இனி இந்த தேசத்தில் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதற்கான விலையை நிர்ணயம் செய்யலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்பின் தொடர் அதிர்வு இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. அல்லது அதை நமது ஊடகங்கள் மக்களுக்கு தெரியப் படுத்த விரும்பவில்லை. அறிவிக்கப்படாமல் பல திட்டங்கள் நடைமுறைக்குள்ளாவது போல எண்ணெய் நிறுவனங்களின் அரசியல் குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இந்த முடிவு 2002 ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டு தற்போதுதான் நடைமுறைக்கு வருகிறது. நமது இந்திய நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 74 சதமானம் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 26 சதமானம் இந்தியாவிலேயே கிடைக்கிறது.

இந்தியாவில் கிடைக்கும் இந்த 26 சதமான கச்சா எண்ணெய் வளத்தை அரசு தனது பொதுத் துறை நிறுவனத்திடம் கொடுத்து வினியோகம் செய்யாமல் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், எஸ்ஸார் நிறுவனத்திற்கும் தாரை வார்த்துள்ளது. அவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க திட்டமிட்டு அரசுக்கு நெருக்குதல் கொடுத்து அதையும் இப்போது சாதித்துவிட்டனர். சர்வதேச சந்தையில் கச்சாப்பொருளின் விலையேற்றத்தால் இங்கு எண்ணெய் விலை உயர்வதாக ஒரு பொய்யான வாதம் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அப்படியே எனினும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் மீது பலவரிகள் விதிக்கப்பட்டு இந்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்திய தனியார் நிறுவனங்கள் உள்நாட்டில் கிடைக்கும் எண்ணெயும் அதே அளவுக்கு விலைவைத்து விற்று கொள்ளையடிப்பது அநியாயம் இல்லையா?

நட்டம் என்ற பொய்:

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்கள் கடுமையான இழப்புகளை சந்திக்கின்றன, மானியம் அதிகம் வழங்குவதால் அரசுக்கு கடுமையான நட்டம் ஏற்படுகிறது இதன£ல் தவிர்க்கமுடியாமல் கொஞ்சம் விலை உயர்வு ஏற்படுகிறது என்று காரணம் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் விலையை குறைப்பது கிடையாது. விலையை ஏற்றுவதைத் தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நட்டம் காரணமாக விலையேற்றம் என்கிறார்களே உண்மை என்ன?

நட்டம் என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுவது உண்மையா என்று பார்த்தால் அதில் கொஞ்சமும் உண்மை கிடையாது. லாப வருவாய் இழப்புதான் இவர்களால் நட்டம் என காட்டப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இயங்குகின்றன. 2009_2010 ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10, 200 கோடியும், பாரத் பெட்ரோலியம் 1, 500 கோடியையும், ஹெச். பி. சி. எல் 1, 300 கோடியையும், ஓ. என். ஜி. சி 16, 700 கோடியையும், கைல் 3, 140 கோடியையும் லாபமாக ஈட்டியுள்ளனர் இவை அறிவிக்கப்பட்டதால் எவ்வளவு லாபம் வெளியில் தெரிகிறது. ஆனால் அம்பானி மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் அடித்த கொள்ளை லாபம் எவ்வளவு என்று வெளியில் தெரியாது. வருமானம் இப்படி இருக்க எண்ணெய் நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன, அரசுக்கு கடுமையான இழப்பு என்று ஏமாற்றுவது அரசுக்கு மக்கள் குறித்த கேவலமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

மற்றொரு கணக்கும் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர் என்று வைத்துக்கொண்டால். அதாவது 160 லிட்டர் கச்சா எண்ணெய் விலை 3619 ரூபாய். அப்படி எனில் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 22 ரூபாய் அறுபதுகாசு. இந்த கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் பாரபின் மெழுகும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது சாலை போட தாராக பயன்படுகிறது. அதாவது இதில் கழிவு என்பதே கிடையாது. 23 ரூபாயில் இத்துனை பொருட்களை தயாரித்து பிறகு நட்டம் எனில் அது எத்துனை பித்தலாட்டம். 55 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனை செய்வது எவ்வளவு பெரிய பகல் கொள்ளை.

இதனால் அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபவிகிதம் ஆண்டுக்காண்டு பெருகிவருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி, பங்குத்தொகை, காப்புரிமை தொகை என 2002 _03 இல் 64, 595 கோடி அரசுக்கு வருமானம். இது 2004_05 இல் 77, 692 கோடியாக உயர்ந்து 2009_10 ஆண்டில் 1, 00, 000 (ஒரு லட்சம்) கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய அரசின் ஒட்டு மொத்த வரிவசூலில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு மடங்காகும். இந்த சூழலில்தான் நட்டம் என்று கதையளக்கின்றனர்.

ஏன் விலையேற்றம்:

சர்வதேச சந்தையில் விலையேறுவதும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும் விலையேற்றத்திற்கு காரணமல்ல. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியால் தான் விலையேறுகிறது. இன்று பெட்ரோலியப் பொருட்களில் 52 சதம் வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தண்டம் கட்டி வருகின்றனர். இந்த வரி இல்லை எனில் பெட்ரோலை நாம் லிட்டர் 23 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் மக்கள் தலையில் வரியைக்கட்டி வேறு வழியில்லை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நட்டு மக்களுக்கு ஊடகங்களில் நமது பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் உரையாற்றிக் கொண்டுள்ளனர்.

நம்மிடம் 100 ரூபாயை வரி என்று கொள்ளையடித்து 25 ரூபாய் மானியம் கொடுத்துவிட்டு பார்த்தீர்களா மானியம் கொடுக்கிறோம் என்கின்றனர். இதனால்தான் நட்டம் என்கின்றனர். யார் யாருக்கு மானியம் தருகிறார்கள் என்பது புரியவில்லையா? கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய பெரு நிறுவனங்களுக்கு கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்த சலுகை 80, 000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்க வரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தமாக 4, 19, 786 கோடியாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் கோடியை பெரு முதலாளிகளுக்கு சலுகை யாகக் கொடுக்கும் நமது அரசாங்கம், மக்களிடம் கொள்ளையடித்து எங்கு கொடுக்கிறது பாருங்கள்.

அடிக்கடி அரசாங்கம் விலையை உயர்த்தினால் அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது கிரிட் பாரிக் பரிந்துறை என்ற பெயரில் இந்த விலை நிர்ணயத்திலிருந்து அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப விலையை தீர்மானிக்கலாம். அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் மாறும் விலைக்கு ஏற்ப இவர்கள் விலையைமாற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படி எனில் எதற்கு அரசாங்கம் என்ற நமது கேள்வியில் நியாயம் இல்லாமல்இல்லை. இந்த எண்ணெய் நிறுவனங்கள் லாபம் மட்டும் அரசுக்கு வேண்டும் ஆனால் மக்களை பற்றி கவலைப்பட அவர்கள் தயாரில்லை. இந்திய நாட்டில் இருக்கின்ற 80 சதமான மக்கள் வறுமையில் உழலும் போது அவர்களுக்கு நிவாரணம் அளிக்க துப்பில்லாத அரசுகள் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளுக்கு மேலும் மேலும் சலுகைகளை வழங்குவது அவர்களின் வர்க்க குணத்தின் வெளிப்பாடு.

போராட்டங்களே தீர்வு:

பெட்ரோல் மீதான விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடரைப் போல விலைவாசியை அப்படியே பாதிக்கும். சரக்கு கட்டண உயர்வு என்ற பெயரில் சாமான்யர்கள் வாங்கும் குண்டூசி துவங்கி உணவுப்பொருட்கள் வரை தாக்கும். இதில் பாதிக்கப்போவது ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் அல்ல. “விலைவாசி ஏறும் போது சாமான்யர்கள், ஏழை மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்’’ என பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பேசி பசப்புவது யாரை ஏமாற்ற என்பது புரியாததல்ல. இத்துனை அக்கரை கொண்டவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் ஆட்டோ, பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு 14. 78 சதம் டீசலுக்கு 4. 75 சதம் விலையை உயர்த்தியவர் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானங்களுக்கு இதைவிட வரியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விமானங்களுக்கான பெட்ரோலுக்கு 3. 60 ரூபாய் மட்டுமே உயர்த்தினார். இதுதான் அல்லல் படும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய செய்தி.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அலைபாயும் குதிரையைப்போல செயல்படுகிறது. கடந்த ஆட்சிகாலத்தில் இடதுசாரிகள் இவர்களை கொஞ்ச மேனும் கட்டுப்படுத்தினர் ஆனால் அவர்களது பலம் குறைந்தது இந்திய நாட்டின் முதலாளி களுக்கு மிகவும் வசதியாக மாறிவிட்டது. இந்த அரசாங்கம் தாங்கள் நினைக்கும் அனைத்தையும் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றனர். இதை தடுக்க ஒரே வழி நமது மக்கள் வீதியில் வந்து போராடுவதுதான். மக்கள் வீதியில் அணிதிரள பெட்ரோல் அரசியலில் உள்ள உண்மையை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். நம்மிட மிருந்து கொள்ளையடித்து அதில் ஒரு சிறு பகுதியை மானியம் என்ற பெயரில் நமக்கே கொடுப் பதை, சர்வதேச சந்தை என்று ஏமாற்றுவதை, இந்திய நாட்டின் எண்ணெய் வளங்களை தனியார் பெரு முதலாளிகளிடம் கொட்டிக்கொடுத்ததை, பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் எண்ணெய் நிறூவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பொய் சொல்வதை உரக்கப் பேசி போராட்டப் பதாகையை உயர்த்திப்பிடிப்பதுதான் வாழ்க்கையை பாது காத்திட ஒரே வழி.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It