கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

koodankulam 371காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலையும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்.

கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய சிறு வெளியீடு ஒன்று இங்கு இப்போது வெளியிடப்பட்டிருக் கிறது. சிறு பிரசுரம் என்றாலும் அதில் கூறப் பட்டுள்ள கருத்துகள் மிக மிக வலிமையானவை. அதிலிருந்து சில கருத்துகளை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1) அணுக்கழிவை தாழ்நிலைக் கழிவுகள், இடைநிலைக் கழிவுகள், உயர்நிலைக் கழிவுகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். மின்சக்தியைத் தயாரிக்கும் அணுஉலைக்குள்ளே அணுக்கள் பிளக்கப் பட்டு, பீட்டா, ஆல்பா, காமா என்ற மூன்று வகைக் கதிர்கள் உருவாகின்றன. மின்உற்பத்தி செய்யும் ரியாக்டரில் எந்தப் பொருளும் எரிவதில்லை. பயன்படுத்தப்படும் யுரேனியம் பிளவுபட்டு நியுட்ரான்களை வெளியிடுகிறது. இந்த நியுட்ரான் யுரேனியத்தை மேலும் மேலும் பிளவுபடுத்தும் தொடர் வேலையை செய்து கொண்டே இருக்கிறது. இந்தத் தொடர் செயல்முறைகளால் மேலும் பல கதிர்வீச்சுகள் உருவாகின்றன. சீசியம், அயோடின், ஸ்ட்ரான்சியம் என்று அவைகளுக்குப் பெயர்.

2) பீட்டா கதிர்வீச்சைத் தடுக்க உலோகம் வேண்டும். காமா கதிர்வீச்சு மிக மிக ஆபத் தானது. மிகப் பெரிய பருமன் கொண்ட உலோகத்தால்தான் அதைத் தடுக்க முடியும். ஆல்பா, பீட்டா, காமா என்ற மூன்று வகை ஆபத்தான கதிர்வீச்சுகள்தான் இப்போது ‘அணுக்கழிவு’ என்று கூறப்படுகிறது.

3) 100 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மைக் கொண்டவை; 300 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மைக் கொண்டவை; 500 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மைக் கொண்டவை என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். குறைந்த ஆபத்துகளை உருவாக்கும் கதிர்வீச்சு என்பதே நூறு ஆண்டுகள் வரை ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும். 500 ஆண்டுகள் வரை ஆபத்தான கதிர்களை வீசக்கூடிய அணுக்கழிவுகளை அப்படியே சேமித்து வைக்க வேண்டும் என்றால் மனித சமூகம் அதுவும் நாகரிகமுள்ள ஒரு மனித சமூகம் அதை ஏற்க முடியுமா? அந்த ஆபத்து இப்போது தமிழன் தலையில் சுமத்தப்படு கிறது.

4) நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் வளர்ச்சி அடைந்த நெதர்லாந்து 300 ஆண்டுகள் கதிர்வீச்சைப் பாதுகாக்கும் அதி நவீன வைப்பகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘லிசின் ஜென் ஊஸ்ட்’ என்னுமிடத்தில் இது அமைந்துள்ளது. 65 ரிக்டேர் நில நடுக்கத்தை யும் 10 மீட்டர் உயர கடல் அலைகளையும் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த வைப்பகத்தில் இவற்றை எல்லாம் மீறி ‘அணுக்கதிர் வீச்சு’ வெளியாகிக் கொண் டிருக்கிறது. அதாவது 1986இல் இரஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தில் வெளியாகி வளி மண்டலத்தில் கலந்த கதிர்வீச்சைவிட இரண்டரை மடங்கு அதிகமாக வெளி வந்து கொண்டிருப்பதாக உலகப் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் ஏடான ‘ஜியோ’ ஒளிப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தையே இந்த செய்தி அச்சுறுத்தியுள்ளது.

5) தீர்ந்து போய் விட்டது; எரிந்து முடிந்து விட்டது என்று சொல்லப்படுகிற அணுஉலை களில் பயன்படுத்தப்படும் எரி உருளை களிலும் ‘புளுட்டோனியம்’ என்ற கதிர்வீச்சு இருந்து கொண்டே இருக்கும். இது கட்டுப் படுத்தக் கூடியதுதான் என்றும், அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய புளுட்டோனியம் வகையில் (புளுட்டோனியம் 239) ஒரு கிராம் அளவில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு நம் உடலில் நுழைந்தால்கூட அது நுரையீரல், கல்லீரல், எலும்புகளில் சேர்ந்து புற்று நோயை வரவழைக்கும்.

6) அணுக்கழிவுகளை நிரந்தரமாக புதைக்கக் கூடிய வைப்பகம் - எவ்வாறு அமைய வேண்டும் என்பதை 2002இல் ஜெர்மானிய விஞ்ஞானிகள் அறிவித்தனர். இவர்கள் வகுத்த விதிமுறைகள்படி ஆபத்து இல்லாத வைப்பகம் அமைக்கக்கூடிய இடம் - உலகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. நிலத்துக்குக் கீழே உள்ள உலகின் அனைத்துப் பாறைகளையும் ஆய்வு செய்து முடித்தாகிவிட்டது. கடைசியாக நான்கு நிலத்தடி பாறைகள் இறுதி செய்யப்பட்டன. இருந்தாலும் இன்னமும் பொருத்தமான பாறை கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் சுவிஸ் நாட்டைச் சார்ந்த அணுப் பாதுகாப்பு ஆணையத்தைச் சார்ந்த மார்கஸ் புஸர்.

7) அமெரிக்காவில் இப்படி அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு எரிமலைப் பகுதியை 1987இல் தேர்வு செய்தார்கள். நெருப்பைக் கக்கும் சாம்பல் எரிமலைப் பகுதியில் கதிரியக்க வீச்சு ஆபத்துகள் இருக்காது என்று முடிவு செய்தார்கள். யுக்கா என்ற மலைத் தொடர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அமைக்கப் பட்ட பிறகு 600  நில நடுக்கங்கள் நடந்தன. நீரில் கதிர்வீச்சு ஊடுறுவுவது கண்டறியப் பட்டது. 1500 கோடி டாலரில் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் 2009 ஜூலையில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஆபத்து கருதி நிறுத்தப்பட்டது.

8) கூடங்குளத்துக்கும் இது பொருந்தும். 1998இல் கூடங்குளம் அருகே உள்ள கிராமங் களான ஆனைக் குளம், பாண்டிச்சேரி; 1998இல் திருநெல்வேலி, அபிஷேகப்பட்டி; 1999இல் திருப்பணிக்கரிசல் குளம்; 2001இல் சுரண்டை சுக்கலி நத்தம் ஆகிய ஊர்களில் சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

9) கதிர் இயக்கக் கழிவுகளின் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்தே இருக்கின்றன. ஆனால் வெளியே ஒப்புக் கொள்வது இல்லை. இதற்காக அவர்கள் தீட்டிய கற்பனைக்கே எட்டாத திட்டங்களை அறிந்து கொண் டாலே இந்த உண்மை புரியும். அணுக் கழிவைக் கலன்களில் அடைத்து விமானத் தில் ஏற்றி, வானிலிருந்து அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் வீசிவிடலாம் என்று திட்டமிட்டு 1956 முதல் இது விவாதிக்கப் பட்டு வருகிறது.

10) இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க விஞ்ஞானிகள் சூரியனுக்குள் புதைத்து விடலாம் என்று ஆலோசித்து, கூடுதல் செலவு கருதி இத்திட்டத்தை கைவிட்டனர்.

அணுக்கழிவு எவ்வளவு கொடூரமான மனித குலத்தை நாசமாக்கக் கூடியது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள்.

11) கிரிகோரி ஜேசிஸ்கோ என்ற அணுவியல் விஞ்ஞானி, இரண்டு ஆண்டுகாலம் அமெரிக்க மின் அணு மின்சார உற்பத்தி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் இருந்தவர். புக்குஷிமா விபத்தைத் தொடர்ந்து உலகம் முழுதும் அணுமின் உலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய காலத்தில் அந்த ஆபத்து தற்காலிகமானது. அணுமின் பாதுகாப் பானது என்று அணுதிட்டங்களை நியாயப் படுத்தியவர். இப்போது அனுபவ ரீதியாக அதன் ஆபத்துகளை உணர்ந்து பதவியி லிருந்து விலகி, காற்றாலை மின் உற்பத்திக் கான கருவிகளை தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவியிருக்கிறார். ‘கொடூரமான அணுமின் ரியாக்டரின் ஒப்புதல் வாக்கு மூலம்’ (Confession of a Rogue Nuclear reactor) என்ற நூலை எழுதியிருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், அணு மின் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கி யிருப்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நீட், இந்தி, வடவர் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, மதவெறித் திணிப்போடு என்று தமிழர்கள் மீது பல சுமைகளைத் திணிக்கும் மோடி ஆட்சி இப்போது அணுக்கழிவுகளையும் திணிக்கத் திட்டமிடுகிறது, என்றார் விடுதலை இராசேந்திரன். 

Pin It