எமது நிலத்தைக்
காக்கும் இந்த போராட்டத்தில்
நாம் வென்றாக வேண்டும்
இல்லையேல்
நாம்
கொல்லப்படுவோம்
ஏனெனில் தப்பியோடுவதற்கு
எமக்கு வேறு நிலங்களில்லை.
                                                                           -  கென் சாரோ வி

 பரவலாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்...

அறிமுகம் -

கூடங்குளம் அணுவிசை முதல் இரண்டு 1000 மெகாவாட் திட்டத்தை நிறுவுவதற்கான  எதிர்ப்புணர்வு 2011 ஆகஸ்ட் முதல் தமிழகமெங்கும் பரவலாக எழுந்துள்ளது. இத்திட்டம் வடிவமைப்பட்ட 1988 முதலே அதற்கு எதிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பில் வெளியான  கதிர் வீச்சு  கட்டுப்படுத்த முடியாதது, பேரழிவை உருவாக்கும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமானதை அடுத்து இந்திய மக்களின்  எதிர்ப்புணர்வின்  வீச்சு அதிகரித்திருக்கிறது. கூடங்குளத்தில்  மட்டும் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடக்கவில்லை. ஜெய்பூரில், மகாராஷ்ட்ராவில் உள்ள கிராமப்புற மீனவர்கள், விவசாயிகள் அரியானா கோரக்பூரில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் அணு உலை வேண்டாம் என்று உரத்தக் குரல் எழுப்பத் தான் செய்கின்றனர்.

மேற்கு வங்காளம்  ஹரிப்பூரில் அமையவிருந்த ரஷ்ய அணுவுலை, இனி அணுவாற்றல் வரைபடத்தில் இடம்பெறாது. மக்களின் உணர்விற்குத் தலைவணங்கி மேற்கு வங்க மாநிலம் மாநில அரசு அணுவற்ற மாநிலமென்று அறிவித்து விட்டது. நல்லவர்கள் பிறரின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்.  ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் இனி மின்சார உற்பத்திக்கு அணுவிசையைப் பயன்படுத்துவதில்லை,  மாசற்ற மீளாற்றல் வடிவிலான ஆராய்ச்சியில் இறங்கப் போவதாக அறிவித்து உள்ளன. ஆனால் இந்திய அரசு  மட்டும் விவசாயிகளின், மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்து சூதாட்டத்திற்கு முண்டா தட்டிக் கொண்டு நிற்கிறது.

DSC_0037_370அணு மிரட்டலுக்குள்ளான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் வணிகர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து உறுதிமிக்க போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகி அணுஉலைத் திட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, போராட்டத்தில் அந்நிய சக்திகளின் கை இருப்பதாக பிரச்சாரம் செய்து மக்களைப் பிரித்தாளும் வஞ்சத்தைக் கையாள்கிறது. அணுவாற்றல் நிறுவனமும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரத்திற்கு ஒரு வாதம் வைத்து பிரச்சினையில் இருந்து நழுவப் பார்க்கிறார்கள்.

இந்த (கூடங்குளம்) அணுவுலையின் மின்சாரம் கிடைக்கவில்லையானால் தமிழ்நாட்டின் தொழில்துறை நசிந்து விடும் என்றும், இந்தியாவில் அணுசக்தி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும், அணுஆற்றல் திட்டங்கள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை என்றும், இப்போதிருக்கும் நிலையில் திட்டங்களைக் கைவிடுவதுதான் ஆபத்து என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். (தொடங்கிய ஒரு செயலை நிறுத்துவதே ஆபத்து என்றால் செயல்பாட்டில் இருப்பது எத்தனை பெரிய ஆபத்து மொ.ர்)  இயற்கைப் பேரழிவு குறித்து பேசும்போது அப்துல் கலாம் உள்ளிட்ட இந்திய அறிவியலாளர்கள் அறிவியல் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக ஜோசியம் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் இயற்கையாக ஏற்படாது என்றும், மனிதத் தொழில் நுட்பத்திற்கு  எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது என்றும் யார் தான் உத்தரவாதம் தர முடியும். இயற்கை சக்திக்கு மனிதர்கள் தரும் உத்தரவாதத்தை யார்தான் ஏற்க முடியும்.

புகுஷிமா அச்சமும், மறுபுறம் தொடர் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படுத்தும் கவலையும் மக்களிடையே முரண்பாடான உணர்வுகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. இந்தக் கட்டுரை அணுவாற்றல் பாதுகாப்பு குறித்த முன் வைப்புகளையும், பரவலாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலையும் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1. இந்தியா ஒரு வளரும் நாடு. நமது வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாதது. அணுவாற்றலைப் புறக்கணிப்பது நமது வளர்ச்சிக்குப் போடும் முட்டுக்கட்டை.

அணு ஆற்றல் மூலமாக மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுவதில்லை. எண்ணற்ற மரபு சார்ந்த, மரபு சாரா முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது, அதனை அதிகரிக்கவும்  தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அறுபது ஆண்டுகளில் நாடு தொழில்மயமாதலுக்கும், நவீனமயமாதலுக்கும் நாம் சார்ந்திருக்கும்  மின்னாற்றலில் அணுமின் சக்தியின் பங்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மின்தேவையில் பத்து சதவீதத்திற்கும் மேலாக மீளாற்றல் (காற்று, சூரிய ஆற்றல்)  பங்களிக்கிறது. பிரம்மாண்டமான நீர் மின் நிலையங்கள் 22% அளிக்-கின்றன.

நாம் மெய்யான வளர்ச்சியை நோக்கிப் போவ தென்றால் நமது இயற்கை மூலாதாரமான நீர், நிலம், காற்று மற்றும் மகத்தான மக்கள் சக்தி ஆகியவற்றை விரயம் செய்யாமல் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். மிகுந்த ஆபத்தும்,  அதிக செலவீனமும் கொண்ட பொறியமைவான அணுவை மறுப்பதன் மூலம், மாசற்ற, தூய்மையான, ஆபத்து விளைவிக்காத புதிய மின் உற்பத்தி சாத்தியங்களை நம்மால் உருவாக்க முடியும்.

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்ற அடிப்படையில் சிக்கனமாகவும் பராமரிப்புத் திற-னுடனும் பயன்படுத்துவதன் மூலம் இப்போதுள்ள மின்சாரத்தையே நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். இப்போது தயாரிக்கப்படும் 100 மெகாவாட் மின்சாரத்தில் 40 மெகாவாட்டை நம்முடைய தவறான மின் கடத்தல், வழங்கல் (டிரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிபூஷன்)  முறையினால் அநாவசியமாக விரயம் செய்கிறோம்.  இந்த டி.டி முறையைத் திறம்படக் கையாளும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் இதற்கென ஆகும் விரயம் வெறும் 7%.. அதாவது வேறு வார்த்தையில் கூறுவதானால் 180,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து 72,000 மெகாவாட்டை விரயம் செய்கிறோம். இது மகாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகும் மினசாரத்திற்குச் சமம்.

மின்சாரத்தை திறம்படக் கையாள்வதன் மூலம் மட்டுமே, 90% சிக்கனமாகச் செலவிடுவதன் மூலம் மட்டுமே நம்மால் 60,000 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். இது நம் இதயங்களில் எதிர்ப்பலையை உருவாக்கியுள்ள 60 கூடங்குளம் திட்ட உற்பத்திக்குச் சமமான மின்சாரம். ஒரு அணுவளவும் செலவில்லாமல் கிடைக்கப் பெறுவது.  தமிழ்நாட்டில் மட்டுமே எரிய விடும் வன்னொளி (மெர்க்குரி பல்புகள்) விளக்குகளுக்குப் பதிலாக (எல்.இ.டி.) மென்னொளி விளக்குகளாக மாற்றினாலே 2000 மெகாவாட் சேமிக்கலாம். இதே முறையை  இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தினால், விவசாயத்தில் பழைய நீரிறைப்பு பம்புசெட்டுகளை மாற்றி தரமுள்ளதாக, திறனுள் ளதாக மாற்றினால்...கற்பனை செய்து பாருங்கள். கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாற்ற மின்சாரத்தை எரித்துக் கொண்டிருக்க, பெரும் பெரும் பேரங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்) ஐ.டி பன்னாட்டு நிறுவனங்களில் ஏ.சிகள். இயங்கி விரயமாகிக் கொண்டிருக்க மறுபுறம் வீட்டுத் தேவைகளும், சிறிய நிறுவனங்களும் மின்சாரப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார நுகர்வில் புரட்சிகரமான சிந்தனை மேற்கொள்ள வேண்டும். அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கும் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் இரண்டு மணிநேர மின்பற்றாக் குறை நீடிப்பதில் இருந்தே மின்சாரம் வழங்கல் முறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை நம்மால் சரியாகப்  புரிந்து கொள்ள முடியும்.

2.  மீளாற்றல் பொறிநுட்பம் சாத்தியம் தானா? நமது தேவையை அது ஈடுகட்டி விடுமா?

இந்தியாவின் ஆற்றல் தேவையில், குறிப்பாக மின்சாரமும் ஒரு ஆற்றல் என்ற வகையில் அதனை   ஈடுசெய்ய மீளாற்றல் போதுமானதாக இருக்காது என்பது, இந்தியா ஆற்றலுக்காகச் சார்ந்திருக்கும் இயந்திரத்தனமான சிந்தனை முறையே ஆற்றல் உற்பத்தியை கடினமானதாகவும், பற்றாக்குறையிலும் வைத்திருக்கிறது. இப்போதைய திறனற்ற மின்சார உற்பத்தி முறை அதை எடுத்துச் செல்லும் விதம் கிராமப்புறங்களில் நிலவும் சீரற்ற விநியோக, நுகர்வு முறையினால் கிராமப்புற வணிக, தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பில் இருக்க; மறுபுறம் பெருநிறுவனங்களும், மேட்டுக் குடியினரும் தடையற்ற  சரளமான ஆற்றல் நுகர்வை அனுபவிக்க முடிகிறது. தற்போதைய விரயமான, பின்தங்கிய உற்பத்தி முறை மற்றும் நுகர்வு முறை இரண்டும் மரபுசார்ந்த அல்லது சாராத மின்சாரத் தயாரிப்பின் மூலமாக போதுமானதாக மாற்றவே முடியாது. இந்திய அனல் மின் திட்டத்தின் தலைமைப் பீடமான சிங்ரவ்லி வெளியேற்றும் மாசுபாட்டில் சிக்கி  கிராமங்கள் சுத்தமான நீரில்லாமல், தூய காற்றில்லாமல் ஏன் தவிக்க வேண்டும்.  அணு, அனல் மின்சாரத்திற்குச் சவால் விடும் அதே நேரம் ஆதிவாசிகளையும், தலித்களையும், மீனவர்களையும், விவசாயிகளையும் தியாகம் புரியச் செய்து பிறர் காணும் வளர்ச்சி என்ன விதமான வளர்ச்சி என்ற கேள்வியும் எழுப்ப வேண்டி உள்ளது. 

மீளாற்றல் வடிவிலான மின்சாரம் என்கிறபோது அது ஓர் முடிவில்லாது தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் விசை என்கிற உண்மையை வழக்கமான இறுகின சிந்தனையின் மேலடுக்கை அகழ்ந்து பார்க்கும் துணிவும் நமக்கு அவசியமாகிறது. இந்திய அரசாங்கக் குறிப்பின்படி மீளாற்றல் ஆதாரம் பின் வருமாறு : காற்று விசை 65000 மெகாவாட், சிறு புனல் விசை - 15000 மெகாவாட், உயிரிநிறை ஆற்றல் (சாண எரிவாயு போன்றவை) - 21000 மெ.வா, குறைந்தது 4,00,000 மெ.வா சூரிய ஆற்றல். மேலும் அணுஆற்றல் உற்பத்திக்கு முதலீடாகக் குவிக்கும் பெருந்-தொகையில் ஒரு பகுதியை மீளாற்றல் ஆய்விற்குச் செல-விட்டால் அது லாபகரமானதாகவும், நீடித்துப் பயன் தருவதாகவும் இருக்கும். சூரிய சக்தி, காற்று விசை இரண்டின் மூலமாகவும் செய்யும் மின்உற்பத்தியில் செலவினக் குறைப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இரண்டாவதாக மின் பயனீட்டு முறையில் புதிய உத்திகளைக் கையாள்வது. உதாரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வெளியில் வெயிலடிக்க, கட்டடங்கள் உள்ளே பகல் முழுதும் மின்சாரத்தை எரித்து ஒளியூட்டுகிறார்கள். அந்த இடங்களில் ஊடுருவும் கண்ணாடிகள்  பயன்படுத்தி செலவீனத்தை மிச்சப்படுத்தலாம். நமது நகர பெரும் பெரும் வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள்  அறிவின் இருப்பிடங்கள்  மின்சாரத்தை விரயமாக்கும் வகையில் முட்டாள் தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்சார மீட்பிலும், காற்றாடிகள் மூலமும் மின் உற்பத்தியை ஆறிலிருந்து எட்டு மடங்கு அதிகரிக்க முடியும். மீளாற்றல் ஆதாரம் மூலமாக பதினைந்து ஆண்டு காலத்தில் இந்தியா தனது மின் உற்பத்தியுடன் 17000 மெ.வாஐ உயர்த்திக் கொள்ள முடியும். இதே கால கட்டத்தில் சீனா தனது மின் உற்பத்தியில் மீளாற்றல் மூலமாக  கடந்த ஓராண்டில் 17000 மெ.வா பெற்றுள்ளது. நாம் அனைத்து முட்டைகளையும் வெட்டித்தனமாக அணுக்கூடைகளில் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுக்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன.

செர்னோபில் பேரழிவிற்குப் பின் ஜெர்மனியில் உர்சிலா ஸ்லாடக் என்ற சாதாரண பெண்மணி கருப்புக் காட்டுப் பகுதியில் இருந்து மின்சார நிறுவனங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடி அகற்றச் செய்தார். இன்று அப்பகுதியில் மீளாற்றல் ஆதாரங்களைக் கொண்டு உற்பத்தியாகும், தற்சார்பு மின்சார நிறுவனங்கள் மக்களின் உடைமைகளாக இருக்கின்றன. ஒரு லட்சம் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குகின்றன. புகுஷிமா பேரழிவிற்குப் பின்னர் 400 புதிய நுகர்வோர் தங்களுக்குச் சூழலியல் நட்புமை மின்சாரம் வேண்டி பதிவு செய்துள்ளனர். மீளாற்றல் மின்சாரமானது சூழியல்ரீதியாக நீடித்தத் தன்மை உடையது மட்டுமல்ல, வணிக ரீதியாகவும் லாபகரமானது என்பது தெளிவு.

3. பொருளாதார ரீதியாக வளர விரும்பும் தேசத்தின் கனவை டாக்டர் அப்துல் கலாம் கூறுவது போல், ஒரு பேரழிவு (புகுஷிமா) அச்சத்தினால் கலைத்துக் கொண்டிருக்கிறோமா?

எல்லோருக்கும் தெரியவந்த அணுப் பேரழிவு த்ரீமைல் ஐலேண்ட் (1976), அடுத்து செர்னோபில் (1986), ஆனால் குறைந்தது 76 அணு விபத்துகளில் 19.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீரழிவு 1947க்கும் 2008க்கும் இடையில் நிகழ்ந்துள்ளது.  இதில் 56 மிகவும் பயங்கரமானது. அத்தனை விபத்துக்களும் செர்னோபிலுக்குப பின்னர் நிகழ்ந்தவை. ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டு தோறும் பயங்கரமான 332 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாதிப்புகள் நடக்கின்றன என்பதை உணர்த்துகிறது. மேலும் 2005க்கும் 2055க்கும் இடையில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் நான்கு விபத்து நிகழும் என்று எதிர்காலத்தில் அணு ஆற்றல் என்ற தலைப்பில் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 2003 மேற்கொண்ட ஒருங்கு சீராய்வு கணக்கிட்டுள்ளது. அது முன்னுரைத்த முதல் விபத்து தான் புகுஷிமாவில் 2011 நடந்தது.

அந்த விபத்தை ஒரு பேரழிவாக மட்டும் நாம் கருத முடியாது. ஈனுலை முழுக்க சரி-யாகவே  செயல்பட்டாலும் அதிகபட்ச புற்று நோய் ஆபத்தும், விளக்க முடியாத மரணங்களும் நிகழும். அமெரிக்காவில் 65 இடங்களில் 104 ஈனுலைகள் இயங்கி வருகின்றன. அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ரத்தப் புற்று நோயும் (லுக்கேமியா) மூளைப் புற்று நோயும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன.

4. நிலக்கரி அனல் மின் திட்டங்கள் பெரிய அளவில் கழிவை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. டன் கணக்கான கார்பன் வெளியேற்றத்தால் பருவ-நிலை மாறுபாடும் ஏற்படும் என்கிறார் டாக்டர் அப்துல் கலாம். மேலும் நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் அதன் சுற்றுப்புறச் சமூகத்திற்குச் சூழல் மாசு விளைவுகளுடன் வாழ்வாதார பாதிப்பும் ஏற்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.     

நல்லது. ஆனால் யுரேனியம் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளில் அச்சமூகத்திற்கு ஏற்படும் சூழல் மாசு, ஆரோக்கியக் கேடுகள் பற்றி டாக்டர் கலாம் மவுனம் சாதிக்கிறார். யுரேனியம் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் யுரேனியச் சுரங்கம் அமைத்துள்ள ஜாதுகோடா, ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் உள்ளூர் ஆதிவாசி மக்களைத் தாக்கும் கடுமையான கதிர்வீச்சு விளைவுகள் குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை. நோபல் பரிசு பெற்ற உலகின் புகழ் மிகுந்த மருத்துவர்கள் அடங்கிய  அணுப் போருக்கு எதிரான அமைப்பின் இந்தியப் பிரிவான  அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்களின் அமைப்பு ஜாதுகோடா பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள்- :

* யுரேனியம் வெட்டியெடுக்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்களிடையே மலட்டுத் தன்மை மிகவும் சாதாரணமானதாக இருக்கிறது.

* அப்பகுதி கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும், குழந்தை இறந்தே பிறப்பதும் அதிக அளவில் காணப்படுகின்றன.

* புற்று நோய்ச் சாவு மிகச்சாதாரணமாக இப்பகுதியில் நிலவுகிறது.

* யுரேனியச் சுரங்கப் பகுதி மக்களின் ஆயுட்காலம் ஜார்கண்டின் சராசரி ஆயுட் காலத்தை விட குறைவாக இருக்கிறது.

* ஆய்விற்கு எடுத்துக் கொண்ட கிராமங்களில் கல்வித் தரமும் வாழ்க்கைத் தரமும் மற்ற பகுதியுடன் ஒப்பிடும்போது சிறப்பானதாக இருந்தாலும் மக்களின் ஆரோக்கியம் மிகவும் மோசமான தரத்தில் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. அணு மின் திட்டமானாலும், அனல் மின் திட்டமானாலும் இரண்டுமே எதிர்கால சந்ததியின் நிலைத்த தன்மைக்கு எதிரான சூழலியல் சிதைவுப் பாதையில்தான் செல்கின்றன. அணுமின் திட்டங்கள் முற்றிலும் பசுமை நட்பார்ந்தது என்ற கருத்துப் பரப்பல் முற்றிலும் தவறானது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிப்பில் மீளாற்றல் முறையைவிட அணுமின் முறை நான்கைந்து மடங்கு கார்பன் கழிவை அதிகமாக வெளியேற்றுகிறது. (டெக்னாஜி ஃபரம் ஹெல் & நீரஜ் ஜெயின்). ஒட்டுமொத்த அணு எரி சுழற்சியையும் கணக்கிட்டால் மாசுபாட்டின் அளவு மிகப் பாரியதாக இருக்கும்.

5. அணு மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதே எதிர்ப்பு காட்டாத மக்கள், இப்போது எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

திட்டம் 1988ல் முன்மொழியப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே அணு உலைக்கு எதிரான இயக்கம் உருவாக்கப்பட்டு விடடது. மாணவர்களும் பொதுமக்களும் அணுத் திட்டத்திற்கு எதிராகப் பத்து லட்சம் கையெழுத்துப் பெற்ற மனுவை அப்போதைய சோசலிச சோவியத் ஒன்றிய குடியரசு ஜனாதிபதி மிகையீல் கோர்பச்சேவின் இந்திய வருகையின் போது அளித்தனர். சென்னை போன்ற பெருநகர மையங்களில் இளைஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தினார்கள். கூடங்குளத் திட்டம் துவக்க நிமிடங்களில் இருந்தே எதிர்ப்புப் பதிவாகியுள்ளது. அன்றைய ராஜீவ் காந்தி அரசாங்கமோ அல்லது இன்றைய சோனியா காந்தி அரசாங்கமோ உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறி வருகின்றன.     

துவக்கம் முதல் இன்றுவரை எந்த மாற்றமும் நிகழாதது நம்புவதற்கு ஒன்றும் கடினமானதல்ல. ஜெய்-தாபூர் அணுத் திட்டத்திற்கு உள்ளூர் விவசாயிகளும், மீனவர்களும் காட்டிய கடுமையான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் போனது  மத்திய அரசின் பிடிவாத குணத்திற்குச் சாட்சியாக இருந்தது. இப்போது   ஹரியானா, கோரக்பூர், ஜெய்தாபூர் திட்டங்களில் மக்கள் உணர்வை புறக்கணிப்பது  மட்டுமல்லாமல் மீறிச்செயல்பாட்டில்  இறங்கியுள்ளது அரசு.

கூடங்குளம் திட்டத்தில் காட்டப்படும் போராட்டத்தின் தீவிரமும் அளவின் விரிவும் அதிகரித்திருப்பது உண்மையே. காரணம் 10,000 மெ.வா மின்சாரத்திற்காக வளாகத்தின் பரப்பு விரிவாக்கம் செய்யப்படுவது; மக்களின் அச்சவுணர்வையும் போராட்ட எழுச்சியையும் அதிகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் 2004 சுனாமி, கடற்கரைப்பகுதி மக்களுக்கு இயற்கையின் சீற்றம் எத்தனை மூர்க்கமானது என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. புகுஷிமாப் பேரழிவு தொலைக்காட்சிப் பிம்பங்களாக மக்கள் மனதில் ஏற்படுத்திய ஆழமான பதிவும், லட்சக்-கணக்கான ஜப்பானிய மக்கள் வீடு திரும்ப அனுமதி மறுக்கப்-பட்டது அல்லது சகஜமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத சோகமும் உள்ளூர் மக்களிடம் பயத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளது. மக்களிடம் பரவியுள்ள பயம் மூடத்தனமானது அல்ல. 

6. திட்டத்தை நிறுவத்துவதற்குரிய  நிலையைக் கடந்த அளவிற்குக் கோடிக்கணக்கான பணம் முதலீடாகப் போடப்பட்டு விட்டதே?

சரியான காரியத்தைச் செய்வதற்குத் தாமதம் ஒரு காரணமாக இருக்க முடியாது. அணுக் குவிப்பு ஆபத்தானது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும்  மோசமான முதலீட்டை தொடர்வதைவிட நிறுத்தி விடுவது எத்தனையோ உயர்வானது. 

அணுப்பேரழின் மதிப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். செர்னோபில் 1986 விபத்தின் விளைவாக  முன்னால் சோவியத் ஒன்றியத்தின் பெலோரஸ் மாநிலம் முழுதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சர்வதேச அணுஆற்றல் முகமை அறிக்கையின்படி 1993க்கும் 2003க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில்  பெலோரஸ் மாநில அரசு அணுப்பேரழிவுக்காக செல-விட்ட தொகை   13 பில்லியன் டாலர். விபத்து நடந்த ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகளுக்கு எதிர் நோக்கும் செலவினம் 235 மில்லியன் டாலர். செர்னோபில்லை  உள்ளடக்கிய உக்ரைன் நாடு அணுப்பேரழிவு மீட்பிற்காக தனது வருடாந்திர செலவினத்தில் 6-7 சதவீதம் ஒதுக்கீடு செய்கிறது. விபத்து மையத்தில் இருந்து 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பெரும்பகுதி ரஷ்யா, பெலோரஸ், உக்ரைன் நாடுகளில் கதிர்வீச்சு பாதிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்தப் பரப்பளவு தமிழ்நாட்டைப்போல இரண்டு மடங்கு.

புகுஸிமா தாய்-இச்சி அணுத்திட்டத்தை மிகுந்த பாது-காப்புடன் அகற்றிவிட்ட பின்னரும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு செய்யப்பட உள்ள மீட்புச் செல-வினம் மட்டும் 12லிருந்து 19 பில்லியன் டாலர்கள். இதில் உடல்நலக் கேட்டின் மதிப்பும் சமூகப் பாதுகாப்புணர்வு மறுக்கப்பட்டதின் மதிப்பும், கதிர்வீச்சினால் ஏற்படும் சூழலியல் பாதிப்பை சீர்செய்வதற்கு ஆகும் செலவினமும், விவசாய, மீன்பிடி வருமான இழப்பீட்டு மதிப்பும், கதிர் வீச்சு அபாயத்தால் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்பும் இந்தச் செலவினக் கணக்கில் அடங்காது.

7. இந்தியத் திட்டங்கள் அனைத்தும் பாதுகாப்-பானவை. பல இந்தியத் திட்டங்கள் பல தசாப்-தங்களாக பிசகில்லாமல் இயங்கி வருகின்றன. இந்திய அணு உலைத்திட்டங்கள் பாதுகாப்பனவை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

இந்திய அணு உலையில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்-களில் உள்ள பின்னடைவுகள் வெளிச்சத்திற்கு வருவ-தில்லை, காரணம் யாரும் நெருங்க முடியாத ரகசியமாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிய வரும் மிகச்சிறிய அளவும் கூட நாம் சீரிய கவனம் கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. கல்பாக்கத்தை மட்டுமே உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட பின் வரும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதுவும் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

* 1987ல் ஈனுலையில் எரி மூலகம் நிரப்பும் போது ஏற்பட்ட விபத்து.

* 1991ல் கண நீர் கதிர்வீச்சு ஊழியர்களைத் தாக்கிய சம்பவம்.

* 1999ல் 42 ஊழியர்கள் மீது கதிர்வீச்சுத் தாக்கம்.

* 2002ல் 100 கிலோகிராம் சோடியக் கதிர்வீச்சு வெளியில் கசிந்தது.

* 2003ல் 6 ஊழியர்கள் மீது உயர் கதிர்வீச்சுத் தாக்கம்.

மறுபடியும் 1991ல் மற்றொரு பயங்கர சம்பவம் நடந்தது. ஈனுலை வளாகத்தில் ஒப்பந்ததாரர் வேலையின் போது கடினநீருடன் பெயிண்டைக் கலக்கியதில் ஊழியர் முகத்திலும் கையிலும் கடினமான கதிர் வீச்சு ஏற்பட்டது.

2009 நவம்பரில் கர்நாடக மாநிலம் கைக்கா திட்டத்தில் ஊழியர்கள் குடிநீரில் கதிர்வீச்சுத் தன்மை உடைய தோரியம் கலந்ததில் 55 ஊழியர்கள் உயர் கதிர்வீச்சு அபாயத்திற்கு உள்ளாயினர்.

கூடுதல் பாதுகாப்பு முறைமைகள் பல சமயங்களில்  இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. 1986 நவம்பரில் அணு ஆற்றலுக்கான ஈனுலை பாதுகாப்பு ஆய்வுத் துறையின் குழு  அளித்த அறிக்கையில் இந்தியாவைப் பொருத்த அளவில் சுனாமி மற்றும் பேரலைகள் தாக்கம் ஏற்படுவதில்லை. அதனால் புயல் தாக்குதலை மட்டும் கருத்தில் கொண்டு பின்வரும் ஆய்வுகள்  விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘அதிக அழுத்தமுடைய இந்தியக் கடின நீர் ஈனுலைகளின் பாதுகாப்பு’ இன் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கீழ்தான் கல்பாக்கம் திட்டமும் அடங்குகிறது. ஆனால் 2004 சுனாமி ஈனுலை வளாகத்தையும் மொத்த நகராண்மையையும் கடல் வெள்ளத்தால் தாக்கியது. இந்தச் சுனாமித் தாக்குதலை கல்பாக்கம் ஈனுலை தாங்குகிற விதத்தில் வடிவமைக்கப்பட்டதல்ல, ஆனாலும் அது நல்வாய்ப்பில் தப்பியது.

8. அனைத்து பாதுகாப்பு முறைமைகளும் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளதால் இத்திட்டம் நூற்றுக்கு  நூறு பாதுகாப்பானது என்று டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார். சுனாமி மையங்கொள்ளும் புள்ளியில் இருந்து 1300 கிலோமீட்டர்  தொலைவில் கூடங்குளம் இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை   என்றும் கூறுகிறார். மத்திய அரசின் மீதும், அரசு நியமித்துள்ள வல்லுநர்கள், பொறியாளர்கள் மீதும் நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்துகிறார். அவர்கள் வல்லுநர்கள் என்பதால் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களா? மக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பக் கூடாதா?

முதலாவதாக ஒரு நல்ல அறிவியலாளர் அல்லது பொறியாளர் எதையும் நூற்றுக்கு நூறு சதவீதம் பாதுகாப்பானது என்ற வார்த்தையைச் சொல்ல மாட்டார். அப்படியான அறிவிப்பே நூறு சதவீதம் தவறானது. மக்களுக்கு இயற்கை-யான ஆபத்தைப் புரிய வைப்பதற்குப் பதிலாக அதன் பிரம்மாண்டத்தை, பேரழிவின் தாக்கத்தைச் சிறுமைப்-படுத்த முயற்சிக்கிறார். புண்ணுக்கு புனுகு தடவும் காரியத்தைச் செய்கிறார் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். ஆற்றுப்படுத்தும் வேலை வரவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு மக்களைத் தயார்படுத்துவதைவிட மோசமானது. 

இரண்டாவதாக, இந்தியாவை சுனாமி தாக்காது என்ற அணுசக்தித் துறையின் அறிவிப்பை 2004ல் தாக்கிய சுனாமி பொய்யாக்கி விட்டது. இந்த பொய்யான அறிவிப்பையே அப்துல் கலாம் மறுபடியும் முதல்லே இருந்து கணக்கு வைக்கச் சொல்கிறார்.  சுனாமி அச்சமற்றது என்ற கலாமின் அறிவிப்பு ஜோசியத்திலும் அடங்காது, அறிவியலுக்கும் ஆகாது.

பாதுகாப்பு அம்சங்களும், நெருக்-கடிகால பற்றிய பொறுப்பும் முழுக்க பொறியல் நுட்பம் சார்ந்தது என்று நம்மை நம்ப வைக்க டாக்டர் கலாம் முயற்சிக்-கிறார். அது உண்மையாகாது. உறுதியான பாதுகாப்பும் அவசரகால உத்திகளும் திட்டத்துடன் நிறுவப்படுதல் வேண்டும். அவசரகாலத் தப்பித்தல் வழிமுறைகள் பராமரிக்கப்படுவதுடன் மக்களுக்கு அறிவுறுத்-தப்படுதல் வேண்டும். மக்களை அதற்காகப் பயிற்று-விக்கவேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். இயற்கை இடர்களை எதிர்கொள்ளும் திறன் நிர்வாகத்திற்கு இருப்பதை மக்களுக்கு உறுதிப்படுத்துவதுடன், தவறுகளை ஏற்றுக் கொண்டு சரிசெய்து கொள்ளும் பக்குவமும் தன்மையும் பொறியாளர்களுக்கு இருக்க வேண்டும். 

தகவமைக்கும் பொறியமைவைப் பெற்றிருக்க வேண்டும். கட்டமைப்பு மேற்கொள்பவர்களும், ஒப்பந்ததாரர்களும் நேர்மை யானவர்களாக இருத்தல் வேண்டும். நேர்மையான அறிவியலுக்கும், பொறியமைப்பு உண்மையின் மீது கொண்டிருக்கும் கடப்பாட்டிற்கு  இந்த நாட்டில் பெரும் பற்றாக்குறை. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் ஊழல் பின்னிப் பிணைந்திருக்கிறது. அரசாங்கத்தின் மீதும், அதன் பொறியாளர்கள் மீதும் நம்பிக்கை வைக்க மக்களுக்கு அறிவுறுத்தும் டாக்டர் அப்துல் கலாமிற்கு  நியாயமான சிந்தனை வேண்டும்.

2010ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தபோது பாதசாரிகளுக்காகக் கட்டப்பட்ட பாலம் போட்டி துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்ன-தாகவே சரிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானப் பொருட்களும், மோசமான கட்டு முறையும், தரம் பற்றிய அக்கறையின்மையுமே இந்த பாலம் சரிந்ததற்குக் காரணம். கர்நாடக மாநிலம் கைகா அணுத்திட்ட ஈனுலைக்-காக கட்டப்பட்டிருந்த உட்தாங்கு டூமின் 120 டன் காங்கிரீட் கலவை விரிசல் கண்டு சரிந்து விழுந்தது. இந்த டூம் நிகழ்வு கதிர் வீச்சு விபத்திற்கு உதாரணம். மூத்த கட்டுமான பொறியாளர்களும், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கும் நெருக்கமான உறவு இருக்கிறது, இந்த உறவினால் கட்டுமானத்தில் போதிய தரம் பின்பற்றப்படவில்லை. டூம் சிதைவின் போது திட்டம் செயல்பாட்டில் இருந்திருந்தால் ஏழு அடுக்கு சீரழிவைச் சந்தித்திருப்போம் என்று அணுசக்தி முறைமை கழகத்தின் முன்னாள் தலைவர் எழுதுகிறார்.

புகுஷிமா நிகழ்வின் பேரழிவு நமக்கு பல விசயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கட்டு-மானத்தில் இருந்த லெனின் கிராடு 2 ஈனுலை கடுமை-யான உருக்குலைவைக் கண்டது. காங்கிரீட் கலவை சரிந்த வெகு விரைவிலேயே ஈனுலையின் வெளிப்-பாதுகாப்புப் பிரிவு கட்டுமானமும் உருக்குலைந்தது, பெரும் தாங்கு இரும்பு உத்திரங்கள் வளைந்து தரையில் இருந்து 26 உயரத்தில் ஊசலாடின. இந்த கட்டு-மானத்தில் இருந்தது விவிஇஆர் 1200 வகை. கூடங்-குளத்தில் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் இருப்பது விவிஇஆர் 1000 வகை. வல்லுநர்களின் அச்சத்திற்குக் காரணம் கட்டுமானத்தில் நிலவும் ஊழலினால் மோசமான கட்டுமானப் பொருட்களினால் கட்டியிருப்பார்கள். இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின்  கட்டுமானங்களுமே ஊழல் மலிந்த கட்டுமானப் பொருட்களிலும், கட்டும் முறையிலும் விபத்திற்கான அதிக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதே.

9. அணுசக்திக்கு உணர்ச்சிகரமான எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் நீங்கள் அறிவியலுக்கு எதிரானவராக மாறவில்லையா?

கூடங்குளத்திற்கு எதிர்ப்பு என்பது அறிவியலையோ அறிவியல் சோதனைகளையோ எதிர்ப்பதாகாது. ஜெய்தாபூரிலும், கூடங்குளத்திலும் 10000 மெ.வா மின்சாரத் தயாரிப்பு என்பது சோதனையாக இருக்க முடியாது. இன்னும் ஆய்வக நிலையில் இருப்பதற்கு அது வெறும் 100 கிலோவாட் அல்ல. பெரும் முதலீட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொறியல் சோதனைக்கு பல அப்பாவி மக்களின் உயிர் பணயம் வைக்கப்-படுகிறது. சிலரது அறிவியல் ஈடுபாட்டிற்காக விருப்பமில்லாதவர்களை உயிர்த்தியாகம் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. (100 சதவீதம் பாதுகாப்பானது என்று டூமில் அடித்துச் சத்தியம் செய்பவர்கள் சட்டி-பானையுடன் கூடங்குளத்தில் இறங்கி பால் காய்ச்சி குடியேறி விடலாம், மக்களும் அச்சத்தில் இருந்து மீளுவார்கள் மொ.ர்) அதில் ஈடுபாடுடைய விஞ்ஞானிகளை அதற்காகத் தெரிவு செய்து கொள்ளலாம். போபால் படுகொலையை டாக்டர் கலாம் நியாயப்-படுத்துவாரா? அதில் தப்பியவர்கள் பேரழிவை நிரூபிக்க  அறிவியல் உணர்வுடன்  முன்னேற்றத்தில்  முக்கியமான பங்காற்றியதாகக் கூறுவாரா?

நல்ல பொறியாளர்களுக்கும், அறிவியலாளர்-களுக்கும் தவறுகளை ஏற்கும் திறன் அவற்றில் இருந்து கற்றுகொண்டு முன்னேறும் பக்குவம், பரஸ்பர புரிந்-துணர்வு ஆகியவை தேவை. இந்திய அணுவியல் இவை அனைத்திலும் பின் தங்கி இருக்கிறது. கூடங்குளம் திட்டம் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று டாக்டர் அப்துல் கலாம் திருநெல்வேலி கிராமப்புற மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார்.

அவர் இணங்க வைக்க வேண்டியது கிராம மக்களை அல்ல. அணுத்திட்டங்கள் ஆபத்தற்றவை என்று காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. அணுத்திட்டங்கள் ஆபத்தானவை என்று காப்பீட்டு நிறுவனங்களை காப்பீடு செய்ய மறுக்கின்றன. டாக்டர் கலாம் கூறுவது போல் பாதுகாப்பானதாக இருந்தால் அணு ஆற்றல் திட்டங்கள் பாதுகாப்பானவை என்று இணங்கச்செய்து அவர்களை வைத்து அணு நிலையங்களின் மீது பெரிய போர்வை கொண்டு போர்த்தி விட்டு அணுச்சாதனங்கள் விற்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதமின்மை சலுகையை அப்துல் கலாம் திரும்பப் பெறவேண்டும். பேரழிவு நிகழ்ந்தால் அணுச்சாதனங்கள் வழங்கியவர்கள் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொள்ளச் செய்வது கலாமின் காரியங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

கடவுள் இருக்கிறார் என்று நம்புவதைப்போல அணுத்-திட்ட நிலையமும் ஒரு வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்படுவதுதான். சுனாமியோ அல்லது பெரும் நிலநடுக்கமோ எதுவும் நிகழ்ந்து விடாது என்று நினைத்து கட்டப்படுகிறது. இந்த சிந்தனை முற்றிலும் அறிவியல்பூர்வமற்றது. இந்திய மக்களின் அச்சமும் அணுஉலைக்கு எதிரான போராட்ட

முமே  அறிவியல் ரீதியானது. ஏனென்றால் தொடர்ந்து நிகழும் பேரழிவை அனுபவ அடிப்படையாகக் கொண்டு எழுந்த அச்சம். இது போன்ற பேரழிவுகளால் ஏற்படும் சமூகப் பொருளாதார மற்றும் சூழலியல் வீழ்ச்சியின் ஞானத்தில் எழுந்த அச்சம். இந்த அச்சத்தை இந்திய அணுத்திட்ட நிறுவனங்களின் மூடுமந்திரத் தன்மை ஊதிப் பெரிதாக்கி விட்டது. 2 ஜி போன்ற மறுக்க முடியாத எண்ணற்ற ஊழல்கள், ஊழலின் பொருட்டு மோசமான பாதையில் அணுநுட்பம் சென்றுவிடும் என்று அஞ்சுவது அறிவியலற்றதாகாது. இந்தியாவில்  மக்கள் உயிருடன் விளையாடும் எத்தனை பெரிய மோசடியும் நடக்கும் என்ற கருதுகோள் அறிவியல் பூர்வமானதுதான். முன் சொன்ன அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது சூரிய விசை, காற்று விசை போன்ற மீளாற்றல் ஆதாரங்களைக் கொண்டு அறிவியலாளர்களை, பொறியாளர்களை மின்சாரம் தயாரிக்கக் கோருவதுதான் நிச்சயமாக அறிவியல் ரீதியானது.

10. புதிய நுட்பங்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய ஆபத்தான நெருக்கடிகளைக் கொண்டிருக்கத்தான் செய்கிறது. கார்கள், கப்பல், ரயில் அனைத்திலும் தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவற்றைக் கைவிடுகிறோமா? அணு உலையை மட்டும் ஏன் முற்றாகக் கைவிட வேண்டும்?   

கார் விபத்து, ஏன் விமான விபத்தும் கூட தனது பாதிப்பை 20 கி.மீ பரப்பளவிற்குத்தான் கொண்டு செல்கிறது. அங்கு வசிக்கும் மனிதர்கள் பல-தலைமுறைக்கும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிக் கொள்-வதில்லை. காரையோ, விமானத்தையோ ஓட்டிச் செல்கிறவர் வலிந்து சென்று ஆபத்தை வரவழைத்துக் கொள்வதில்லை. கார், விமான விபத்-துக்கள் அடுத்த தலைமுறையையும், இன்னும் பிறக்காத குழந்தையையும் பாதிப்பதில்லை. இந்த ஆபத்தான சூழலை எதிர்கொள்ளலாமா, வேண்டாமா என்று இதுவரை பிறக்காத குழந்தையிடம் கேட்டு விட்டு ஆபத்தில் இறங்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு நெருக்-கடியைத் தரும் எந்த விளைவிலும் இந்தத் தலைமுறை இறங்குவது நியதிக்குப் புறம்பானது. கார்விபத்து நடந்த இடத்தில் இருந்து 75 கி.மீ. சுற்றளவிற்கு யாரும்  உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுதில்லை. ஆனால் அணு விபத்து நடந்த பகுதியில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு எந்த உயிரினமும் நடமாட முடியாது. விபத்து நடந்தால் அதனை எதிர்கொண்டு மீளும் திறன் நிரூபிக்கப்படும் வரை யாரும் ஆபத்தை எதிர்-கொள்ள மாட்டார்கள். அணு விபத்து நிகழும்போதும் நிகழ்ந்து முடித்த பின்னரும் அதை யாராலும் எதிர் கொள்ள முடியாது.

11. டாக்டர் அப்துல் கலாம் 200 கோடி பெறுமானமுள்ள சுத்தமான குடிநீரில் இருந்து வேலைவாய்ப்பு, பள்ளிக்-கூடம், மருத்துவமனை விசைப்படகு, குளர்ப்பதனக் கிடங்கு  போன்ற திட்டங்களை கூடங்குளம் சுற்றுக் கிராம மக்களுக்கு வழங்கபடும் என்று வாக்-குறுதி அளித்துள்ளார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் வரவேற்கத் தகுந்ததுதானே?

அவர் முன்மொழிந்திருப்பது வஞ்சகம் நிறைந்தது. ஒருவரை இணங்கச் செய்ய முடியவில்லை என்றால் கையூட்டு கொடுத்து வாங்கி விடு என்ற சிந்தாந்தத்தில் இறங்கி விட்டார் டாக்டர் கலாம். தேர்தலுக்கு அரசியல்வாதிகள் அறிவிக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும்  அப்துல் கலாமின் முன் மொழிவிற்கும் என்ன வேறுபாடு? அணுமின் திட்டத்தை கூடங்குளம் மக்கள் ஏற்றுக் கொள்ள-வில்லையானால் அவர்களுக்கு சுத்தமான நீரும், மருத்துவ வசதியும் மறுக்கப்படுமா?

மக்கள் இந்த முக்கியமான கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறார்கள். டாக்டர் அப்துல் கலாம் மரி-யாதையாகப் பதில் சொல்லப் போகி-றாரா அல்லது கேள்வியைத் தனக்குள் புதைத்துக் கொள்ளப்- போகிறாரா? உண்மையில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் ரூ.200 கோடி வசதிகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில்தான் இருக்கின்றன. ஏன் இந்த முன்மொழிவை கல்பாக்கம் மக்களுக்கு அளிக்க-வில்லை. ஒரு கிராமத்திற்கு என்ன வேண்டும் என்பதை கிராமத்து மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் -கிராமசபை சட்டம் கூறுகிறது. டாக்டர் அப்துல் கலாம் எப்போதும் மக்களிடம் இருந்து வெகு தூரம் தள்ளியே நிற்கிறார்.

தமிழாக்கம் - போப்பு     

Pin It