பாமயனின் ‘திணையியல் கோட்பாடுகள்’ நூலை கையில் வைத்திருக்கிறேன். அதன் தலைப்பைப் படித்த என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னை மத்திய அரசு நிறுவனத்தின் உயர் பதவில் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டு “இந்த மாதிரி நூல்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்” என்றார். இந்த மாதிரி உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் கூட திணைக் குறித்து சிந்திக்கிறார்களே என்று எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. ஆனால் அடுத்த நொடியே அவரே அதை நொறுக்கினார். “இந்த மாதிரி தானி யங்களையெல்லாம் நம்மிடம் இருந்து கொண்டு போய் ஹார்லிக்ஸ் செய்து அதை நம்மிடமே அவர்கள் திரும்பி விற்கிறார்கள்.” இப்படி தினை என்ற இரண்டு சுழி ‘ன’ எழுத்துக்கும், திணை என்ற மூன்று சுழி ‘ண’ எழுத்துக்கும் வேறுபாடு தெரியாமல் வாழும் ஒரு கூட்டமாய் பெருகிவிட்டிருக்கிறது இன்றைய தமிழினம். உண்மையைச் சொல்லப் போனால் இன்று இவர்களுக்குத் தினையும் தெரியவில்லை. திணையும் தெரியவில்லை. அய்ந்திணை என்றால் தமிழ் பாடப் புத்தகத்தில் படித்து மறந்து போன ஒரு செய்தி என்பது ஒரு வேளை நினைவுக்கு வரலாம். ஆனால் இவர்கள்தாம் உலகமே வியக்கும் திணையியல் கோட்பாடுகளைப் பின்பற்றி வாழ்ந்த ஓர் இனக்குழுவின் வழித்தோன்றல்கள். எவ்வளவு பெரிய முரண். இந்த மேனாள் தினைக்குடி மைந்தர்களுக்கு முதலில் திணை என்றால் என்ன என்பதை நினைவுறுத்த வேண்டியது அவசியமாகிறது.

திணையியல் கோட்பாடுகள் ஒன்றும் தமிழருக்கு மட்டும் சொந்தமல்லதான். இது அனைத்து தொல் குடிகளுக்கும் பொதுவாக இருந்த ஒன்றுதான் என்றா லும் மற்ற திணையியல் கோட்பாட்டுப் பகுப்பு முறை களுக்கும் நமது கோட்பாட்டுப் பகுப்பு முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. நமது பகுப்பு முறை இன்றைய புதிய அறிவியல் பகுப்பு முறைகளுடன் பொருந்திப் போவதாக மட்டுமன்றி அதைவிட சிறப்பாகவும் இருந்திருக்கிறது. அது மட்டுமன்றி மற்ற திணையியல் கோட்பாடுகள் எல்லாம் கோட்பாட்டு அளவிலேயே இருந்திருக்கையில் அதை முழுமையான வாழ்க்கை முறையாக ஏற்று வாழ்ந்த ஒரு சிறப்பான குமுகாயம்தான் நாம் என்பதை பெருமிதத்துடன் பறை சாற்றிக் கொள்ள வேண்டிய காலம் இது.

 திணை என்றால் என்ன?

 சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு சிறு நிலப்பரப்பும் அதில் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட ஒரு குமுகாய அமைப்பு முறைதான் திணை. மக்கள் ஒரு திணை அமைப்பில் ஒரு குமுகாயமாக வாழ்ந்தபோது அது கூட்டுறவினால் உண்டான ஒரு வாழ்வியல் முறையாக இருந்தது. இன்றைக்கு இருப்பது போல் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வாழும் முறை அன்றைக்கு என்னவென்றே தெரியாத ஒன்றாக இருந்தது. இது முதலாளித்துவம் நமக்கு வழங்கிய ஒரு துன்பியல் அன்பளிப்பு. பெரும் நிலப்பரப்பில் வாழும் அனைத்து மக்களையும் ஒற்றைக் குடையின் கீழ் திரட்ட முயல்வதுதான் முதலாளித்துவம். மாறாக ஒவ்வொரு இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளை அப்படியே உள்ளவாறு ஏற்றுக்கொள்வது திணையியல்.

 pamayan bookநிலத்தை வாங்குவது விற்பது என்பது முதலாளித் துவம் கொண்டு வந்த கோட்பாடு. திணை மக்களிடையே இப்படி ஒரு கருத்தே கிடையாது. மற்ற உயிரினங்களுக்கு எப்படி நிலத்தின் மீது உரிமை கிடையாது என்று நாம் நினைக்கிறோமோ அது போலவே மனிதர்களுக்கும் நிலத்தின் மீது உரிமை கிடையாது. பன்னெடுங்காலமாக உலகெங்குமுள்ள தொல்குடி மக்களுக்குத் தெரிந்த இந்த சாதாரண உண்மை நாகரிக மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

 ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் திணைக்குடிகளை மேலை நாட்டவர்கள் ஒரு மனிதராகக்கூட மதிப்ப தில்லை. ஆனால் அந்த ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மரங்களில் கனிகள் பழுத்தால் அதை யார் வேண்டு மானாலும் பறித்து உண்ணலாமாம். ஒருவரின் தோட் டத்தில் கனிந்துள்ள கனிகளை மற்றொருவர் தன் பசிக்குப் பறித்து உண்ணுவதற்கு எந்தத் தடையுமில்லை. பறவைகள் பசித்தால் உண்ணுவதைப் போல பசித்த மனிதர் யாவருக்கும் அக்கனிகள் சொந்தம். அப்படிப் பட்ட ஆப்பிரிக்கர்கள்தான் இன்று நாகரிக கனவான் களின் கண்களில் மட்ட மாகத் தெரிகிறார்கள். நமது குமுகாயமும் அப்படி வாழ்ந்த ஒரு குமுகாயம் தான். ஆனால் இன்று எப் படி வாழ்கிறது? வீட்டின் சுவர் ஓரம் நடப்பட்ட மரம் பழுக்க ஆரம்பித்தால் சாலையை நோக்கிச் செல் லும் கிளைகள் வெட்டப்படுகின்றன. ஏனெனில் சாலையில் செல்வோர்கள் பழத்தைப் பறித்துவிடுவார் களாம்.

 ஆனால் நிலத்தின் மீது மனிதர்கள் எவருக்கும் உரிமை கிடையாது என்று முதலாளித்துவத்தின் முகத்தில் காறித் துப்பிய ஒரு திணைக்குடி நிகழ்வு ஒன்று உண்டு. கி.பி. 1857ல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்கிற இனக் குழுவினருக்குச் சொந்தமான 20 இலட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்க அக் குழுவின் தலைவரான சியாட்டில் எழுதிய பதில் இன்று வரை சூழலியலின் சிறந்த ஆவணமாய் இருக்கிறது.

 நிலத்தை எப்படி விலைக்கு வாங்க முடியும்? அல்லது விற்க முடியும்?

 காற்றும் தண்ணீரும் எங்களுடைய தனிச் சொத்துக்கள் அல்ல.

புவியின் ஒவ்வொரு துகளும் எங்களுக்குப் புனிதமானது.

தாயாகிய பூமியையும் சகோதரராகிய வானையும் ஆடு மாடுகளைப்போல் வாங்கி விற்க முடியுமா என்ன?

புவியை எங்கள் தாய் என்று எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம்.

அதை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.

புவி மனிதருக்குச் சொந்தமல்ல. மனிதர்தான் புவிக்கு சொந்தம்.

 என்று நீளும் அந்தக் கடிதத்திலிருந்து சியாட்டில் துப்பிய எச்சில் இன்றுவரை முதலாளித்துவத்தின் முகத்தில் வழிந்துக் கொண்டுதானே இருக்கிறது? இதே கேள்வியைத்தான் அன்று எங்கள் குறிஞ்சித் திணைக்குடி மைந்தன் பாரி வேறு வடிவில் கேட்டான். பறம்பு மலையில் உள்ள சந்தன மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு அதற்கு ஈடாக பொன், பொருள், பெண்கள் தருவதாகச் சொன்ன யவனர்களிடம், ‘மரங்கள் தரும் கனிகளைக் கொய்யலாம். மலர்களைப் பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட முடியாது. தாயின் தனத்தில் உயிர் பால் அருந்தலாம் ஆனால் நீங்களோ தாயின் தனம் அறுக்க சொல்கிறீர்களே’ என்று கேட்ட நம் மூத்த திணைக்குடி மைந்தன் வாழ்ந்த இடத்தில் இன்று வாழ்பவர்கள் யார்? இத்தகைய அருமைகளையும் பெருமைகளையும் கொண்டிருக்கும் நம் திணைகளைப் பற்றி அய்யா பாமயன் அவர்கள் வடித்த நூலே ‘திணையியல் கோட்பாடுகள்’. சூழலுக்கும் உயிரினங் களுக்கும் உள்ள உறவைப் பற்றிய விளக்கமே திணைக் கோட்பாடு ஆகும் என்று தலைப்பில் நுவலும் இந்நூல் மேலும் சொல்வதுதான் என்ன?

 திணை என்பதை ஒரு அமைப்பாகப் பார்க்காமல் ஓர் அமைவாகப் பார்த் தார்கள் தமிழர்கள். அமைவு என்பது ஆங்கிலத்தில் சிஸ்டம் (system). இதில் இருந்து ஒன்றை அகற்றினா லும் அது இயங்காது. காட்டாக உணவு மண் டலம் என்பது ஓர் அமைவு. இது வாய் என்ற உறுப்பில் தொடங்கி தொண்டை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என நீண்டு குதம் வரை உள்ளதுதான் இந்த அமைவு. இதில் இருந்து ஓர் உறுப்பை நீக்கினாலும் இது இயங்காது. இப்படி யாகத் தான் இயற்கையையும் பார்த்தார்கள் தமிழர்கள். எனவே இதில் இருந்து ஒன்றை நீக்கி பார்ப்பது என்கிற சிந்தனையே அவர்களுக்குத் தோன்றவில்லை..

ஆனால் மேலை நாட்டு முதலாளியம் இதை ஓர் அமைப்பாகப் பார்த்தது. அமைப்பு என்பது ஆங்கிலத் தில் ஸ்ட்ரக்சர் (structure). ஓர் அமைப்பிலிருந்து ஒன்றை நீக்கலாம் அல்லது சேர்க்கலாம். வீடு என்ற அமைப் பிலிருந்து வாசற்படி என்ற அமைப்பை அகற்றிவிட்டால் அது இல்லாமல் போகப் போவதில்லை. இந்த நோக்கிலேயே அது இயற்கையைப் பார்த்ததுதான் இன்றைய அவலத்திற்கு காரணம். இயற்கையின் அமை வான காடு, குளம் போன்ற அமைவிலிலிருந்து ஓர் உயிரினத்தை அகற்றினாலும் அது இயங்காது என்ற உண்மையை முதலாளியம் அறிந்திருக்கவில்லை. மனிதர்களைத் தவிர யாரையும் எதையும் அழிக்கலாம் என்று தொழிற்புரட்சியின் கொள்கை வளர்ந்தது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் உலகை ஓர் எந்திரமாகப் பார்க்க வைத்ததுதான். ‘அறிவியலுக்கு எந்த குணமும் கிடையாது. அது சார்பற்றது’ என்று கலிலியோ அறிவித்ததுதான். இது இன்றைய புதித அறிவியலுக்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக மேலை நாடுகள் பண்டைய நாடுகளை, கலாச்சாரங்களை, பண்பாடுகளை கூடவே புவியின் இயற்கையையும் அழித்து முடித்திருக்கிறது. ஆனால் கலிலியோவின் இத்தகைய பார்வை இன்று கண்டனத் துக்கு ஆளாகியுள்ளது. ஆர்.டி. இலெயிங் என்ற உளவியலாளர், “கலிலியோ இந்த உலகை உணர்வற்ற சவமாகப் பார்த்துவிட்டார்” என்று குற்றம் சாட்டுகிறார்.

 முதலீட்டியம்தான் தன் பார்வையில் குறையைக் கொண்டுள்ளது. அன்பையும் மாந்த நேயத்தையும் தனது கருவாகக்கொண்டிருக்கும் மார்க் சியம் இதில் எங்கு தவறவிட்டது? அது தன் அணுகுமுறையில் கார்ட்டீசியம் என்ற பகுப்பாய்வு முறையை மட்டும் எடுத்துக் கொண்டதால் இயற்கை வளங்கள் மீதும் அதன் இருப்பு மீதும் அழுத்தமான பார்வையைப் பாய்ச்ச முடியவில்லை. எனவேதான் பசுமை மார்க்சியர்கள் இதற்கு மாற்றாக முழுமையான பார்வையுடன் கூடியதொரு சூழலியல் கோட்பாடுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். மார்க்சிய மொழியில் சூழலை விளக்கும் போக்கு மேலை நாடுகளில் தொடங்கிவிட்டாலும் நம் நாட்டில் அதைப்பற்றி இன்னும் பேசவே தொடங்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் பாமயன்.

இந்நிலையில் நம் திணையியல் கோட்பாடுகள் என்னதான் சொல்கிறது?

 முதற் பொருள்: உலகில் காணப்படும் மற்ற கோட்பாடுகள் அனைத்துக்கும் முதற்பொருளாக ‘கடவுள்’ என்ற கருத்தாக்கமே உள்ளது. அதாவது கடவுள் என்பதை மையப்படுத்தியோ அல்லது மறுத்தோதான் பிற கோட்பாடுகள் அமைந்திருக்கையில் நம் திணைக் கோட்பாட்டுக்கு ‘நிலமும் பொழுதும்’ தான் முதற்கருத்தாக இருப்பது மிகுந்த வியப்பையும் பெருமிதத்தையும் அளிப்பதாக உள்ளது. இவ்வகையில் இதை ஒரு சார்பிலி (Secucular) கோட்பாடு எனலாம். அது மட்டுமல்ல திணையியல் கோட்பாடு. இன்றைய குமுகாயத்தின் புண்ணாக மாறி நாறிக்கொண்டிருக்கும் சாதியை நீக்கிய ஒரு கோட்பாடாகவும் இருந்திக்கிறது. சாதிய அமைப்புக்கு முன்னதாக தமிழர்களிடையே இருந்த ஒரு குமுகாய அமைப்பே திணை. எனவே சாதிய அமைப்புக்கு மாற்றான ஓர் அமைப்பாக வும் திணைக் கோட்பாட்டை முன்வைக்க முடியும்.

 கருப்பொருள்: புதித அறிவியல் செய்யாத ஒன்றை நமது திணைக் கோட்பாடு செய்கிறது. அது உயிருள்ளது உயிரற்றது இரண்டையுமே தனது கருப்பொருளாகக் கொள்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பிரிவிலேயே இதை உணரலாம். மலைக்கு உயிரில்லை என்று பார்த்ததால் அது கிரானைட்டாக மாறிவிடுகிறது. காட்டுக்கு உயிரில்லை என்று பார்த்ததால் அது பலகையாக மாறிவிடுகிறது. வயலுக்கு உயிரில்லை என்று பார்த்ததால் அது மாண்சாண்ட்டோவின் சோதனைச் சாலையாகி விடுகிறது. நெய்தலை உயிரற்றதாக பார்த்ததால் இறால் பண்ணையாகவும் உலகின் குப்பைத் தொட்டியாகவும் போய்விட்டது. மணலை உயிரற்றதாக பார்த்ததால் அது இல்மனைட்டாகவும் தோரியமாகவும் மாறி இறுதி யில் அணு உலை என்ற பெயரில் கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 உரிப்பொருள்: இதுவரை இலக்கியங்கள் உரிப்பொருளை காதலுக்கு மட்டும் பொருத்திப் பார்த்த சூழலில் இந்நூல் ஆசிரியர் அதைச் சுற்றுச்சூழலுக்குப் பொருத்திப் பார்க்கிறார். தமிழ் நிலத்துக்குரிய திணையியல் கூறுகளில் முதன்மை யானதாகக் கருதப்பட்டது. நீர். இந்த நீர் மழை வடிவத்தில்தான் நமக்கு கிடைக்கிறது. முதலில் இந்த நீர் மழையாக குறிஞ்சியைப் புணர்கிறது (புணர்தலும், புணர்தல் நிமித்தமும்) பின்னர் மரங்கள் அடர்ந்த காட்டு நிலமான முல்லையில் தங்குகிறது (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்) மருதத்தில் நீருக்கும் மக்களுக்கு மான உறவு எப்போதும் ஓர் ஊடல் என்ற அளவிலேயே இருக்கிறது. (ஊடலும் ஊடல் நிமித்தமும்) நெய்தலில் நீர் நிறைய உண்டு. ஆனால் உப்பு நீர். இது இரங்கத் தக்க நிலை. (இரங்கலும், இரங்கல் நிமித்தமும்) அடுத்து பாலையில் நீர் நிலத்தை விட்டு ஆவியாகப் பிரிந்து வானை நோக்கிப் போகிறது. (பிரிதலும், பிரிதல் நிமித்த மும்) இப்படி அனைத்தையும் சூழல் பார்வையில் பார்த்தாக வேண்டிய காலக்கட்டத்துக்குதான் நாமும் வந்து சேர்ந்துள்ளோம்.

 உயிரும் மெய்யும்: படைப்பின் கமுக்கம் ஒரு புதிர். இதை விடுவிக்க தெரியாததால்தான் கடவுள் என்ற ஒன்றை மதங்கள் படைத்தன. ஆனால் தொல்காப்பியம் என்ன கூறு கிறது? ‘மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே’ &உயிரின் தோற்றம் மெய்யில் இருந்து அதாவது உயிரற் றதில் இருந்து வருவதாகக் கூறுகிறது. இது பொருள் முதல் வாதம் அல்லவா? அறிவியலும் உயிர் உயிரற்ற பருப்பொருட்களிலிருந்தே தோன்றுவதாகக் குறிப்பிடு கிறது. தமிழர்கள் நிலங்களை மட்டும் இயற்கையின் அடிப்படையில் வகுக்கவில்லை. தம் மொழிக்கூறுகளை யும் அவ்வாறே படைத்தனர். உயிரை சுமக்கும் உடம்பு உயிரி. உயிர் + மெய் = உயிர்மெய் என மொழி இங்கே படைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் சரி இன்றைய உலகத்துக்கு இந்த திணை வாழ்வு சரிப்பட்டு வருமா? அதற்கு முதலில் இந்தத் திணை வாழ்க்கை முறை என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.

அந்தந்த இடத்திலிருக்கும் மக்கள் அந்தந்த நிலப் பரப்பில் பயிர் செய்து விளையும் பொருட்களை சாப்பிடுவது திணை வாழ்க்கை முறை. மருத நிலத்தில் கிடைக்கும் நெல் அரிசியை மலைப்பக்கம் வசிக்கும் குறிஞ்சி மக்கள் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்க வில்லை. அங்கு மூங்கிலரிசியும் தேனும் தினையும் கிடைத்தன. இந்த முறையில்தான் அவர்களுடைய உணவு பழக்கம் அமைந்திருந்தது.

உணவுப் பழக்கம் என்பது ஓர் இடத்தின் திணை முறைமையோடு சேர்ந்து வளர்ந்தது. அம்முறைமை அந்த இடத்தின் காலநிலையையும் சமூக கட்டுமானத்தையும் அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக கடற்கரை மக்கள் தேங்காய் எண்ணெய்யை சமைய லுக்கு பயன்படுத்துவார்கள். தக்கான பீடத்தின் மேற்குப் பகுதியில் இருப்பவர்கள் கடலை எண்ணெய்யையும், வட பகுதியில் இருப்பவர்கள் குசும்பச் செடி மற்றும் சூரிய காந்தி எண்ணெய்யையும் பயன் படுத்துவார்கள். வட மாநிலத்தவர்கள் தங்கள் நிலங்களில் நன்கு விளையும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்துவார்கள். ஒவ் வொரு பகுதியில் உள்ள ஒவ்வொரு சமூகமும் அவரவர் பகுதியில் வளரும் முக்கிய பயிரையே சார்ந்திருப்பர். சுருக்க மாகச் சொன்னால் அந்தந்தப் பகுதியில் அந்தந்தப் பருவத்தில் விளையும் உணவை உண்பதே நல்வாழ்வுக்கான முழு நிறை வான சிறந்த கொள்கையாகும் என்பது இன்றைய பசுமைச் சிந்தனை. இதை அன்றே அமல்படுத்தி வெற்றி கண்டிருந்தவர்கள் தமிழர்கள்.

அன்று திணை நிலத்துக்குள் இருந்த வணிகமாக அறியப்பட்டிருந்தது உமணர்கள் நெய்தல் நிலத்தில் விளைந்த உப்பை மருத நிலத்துக்கும் அங்கு விளைந்த நெல்லை நெய்தலுக்கும் கொண்டு வந்ததும்தான். இந்த பண்டமாற்று முறைதான் இன்றைய நிலைத்த வேளாண்மை முறைக்கும் ஏற்புடையதாகக் கருதப்படுகிறது. இது இன்றைக்கு சாத்தியமா எனில் சாத்தியம் தான். இயற்கை வேளாண்மை வலுவாக இருக்கும் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் பண்ட மாற்றுமுறை அன்றிலிருந்து இன்று வரை அமலில் இருந்து வருகிறது. உள்ளூருக்குள்ளேயே பொருட்களை மாற்றிக் கொள்வது என்பது காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவையும் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்றைய புவி வெப்பமாதல் அல்லல்கள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது இந்த தொலை தூர வணிகம்தான். இந்த வணிக முறை திணை வாழ்வியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை என்பது போட்டிகளில் உருவானது அல்ல. அது கூட்டுற வினால் உருவானது என்ற கருத்து இன்று நிலை பெறத் துவங்கியுள்ளது. அதனால்தான் முதலாளியம் வளர்ந்த அமெரிக்காவில் இன்று ‘பயோ ரீஜனலிசம்’ என்ற கருத்தாக்கம் பிறந்துள்ளது. அவரவர் சொந்த இடத்தில் இல்லாததுதான் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம் என்பதால் அனைவரும் அவரவர் இடத்துக்குத் திரும்ப வேண்டும் என்கிற ரீ இன்ஹேபிட்டேசன் என்கிற கோட்பாட்டை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது முதலாளித்துவம் முன்வைக்கும் நகரமயமாக்கத்துக்கு எதிரான நிலை. இதே நிலையை இங்கும் உருவாக்கும் வாய்ப்பை மேற்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். இதற்குத் திணையியலே நல்ல தீர்வாகும்.

அய்ந்து திணைகளில் வாழ்ந்த கூட்டம் நாம். இப்போது ஆறாம் திணை பற்றியெல்லாம் பேசி வருகிறோம். ஆனால் சென்னை போன்ற நகரத்தை எந்தத் திணையில் கொண்டு போய்¢ச் சேர்ப்பது? எந்த நிலத்திலும் வாழ வழியற்றுப் போய் திணையற்ற கூட்ட மாய் தமிழினம் இன்று சென்னை, திருப்பூர், ஓசூர், பெங்களூர் போன்ற நகரங்களில் பிழைப்புக்காக குந்துவதற்கு நிலையான இடம் இன்றி திரிந்துகொண்டிருக்கிறதே அதை எந்தத் திணைக்குள் வகுப்பது? ஒவ்வொரு திணையும் அந்தத் திணை சார்ந்த ஒரு பூவைக் கொண்டு தான் அந்த திணையின் பெயரைப் பெற்றது. இந்நகரங்கள் அனைத்துக்கும் எந்தப் பூ சொந்தம்? எனக்குத் தெரிந்து காகிதப்பூவான பணம்தான் இந்த நகரத்தின் பூவாக இருக்கிறது. இந்தப் பூவை எந்தத் திணையில் கொண்டு போய்ச் சேர்ப்பது? அய்ந்து நிலங்களையும் நாசமாக்கி அங்கிருந்த மக்களையெல்லாம் வேலைக்காக நகரங்களை நோக்கி விரட்டிவிட்டு மக்களை ஒரு திணையற்ற பெரும் கூட்டமாக உருவாக்கி விட்டுவிட்டது புதித பொருளாதாரமுறை. இப்படி திணையற்றுத் திரியும் மக்களை மீண்டும் திணை வாழ்வுக்கு கொண்டு போய்ச் சேர்க்கும் சிந்தனைகள் தொடங்கப்பட வேண்டிய நேரம் இது.

முடியாது என்பவர்களுக்கு ஏன் முடியாது என்று ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். அய்ம்பது ஆண்டு களுக்கு முன் அணைகளை நவீன ஆலயங்கள் என்று நேரு சொன்ன போது ஆமாம் ஆமாம் என்று சொன்ன நாம் ஏன் இன்று அதை எதிர்க்கிறோம்? இந்திராவின் காலத்தில் அணுகுண்டு வெடிக்கப்பட்டபோது தேசிய பெருமையாக கருதி கோண்டாடிய நாம்தானே இன்று கூடங்குளத்தை எதிர்த்துக் குவிகிறோம். நாடு விடுதலை பெற்ற நேரத்தில் இன்னும் அறுபது ஆண்டுகளில் இந்நாடு ஒரு பேரரசின் நவீன காலனியாய் மாறும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவருடைய கதி அன்று என்னவாகியிருக்கும்? ஆனால் இன்றைய நிலை என்ன? நம் வாழ்வியல் கோட்பாடாக இருந்த திணை யியல் கோட்பாட்டுக்கு சூழலியல் அறிவோடு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது. இன்று பயோ ரீஜனலிசம் எனப் பேசத் தொடங்கியிருக்கும் அமெரிக்க மக்கள் அதுகுறித்து என்ன சொல்கிறார்கள், அவ் வாழ்க்கையை எப்படி மேற்கொள்ள முனைகிறார்கள் என்று பார்ப்போம்.

உள்ளூரில் விளையும் இயற்கை வேளாண் பொருட் களை வாங்குவது, சங்கிலித் தொடர் கடைகளைப் புறக்கணித்து உள்ளூர் வணிகர்களிடம் பொருள் வாங்குவது, உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை அதுவும் வாழும் இடத்துக்கு வெகு அருகிலுள்ள, சுற்றுச்சூழலை நாசப்படுத்தாத நிறுவனப் பொருளாக வாங்குவது, தான் வாழும் இடத்தைச் சுற்றியுள்ள தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மண், நீர்நிலைகள், மக்கள் பண்பாட்டு வரலாறு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதோடு அதைப் பற்றி பள்ளிகளிலும் முதலில் கற்றுத் தருவது, தொலைக்காட்சியைவிட உள்ளூர் கலைகள், கலைஞர்களுக்கு முதன்மையைத் தருவது, உள்ளூர் விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஆதரிப்பது, தன் நிலத்தையே நாசமாக்கும் குப்பையைக் குறைப்பது, தன் நீர் ஆதாரத்தைப் பாது காப்பதோடு புழங்கு நீரின் அளவையும் குறைப்பது, மின் பயன்பாட்டைக் குறைத்து கரிக்காற்றின் அளவைக் குறைப்பதோடு கதிரொளி பயன்பாட்டை ஊக்குவிக்க முனைவது, வங்கி பரிமாற்றத்தைக்கூட உள்ளூர் மக்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் வங்கியில் மட்டுமே செய்வது என்று விரிவடைகிறது அவர்களுடைய கோட்பாடு.

யோசித்துப் பார்த்தால் இது முந்தைய நம் திணை வாழ்வின் புதித வடிவமாகத் தோன்றுகிறது அல்லவா? பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் வாஷிங்டன் ஆப்பிளைவிட உள்ளூர் நெல்லிக்கனியை உண்பதன் மூலம் ஒரு திணை வாழ்வுக்கான அடித் தளத்தை இடமுடியும் என்று தோன்றுகிறது. எந்த வகையிலும் தன் சூழலை அழிப்பது என்பது தன் சொந்த வாழ்க்கையையே அழிப்பது என்பதை ஒரு தலைமுறை கற்றுக்கொண்ட பிறகு இனி எவர் சூழலை அழிக்க முற்பட்டாலும் எதிர்த்து நின்று போராடும் இயல்புக்கும் திரும்ப வேண்டும். திணையற்றவர்கள் என்ற அவச்சொல் இந்த மேனாள் திணைக்குடிகளின் மேல் விழுந்திருக்க இனிமேலும் தொடர்ந்து அனுமதிக்க கூடாது. திணையியல் கோட்பாட்டை வகுத்த நம் அதை மீள் உருவாக்கம் செய்ய முனைந்தால் அதை எதிர்ப்பவர்கள் ஒரே ஓர் இனமாகத்தான் இருக்க முடியும். பன்னாட்டு நிறுவனப் பங்குதாரர்களும் அவர் களின் பாதக் குறடுகளாய் மாறி இருக்கும் இந்நாட்டு அறிவிலிகளும்தான் அந்த இனம். இந்த இனத்தை திணைக்குடி இனம் கட்டாயமாக வெல்லும். அதற்கு முதலில் நம் திணையியல் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை நமக்கு வழங்கும் இந்நூலுக் கும் இந்நூலைத் தந்த ஆசிரியர் அய்யா பாமயன் அவர்களுக்கும் நன்றி.

 திணையியல் கோட்பாடுகள், ஆசிரியர்: பாமயன், வெளியீடு: தடாகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41, தொலைபேசி: 8939967179, விலை ரூ.70

Pin It