தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் இயங்கும் M/s Kings India Chemicals Corporation Ltd என்ற தனியார் தொழிற்சாலை, அந்த ஆலையின் வளாகத்திலேயே புதிதாக சாராய ஆலை ஒன்று அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பாதிப்புக்கு உள்ளாகும் உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, கடந்த ஏப்ரல்-9, 2010 அன்று, Kings ஆலையின் வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் இயங்கும் M/s Kings India Chemicals Corporation Ltd என்ற தனியார் தொழிற்சாலை, அந்த ஆலையின் வளாகத்திலேயே புதிதாக சாராய ஆலை ஒன்று அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பாதிப்புக்கு உள்ளாகும் உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, கடந்த ஏப்ரல்-9, 2010 அன்று, Kings ஆலையின் வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம், ஆலையின் கழிவு நீரால் வரும் ஆபத்து மற்றும் நீராதரங்கள் மாசடையும் வாய்ப்பு ஆகியவற்றை காரணங்காட்டி உள்ளூர் மக்கள் இந்த சாராய ஆலை, வடசேரியில் வருவதை எதிர்த்துக் கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, Kings ஆலையின் வளாகத்திலேயே நடத்துவது எந்த விதத்திலும் சரியில்லை என்றும், அப்படி நடந்தால் வெளியாட்கள் மூலம் வன்முறை நடக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறி, 300க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், கருத்துக் கேட்புக் கூட்டத்தை வேறிடத்திற்கு மாற்றச் சொல்லி, மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும், இது தொடர்பான மற்ற அரசுத் துறைகளிடமும் எழுத்துப் பூர்வமான கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இவற்றுக்கு செவி சாய்க்காமல் மாவட்ட நிர்வாகம், Kings ஆலையின் வளாகத்திலேயே பொது விசாரணையை ஏற்பாடு செய்தது.
வடசேரி கிராம மக்கள் பயந்தது போலவே, ஏப்ரல்-9, 2010 அன்று,ஆயுதங்களுடன் வந்திருந்த வெளியாட்கள், உள்ளூர் மக்களை கடுமையாகத் தாக்கினர்.இதனால், உள்ளூர் மக்களில் பலர், பலத்த காயமடைந்தனர். கிராம மக்கள் முறையிட்ட பிறகும், அங்கிருந்த காவல் அதிகாரிகள், வெளியாட்கள் வருவதை தடுக்கவோ, வன்முறையை அடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் மீது தடியடி (லத்தி சார்ஜ் ) நடத்தினர். பெண்கள் கூட கடுமையாகத் தாக்கப்பட்டனர். கண்டனத்துக்குரிய வகையில், மனித உரிமைகள் மீறப் பட்டிருக்கின்றன.
சமீப காலமாக, சுற்றுச் சூழல் தொடர்பான பொது விசாரணைக் கூட்டங்களில், பாதிக்கப்படும் மக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறமுடியாத வகையில், கம்பெனிகள் வெளியாட்களைக் கொண்டு வந்து மக்களை அடக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பின்ணணியில், ஏப்ரல்-9, 2010 அன்று வடசேரியில் நடந்த சம்பவங்கள் பற்றிய உண்மையான தன்மையை அறிய PUCL-உண்மை அறியும் குழு கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வடசேரி சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்களிடமும், பெண்கள் மற்றும் முதியோர்களிடமும், குறிப்பாக பஞ்சாயத்துத் தலைவர். திரு. இன்ப மூர்த்தி, துணைப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தது.
இந்த உண்மை அறியும் குழுவில் கீழ் கண்டோர் இடம் பெற்றிருந்தனர்:
முனைவர். வீ.சுரேஷ், வழக்கறிஞர் மற்றும் தலைவர்,சென்னை, PUCL-தமிழ்நாடு
ச.பாலமுருகன், வழக்கறிஞர் மற்றும் பொதுச் செயலாளர், பவானி, PUCL-தமிழ்நாடு
பேராசியர். கோச்சடை, சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
எஸ். கிருஷ்ணன்,வழக்கறிஞர், சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
ஸ்வேதா நாராயணன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
தஞ்சாவூர் மாவட்ட SP, டாக்டர். செந்தில் வேலனையும், DRO. திரு. கருணாகருனையும் சந்திக்க PUCL-உண்மை அறியும் குழு முயற்சி செய்தது. ஆனால், SP, தஞ்சாவூரில் இல்லாத காரணத்தினாலும், DRO, மீட்டிங்கில் இருந்த காரணத்தினாலும், இருவரையுமே அன்று சந்திக்க முடியவில்லை. மீண்டும் மே.3 ஆம் தேதி, உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றிருந்த எஸ். கிருஷ்ணன்,வழக்கறிஞர், அதிகாரிகளைச் சந்திக்க முயற்சி செய்தும், அன்றும் அவர்களைப் பார்க்க முடியவில்லை. மின்னஞ்சல் மூலமாகவும், தொலை நகல் மூலமாகவும், SP க்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
இந்த சூழலில், PUCL-உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அவை:
பொது விசாரணை நடைபெறும் இடத்தை வேண்டுமென்றே மாற்றாமல் இருந்தது- Part II Stage (3) of the EIA (Environment Impact Assessment) Notification, 2006 மற்றும் அதன் பிற்சேர்க்கை IV ஆகியவை, தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின், பொது விசாரணை நடை பெறும் இடம், நேரம் ஆகியவற்றை மாற்ற இடம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும், வெளியாட்கள் மூலம் வன்முறை நடக்கும் அபாயம் இருப்பதைக் காரணங்காட்டி, பொது விசாரணை நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்று வடசேரி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தும், அதற்கு எந்த பலனும் இல்லை. பாதிக்கப்படும் மக்களின் கோரிக்கையை வேண்டுமென்றேதான் அதிகாரிகள் நிராகரித்திருக்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
அதிகாரிகள், பாரபட்சமற்ற, வெளிப்படையான வகையில் சட்டத்தை செயல்படுத்தாமல், சட்ட விரோதமாக, ஒரு சார்பாகவும், வேண்டுமென்றேவும் செயல்பட்டிருக்கிறார்கள்- பொது விசாரணையின் இடத்தை மாற்றாமல் இருந்தது, வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், மக்கள் சொல்லியும் DRO.கருணாகரன் , SP. டாக்டர். செந்தில் வேலன், DIG திருஞானம் மற்றும் ADSP. ராஜேந்திரன் மற்றும் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் DSPக்கள், வன்முறையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மேலும் மக்கள் மீதே, தடியடி நடத்தக் காரணமாக இருந்தது- இதற்கெல்லாம் காரணம் M/s. Kings கம்பெனி, முன்னால் மத்திய அமைச்சரும், மக்களவையின் தற்போதைய உறுப்பினருமான T.R.பாலுவின் மகன் ராஜ்குமாருக்குச் சொந்தமானது என்பதே. நமக்குக் கிடைத்துள்ள வீடியோ ஆதாரங்கள், SP. செந்தில் வேலன் முன்னின்று தடியடியை நடத்தியதை நிரூபிக்கின்றன. மேலும் பொது வாழ்க்கையிலிருக்கும் வடசேரியின் முக்கிய மனிதர்களான ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். அதிகாரிகள் அத்தனை பேரும், வேண்டுமென்றே மனித உரிமைகளை மீறி இருப்பதால், Protection of Human Rights Act மற்றும் உள்ள சட்டங்களின் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழியுள்ளது.
அதிகாரிகள் சரியான நேரத்திற்கு, சரியான முறையில் செயல்படாமல் இருந்தது அரசியல் காரணங்களுக்காவேயன்றி சட்ட காரணங்களுக்காக அல்ல- ஏப்ரல்-9, 2010 அன்று பொது விசாரணை நடந்த இடத்திற்கு வந்த SP. டாக்டர். செந்தில் வேலன், பொது மக்கள், வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிறகு, நண்பகலில்தான் PSG திருமண மண்டபத்திற்கு சென்று அங்கிருந்து ஆயுதம் ஏந்தியவர்கள், பொது விசாரணை நடை பெறும் இடத்திற்கு செல்லும் ரோட்டில் வராதவாறு காவலர்களை நிறுத்தினார். ஆனால், அந்த வெளியாட்கள், வயல் வழியாக வருகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் முறையிட்ட பிறகும், அதைத் தடுக்க, SP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூரைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் திருவள்ளுவன் ஆகியோர் வெளியாட்களால் பீர் பாட்டில்களாலும், அரிவாளாலும் தாக்கப்பட்டதை காவல்துறை தடுக்கவுமில்லை, தாக்கியவர்கள் மீது FIR பைல் செய்யவுமில்லை, தாக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யவுமில்லை.இந்த அளவுக்கு வேண்டுமென்றே, மாவட்டக் காவல்துறை செயல்படாமல் இருந்ததை PUCL வன்மையாகக் கண்டிக்கிறது. IG.திருஞானம் மற்றும் SP. செந்தில் வேலன் ஆகியோர் ஒருசார்பாக செயல் பட்டது அரசியல் காரணங்களுக்காவே என்று இந்த உண்மை அறியும் குழு நம்புகிறது.
தடியடி நடத்துவதற்கான விதிமுறைகளோ மற்ற சட்ட வழி முறைகளோ பின்பற்றப் படவில்லை- காவல்துறை தடியடி நடத்துவதற்கு முன் பொது மக்களைக் கலைந்து போகச் சொல்லி எந்த அறிவிப்பும் செய்யவில்லை; அறிவிப்பு செய்யக் காவல்துறையிடம் எந்த ஒலிப் பெருக்கியுமில்லை; அங்கே மக்கள் கூடியிருந்தது சட்ட விரோதமானது என்றும் அறிவிக்கவுமில்லை. இப்படி செய்திருந்தால், பெண்களும், முதியோரும் கலைந்து போக வாய்ப்பு இருந்திருக்கும். மாறாக, இவர்களும் காவல் துறையால் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.வீடியோ ஆதாரங்களின்படி, தாக்கியவர்களையும், விதிகளின்படி, முழங்காலுக்கு கீழே தாக்காமல், தலையிலும், பின்புறமும் தாக்கியிருப்பது, நிச்சயம் கூட்டத்தைக் கலைப்பது மட்டுமே காவல்துறையின் நோக்கமில்லை என்பதை நிரூபிக்கிறது. கலைச்செல்வி(க/பெ. ராஜேந்திரன், வயது. 45), ஏப்ரல்-9, 2010 சம்பவத்தின் போது, காவலர் ஒருவரின் லத்தியால் தாக்கப்பட்டதால், அவருடைய வலது கண் பார்வை பறிபோய்விடும் அபாயம் இருப்பதாக அரவிந்தர் கண் மருத்துவமனை கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு கலைச்செல்விக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்,அவரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் PUCL கோருகிறது.
கம்பெனிக்கு எதிராக இருந்த கடையிலிருக்கும் பொருட்களை காவலர்கள் காசு கொடுக்காமல் அபகரித்துச் சென்றுள்ளனர்-சிப்ஸ்,பழங்கள், சிகரெட் மற்றுமுள்ள பொருட்களை பணியிலிருந்த காவலர்கள் பணமே தராமல் அபகரித்துச் சென்றிருக்கின்றனர்.இந்தக் கடையின் உரிமையாளரான, குண்டன் வீடு சுப்பிரமணி என்பவருக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்களே இப்படி செயல்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது, மிரட்டல், திருட்டு ஆகிய காரணங்களுக்காக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென PUCL வலியுறுத்துகிறது.
பொது மக்கள், RDO மற்றும் அய்யாவு என்பவரின் கார்களை மறித்து, அவற்றிற்கு சேதம் விளைவித்தாகச் சொல்லப் படுவது குறித்து பாரபட்சமற்ற ஒரு விசாரணை தேவை- வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருப்பதை பொது மக்கள், SP யிடம் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டிய பிறகும், உள்ளூரைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் திருவள்ளுவன் ஆகியோர் வெளியாட்களால் பீர் பாட்டில்களாலும், அரிவாளாலும் தாக்கப்பட்டதை காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மேற்குறிப்பிட்ட நபர்களின் கார்களை மறித்தாக ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவற்றின் கண்ணாடி உடைந்தது மற்றுமுள்ள சேதங்களுக்கு தாங்கள் காரணமல்ல என்றும், வேண்டுமென்றே வெளியாட்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்றும், காரில் இருந்தவர்கள் காயப்படமால் பார்த்துக் கொண்டதே தாங்கள்தான் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கார்களை மறித்தது சரியில்லை என்றாலும், இப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும், இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்புமில்லை.
இந்தப் பிண்ணனியில், PUCL-ன் வேண்டுகோள்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article. 21படி, மாசடையாத, சுகாதராமான நீரும், ஆரோக்கியமான சுற்றுச் சூழலும், வாழுவற்கான உரிமையின் அங்கங்கள் என்று உச்ச நீதி மன்றம் கூறியிருப்பதின்ப்டி, இவற்றை பெறுவதற்கான முயற்சியாக, அடிப்படையில் வேளாண்மை தொழிலாகக் கொண்ட வடசேரி ஊர் மக்கள், பொது விசாரணையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் கூற உரிமை இருக்கிறது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும், வடசேரி மக்கள் பங்கேற்கும் வகையில், வேறொரு பொதுவான இடத்தில் பொது விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், வன்முறையைக் கட்டுப்படுத்தாததுடன், பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது, அப்படி நடத்தியபோது எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாதது, மற்றும் EIA விற்கான பொது விசாரணையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படக்கூடிய தனிநபர் கமிஷன் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால், EIA விற்காக நடத்தப்படும் பொது விசாரணைகள் கேலிகூத்தாகிவிடும்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காமல், அவற்றைப் பறிக்கும் வகையில் காவல்துறை செயல்படுவது சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. வடசேரியில், காவல்துறை நடந்து கொண்ட விதம் பற்றி அரசு விசாரித்து, சட்டத்தை மீறி, காரணமில்லாமல், தடியடி நடத்திய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென PUCL வலியுறுத்துகிறது.காவல்துறை மக்கள் உரிமைகளைக் காக்க உள்ளதேயன்றி, தனியாரின் நலன்களைக் பாதுகாக்க அல்ல என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குண்டன் வீடு சுப்பிரமணியின் கடையில் சிப்ஸ்,பழங்கள், சிகரெட் மற்றுமுள்ள பொருட்களை பனியிலிருந்த காவலர்கள் பணமே தராமல் அபகரித்துச் சென்றதை அரசு விசாரித்து, அவர்கள் மீது த்குந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கலைச்செல்வி(க/பெ. ராஜேந்திரன், வயது. 45), ஏப்ரல்-9, 2010, காவலர் ஒருவரின் லத்தியால் தாக்கப்பட்டதால், அவருடைய வலது கண் பார்வை பறிபோய்விடும் அபாயம் இருப்பதாக அரவிந்தர் கண் மருத்துவமனை கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு கலைச்செல்விக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்,அவரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் PUCL கோருகிறது.
முனைவர். வீ.சுரேஷ், வழக்கறிஞர் மற்றும் தலைவர்,சென்னை, PUCL-தமிழ்நாடு
ச.பாலமுருகன், வழக்கறிஞர் மற்றும் பொதுச் செயலாளர், பவானி, PUCL-தமிழ்நாடு
பேராசியர். கோச்சடை, சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
எஸ். கிருஷ்ணன்,வழக்கறிஞர், சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
ஸ்வேதா நாராயணன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
சென்னை, 11, மே, 2010.
(9 ஏப். 2010/ வடசேரி பொது விசாரணையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து PUCL உண்மையறியும் குழுவின் அறிக்கைச் சுருக்கம்)