கைக்குழந்தை
ஒன்றினைப்போல்
வீடு
பெண்ணைச் சுற்றி
வளைக்கிறது
ஆடை மீதான
பிரக்ஞைப்போல்
பெண்
வீட்டை
தன் உடலெங்கும்
படர விடுகிறாள்.
வெள்ளாடை
மனிதர்களின்
உலகமாய் விரியும்
வரவேற்பறையின்
போலிச்சிரிப்பும்
ஏமாற்றும் ஒழுங்கும்
பதற்றத்துள்ளாக்குகின்றன
பெண்ணை.
சிடுக்குப்பிடித்த
சமையலறை மேடையும்
கனத்த கறையேறிய
கழிப்பறைச்சுவரும்
கடக்கும்
விநாடிகளுக்கிடைப்பட்ட வாய்ப்பில்
நூலாம்படை கோர்க்கும் சிலந்தியும்
பீதியடையச் செய்கின்றன
பெண்ணை.
கழுவப்படாத
எச்சிற் தட்டுகளுக்கிடையில்
மீதப்பட்ட உணவுப்பொருளாய்
கரைந்தோடுகிறாள்
பெண்.
ஒழுங்கென்னும்
வேதாளத்தைச் சுமந்து
வளைந்தொடிகிறது
பெண்ணின் முதுகு.
வரலாற்றுக் கறைபடிந்த
தன் ஆடையை
மொட்டைமாடி வெயிலில்
காயப்போடுகிறாள்.
வீடு
முகஞ்சுளிக்கிறது.
மருகுகிறாள்
கறைகளில்லா
ஆடையன்றிற்காக.
உறைந்த
மூதாய் ஒருத்தியைப்போல்
சமைந்திருக்கும் வீடு
பெண்ணை
மருளச் செய்கிறது.
கறையுற்ற ஆடை
காணாமல்
போகக்கடவதாய்
வேண்டுகிறாள்.
வீடு
மிரட்டுகிறது.
ஆடையின்றி எப்படி?
நாகரீக மனுஷியல்லவா நீ?
கறையா முக்கியம்...
ஆடையன்றோ?
நிர்வாணம்
உண்டாக்கிய பயத்தில்
அவசரமாய் அணிந்தாள்
கறைகளால் இற்றுப்போன
ஆடையை.
வரவேற்பறையில் பலத்தச் சிரிப்பொலி.
-அ. வெண்ணிலா