தமிழகத்தில் 14வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைந்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஆளுநர் உரை என்பதால் மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் தமிழகத்தை திமுக ஆட்சி செய்தது. திமுக அரசு அமல்படுத்திய கொள்கை மற்றும் திட்டங்களால் அக்கட்சி தற்சமயம் எதிர்க்கட்சியாகக் கூட அமரமுடியவில்லை. அதிலிருந்தே அக்கட்சி எத்தகைய மோசமான கொள்கையை அமல்படுத்தியது என்பதை அறிய முடியும்.

அன்றைய தினம் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல ஆக்கப்பூர்வான விமர்சனங்களை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் போராட்டங்ளையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசு பின்பற்றிய கொள்கைகளால் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, லட்சம் கோடி ரூபாய் ஊழல் துவங்கி உள்ளாட்சி வரை அரசு பணத்தை கொள்ளையடித்தது. குடும்ப ஆதிக்கம், அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப மறுப்பு, கல்விக் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தாதது என கடும் துயரத்திற்கு ஆளான மக்கள் மிகுந்த எழுச்சியோடு வாக்களித்து புதிய அரசினை தேர்வு செய்துள்ளனர்.

புதிய அரசின் ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை மக்கள் முன் வைக்கும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். இதன் மூலமாக வருங்காலத்தில் இதன் மூல மாகவே வருங்காலத்தில் இந்த அரசு பயணிக்கும் பாதையை நாம் அறிந்து கொள்ளலாம். அத்தகைய புதிய அரசின் பாதையாக அறிவித்துள்ள திட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகள் பின்வருமாறு:2011-,-2012ஆம் ஆண்டில் 25 லட்சம் குடும்பத்திற்கு மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளில் உள்ள தாமதம், தரம், செலவு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்குழுமாணவர்களுக்கு மடிக் கணினிகேபிள் டி.வி அரசுடமைவிலைக் கட்டுப்பாட்டு நிதிமோனோ இரயில் திட்டம்அண்ணா பல்கலைக் கழகம் இணைப்புபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பசுமை வீடுகள் திட்டம் மின்சார பற்றாக் குறைப் போக்க மின்சாரக் கொள்கைதமிழ்நாடு 2025 புதிய தொலை நோக்குப் பார்வைபறிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்க புதிய சட்டம்என்பதோடு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றறை ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். கடந்த 4 ஆண்டுகளில் வருடம் ரூ. 517 கோடி செலவு செய்து அமல்படுத்திய காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரவேற்க வேண்டியதாகும். ஏனெனில் இத்திட்டத்திற்காக செலவழித்தத் தொகையை அரசு மருத்துவமனைகளில் முதலீடு செய்திருந்தால் பெரும் முன்னேற்றத்தை இத்துறையில் ஏற்படுத்தியிருக்க முடியும். புதிய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே போல் கேபிள் டி.வி அரசுடமை, மின் பற்றாக்குறையைப் போக்க புதிய கொள்கை போன்றவை நல்ல முயற்சி ஆகும். தமிழக சிறுதொழில் வளர்ச்சிக்கு மின் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டியது முதல் நடவடிக்கையாக இன்றைய தினம் உள்ளது. அதே சமயம் பொதுப் பாடத்திட்டத்தை ஆராயக் குழு என்ற அறிவிப்பும், கல்விக் கட்டணங்களை கட்டுப்படுத்த வேண்டிய விஷயத்தில் அரசு மௌனம் சாதிப்பதும் சரியான முடிவு அல்ல என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த அம்சம் பாலில் விஷம் கலப்பதற்கு ஒப்பானதாகும்.

இந்த அரசின் ஆளுநர் உரை என்பது புதிய திட்டங்களோடும், சில வழக்கமான அம்சங்களோடும் உள்ள போதும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதில் முந்தைய திமுக அரசின் நிலைபாட்டில் தொடர்ந்து செல்கிறதோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது. ஏனெனில்...

62 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் 3.5 லட்சம் பேருக்கு மட்டும் உதவித் தொகை.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்கான செயல் திட்டம் இல்லை.

கரும்புக்கு கட்டுப்படியான விலைபோன்ற விஷயங்களில் ஆளுநர் உரை பயனில்லை எனவும், 4 ஆண்டு ஆளுநர் உரையின் மறு பதிப்பு இது என்பதால் வருத்தமளிக்கிறது என்று கடந்த ஆளுநர் உரையின் போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இக்கருத்தை தன்னுடைய பத்திரிகை செய்தியின் வாயிலாக வெளியிட்டிருந்தார்.

ஆனால், அதே அம்சங்களில் இன்றைய ஆளுநர் அறிக்கையும் துளியளவும் பயனில்லாமல் இருப்பது தமிழக மக்களுக்கு வேதனையை தருகிறது.

எனவே, ஆளுநர் உரையில் அறிவித்த அறிவிப்புகளோடு இந்த புதிய அரசு,  அரசுத்துறையில் உள்ள  2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது.

1971 ஆம் ஆண்டின் படியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியேஅரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விரிவாக்கம் செய்வதன் மூலமாக 5 லட்சம் பணியிடங்களை குறைந்தபட்சம் உருவாக்கி நிரப்புவது.

அரசு தமிழகத்தில் உள்ள வளங்களை கண்டறிந்து புதிய தொழிற்சாலைகளை துவங்குவது, ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவது.

விவசாயத்திற்கு கட்டுப்படியான விலை, தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் விவசாயத்திற்கு செய்து தருவது.

தொழில் வளர்ச்சிக்கு உரிய கவனம்

கல்விக் கட்டணங்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விச் சட்டம் பொதுக் கல்வியை. சுகாதாரத்தை. பொது விநியோக முறையை பலப்படுத்துவது.

என மக்களுக்கு தேவையான அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்துவதால் மட்டுமே மக்களின் வாழ்நிலையை உயர்த்திட முடியும். இலவசங்களால் அல்ல என்பதை புதிய அரசு உணர வேண்டும்.

தீதும் நன்றும் அரசின் செயல்களில் இருந்தே மக்களுக்கு சென்றடைகிறது என்பதால் அரசு செல்லும் பாதை சரியான பாதையாக அமைவது அவசியமாகும். அதுவே அதிகாரம் தந்த மக்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை ஆகும். இல்லையெனில் மாற்றத்தை விரும்பிய மக்களின் பயணம் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கவே விழையும் என்பதில் ஐயமில்லை....
Pin It