இனம்

எப்படி முடிகிறது

மூங்கில் காடொன்று

பற்றியெரிந்த சோகத்தை

காற்றின் காதுகளில்

சொல்லி அழுவதற்கு

ஒற்றைப் புல்லாங்குழலால்.

வதந்தி

தூக்கம் கலைந்த

இரவொன்றில்

நட்சத்திரங்களின்றி

தனித்திருந்த நிலவோடு

பேசிக் கொண்டிருந்தேன்

கவனிப்பார் யாருமற்று.

விடிந்ததும்

எல்லோரும்

பேசிக் கொள்கிறார்கள்...

நீயும், நானும்

நேற்றிரவு

தனியே பேசிக் கொண்டிருந்ததாக.

வேண்டுவன....

நெல்மணி பொறுக்காது,

நீர் பருகாது

சிறகுகள் படபடக்க

கூண்டுக்குள்ளிருந்தபடியே

அந்த புறா வேண்டுவன

ஒன்றே ஒன்று தான்!

விடுதலை

விடுதலை

விடுதலை

இரயில்பாட்டு

இசையின் நெடிய விரல்கள்

மெல்ல மெல்ல

பயணிகளின் மனசைத்

தொட்டுக் கரைக்கிறது.

தடதடத்தோடும்

இரயிலோசையில்

நசுங்கிப் போகிறது

வயிற்றுப் பாட்டுக்கான

வாழ்க்கை.

இருள் கசியும் இரவோ,

வெயில் பூசிய பகலோ

பார்வையற்ற

விழி குழிகளுக்குள்

ஒளி தேடி ஊடாடுகிறது

வார்த்தைகளோடு

பயணத்தில் விழும்

சில்லறைகளின் இசை.

இயல்பு

அழைப்பிதழ் தந்தவர்கள்

வாசற்படியே விட்டு

இறங்கிப் போவதற்குள்

கசங்கி ஓரங்கிழிந்த

மஞ்சள் பூசிய

அந்த கோடு போட்ட

நோட்டை எடுத்து,

பக்கம் புரட்டி

பெயர் தேடி

“அஞ்சு ரூவா எழுதியிருக்கானுங்கெ’’ என

லேசாய் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்

அப்பா.

 

காரணமாவது

தலைக்குப் பதிலாக

கால்கள் முதலில் வெளியே வந்துதான்

நான் பிறந்தேனாம்.

தவழ்ந்த முதல் நாளிலேயே

தரை மண்ணை

நக்கினேனாம்.

சோறூட்டிய

முதல் தடவையிலேயே

துப்பாமல் சாப்பிட்டேனாம்.

பள்ளிக் கூடத்தில்

என்னை சேர்க்கப் போன

முதல் நாளில் தான்

தலைமையாசிரியர்

செத்துப் போனாராம்.

வேலை வாய்ப்பகத்தில்

பதியப்போன நாளில் தான்

ஆட்சி கவிழ்ந்ததாம்.

படித்து முடித்து,

முதல் வகுப்பில் தேறி

பத்தாண்டுகள் ஆன பின்னும்,

எனக்கு

வேலையெதுவும்

கிடைக்காமலிருப்பதுகூட

இதனால் தானாம்.

-மு. முருகேஷ்

 

Pin It