உலக அளவில் சுகாதாரம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. சுகாதாரம் மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என உலக அளவிலான மாநாடு அல்மா அட்டாவில் நடந்தபோது தீர்மானம் இயற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிறது. ஆனாலும் சோசலிச நாடுகளைத் தவிர, உழைப்பாளி மக்களுக்கு இன்றுவரை உலகம் முழுவதும் சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. உலகமய அமலாக்கத்திற்குப் பிறகு சுகாதாரம் மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் அடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதில் மக்கள் வாழ்க்கையின் அடைப்படை அம்சமான சுகாதாரமும் விதிவிலக்கல்ல. இந்திய ஆட்சியாளர்களாய் பங்கெடுத்துள்ள மாநில திமுக அரசு சுகாதாரத்தை தனியாரிடம் கொடுக்க எந்தவித தயக்கமும் காட்டவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம். இந்திய மக்களில் 20 கோடிபேர் நம்பும் இந்திய அரசின் காப்பீட்டுக் கழகமான எல். ஐ. சியை கலைஞர் நம்பவில்லை. தங்கள் குடும்பத்துக்கு சாதகமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 2400 கோடி ரூபாய் திட்ட மதிப்புள்ள “கலைஞர் காப்பீட்டு திட்டத்தை” ஒப்படைத்துள்ளார்.

தமிழக அரசு, உயிர் காக்கும் உயர்சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதையட்டி, அதன் அருமை பெருமைகள் என்னே தெரியுமா? என்று கலைஞர் அறிக்கைக்குமேல் அறிக்கையும், உடன்பிறப்புகளுக்கு கடிதமும், அரசின் பணத்தில் பக்கம் பக்கமாய் விளம்பரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1, 53, 257 நோயாளிகள் நலம்பெற்றுள்ளனர். மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்ச ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் 1, 44, 45, 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1, 33, 60, 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அப்படி அவர் சொல்வது போல தமிழகத்தின் சுகாதாரம் மேம்பட்டுள்ளதா? இந்த காப்பீட்டுத் திட்டத்தின் உண்மை முகம் என்ன? அரசின் புள்ளி விபரங்களைப் பார்ப்போம். தமிழகத்தில் மருத்துவப் பயிற்சிப் பள்ளி 12, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் 26, வட்ட மருத்துவமனைகள் 162, வட்டமல்லாத மருத்துவமனைகள் 77, டிஸ்பன்சரிகள் 12, காசநோய் மருத்துவமனைகள் 5, பிற மருத்துவமனைகள் 25, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் 6, நடமாடும் மருத்துவக்குழுக்கள் 11, தொழிலாளர் மருத்துவமனைகள் (இ. எஸ். ஐ) 7, இ. எஸ். ஐ டிஸ்பென்சரி 160, ஊரக குடும்பநல மையங்கள் 382, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1409, துணை சுகாதார நிலையங்கள் 8682, பிரசவத்திற்கு பின்னான தாய் சேய் நலவிடுதிகள் 118, நகர்புற குடும்ப நல மையங்கள் 65, நகர்புற சுகாதார மையங்கள் 245 என்று உள்ளது. தமிழக மக்கள் தொகைக்கும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளை அதாவது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை பலநூறு நகராட்சிகளை, பேரூராட்சிகளை கிட்டத்தட்ட ஏழு கோடி மக்கள் தொகையை கொண்ட தமிழகத்திற்கு இது போதுமானதா என்ற கேள்வி முக்கியமானது.

மாநிலத்தில் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற “புள்ளி விபரம்” மகிழ்ச்சியானதாக இருந்தாலும் உண்மை நிலை கசப்பானது நகர்புறத்தில்தான் அதிக மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமப்புறத்தில் மருத்துவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டுமானங்கள் மிகவும் மோசமானதாய் இருக்கிறது. ஆரம்பசுகாதார நிலையங்களின் சுவற்றில் பளப்பளப்பாக நிறங்களை பூசுவதல்ல வளர்ச்சி. தமிழகத்தில் பல்லாயிரம் கிராமங்களில் இன்னும் கழிப்பிடம், குடிநீர் போன்றவை கடுமையானப் பிரச்சனையாக இருக்கிறது. இதை பூர்த்தி செய்வதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்.

பல நோய்கள் உருவாக திறந்த வெளிக் கழிப்பிடமும், சுகாதாரமற்ற குடிநீருமே காரணமாய் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மருத்துவத்துறை அதீதமாக வளர்ந்துள்ளதாக தமிழகத்தின் முதல்வர் புலகாங்கிதம் அடைகிறார்.

ஆனால் இந்த வளர்ச்சி யாருக்கு அதிக பயன் கொடுக்கிறது? பணம் இருப்பவர்களுக்குதானே. அரசு மருத்துவமனைகளை புறம் தள்ளிய காப்பீட்டுத் திட்டம் தனியார்களிடம் கொள்ளை லாபத்திற்கு வழிவகுத்தது. ஹைபடைடஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டு கிட்னி டயாலிசிஸ் செய்ய ஆண்டுக்கு 30 ஆயிரம் தேவைப்படும் நோயாளிகள் இருக்கிற மாநிலம் தமிழகம், இதய அடைப்பு நோய்க்கு மருந்து பல ஆயிரம் ஆனால் இதற்கு இந்த காப்பீட்டுத் திட்டம் உதவாது? இவைகளுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பதில் சொல்வது கிடையாது. பல நோய்களுக்கு இந்த திட்டத்தின் பட்டியலில் இடம் கிடையாது. 

இந்த திட்டத்தில் பயனடைவது கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே. இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் துவக்கத்தில் தனியார் மருத்துவமனைகள் இடவசதி 7000 சதுர அடியில் இருந்தால் அந்த மருத்துவமனைகளுக்கு அனுமதி கிடைத்தது. போட்டி அதிகமானதும் ஒருநாள் திடீரென இடவசதி 9000 சதுரஅடி என மாற்றம் பெற்றது. திட்டம் எப்படி திடீரென மாறியது என்கிறீர்களா? சின்ன சின்ன மருத்துவமனைகளுக்கு இதில் இடம் கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தால், பிரும்மாண்டமான கட்டடங்களை கட்டியுள்ள படகாசூர மருத்துவமனைகளின் லாபநோக்கால் இந்த மாற்றம் விளைந்தது. திட்டம் தீட்டியவர்களுக்கும் அதனால் பயன் அடைபவர்களுக்கும் லாபம் மட்டுமே நோக்கம் எனில் மக்கள் நிலை என்னாவது. அது சரி மக்களைப் பற்றி கவலைப் படும் ஆட்சியாளர்களிடம் தானே இதுகுறித்து பேச முடியும்? வாழ்க கலைஞர் காப்பீட்டுத் திட்டம். ஒழியட்டும் பொது சுகாதாரம்!

Pin It