகப்பெரும் பொருட்செலவில் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு படைகளை குவிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது நகைச்சுவையானதே; ஏனென்றால் சொந்தமாக எந்த ஒரு சக்திவாய்ந்த அணு ஆயுதமும் இல்லாத ஒருநாட்டிலிருந்து இத்தகைய ஆபத்து வரும் என்று அவர் எதிர்நோக்குகிறார். குழந்தைகளின் காமிக் புத்தகத்தில் கூட இப்படி ஒரு கதை இடம்பெற வாய்ப்பில்லை.”

ஒபாமா ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறார்; ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்க வீரர்களை விலக்கிக்கொள்வோம்" என்ற தனது உறுதிமொழி ஒத்திவைக்கப்படலாம் என்று. நோபல் பரிசைப் பெற்ற அவருக்கு நாமும் ஒரு பரிசு அறிவிக்கலாம். "மிகச்சிறந்த பாம்பாட்டி வித்தைக்காரர்" என்பதே அந்த விருது.