'பெண்கள் நலம் சார்ந்தது என்ற நல்ல நோக்கத்தில்தான் எதிர்க்கட்சிகளும் மகளிர் மசோதாவை நிறைவேற்றியுள்ளன. ஆனால், சில கட்சிகள் பெண்களை அரசியல் பகடைக்காய்களாய்ப் பயன்படுத்துவார்கள் என்பது திண்ணம். பெயரளவில் பெண்களை வைத்து விட்டு அவர்களின் வீட்டு ஆண்கள்தான் அதிகாரம் செலுத்துவர். இப்படிப்பட்ட சூழலில் இம்மசோதாவில் பெண்கள் அடையும் பலன் என்ன?' (தினமணி வாசகர் கடிதம், 17.3.10, மு.விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி).

 women_300உண்மையில் இந்தக் கேள்வி பெரும்பாலான சாமான்யர்களின் மனதில் துருத்திக் கொண்டிருக்கின்றது. சாமான்யர்களின் கேள்வி என்பதனாலேயே சாதாரண கேள்வியாக எதுவும் ஆகிவிடாது. அது போல், இதுவும் முக்கியமான கேள்விதான்.

 பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் ஆண்கள் மட்டுமே ஆண்டு கொண்டிருப்பார்கள். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 90% இருக்கின்றது. பெண் சிசுக் கொலைகளும், பாலியல் கொலைகளும், வரதட்சணைக் கொலைகளும் இன்னபிற காரணங்களுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் (பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும்), தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ந்து கொண்டிருந்தால் மக்கள் தொகையில் ஆண்களின் விகித்தாச்சாரமும் சட்டமன்றங்களில் அவர்களது பிரதிநிதித்துவமும் சரிசமமாகிவிடும். நிற்க.

 பெயரளவில் பெண்களை வைத்துவிட்டு ஆண்களே ஆள்வார்கள் என்பதற்காக பெண்களுக்கு அதிகாரமளிக்காமலேயே இருந்துவிடலாமா? அப்படி இருப்பது ஆண்கள் மட்டுமே நேரடியாக அதிகாரம் செலுத்துவதைத் தொடரச் செய்யுமே ஒழிய பெண்களின் அதிகாரமற்ற நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. எனவே, இந்த மசோதாவே பெண்களின் அந்த நிலையை மாற்றுவதற்கான ஒரு முயற்சிதான். பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கின்ற நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான். இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்ன நிலை நீடிக்குமோ அதே நிலைதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் தொடரும் என்பது சரியான பார்வை அல்ல.    வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதே ஒரு பெரிய மாற்றம்தான்.

 மேலும், இதே போன்ற நிலைமைதான் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் இருந்தது. அவர்கள் ஏற்கனவே மேல்சாதி பண்ணையார்களின் பிடியில் இருந்ததாலும், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளக் கூடிய அளவு பொருளாதார வசதி அற்ற ஏழைகளாக இருந்ததாலும் பண்ணையார்களின் தயவிலேயே அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது. அதாவது, பண்ணையார்களே மறைமுகமாக தலித்துகள் மூலமாகவும், பழங்குடியினர் மூலமாகவும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், பின்னர் காலப்போக்கில் அப்பிரிவினர் மத்தியிலிருந்து 'சுயேச்சையான' அரசியல் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். இதுதான் யதார்த்தம். இதுதான் பெண்கள் விஷயத்திலும் நடக்கப் போகின்றது. ஏற்கனவே இடஒதுக்கீடு இல்லாத நிலையிலேயே பல பெண் தலைவர்கள் உருவாகி வளர்ந்திருப்பதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.

 மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. '..உபி, பீகார் போன்ற மாநிலங்களில் கூட இப்போது கணவன்மார்கள் தங்களை பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதை சர்வசாதாரணமாகக் காணலாம்' (அக்சயா முகுல், தி டைம்ஸ் ஆப் இந்தியா, மார்ச் 13, 2010). இது போன்ற காட்சிகள் தமிழ்நாட்டிலும் அங்கங்கே காணக் கிடைக்கின்றன.

 உண்மையில் இது ஒரு சாதாரண விஷயம். பெண் தன்னை இன்னாரின் பெண் அல்லது மனைவி அல்லது சகோதரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வது எவ்வளவு சாதரணமோ அவ்வளவு சாதாரணம். ஆனால் இதை ஒரு அசாதாரண நிகழ்வு போல் சொல்ல வேண்டியிருப்பதன் காரணம் கலாச்சார மதிப்பீடுகள்தான். கணவனை விட மனைவி உயர்ந்த நிலையில் இருப்பதை ஆணாதிக்க க‌லாச்சாரமும், ஆணாதிக்க மனமும் அனுமதிப்பதில்லை. பெண் பார்க்கும் போதே மாப்பிள்ளையை விட குறைவாகப் படித்த பெண், உயரம் குறைவாக உள்ள பெண் என்று பலவகையிலும் பெண் ஆணைவிட குறைவானவளாக இருக்க வேண்டும் என்று பார்ப்பவர்கள்தானே நாம். ஒரேயொரு விதிவிலக்கு இருக்கின்றது, பொருட்செல்வம். பெண் மாப்பிள்ளையைவிட செல்வம் மிக்கவளாக இருந்தால் அந்தப் பெண் வேண்டி விரும்பிக் கட்டிக் கொள்ளப்படுவாள். அவளுடைய சொத்து மாப்பிள்ளையின் சொத்தாக ஆகிவிடுமல்லவா? அதுதானே நமது கலாச்சாரம்?

 பெண்களின் பெயரில் ஆண்கள்தான் அதிகாரம் செலுத்துவார்கள் என்கின்ற வாதம் நமது கலாச்சார சட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. எனினும், பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான். கலெக்டராகவே ஆனாலும், மந்திரியாகவே ஆனாலும், அதிபராகவே ஆனாலும் பெண் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டும். பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்கின்ற இந்தக் கலாச்சாரம் நீடிக்கின்ற வரையில் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் வேலைக்குச் சென்றாலும், சட்டமன்றங்களுக்குச் சென்றாலும் நீடிக்கத்தான் செய்யும் என்பது இந்த வாதத்தின் சாரம்.
 நிலைமை அப்படித்தான் இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆண் என்றால் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமல்ல, மற்ற ஆண்களிடமும் அடக்க ஒடுக்கமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். இந்தக் கலாச்சார விழுமியம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாமல் மறுஉற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. மதம், கல்வி, ஊடகங்கள் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. (அதிலும் நமது சூப்பர் ஸ்டார்கள் பேசுகின்ற பஞ்ச் டயலாக்குகள் பொறுத்துக் கொள்ளவே முடியாத கலாச்சார வன்முறையாகும்).
 நமது நாடு என்றில்லை. மற்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை.

 "உள்ளம் குதூகலிக்கும் எண்ணிக்கையில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ருவாண்டாவின் பெண் எம்பிக்கள் (56.3%!) பாலினப் பிரச்சனைகளில் போதுமான அளவு கூடுதலாக எதையும் செய்து விடவில்லை" என்று விமரிசிக்கப்படுகிறார்கள். 2007 ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தின் தாக்கம்: ருவாண்டா அனுபவம்' என்கிற ஆய்வில், அதன் ஆசிரியர்கள் டேவ்லின் மற்றும் எல்ஜியே ஆகியோர் கடந்த ஏழு வருடங்களில் அவர்கள் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரேயொரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள் என்கின்றனர்; அதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம், பாலியல் சித்ரவதை, அன்னையர் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்பட பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தகைய பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மட்டும் போதுமானதில்லை என்பது தெளிவு. அதனினும் பெரிய பெண்களின் மக்கள்தொகையின் வாழ்நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் உரக்கப் பேச வேண்டும்.

 "பாகிஸ்தானைவிடவும் இது வெளிப்படையாக வேறு எங்கும் இல்லை. இந்த நாட்டில் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் பிரதமராக இருந்தார். அதிகாரத்தில் இருந்தபோது பெனாசிர் புட்டோவால் ஹீடூட் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் எதையும் மாற்ற முடியவில்லை. வல்லாங்கிற்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு ஆதரவாக நான்கு ஆண் சாட்சிகளையும் அவர்களே கொண்டு வர வேண்டும், இல்லை எனில்  அவர்கள் 'விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக' கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்', என்பதும் அதில் அடங்கும். 2000த்தில் சட்டமன்றத்தில் 17.5% இடங்களை நாடாளுமன்றம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்தது; 342 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 60 இடங்கள் பெண்களுக்கு. எனினும், 2009ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்கிற்காக அரசாங்கம் 'நிஜாம் இ அடில் ஷரியா' என்கின்ற சட்டத்தை நிறைவேற்றியது; பெண்கள் பள்ளிக்குச் செல்வதையும், வேலைக்குச் செல்வதையும் தடுப்பது அச்சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களில் சிலவாகும். எனினும், செர்ரி ரஹ்மான் தவிர வேறு எந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரும் அதை எதிர்க்க முன்வரவில்லை". (சுஹாசினி ஹைதர், தி ஹிந்து, 12.3.10). 
 
 lady_290பாகிஸ்தானைவிட இந்தியாவில் பெண்களின் நிலைமை பொதுவாகப் பரவாயில்லை என்றபோதும் பெண்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவதாலேயே பெண்களின் நிலைமை பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது இங்கேயும் உண்மைதான். ஒரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார்; பல பெண் அமைச்சர்கள் இருக்கின்றனர்; பெண் முதலமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். ஆனால் பெண்களின் பிரச்சனைகள் அதிகம் பெண்களின் நிலையிலிருந்து விவாதிக்கப்படுவதில்லை; மிகப் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த எந்த மாற்றமும் இல்லை. ஒரே மாதிரியான செயலைச் செய்கின்ற ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது தொடரத்தான் செய்கின்றது. வரதட்சிணைக் கொலைகள், மரியாதைக் கொலைகள், ஈவ்டீசிங் கொலைகள், பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், பெண் சிசுக் கொலைகள், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காகக் கடத்தப்படுவது உள்ளிட்ட ஏராளமான கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளும் கலாச்சார விழுமியங்கள், சட்டதிட்டங்கள் வேறு. (பொதுவாக இந்தியாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் தற்கொலைகளில் பெரும்பாலானவை கலாச்சார காரணங்களுக்காகத்தான் நடக்கின்றன என்பது கண்கூடு).

 இந்த இடத்தில் இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோனியோ கிராம்ஷியை நாம் நினைவுறுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 'ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வெறும் அகழியைத் தாண்டுவது போலத்தான். அதற்கப்பால் கலாச்சாரம் என்கின்ற கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன' என்பது அவரது கூற்று. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டமாக ஆவது என்பது வெறும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது போலத்தான். அதாவது வெறும் அகழியைத் தாண்டுவது போலத்தான். அகழியைத் தாண்டுவதே கோட்டையைக் கைப்பற்றுவதாக ஆகிவிடாது.

 இப்போது கோட்டையைக் கைப்பற்ற வேண்டிய வேலை பாக்கியிருக்கின்றது. அந்த வகையில் கலாச்சார தளத்தில் ஏற்கனவே பல அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அது பெருமளவு போதுமானதாக இல்லை. அதைப் பெருமளவு அதிகரிக்க வேண்டியிருக்கின்றது. ஆணுக்குப் பெண் கட்டுப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையான கலாச்சார விழுமியத்தை, கோட்டை கொத்தளத்தை உடைத்து நொறுக்கி து£ள்து£ளாக ஆக்க வேண்டியிருக்கின்றது. இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறியவும் வேண்டும். ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக பெண்களை உருவாக்குவதுடன் கூடவே இதைச் செய்ய வேண்டும். (அதே போல் பெண்ணுக்கு மட்டுமே என்று இதுநாள் வரை ஒதுக்கப்பட்டிருந்த சமையல், துணி துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளை ஆண்களும் செய்கின்ற கலாச்சாரத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும். அதாவது பெண்களுக்கான அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்). அப்போது பெண்கள் சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாகவும், செயல்படக் கூடியவர்களாகவும் பரிணாமம் கொள்வார்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்கிற செயல் தன் முழுபலனையும் அப்போதுதான் அடையும்.
 
பொதுவாகவே வெறும் அரசியல் நடவடிக்கைகள் மட்டுமே பொருளாதர, கலாச்சார தளங்களில் முழுமையான பலன்களை ஏற்படுத்தி விடுவதில்லை. எடுத்துக் காட்டாக, தீண்டாமை ஒரு குற்றம் என்று சட்டம் போட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சட்டம் போட்டவுடனேயே தீண்டாமை மறைந்து விட்டதா என்ன? சட்டத்தை நிறைவேற்ற வேண்டியவர்களே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். அது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் போட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அது இன்னும் பரவலாகத் தொடர்வது மட்டுமின்றி, அதை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளே அந்தக் குற்றங்களைச் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். அரசின் சட்டங்களை விட கலாச்சாரச் சட்டங்கள் வலுவானவையாக இருக்கின்றன என்பதுதான் இதன் பொருள். இந்தக் கலாச்சாரச் சட்டங்களை ஒழிக்காமல் அரசின் சட்டங்கள் எதிர்பார்க்கின்ற பலனை முழுமையாகத் தராது. அதற்காக எந்த பலனையும் தருவதே இல்லை என்கின்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். இந்தச் சட்டங்கள் போடப்பட்டிருப்பதால்தான் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றவர்கள் புகார் கொடுக்க முடிகின்றது. வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகின்றவர்கள் புகார் கொடுக்க முடிகின்றது. இந்தச் சட்டங்கள் இல்லை என்றால் அத்தகைய செயல்கள் எல்லாம் குற்றமாகவே கருதப்படாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
 
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்குகின்ற காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், அதை ஆதரிக்கின்ற வகுப்புவாத பாஜக-சிவசேனை போன்ற கட்சிகளும் கலாச்சார தளத்தில் உடைப்பை ஏற்படுத்த தங்களது அணிகளைக் களத்தில் இறக்கிவிடுவார்களா? குறிப்பாக, பெண் ஆணுக்கு அடிமை என்பதை தன்னுடைய தத்துவமாகக் கொண்டிருக்கின்ற பாஜக செய்யுமா? காங்கிரஸ் போன்ற கட்சிகள் கிட்டத்தட்ட கலாச்சார தளத்தில் செயல்படுவதே இல்லை. பாஜகவிற்கோ கலாச்சார தளம்தான் முதன்மையான தளம். மற்றதெல்லாம் அடுத்துதான். ஆனால், இருக்கும் பிற்போக்குக் கலாச்சாரத்தைக் கெட்டிப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.

 பாஜக இச்சட்டத்தை ஆதரிப்பதை பின்வருமாறுதான் விளங்கிக் கொள்ள முடியும். கலாச்சார தளத்தில் எந்த மாற்றமும் இல்லாதபோது பெண் எம்பியானால் என்ன, மந்திரியானால் என்ன, இதையும் நமது வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணமாக இருக்க வேண்டும். இப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கலாச்சாரப் பிரச்சனைகளில் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் இடதுசாரி முற்போக்கு சக்திகளை அவர்கள் ஏற்கனவே தங்களது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இந்த இயக்கங்களும், இதர ஜனநாயக எண்ணம் கொண்ட இயக்கங்களும் கலாச்சார தளத்தில் பெண் விடுதலைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது, அதைத் தீவிரப்படுத்தும்போது பாரதீயக் கலாச்சாரம் என்கின்ற பெயரில் அதுவும் அதன் தத்துவக் கூட்டாளிகளும் நிச்சயமாக எதிர்த்தாக்குதல் நடத்தாமல் இருக்கப் போவதில்லை.
   
 அரசியல் நடவடிக்கைகள் கலாச்சார, பொருளாதார விளைவுகளையும் உண்டாக்குகின்றன; கலாச்சார நடவடிக்கைகள் அரசியல், பொருளாதார விளைவுகளையும் உண்டாக்குகின்றன; பொருளாதார நடவடிக்கைகள் அரசியல், கலாச்சார விளைவுகளையும் உண்டாக்குகின்றன.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It