தலித் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியில் இருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தார் என்பதற்காக ஆசிரியர் ஒருவர், கம்பால் தாக்கியதில் அக்குழந்தையின் கண்பார்வை பறிபோன கொடூரத்தை எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது.
ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளாகி கண்ணைப் பறிகொடுத்த பள்ளி மாணவி தனத்தைப் போல, இன்னும் ஏராளமான பள்ளிக்குழந்தைகள் தங்கள் உயிரையும், படிப்பையும் இழந்து வரும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து கொண்டே போகிறது.
ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி, இலவச சமையல் எரிவாயு என அறிவித்துள்ள அரசு, படிப்பு அனைவருக்கும் இலவசம் என அறிவிக்காத நிலையில், கல்வி வியாபாரிகள் கடை விரித்து கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் பள்ளி தான் சிறந்த பள்ளி எனக்காட்டிக் கொள்ள, கூடுதல் பாடச்சுமை, கூடுதல் கட்டணச்சுமைகளைச் சுமத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சியைக் காண்பிப்பதற்காக, மாணவ, மாணவியர்களை பள்ளியை விட்டு இடைநிறுத்தல் செய்கின்றனர். சில பள்ளிகளில் வகுப்பறைகளை வன்முறை களங்களாக்குவதால் படிப்பு என்பது மாணவ சமுதாயத்திற்கு எட்டிக்காயாக மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாணவ, மாணவியர்களை அடிக்கக்கூடாது என சட்டம் போடும் அளவிற்கு வகுப்பறையில் சில ஆசிரியர்களின் ஒழுக்கம் மாறிக்கொண்டிருக்கிறது.
வசதிபடைத்தவர்கள் போட்டிகள் நிறைந்த உலகத்தில் நல்ல பள்ளி, டியூசன் என பல வகைகளில் பிள்ளைகளைத் தயார் செய்து வருகிறார்கள். ஆனால், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இப்படி அனுப்பப்படும் குழந்தைகள் பல வகுப்பறையில் நடக்கும் கொடுமைகளால் உயிரிழந்து வரும் சூழலில், தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் கல்வி உரிமை, வகுப்பறை வன்முறை தொடர்பாக சென்னையில் கடந்த நவம்பர் 28,29 ஆகிய தேதிகளில் பொதுவிசாரணையை நடத்தியது. இவ்விசாரணைக்காக தமிழகத்தில் இருந்து 337 வழக்குகள் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் 57 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நெஞ்சத்தைப் பதற வைக்கும் வகையில் வகுப்பறை வன்முறைகள் குறித்து மாணவ, மாணவியர், பெற்றோர் எடுத்துரைத்த போது விசாரணை நீதிபதிகள் மட்டுமின்றி பார்வையாளர்கள் பதறி போனார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவி அபினாவை, ஒன்னாவது வகுப்பில் உட்காரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். மறுத்த அந்தக்குழந்தையைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று ஒன்றாவது வகுப்பில் உட்கார வைத்துள்ளனர். இதை பார்த்து மற்ற குழந்தைகள் கேலி செய்துள்ளது. அடுத்த நாள் வகுப்பிற்கு வந்த அபினாவை மீண்டும் ஒன்றாம் வகுப்பிலேயே உட்காரச்சொல்லி ஆசிரியை விரட்ட, வீட்டுக்குச் சென்ற அந்தப் பச்சைக்குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீவைத்துக் கொண்டது. இதுகுறித்து மரணவாக்குமூலத்தையும் அக்குழந்தை பதிவு செய்துள்ளது.
தன் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அக்குழந்தையின் தாய் வெண்ணிலா ஆணையத்திடம் நீதி கேட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரக் கட்டிலைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் அரூஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு மாணவிக்கு ஒரு மாணவர் எழுதிய கடிதத்தை கொண்டு சென்று கொடுத்த காரணத்திற்காக அரூசை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். அத்துடன் அம்மாணவியின் தந்தையும் தாக்கிள்ளார். இதன் காரணமாக தன் மகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக செல்வமணி என்ற அந்த கூலித்தொழிலாளி ஆணையத்தின் முன் கண்ணீர் மல்கக்கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு தலித் மாணவன் அரவிந்தன்,சட்டையில் எறும்பு சென்ற போது சட்டைக்குள் கையைவிட்டு சொறிந்துள்ளான். அப்போது அவனது சட்டையின் காலர் தூக்கிக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த கணித ஆசிரியர், நீ என்ன சண்டியரா என ஓங்கி அறைந்ததில், அரவிந்தன் காது கேட்கும் திறனை இழந்துள்ளான். மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தலித் மாணவி பிரியங்காவை, அடுத்த வகுப்பறையைச் சேர்ந்த ஆசிரியர், வகுப்பறையைச் சுத்தம் செய்யச்சொல்லி அக்குப்பையைத் தின்ன வைத்துள்ளார்.
அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவனான முருகனை கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். பள்ளியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த மாணவன் பிரேம் தாஸ். அரையாண்டு தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் பள்ளியில் இடம் இல்லை என தலைமை ஆசிரியர் எழுதிய கடிதத்தால் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொண்ட திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவி இந்துமதி, 5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதால், மாணவி இறந்தது, மாணவன் கல்வி கட்டணம் கட்டாததற்காக பள்ளியில் இருட்டறையில் அடைத்தது என நினைத்துப் பார்க்க முடியாத வகுப்பறை வன்முறைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பெற்றோர்கள் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் முன் முறையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வாதாடினர்.
இவ்வழக்குகளை தேசிய குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, நீதிபதி ராமமூர்த்தி, பிலால் இசாகி, லொ வர்மா, கிரேன்பட்டி, நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் விசாரித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்து 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்களைக் கேட்கும் போது, இச்சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பொது விசாரணையின் போது ஆணையம் பரிந்துரைத்த சில விஷயங்கள்: ஆசிரியர்களின் தாக்குதல்களால் மாணவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு அரசே மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும். வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தை புகார் தெரிவித்த பிறகு, அதற்கும் மேலான வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக்குழுவின் வன்கொடுமைகளை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வி உரிமைச்சட்டத்தில் உள்ளது போல, மாதிரி விதிமுறைகளை மாநில அரசு தனது கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்க வேண்டும். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அம்சங்களின் மாதிரி விதிமுறைகளில் இருக்க வேண்டும்.வன்கொடுமைக்கு எதிரான விதிகளை கல்வித்துறை உருவாக்கி, அவற்றை கல்வி உரிமைச்சட்டத்தில் இணைக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தக்கூடாது. சீருடை இல்லை என்ற காரணம் காட்டி, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, வயதுச்சான்று, இடமாறுதல் சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டி, பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது. பள்ளியை விட்டு விலகி மீண்டும் சேரும் குழந்தைகளிடம் வயதுச்சான்று கேட்கக்கூடாது என்ற விஷயங்களை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக்குழந்தைகளுக்காக இந்த பொதுவிசாரணையை நடத்தியுள்ளது குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. பள்ளி செல்ல விரும்பு, பாடமெல்லாம் கரும்பு என ஒரு காலத்தில் குழந்தைகள் பாட்டுப்பாடின. அப்படிப்பட்ட பாடல் ஒலிகள் பள்ளிகளில் இருந்து இனி எப்போது கேட்கும்?