கீற்றில் தேட...

 

நான் தென்றல் மாயப்பேய்
மழைத்துளி சிலந்தி வலை
அல்லது காலத்தை மீறி வளர்ந்து நிற்குமொரு செடி
குருதியின் ஈரம் குடித்த மலர்
நிலம்
நீர்
ஆகாயம்
எல்லாமாகவும் உன் சொற்களிலிருக்கும்
என் உடலுக்குள்ளாகவிருக்கும் இன்னுமொரு உடலை எப்பொழுதும் உணர்ந்தவனில்லை நீ
நானும் முயன்றேன்
உன்னை நிலாயெனவும்
நட்சத்திரமெனவும்
ஏதேனுமொரு வார்த்தையில் அன்பு செய்ய
எவ்வளவு முயன்றும் முடியாமல்
நீ எப்பொழுதும்
உடலாக மட்டுமே இருப்பவனென்கிற உண்மையினை எப்படிச் சொல்ல
பொய்களை மட்டுமே விரும்பும் உன் முகத்திற்கு முன்னால்.