ஒரு மலைப்பகுதி முழுவதுமே விதைகளை ஊன்றி மரம் வளர்த்து காடாக்கிய ழான் ஜியோனோ என்ற மனிதனைப் பற்றி "மரம் வளர்த்த மனிதனின் கதை" என்றொரு உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சுக் கதை உண்டு. அந்தக் கதை காலங்களையும் தேச எல்லைகளையும் கடந்து உலகின் மூலைமுடுக்குகளில் நிஜமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவரைப் போலவே மரம் வளர்க்கும் ஒரு மனிதரை சமீபத்தில் ஈரோட்டில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் பள்ளியில் இருந்து ஊர் வரை வருவதற்கான நீண்ட பாதையின் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்த்து சாலையில் நிழலை பரப்பி நிற்கின்றன. இங்கு மரம் நட்டதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா என்று அந்த மனிதரிடம் கேட்டபோது, "பள்ளிக்கூட குழந்தைகளின் பாதமெல்லாம் ரொம்ப பொடிசு. செருப்பு போடாத அந்தக் குழந்தைங்க எப்படி வெயிலில் நடந்து போகும்? நிழலா இருந்தா அதுங்களுக்கு நல்லா இருக்குமே" என்றார் அந்த வெள்ளந்தியான மனிதர். இங்கு மட்டுமல்ல தன் ஊருக்கு அருகிலுள்ள கனககிரி-குமரன் மலைப் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மரங்களை இவர் வளர்த்துள்ளார்.

அவர் "மரம் தாத்தா" என்றழைக்கப்படும் நாகராஜன். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி கட்டி சாதாரணமாகவே இருந்தார். அவருடன் பேசியபோது இரண்டு விஷயங்கள் மற்றவர்களிடம் இருந்து அவரை தெளிவாக வேறுபடுத்திக் காட்டின. முதலாவது, ஊர் கோவில் திருவிழா, உறவினர்கள், குடும்பம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விஷயத்தை அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார். அது மரம் வளர்ப்பது. இரண்டாவது, அவருக்கு சமீபத்தில் இதய அறுவைசிகிச்சை செய்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் வளர்த்த எண்ணற்ற மரங்களைப் போலவே, இப்பொழுதும் அவர் திடகாத்திரமாக இருக்கிறார். வாழ்க்கையில் மிகவும் நேசித்த விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

அவர்களது ஊரிலேயே மிகப் பெரிய கோலாகலமான திருவிழா கூட இவரை அசைப்பதில்லை. திருவிழாவாவது ஒண்ணாவது என்று சைக்கிள், அரிவாள், கடப்பாறை, மண்வெட்டி, 2 குடங்கள் என தன் ஆயுதங்களுடன் மரங்களை அன்பாகப் பார்த்துக் கொள்வதற்குக் கிளம்பி விடுகிறார் தறி நெய்வதை தொழிலாகக் கொண்ட இந்த மனிதர்.

"இப்போ எனக்கு 55 வயசு ஆகுதுங்க. 16 வயசு தொடங்கி இந்த வேலையைச் செய்து வர்றேனுங்க.

மக்கள் மனசுல என்ன பதிஞ்சு போயிருக்குன்னா தென்னை மரம், புளிய மரம் வைச்சா காசு கிடைக்குமேன்னு நெனக்கிறாங்க. ஆனா, நான் எப்பவுமே ஆல், அரசு, இச்சி, புங்கன், வாகை, வேம்பு போன்ற மரங்களை நடுறேன். சர்க்கரைப் பழம், நாகப்பழம் (நாவல்) போன்ற பறவைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் பழ மரக்கண்ணுங்களையும் நடுறேன்.

புளியமரம், புங்க மரம்னா பேய் அண்டும். வேண்டாம்னு கோவில், காலேஜ்ல எல்லாம்கூட நிறைய மூடநம்பிக்க இருக்குதுங்க. ஆனா, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுக்கு அந்த மரக்காத்து பட்டா உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க. இப்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு நல்ல கொணம் உண்டு.

நாத்துகளை நானே வீட்டில் வளர்த்துருவேன். ஆடு, மாடு கடிச்சுறாம இருக்க முள்கூண்டு செய்யணும். இதுக்குச் செலவில்லை, முள்ள ஒடிச்சு செஞ்சுரலாம். இரும்புக்கூண்டு வைச்சா 300 ரூவா ஆகும். ஊர்ல யாராவது உண்டிவில் வைச்சு பறவை அடிக்கிறதப் பாத்தா, அவங்கள அடிச்சு வெரட்டிருவேன்.

எங்க ஊர் என்.எஸ்.எஸ். வாத்தியார் ரவி, என்னோட இந்த வேலைக்கு ரொம்ப ஆதரவா இருந்தாருங்க. கொடைக்கானல் ஆங்கிலேடு நிறுவனத்துல பாதிரியார் மேத்யுவிடம் மரங்களைப் பத்தி கத்துக்கிட்டிருக்கேன்.

பேப்பர்காரர் மகன் சங்கர், நாகராஜ், ஜவுளிக் கடைக்காரர் மகன் அருண், முருகன்னு வயசுப் பசங்க எல்லாம் நேரம் கிடைக்கும்போது எனக்கு உதவிக்கு வருவாங்க. என்.எஸ்.எஸ். பசங்களுக்கு மரக்கன்று நடுவது பத்தி சொல்லித் தந்திருக்கேன்.

பாதையில் நான் வளர்த்த மர நிழலில் நடந்து வந்த ஒரு ஆயாவுக்கு, என் அம்மா மாதிரி வயசிருக்கும். இந்த மரங்களை வளர்த்த நீ மகராசனா இருக்கோணும்னு அது சொல்லுச்சு. இதுதாங்க எனக்குப் பெரிய பாராட்டு.

வீட்டுக்கு அருகேயுள்ள கனககிரி-குமரன் மலையில் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்திருக்கேன். அங்கே மயிலெல்லாம் வந்து ஆடுங்க. ஆனா, கொஞ்ச காலமா இந்தக் கோவில் ரொம்ப பிரபலமாகி வருது. அதனால அங்குள்ள மரங்களை வெட்டீருவாங்களோன்னு எனக்குக் கொஞ்சம் விசனமா இருக்குதுங்க.

சொந்தக்காரங்க எல்லாம் ஊர்த் திருவிழாவுக்கு வீட்டுக்கு வந்திருப்பாங்க. ஆனா, நோன்பு காலமானாலும் நம்ம வேலைக்கு விடுப்பு விடுறதில்லைங்க. வீட்டு வந்திருக்கும் சொந்தக்காரங்களக் கூட, "வாங்க மரம் நடுவோம், இதுக்கு நிறையா புண்ணியம் கிடைக்கும்"னு சொல்வேணுங்க. "நீரின்றி அமையாது உலகு"ன்னு திருவள்ளுவரு சொல்லியிருக்காரு. "மரமின்றி அமையாது உலகு"ன்னு இந்த காலத்துக்கேற்ப அதைக் கொஞ்சம் மாத்தி புரிஞ்சுக்கலாமுங்க." என்கிறார் இந்த மரம் தாத்தா.

பழம்தின்னிப் பறவைகளும், காட்டுயிர்களும் காடுகளில் செய்யும் இந்த வேலையை, அவற்றின் வழி வந்த இவரைப் போன்ற எளிய மனிதர்கள் தீவிரமாக செய்வதன் மூலம் தங்கள் மரபணுக்கள் பழசை மறக்கவில்லை என்பதை உலகுக்கு அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்றல் காற்றுக்கு அசைந்து கொடுக்கும் மரங்களைப் போல.

- சிவ-சுந்தர் 

Pin It