‘அம் அஹ, இம் இஹி, உம் உஹூ’ இது மாயா பஜார் படத்தில் வரும் பிரபலமான வசனம். இப்படிச் சொன்னால் நினைத்தது நடக்கும். விரும்பியது தோன்றும். எனவே தான்...

தமிழக சட்டமன்றத்தில் எண்டோ சல்பானுக்குத் தடை விதிக்கப்பட்டது. உண்மையில் ஒரு பெரும் தலை முறையே எல்லா விஷத்தையும் உட்கொண்டு எல்லா ரசாயன உரங்களையும் சாப்பிட்டாயிற்று. பெரு வியாதிகளால் இன்று எல்லோருமே அவஸ்தைப் படுகிறோம். 40 வருடங் களுக்கும் மேலாக சுற்றுச்சூழல்வாதிகளின் குரல்கள் யாருக்குமே கேட்கவில்லை. இன்று ஒரே ஒரு ரசாயனத்துக்கு மட்டுமே தடை வந்துள்ளது. ஆனால், முற்றிலும் எல்லா ரசாயன உரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். அதுவே இறுதி யான முடிவு.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக இருபது ஆண்டுகளாக விதைக்கப்பட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள், புத்தகங்கள் இன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருக்கிறது. ஃபுகுஷிமா விபத்தை முன்வைத்து இடிந்தகரை மக்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும்போது பிரான்சில் ஒரு அணு உலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் சொல்வது பொய்யில்லை என்பது ஆட்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. போராட்டத்தின் வேகம், நமக்கு மாபெரும் வெற்றியைத் தரவேண்டும். இந்தியாவிற்கு தமிழர்கள் ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்த வேண்டும். எல்லோரும்

கூடங்குளத்திற்கு பயணம் செய்யுங்கள்.

(அம் அஹ, இம் இஹி, உம் உஹூ)

திடீரென பிள்ளையார் பால் குடித்தது போல, அன்னா ஹசாரே பிரபலமாகி விட்டார். அவருக்குப் பின்னால் இன்று ஒரு பெரும் படை உருவாகியுள்ளது. இந்தியா ஒரு சாதிச் சமூகம், வர்ணாசிரம தர்மமும், சாதிய ஏற்றத் தாழ்வுமே ஊழலின் ஊற்றுக் கண். இதை ஒழிக்க யாரும் முன்வர மாட்டார்கள். வெறுமனே ஊழலை ஒழிப்பது என்பது சங்கர் பட டயலாக்! இந்த டயலாக் 100 நாள் ஓடக் கூடியது. அன்னா ஹசாரே காந்தியின் பெயரைச் சொல்லி வண்டியை ஓட்டுகிறார். ஆனால், காந்தியை அவர் பின்பற்றுகிறாரா? என்பதே கேள்விக் குறிதான். நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை எதிர்த்து எல்லோரும் போராடும்போது அன்னா ஹசாரே ஊழல் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்கிறார். தூக்கிலிட வேண்டுமென்று சொல்பவர்தான் காந்திய வாதியா?

நடுவண் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கடைகளில் விலையை நிர்ணயம் செய்துள்ளது. பொருள் வாங்கிய பிறகு இனி, ஓசியாக பிளாஸ்டிக் பை கிடைக்காது. இதில் என்ன விசித்திரம் என்றால் பணக்காரக் கடைகளில் கண்டிப்பாக பணம் வாங்கி விடுகிறார்கள். சாதாரண கடைகளில் இன்னும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளை ஓசியாகவே தருகிறார்கள். மறுபடியும் நஷ்டம் ஏழை கடைக்காரர்களுக்குத்தான். பிளாஸ்டிக்கை ஒழிக்க அதன் விலையை இன்னும் உயர்த்த வேண்டும்.

(அம் அஹ, இம் இஹி, உம் உஹூ)

 சுற்றுச்சூழல்வாதிகளின் கடுமையான போராட்டங்களினால் தமிழக அரசின் பட்ஜெட் உரையில் முதலில் மரபணு மாற்ற பயிர்களை அறிமுகப்படுத்துவதாகவும் செயல்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. திடீரென என்ன நினைத்தார்களோ? இனி தமிழகத்தில் மரபணு மாற்றப் பயிர்களை அனு மதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். இன்னும் பல குரல்களை கொடுக்கும் சூழல்வாதிகளின் நம்பிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

(அம் அஹ, இம் இஹி, உம் உஹூ)

 பெங்களூரிலிருந்து ‘பூமி’ என்ற பெயரில் ஆங்கில இருமாத இதழ் ஒன்று புதிதாக வருகிறது. உணவு, சமூகம் மற்றும் நீடித்த வாழ்வியலுக்கான இதழாக இது வருகிறது. துல்லியமான புகைப்படங்கள், ஆழமான கவிதைகள், சுற்றுச்சூழல் தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான இதழாக வந்துள்ளது. ஜுன் இதழில் நோபல் பரிசுபெற்ற வாங்காரி மாத்தாயின் நேர்முகமும், வந்தனா சிவாவின் ‘பூவுலகின் உரிமைகள்’ என்ற கட்டுரையும் இதில் மிகச் சிறப்பாக உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் மாற்று விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவோர்க்கு இவ்விதழ் தவிர்க்க முடியாதது.

தொடர்புக்கு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

(அம் அஹ, இம் இஹி, உம் உஹூ)

Pin It