கங்கை நதிப் பகுதியில் மணல் எடுப்பதை தடுக்கக் கோரி 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சாமி நிகமானந்த் உயிரிழந்தார். லோக்பால் மசோதாவுக்காக பாபா ராம்தேவ் அரசியல் சர்க்கஸில் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த நிலையில் சுற்றுச்சூழல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்த இந்த பாபா, பெரிதாக கவனிக்கப்படாமலேயே உயிரிழந்து போனார்.

2011 பிப்ரவரி மாதம் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நிகமானந்த் (36), ஜூன் 13ந் தேதி உயிரிழந்தார். ஆனால் இது பாபா ராம்தேவின் சர்க்கஸ் அளவுக்கு ஊடகங்களையோ, தேசப்பற்றாளர்களையோ கொஞ்சம்கூட பாதிக்கவில்லை. பாபா ராம்தேவுக்கு ஆதரவாகத் திரண்ட இந்துத்துவ அமைப்புகள், நிகமானந்த் பின்னால் அணி சேரவில்லை. மேலும் அவர் எதிர்த்துப் போராடிய உத்தராகண்ட் அரசு ஆட்சியில் இருப்பதே இந்து தர்மத்தை கட்டிக்காக்கும் பா.ஜ.க. அரசுதான்! அரசியல் என்று வந்துவிட்டால், இயற்கை அழிப்பதிலும் மக்கள் சொத்தை சுரண்டுவதிலும் மட்டும்தான் கட்சிகள் வேறுபாடின்றி ஆர்வம் காட்டுகின்றன என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. அது இந்துத்துவ கட்சியாக இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி. இந்து தர்மத்தை கட்டிக்காக்க முயற்சிப்பதாகக் கூறும் பா.ஜ.க, சங்க பரிவாரங்கள் அவர்கள் மதிப்பதாகக் கூறும் சாமியார்கள், புனித நதிகள் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படுவதற்கு முன் 1970இல் மிசார்பூர், அஜீத்பூர் கிராமங்களில் கல் உடைப்படுவதற்கான ஐந்து பகுதிகளை அறிவித்தது. இதையடுத்து கங்கை நதிக்கரையில் கும்பமேளா நடக்கும் பகுதியில் மணல், கல்உடைப்பு நிகழ ஆரம்பித்தது. 2002இல் உத்தராகண்ட் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு நிறுவனமான கார்வால் மண்டல் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு இந்தப் பகுதிகளை மாநில அரசு ஒதுக்கியது. ஆனால் 1997ஆம் ஆண்டிலேயே இமாலய கல்உடைப்பு தனியார் நிறுவனம் (எச்.எஸ்.சி.பி.எல்) அங்கு கல்உடைக்க ஆரம்பித்துவிட்டது. இது மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனம். தனது நவீன கருவிகளைக் கொண்டு நதிக்கரையில் இருந்த கற்கள், மணலை எடுக்க ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக தனியார் காண்ட்ராக்டர்கள் சட்டவிரோதமாக மணலை அள்ள ஆரம்பித்தனர். "ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், டிராலிகள், அகழ்வு கருவிகள் நதிக்கரையைச் சூறையாடின. அரசியல்வாதிகள், நிர்வாகம், கல்உடைப்பு அதிபர்கள் இடையிலான தொடர்பு வலுவாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் கண் முன்னாலேயே பல தீவுப்பகுதிகள் அழிந்துவிட்டன" என்கிறார் மாத்ரி சதன் ஆசிரமத்தின் சிவனந்த சரஸ்வதி. மிசார்பூர், அஜீத்பூரில் கல்உடைக்கப்படும் இடத்துக்கு அருகில்தான் இவர்களது ஆசிரமம் உள்ளது.

கங்கை நதிக்கு ஏற்படும் சீரழிவைப் பார்த்த இந்த ஆசிரமம் மணல் அள்ளுதல், கல்உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தது. 1998 மார்ச் மாதமே இந்த போராட்டம் தொடங்கிவிட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா அந்த ஆண்டு நடந்தது. அப்போது தனது ஆசிரமத்தினருடன் ஆசிரமத்தை நிறுவிய சாமி நிகமானந்த் கால வரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அப்போது கல்உடைப்புக்கு தடை விதித்த அரசு, கும்பமேளா முடிந்தவுடன் கல்உடைப்பு, மணல் அள்ளுவதற்கு மீண்டும் அனுமதி அளித்தது.

சாமியார்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு முறை அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும்போதும் கல்உடைப்பு நிறுத்தப்படும். ஆனால் எச்.எஸ்.சி.பி.எல்லின் செல்வாக்கு மிக்க அதிபர்கள் மீண்டும் கல் உடைப்பை தொடங்குவார்கள். இது தொடர்கதையாகி இருந்தது. இதில்கவனிக்க வேண்டிய முக்கியமான முரண்பாடு, எச்.எஸ்.சி.பி.எல்லின் அதிபர் பூமேஷ் குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான உறுப்பினர். ஆளும் பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ§க்கும் உள்ள தொடர்பு மிகவும் வெளிப்படையான ஒன்று என்பதுதான்.

2009ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இரு நபர் குழுவை அனுப்பி இந்தப் பகுதியை பார்வையிட்டது. மாநில அரசிடம் எந்த ஒப்பந்தமும் இட்டுக்கொள்ளாமல், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியும் பெறாமல் கல்உடைப்பு நடைபெறுவதாக அந்தக் குழு கண்டறிந்தது. நிகமானந்த் இறந்த பிறகு ஆக்ரோஷமாக பேசிய முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கல்உடைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அப்போது துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு மகா கும்ப மேளா நடந்தபோது, இந்தப் பிரச்சினை மீண்டும் மோசமடைந்தது. சாமி நிகமானந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒருபுறம் போராட்டங்கள் அதிகரிக்க, மற்றொருபுறம் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கல்உடைப்பு, மணல் அள்ளுதலுக்கு மாநில அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. எச்.எஸ்.சி.பி.எல். உயர் நீதிமன்றத்தை அணுக, அரசு உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நீதிமன்ற தடையால் வேதனைக்குள்ளான நிகமானந்த், பிப்ரவரி 19ந் தேதி காலவரையறை அற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கினார். அவர் தொடர்ச்சியாக உணவு எடுக்க மறுத்ததால், அவரை ஹரித்வார் மாவட்ட மருத்துவமனையில் காவல்துறை ஏப்ரல் 27ந் தேதி சேர்த்தது. அங்கிருந்து கோமா நிலையில் டேராடூன் ஜாலி கிராண்ட் பகுதியிலுள்ள இமாலய மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனைக்கு மே 2ந் தேதி மாற்றப்பட்ட நிகமானந்த், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். ஒரு சில நாள்களிலேயே மூளை இறப்பை சந்தித்த அவர், ஜூன் 13ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை அடுத்து மத்திய அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நிகமானந்தின் இறப்பில் ஊழல் அதிகாரிகள், அரசியல் வாதிகள், மணல் மாஃபியாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அந்த மடத்தின் சிவானந்த் குற்றஞ்சாட்டுகிறார். இடையில் அனைத்து கல்உடைப்பு, மணல் அள்ளும் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று மே 26ந் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டும் எதுவும் மாறவில்லை.

மாநில அரசின் அலட்சியம் இந்தப் பகுதியின் சூழலியலைக் கடுமையாகச் சீர்குலைத்துவிட்டது. இப்பகுதி கடுமையான மண்ணரிப்புக்கு உள்ளாகி வருகிறது. "அஜீத்பூரில் உள்ள எங்கள் சுடுகாடு கடந்த ஆறு, ஏழு வருடங்களில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது" என்கிறார் பஞ்சேரியில் உள்ள அதுல் சௌகான். கங்கை நதியில் மணல் அள்ளுவது, நதிப்படுகையில் குழிகளை உருவாக்கி, சுற்றுப் பகுதியில் மண்ணரிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வயல்கள் அழிந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீரும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. "ஐந்து ஆண்டுகளுக்கு முன் 4.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர், இப்போது 9 மீட்டருக்கும் கீழேதான் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியின் விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது. நிலம் வளத்தை இழந்துவிட்டது. கரும்பு மட்டும்தான் பயிரிட முடிகிறது" என்கிறார் சுல்தான்பூர் கிராமத்தின் ஸாபர் பாரதி.

சாமி நிகமானந்துடன் சமூக ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் வெளிப்படுத்திய அக்கறைகள், கல்உடைப்பு நிறுவன அதிபர்களின் செல்வாக்கால் எந்த மாற்றத்தையும் காணவில்லை. மாநில அரசு இட்டுள்ள உத்தரவுகள் சாமி நிகமானந்தையும் காப்பாற்றவில்லை, நதியின் சூழலியலையும் காப்பாற்றவில்லை. ஏனென்றால் இரண்டும் ஏற்கெனவே அழிந்துவிட்டன.

Pin It