"மரங்கள் தரும் கனிகளைக் கொய்யலாம், மலர்களைப் பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட முடியாது. தாயின் தனத்தில் உயிர்ப்பால் அருந்தலாம். நீங்களோ தாயின் தனம் அறுக்கச் சொல்கிறீர்கள்."

பறம்பு மலையில் உள்ள சந்தன மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு, அதற்கு ஈடாக பொன், பொருள், பெண்கள் தருவதாகச் சொன்ன யவனர்களுக்கு பாரி மன்னன் அளித்த பதில்.

கடந்த 2008 டிசம்பர் 27ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம். எழுபது மாணவர்கள் கொண்ட குழு, சூழலியல் போராளியும் கவிஞமான கென் சரோ விவாவின் கவிதை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு நின்றனர். அங்கு கூடியிருந்த சுமார் இரண்டாயிரம் மக்கள் முழங்கிய வாசகம், "மலை என்பது வெறும் மண்மேடல்ல. எங்களின் வாழ்வாதாரம்." அது எப்போதும் அரசு அலுவலகங்களுக்கு எதிரே நாம் காணும் வழக்கமான போராட்டக் காட்சியல்ல. "சூழலியல் அகதிகள்" ஆகும் ஆபத்திலிருக்கும் மண்ணின் மைந்தர்கள் எழுப்பிய உரிமைக்குரல்.

காலனியாதிக்கத்தின் போது தொடங்கிய பூர்வக்குடி ஆன்மாக்களின் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. காலங்களைக் கடந்து இப்பெரு நிலப்பரப்பெங்கும் வெவ்வேறு குரல்களில் இன்னும் அவை ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காடுகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கையின் ஒவ்வோர் அங்கமும் பெருவணிக நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கும் வரை, எப்படி அவர்களது அழுகுரல்கள் ஓய முடியும்?

பூமியை மலடாக்கும் பெருவணிக நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் நிறுவனத்தின் பார்வை இப்போது திருவண்ணாமலை அருகில் உள்ள கவுத்தி-வேடியப்பன் மலைகள் மீது திரும்பியுள்ளது. இம்மலைகளின் உள்ளிருக்கும் இரும்பின் ருசி, அதன் பசியை அதிகரித்துள்ளது. அதை நேரடியாக புசிக்க முடியாத நிலையில் அரசு இயந்திரமான "டிட்கோ" என்ற நண்பனை, அது துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. நமது கெடு வாய்ப்போ இங்கு பாரி போன்ற மன்னனில்லை. இயற்கை வளங்களை பெருமுதலாளிகளுக்கு "வாரி" வழங்கும் மக்கள் (!) அரசுதான் இருக்கிறது.

மரபு சார் தொல் கதைகளின் புனைக்களமாக விளங்கும் இம்மலைகள் திருவண்ணாமலையில் இருந்து சில கல் தொலைவில் அமைந்துள்ளன. திருவண்ணாமல-செங்கம் சாலை இவ்விரு மலைகளுக்கு இடையேதான் செல்கிறது. இவை வெறும் மொட்டை மலைகள் அல்ல. இரண்டு லட்சம் மரங்களின் இருப்பிடம். காடுகள் என்றவுடன், அவை அமேசான் போன்று அடர்ந்த வெப்பமண்டலக்காடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வெறும் முட்செடிகளும் கள்ளிகளும் மட்டுமே நிறைந்த வட அமெரிக்காவின் "சகாரோப்" பகுதியைக்கூட பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. ஆனால் மலையடிவார மக்களை சுள்ளி பொறுக்கக்கூட அனுமதிக்காத நமது அரசோ, இரு மலைகளையே தனியாருக்கு தாரை வார்த்துத் தர முன்வந்துள்ளது.

இம்மலையில் மக்கள் வசிக்கவில்லை என்கிறது அரசு. உண்மைதான். ஆனால் இம்மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இருபதாயிரம் பேர், மக்கள் இல்லையா? வெறும் 180 பேர் வேலை பெறுவதற்காக இருபதாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பதா? இம்மலைகளையே வாழிடமாகக் கொண்டுள்ள பறவைகள், காட்டுயிர்கள், உயிரினங்கள் இல்லையா? மானிடர்களைவிட அவை எந்த வகையில் தாழ்ந்தவை?

"மக்கள் மலையின் முதலாளிகள் அல்ல. புல், பூண்டு, மரம், செடிகொடி, பறவை, காட்டுயிர்கள் போன்று பல்லுயிர்களும் மக்களும் ஓருயிர்தான்" என்ற பாரி மன்னனும் இதே தமிழ் மண்ணை ஆண்டவன்தான். நீர்நிலைகளைப் பயன்படுத்துவதிலும் காடுகளை அழிப்பதையும் தடுக்க கி.மு. 242லேயே சட்டம் இயற்றிய அசோக மன்னனும் இந்த இடத்தில் ஞாபகத்துக்கு வருகிறார்.

ஓரிடத்தில் மக்கள் எவ்வளவுக் காலம் வாழ்ந்து வருகின்றனர் என்பதை, அவர்களின் திணை சார்ந்த வாழ்வைக் கொண்டு கணக்கிடலாம். இம்மலையடிவாரத்தில் வாழும் மக்களுக்கு குறிஞ்சித் திணையின் வேட்டுவர் தொழில் சார்ந்த வேடியப்பன் தெய்வமாக இருக்கிறார். இதனால் ஒரு காலகட்டத்தில் இம்மக்கள் குறிஞ்சித் திணை மக்களாக இருந்திருக்கலாம் எனக் கருத இடம் இருக்கிறது. பின்னர் மேய்ச்சல் தொழிலை கைக்கொண்டு முல்லைத் திணை வாசிகளானாலும், மலை மீதிருக்கும் வேடியப்பனை இவர்கள் மறக்கவில்லை. காலப்போக்கில் இவர்கள் விவசாயம் சார்ந்த மருதத் திணைக்கு இன்று மாறியிருந்தாலும், இன்றும் வேடியப்பன்தான் இவர்களது முதன்மை தெய்வம். இம்மாவட்டம் முழுக்க வேடியப்பனுக்கு பல கோவில்கள் இருந்தாலும் இவற்றில் முதன்மையானது இந்த வேடியப்பன் கோவில்தான்.

வேடியப்பன் ஒரு நாட்டார் தெய்வம். அதனால்தானோ என்னவோ, இதன் மீது கைவைக்க ஜிண்டால் முன் வந்திருக்கிறது. இதுவே பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் கோவில் என்றால் மத நிறுவனங்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அது ஓடுங்கியிருக்கக் கூடும். சத்தீஸ்கரில் அப்பாவிப் பழங்குடிகளின் நிலத்தை அபகரித்து, அவர்கள் மீது தன் பலத்தைக் காட்டிக் கொண்டிருப்பதுதான் இந்த ஜிண்டால் நிறுவனம்தான்.

பொதுவாகவே திருவண்ணாமலை மாவட்டம் ஒரு புலம்பெயர் மாவட்டம். பெங்களூரு, சென்னை போன்ற மாநகரங்களில் இயங்கும் தொழிற்கூடங்களின் பெரும்பசிக்கு இரையாகிக் கொண்டிருப்பது இம்மாவட்ட மக்களே. மானாவாரி விவசாயம் என்பதால்தான் இந்த நிலை. ஆனால் இதையும் மீறி ஏதாவது ஒரு கிராமத்தில் இருந்து மக்கள் புலம்பெயராமல் இருந்தால், அக்கிராமத்தில் விவசாயம் சார்ந்த பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த கவுத்தி-வேடியப்பன் மலையடிவார கிராமங்களும் அத்தகைய வளமான விவசாயத்தைக் கொண்ட கிராமப் பகுதிகள்தான்.

இங்கு வெங்காயம், கேழ்வரகு, சோளம், நிலக்கடலை போன்ற புன்செய் பயிர்களோடு நெல்லும் பயிராவதைக் காண முடிகிறது. மேலும் சாமந்தி, கோழிக்கொண்டை போன்ற மலர் சாகுபடி நிலங்கள் பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கின்றன. இந்த வளமான விவசாயத்துக்கு நீர் ஆதாரமே இம்மலைகள்தான். நீரை உறிஞ்சி தேக்கி வைக்கும் இம்மலைகள் இயற்கையான அரண் மற்றும் அணையாய் விளங்குகின்றன. இதனால் வளமான நிலத்தடி நீர் ஆதாரத்துடன் விளங்குகிறது இந்த பூமி.

ஜிண்டால் நிறுவனம் இங்கு இரும்பு கனிமம் வெட்டியெடுக்கும் பட்சத்தில், அதற்கு நாளொன்றுக்கு 560 கனமீட்டர் வீதம் நீர் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்படியாக முப்பது ஆண்டுகள் வரை அதற்கு நீர் தேவைப்படும். பல நூற்றாண்டுகளாக இம்மலைகள் சேமித்து வைத்திருக்கும் நிலத்தடி நீரிலிருந்துதான், தனக்குத் தேவையான நீரை எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நீரெடுத்தால் திருவண்ணாமலை மக்களின் குடிநீர் ஆதாரம் என்ன ஆகும்? அது ஒரு பிளாச்சிமாடா ஆக மாறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? இது போதாதென்று சாத்தனூர் அணை நீரையும் அது பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் இங்கு பெருகும் நீர், சிற்றோடைகள் வழியாக சுமார் 5 கி.மீட்டருக்கு மேல் ஓடி சமுத்திரம் ஏரியை அடைகிறது. இந்த சமுத்திரம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமே இம்மலைகள்தான். இந்த சமுத்திரம் ஏரியை நம்பித்தான் திருவண்ணாமலையின் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வு இருக்கிறது. மேலும் பருவக் காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரிக்கு வலசை வருகின்றன.

மேலும் கவுத்தி-வேடியப்பன் மலைகள் பல ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழிடமாக இருக்கின்றன. பறவைகளோடு நரி, காட்டுப் பன்றி, மான் போன்ற பல விலங்கினங்களுக்கும் பாம்புகள், உடும்புகள் போன்ற பல ஊர்வனவற்றுக்கும் இவை இருப்பிடம். இம்மலைகள் சிதைவுறும்போது, இவ்வுயிர்கள் அழியும் ஆபத்து இருக்கிறது. பின்பு பல்லுயிரியம் பற்றி நாம் பேசுவதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

இரும்புத்தாது எடுக்கப்பட்டவுடன் சேரும் கழிவுப் பொருளின் அளவு என்ன தெரியுமா? ஓராண்டுக்கு தோண்டப்படும் இரும்புத் தாதின் அளவு 10 லட்சம் டன் என்றால், அதன் கழிவுப்பொருளின் அளவோ 30 லட்சம் டன். இது இம்மலை அடிவாரத்தில்தான் கொட்டப்பட போகிறது. நச்சுப் பொருட்கள் அடங்கிய இக்கழிவுகள் நிலத்தின் தன்மையையும் நிலத்தடி நீரையும் நிச்சயம் பாதிக்கும். இதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் சேர்வராயன் மலையே இதற்கு உதாரணம்.

சேலத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருந்ததுதான் சேர்வராயன் மலை. இங்கு அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் பாக்சைட் என்ற மூலப்பொருள் எடுக்க மால்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது சிவப்பு நிற மணல் கழிவுகளை சேர்வராயன் மலைப்பகுதியில்தான் கொட்டி மூடியது. விளைவு, சேலத்துக்கு நீர் கொடுத்து வந்த சேர்வராயன் மலை நீருற்றுகள் மூடப்பட்டு, குடிநீர் ஆதாரமும் சேலத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த மாம்பழ விளைச்சலும் பாதிக்கப்பட்டன.

கவுத்தி-வேடியப்பன் மலைகள் உடைக்கப்படும் போது ஏற்படும் மற்ற பிரச்சினைகள் ஒலி மாசு மற்றும் காற்று மாசு. செவியின் கேட்கும் திறன் பாதிக்கப்படும் அளவுக்கு ஏற்படும் ஒலி மாசு பிரச்சினையின் பாதிப்பை, ஏற்கெனவே கல்குவாரி அருகே வசிக்கும் மக்களிடம் கேட்டறிய முடியும். அது போலவே காற்று மாசுபடுதல் பிரச்சினையில் இரும்புத்தாதின் தூசு படிவதால் அதை சுவாசிப்பவர்கள் சுவாச நோய்களுக்கும், இதய நோய்களுக்கும் ஆளாவர்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது ஏதோ திருவண்ணாலையில் வசிக்கும் இரண்டு லட்சம் மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மற்றவர்கள் சும்மா இருந்துவிட முடியாது. ஏனெனில் பக்தர்கள் உட்பட இந்த ஊருக்கு வந்து செல்பவர்களும் கட்டாயம் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஏனென்றால், இந்த மாசு நிறைந்த காற்று பரவும் ஏழு கி.மீட்டர் சுற்றளவுக்குள்தான் கிரிவல பாதையின் இரண்டரை கி.மீட்டர் தூரமும் வருகிறது. எனவே, திருவண்ணாலைக்கு கிரிவலம் வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களையும் இது பாதிக்கும். ஆத்ம சுகத்தைத் தேடி வரும் பக்தர்கள் தேக சுகத்தையும் தொலைத்துவிட்டுப் போகப் போகிறார்கள். எப்போதாவது வந்து போகும் பக்தர்களுக்கே இந்த கதி என்றால், இம்மண்ணிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வு?

இம்மாசுப் பிரச்சினையில் இருந்து மக்களைப் பாதுகாக்க இம்மக்களுக்கும் இங்குள்ள மரங்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய இருக்கிறார்களாம். எங்கே தெரியுமா? திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில். திருவண்ணாமலைக்கும் திருநெல்வேலிக்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது. மண்ணுக்கும் இம்மண்ணைச் சார்ந்து வாழும் தொல்குடி மக்களுக்கும் உள்ள உறவை வணிக நிறுவனங்களும் அதன் கூட்டணியான அதிகார வர்க்கமும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றன?

நிலம் என்பது தொல்குடிகளுக்கு வெறும் மண் மாத்திரமல்ல, அது அவர்களின் தேகம். நீர் என்பது வெறும் நீரல்ல, மூதாதையரின் குருதி. அதன் சலசலப்பு அவர்களுடைய பாட்டனின் குரல். காற்று அவர்களுடைய முன்னோரின் மூச்சு. மரங்கள் தாய், செடிகள் குழந்தைகள். நிலத்துடன் அவர்கள் கொண்டுள்ள உறவு என்பது உணர்வுப்பூர்வமானது.

அதனால்தான் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், "வேடியப்பன், கவுத்தி மலையின் கௌதம ரிஷி, எல்லையில் வசிக்கும் பன்னிரெண்டு தேவதைகள் மற்றும் இந்த நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் என் முன்னோர்களையும் என்னோடு அனுப்பி வைத்தால் நீங்கள் சொல்லும் இடத்துக்குச் சென்று நான் வாழத் தயாராக இருக்கிறேன்" என்று ஒரு மூதாட்டி பகர்ந்தார். அமெரிக்க டாலர்களை மட்டுமே அறிந்திருக்கும் ஜிண்டாலுக்கு அவர் சொன்னது கொஞ்சமாவது உறைத்திருக்குமா?

இது பூர்வகுடி மக்கள் மாத்திரமே உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு விஷயம். அதனால்தான் எத்தனைக் காலம் ஆனாலும் அவர்களின் குரல் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஒலிக்கிறது. செவ்விந்தியர்களின் நிலத்தை அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் பியர்ஸ் விலைக்குக் கேட்டபோது, அம்மக்களின் தலைவன் சியாட்டில் கேட்ட கேள்விகள் தலைமுறை தலைமுறையாக இன்னமும் பதில் இல்லாமல் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன...

"காற்றின் தூய்மையும் தண்ணீரின் ஒளியும் (எங்களுடைய) தனிச்சொத்து அல்ல.

பின் அவற்றை நீ எப்படி வாங்க முடியும்?

நீ படுத்துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப்படுத்தினால்,

ஒரு நாள் இரவில் உன் குப்பைகளுக்குள்ளேயே நீ மூச்சுத் திணறி செத்துப் போவாய்...

பூமி நமது தாய். இன்றைக்கு பூமிக்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ. அதுவே நாளை அவள் பிள்ளைகளுக்கும் நேரிடும்.

ஏனெனில் பூமி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன்...

கடைசித் தகவல்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. ராஜேந்திரன் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

தகவலுக்கு நன்றி:

1. கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கம், திருவண்ணாலை

2. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டு வாங்கிய, தமிழ்நாடு அயன் ஓர் மைனிங் கார்பரேஷன் லிமிடெட்டின் ராபிட் என்விரான்மென்ட் இம்பேக்ட் அசஸ்மென்ட் ரிபோர்ட், என்விரான்மென்ட் மானேஜ்மென்ட் பிளான்.

3. பேராசிரியர் வே. நெடுஞ்செழியன், அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை

4. ச. முகமது அலி, ஆசிரியர் காட்டுயிர்

5. பிரளயனின் பாரி படுகளம் நாடகம்.

6. மூதாட்டி ப. பச்சியம்மாள் (85), பெரிய பாலிகாப்பட்டு கிராமம், திருவண்ணாமலை, களஆய்வு.

************

கட்டுரையாளர் வீ.நக்கீரன் - கவிதை, குழந்தைகள் இலக்கியம், சுற்றுச்சுழல் இலக்கியம், சுற்றுச்சுழல் கல்வி ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறார். 

Pin It