தமிழகத்தில் நான்கரை லட்சம் மாணவர்கள் 60 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தியோடு நாம் இந்த கல்வியாண்டை வரவேற்றுள்ளோம்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கான இடம் எந்த கல்லூரியில் கிடைக்கும் என்கிற ஏக்கத்தோடு கலந்தாய்விற்காக காத்திருக்கிறார்கள். அதே வேளையில், பணம் படைத்தவர்கள் நன்கொடை செலுத்தி தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை உறுதி செய்து விட்டனர்.

எந்த படிப்பையும் ஆர்வத்துடன் பயின்றிட வேண்டும் என்பதில்லாமல் மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்த படிப்புகள் பயனற்ற படிப்புகளாக உருமாற்றப்பட்டுள்ளது. மற்ற படிப்புகளை தேர்வு செய்து படிப்பவர்கள் எதற்கும் வழியில்லாத ஏழை தமிழனின் பிள்ளைகள் என்பதுதான் உண்மை. இது தவிர்த்து, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களில் 95 சதம் மதிப்பெண் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையாக பணம் படைத்தவர்கள் மட்டுமே, தாங்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ந்திட முடியும். 95 சதம் மதிப்பெண் பெற்றவர்கள் சேரமுடியாத கல்லூரிகளில் கூட 10 லட்சம் பணம் உள்ள மாணவர்கள் எளிதில் சேர்ந்திட முடியும்.

சிறந்த கல்லூரிகள் என பெயர்பெற்றுள்ள கல்லூரிகள் சுமார் 7+-10 லட்சம் வரை Mechanical மற்றும் EEE பாடப்பிரிவிற்கும், சுமார் 5-+7 லட்சம் வரை மற்ற பாடப்பிரிவுகளுக்கும் நன்கொடை வசூலிக்கின்றனர். அரசு கல்லூரிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளதும், அரசின் கல்விக் கொள்கையுமே இந்த கூட்டுக் கொள்ளைக்கு முழுமுதற் காரணம்.

இந்த ஆண்டு அரசு கல்லூரியில் சேர்வதற்கு மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. 100 சதம் cut off (அதிகப்பட்ச) மதிப்பெண் பெற்றவர்க்கு மட்டுமே அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் அதுவும் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பது சந்தேகமே. 195 க்குமேல் கட்ஆப் (97.5 சதம்) மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் சுமார் 12000 பேர்கள். இதில் சொற்பமானவர்கள் தவிர மற்ற அனைவரும் சுயநிதி கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை யுக்திகளை கையாண்டாலும் சமநிலையை பெற்றுள்ள மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேல் உள்ளவர், மதிப்பெண் இருந்தும், பணம்தான் தனக்கான இடத்தை தீர்மானிக்கப்போகிறது என்கிற நிகழ்ச்சி எத்தகைய மனநிலையை நமது புதிய தலைமுறையிடம் உருவாக்கும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். பணத்தை எப்படி புரட்டுவது என்பதோடு பெற்றோர்கள் தங்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள முயன்றிட வேண்டும். ஊடகங்களால் உருவாக்கப்படுகிற செய்திகளை பின் தொடராமல் தங்கள் குழந்தைகளின் ஆர்வத்திலிருந்து முடிவுகளை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் கணினி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவே அனைவராலும் விரும்பப்படுவதாக கூறப்பட்டது. தற்போது Mechanical, EEE, Civil பாடப் பிரிவே அனைவராலும் விரும்பப்படுவதாக கூறப்படுகிறது.

அனைவரின் விருப்பம் என்கிற பொதுக் கருத்தே வியாபார தந்திரம்தான், என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். கணினி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுக்கு ஆய்வக வசதிகளை உருவாக்குவது எளிது. எனவேதான் தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கு வரவேற்பு உள்ளதாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது உள்ள அனைத்து பொறியியல் கல்லூரியிலும் இந்த பாடப்பிரிவுகள் உள்ளதை நாம் கண்டிட முடியும். ஆனால் ஆய்வகங்களுக்கு அதிக பொருட்செலவை உருவாக்கக் கூடிய Mechanical, Aero, Auto, Civil, Electrical போன்ற பாடப்பிரிவுகளில் பெரும்பாலான புதிய கல்லூரிகளில் இல்லை. பொறியியல் கல்வி மூலம் பணம் கொழுத்த பெரிய முதலாளிகள், புதிய கல்லூரிகள் மூலம் உருவாகும் வியாபார போட்டியை தவிர்க்கவே இந்த பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். உண்மையில் எந்த பாடத்தையும் ஆர்வத்தோடு படித்து 70சதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் ஊடகங்களால் உருவாக்கப்படும் பொதுக்கருத்தை விடுத்து தங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை (அ) மனப்பாடம் செய்யும் திறனை அவர்களின் பள்ளி மதிப்பெண் பட்டியலை கொண்டு அறிந்து அதற்கேற்ப முடிவுகளை மேற்கொண்டிட வேண்டும். கணிதத்தில் ஆர்வம் இருப்பின் அவர் பொறியியலில் எந்த பாடப்பிரிவிலும் சிறந்த மதிப்பெண் பெற்றிட முடியும்.

இயற்பியலை பொறுத்தவரை 11ஆம் வகுப்பு இயற்பியலில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள் Mechanical, Civil, Aero, மற்றும் Automobile பாடங்களை தேர்வு செய்யலாம் துரதிர்ஷ்டவசமாக 11ஆம் வகுப்பு பாடங்களை பெரும்பாலான மாணவர்கள் படிப்பதில்லை. ஆனால் அதுதான் தற்போது பெரும்பாலான மாணவர்களால் விரும்பப்படுவதாக கூறப்படும் Mechanical, Civil, க்கு அடிப்படை 12ஆம் வகுப்பு இயற்பியல் ஆர்வம் உடையவர்கள் ECE, EEE, E&I பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். வேதியியல் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் Chemical சம்பந்தப்பட்ட துறையை தேர்வு செய்யலாம்.

கணிப்பொறி அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் CSC, IT துறையை தேர்வு செய்யலாம்.

இப்படி மாணவர்களின் ஆர்வத்திலிருந்து அதற்கான துறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களால் அதிக மதிப்பெண் பெற்றிட முடியும். எப்படியிருப்பினும் சுயமுயற்சி மற்றும் திறமை உள்ளவர் மட்டுமே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்கிற கருத்தை வலுவானதாக்கி அரசு தன் கடமையிலிருந்து முற்றிலும் விடுபட நினைப்பதை நாம் உன்னிப்பாக கவனித்திட வேண்டும். விரும்பின கல்லூரி கைப்பட cut off ஐ விட கைநிறைய பொருள் வேண்டும் என்கிற நிலையில் இருந்து எதிர்கால தமிழினத்தை காப்பாற்றிட தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிட வேண்டும். இதுவே நமது தலைமுறைக்கு நாம் சேர்த்திடும் மிகப்பெரிய சொத்தாகும்.

Pin It