“சி ஏ ஜி - ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். உண்மையை அரசுக்கு எடுத்துச் சொல்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. சி ஏ ஜி அறிக்கை ஊடகங்களால், மக்களால், அரசால் நாடாளுமன்றத்தால் மிக முக்கியப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது” சி ஏ ஜி பற்றி இவ்வாறு புகழ்ந்து கூறியவர் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் தான். 2010 நவம்பர் 15 அன்று அதாவது 1,76,000 கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ. இராசா மீதான சி ஏ ஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்புதான் சி ஏ ஜியின் 150வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பாரதப் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையென 10 நாட்களாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்தபோதும், இந்திய வரலாற்றிலேயே ஒரு ஊழல் வழக்கில் பிரதமரின் செயல்பாட்டின்மை மீது உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளபோதும் காங்கிரஸ்  திமுக கூட்டணி அரசு மௌனம் காப்பதன் பின்னணி மடியில் கனமுள்ள பயத்தை தவிர வேறென்ன?

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம். எல்லாவற்றிற்கும் மேல் வாக்காளர்களுக்கு லஞ்சமென ஊழலில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.

எந்தப் பணிக்கு எவ்வளவு லஞ்சமென அரசு அலுவலகங்களில் எழுதி வைத்து விடுங்கள் மக்களின் அலைக்கழிப்பாவது மிஞ்சுமென உச்சநீதிமன்றமே இடித்து கூறும் அளவிற்கு அரசுத்துறையில் ஊழல் இல்லாது எவ்வேலையும் நடப்பதில்லை. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளில் பெரும்பாலோர் ஊழல்வாதிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் அவர்களே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அதிர்ச்சியும் இந்தியாவில் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.

அவுட்லுக் பத்திரிக்கை தரும் விவரப்படி 1992  2009 வரை 17 ஆண்டில் மட்டும் நடந்துள்ள ஊழல் மதிப்பு 73 லட்சம் கோடி ரூபாய். இவ்வாண்டில் பட்ஜெட் பற்றாக்குறையே 3,45,000 கோடிகள் தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் 1,76,000 கோடியும் சேர்த்தால் தலையே சுற்றுகிறது. 1999 முதல் 2003 வரை 9 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்தது பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் தான். ஊழலில் பா.ஜ.க, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளையும் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியாத அளவிற்கு ஊறித்திளைக்கின்றனர். மேற்கண்ட விவரங்கள் இதையே தெளிவுபடுத்துகின்றன.

இதே காலகட்டத்தில் பட்டினி அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 84 வளரும் நாடுகளில் 67 என சூடான் மற்றும் இலங்கைகும் பிந்தைய பட்டியலில் போய் சேர்ந்துள்ளது. உலகத்தில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட எடை குறைந்த குழந்தைகளில் 42 சதம் இந்தியாவில் தான் உள்ளனர். உலகில் கல்வியறிவு இல்லாதவர்களில் பாதிப்பேர் இந்தியர். அதுமட்டுமல்ல, இந்தியாவில் 83 கோடி மக்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20 கூட செலவு செய்வதற்கான வருமானம் கூட இல்லாமல் இடம்பெயரும் நிலை உள்ளது.

இந்தியாவில் அனைவருக்கும் உணவு, கல்வியென அடிப்படை தேவைகளை கணக்கிட்டால் 1,60,000 கோடியில் முடிந்துவிடும். ஆனால் இங்கு ஒரு ஊழலே இத்தொகையை விட அதிகமாக உள்ளதெனில் மக்கள் நலன் என்னவாகும்? இப்படி சேர்த்த பணம் அரசியல் வாதிகள் மற்றும் பெரும் முதலாளிகளிடம் கருப்பு பணமாக சேருகிறது என நாம் அறிவோம். சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் 72,80,000 கோடி என முதல் இடத்தை பிடிப்பது இந்தியாதான்! இந்தத் தொகை இப்போது இந்தியாவில் இருந்தால் வரியே இல்லாமல் பல ஆண்டுகளுக்கு அனைத்து பொருட்களையும் மக்களுக்கு தரலாம். கற்பனை செய்து பாருங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எந்தப் பொருட்களுக்கும் வரியில்லாத ஒரு நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்படுமா என்று. இதை விவாதிக்க வேண்டிய நாடாளுமன்றத்திலோ 300 பேர் கோடிஸ்வரர்கள் எனில் நாடாளுமன்றம் யாருக்காக?

பா.ஜ.க, காங்கிரஸ் என மக்கள் கோபத்தை தேர்தலுக்கு தேர்தல் இடம் மாற்றினால் மட்டும் போதாது. இப்போதைய காலத்தின் தேவை ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமே!                                                           ஆசிரியர் குழு

Pin It