கீற்றில் தேட...

அப்போது கீற்றில் மேலும் சில பத்திரிக்கைகள் (புதிய போராளி, விடுதலை முழக்கம், உழைக்கும் மக்கள் விடுதலை) புதிதாகவும், இடையில் கீற்றிற்கு வராமல் இருந்த உங்கள் நூலகம், சிந்தனையாளன் இதழ்கள் மீண்டும் வர ஆரம்பித்திருந்த நேரம். வேறு சில இதழ்களின் ஆசிரியர்களும் தங்கள் பத்திரிக்கையை கீற்றில் இடம்பெறுவதற்குக் கேட்டிருந்தார்கள். அன்றாடம் கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. குறைந்தளவு ஊதியத்தில் வேலைக்கு வந்துகொண்டிருந்த ஒருவரும் திடீரென்று ஒரு நாள் நின்றுவிட்டார். கீற்று வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் பாஸ்கர், ப்ரியா இருவரும் அவரவர் சொந்த, அலுவலக வேலைகளில் அதிகமாக மாட்டிக் கொண்டு முன்புபோல் பங்களிக்க முடியாத‌ நிலையில் இருந்தனர். எனவே ஒட்டுமொத்த கீற்று பளுவும் என் தலையில் விழுந்திருந்தது.  

அலுவலக வேலை முடித்துவிட்டு தினமும் இரவு இரண்டு மணி நேரம், அலுவலகம் கிளம்புவதற்கு முன்பு காலை மூன்று மணி நேரம் கீற்றிற்காக‌ வேலை பார்க்க வேண்டியிருந்தது. 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதற்கு நேரம் கிடைத்தது. வேறு ஏதேனும் படிப்பதற்கோ, குடும்பத்துடன் செலவழிப்பதற்கோ நேரமின்றி கீற்று வேலை என்னை அழுத்திக் கொண்டிருந்தது. 

இந்த நிலையில்தான் கீற்று டெடிகேட்டட் சர்வர் பிரச்சினை வந்தது. நிச்சயம் அது பெரிய தொகை. எனது ஓய்வு நேரத்தையெல்லாம் கொடுத்து உழைப்பதுபோக, கையிலிருந்து ஒரு பெரிய தொகையையும்  செலவழிக்க விருப்பமில்லாமல் இருந்தது. வாசகர்களிடம் நிதியுதவி கேட்போம், வந்தால் தொடர்ந்து நடத்தலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்றுதான் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். கீற்று வராமல் நின்றுவிடுவது என்பது என்னுடைய உடலில் ஒரு பகுதி செயலிழந்து விடுவதுபோன்ற துயரமாக இருந்தாலும், இன்னொரு வகையில் ஒரு விடுதலையைப் போல உணர்ந்தேன். இனி நிறையப் படிக்கலாம், எழுத ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.

ஐந்து ஆண்டுகளாக கீற்று நடத்தியும் போதியளவு தொடர்புகளை நாங்கள் வளர்த்திருக்கவில்லை. (அதற்கான தேவையும் இதுவரை இருந்ததில்லை.) இதனால் இரண்டு லட்சம் ரூபாய் திரட்டுவது என்பது சிரமமான காரியமாகத் தோன்றியது. கீற்றில் நன்கொடை வேண்டி அறிவிப்பு வெளியிட்டோம். 

தொடக்கத்தில் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் எங்களது அறிவிப்பைப் பார்த்தவுடன் வந்த எதிர்வினைகள் உற்சாகமூட்டுவனவாக இருந்தன. கீற்றின் வாசகர் வட்டம் இவ்வளவு விரிந்தது என்பது அப்போதுதான் தெரியவந்தது. 

நிறைய பேர் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினர். மன்னார்குடி, துபாய், ஈரோடு, சுவிட்சர்லாந்து, குவைத், இராதாபுரம், மும்பை, ருவாண்டா, டெல்லி என உலகின் பல மூலைகளிலிருந்தும் நன்கொடை அனுப்புவதாக செய்திகள் வந்தன. 'நாங்கள் இருக்கிறோம், விடாமல் நடத்துங்கள்' என்ற ஆதரவுக்குரல்கள் தினமும் பெருகி வந்தன.

பணயுதவி செய்யக்கூடிய வசதியுடன் இல்லையென்றாலும், முஸ்லிம் சகோதரர்கள் காட்டிய அன்பும், ஆதரவும் அளப்பரியது. கவிஞர் அமீர் அப்பாஸ் ஒரு வாரம் இதற்காகவே சென்னை வந்து, பெரும் நிறுவனங்களிடம் விளம்பரங்கள் பெறுவதற்கும், நன்கொடைகள் வசூலிப்பதற்கும் என்னைக் கூட்டிக்கொண்டு, அலையோ அலை என அலைந்தார் (500 ரூபாய் வசூலானது). கீற்றிற்கு நிரந்தர விளம்பர வருவாய் ஈட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை பரூக் செய்து வருகிறார்.  மேலும் பல முஸ்லிம் நண்பர்கள் கைப்பேசியில் அழைத்து, 'ரம்ஜானுக்கு நிறைய செலவாகிவிட்டது. ஓரிரு மாதங்களில் கீற்றிற்கு நிச்சயம் செய்வேன்' என்று கூறினார்கள். சிறுபான்மையினருக்காக பொதுத்தளத்தில் குரல் கொடுக்கும் ஒரு இணையதளம் கீற்று என்ற மதிப்பு அவர்களிடம் இருந்ததை உணர முடிந்தது. 

கீற்றின் சக பயணிகளும் கீற்றிற்கு கை கொடுக்க முன்வந்தனர். மீனகம், குளோபல்தமிழ்நியூஸ், இனியொரு இணையதளக் குழுவினர் அவர்களது டெடிகேடட் சர்வரைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினர். கீற்றிற்கு ஒரு டெடிகேடட் சர்வர் என்பதுதான் நிரந்தரத் தீர்வு என்பதால் அன்போடு அதை மறுத்தேன். தோழர் வினவு தங்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்யும் தோழருடன் பேசச் செய்து, ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கச் சொன்னார். அந்திமழை தன்னுடைய இணையத்தின் முகப்பில் கீற்று அறிவிப்பினை வெளியிட்டு உதவியது. கீற்று மீது நம்பிக்கை கொண்ட - உண்மைத் தமிழன், அன்னாகண்ணன் உள்ளிட்ட ஏராளமான வலைப்பதிவர்கள் தங்களது வலைப்பக்கங்களில் கீற்று எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, நிதி திரட்டலுக்கு உதவினார்கள். 

இவ்வளவு பேர் கொடுத்தும் நன்கொடை வசூல் இன்னும் இரண்டு இலட்சத்தை எட்டவில்லை என்பதையும், இதுவரை நன்கொடை தராதவர்கள் விரைந்து கொடுத்து உதவ வேண்டும் என்ப்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

என்னைத் தொடர்பு கொண்ட பலருடன் பேசியதிலிருந்து, கீற்றில் வரும் பத்திரிக்கைகள், படைப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்து சில தவறான அனுமானங்களுடன் அவர்கள் இருந்தது தெரியவந்தது. அந்த அனுமானுங்களும், அதற்கான எனது பதில்களும்: 

1. கீற்றிற்கு வேலை செய்ய 5, 6 பேர் கொண்ட இருப்பார்கள். கீற்றிற்கு அலுவலகம் இருக்கும், வலுவான பொருளாதாரப் பின்னணி இருக்கும்.

எனது பதில்: கீற்றிற்கு என்று முழுநேர ஊழியர்கள் எவரும் இல்லை. ஏற்கனவே நியமித்த ஒரு சிலரும் சம்பளம் பத்தாமல், ஓரிரு மாதங்களில் நின்றுவிட்டனர். கீற்றிற்கு அலுவலகம் என்ன, தனி அறைகூட இல்லை. வீட்டில் எனது அம்மா, தம்பி தூங்கும் அறையில் இருக்கும் ஒரு மேஜையும், அதன் மேலிருக்கும் ஒரு மடிக்கணினியும்தான் கீற்றின் அலுவலகம். மாதாமாதம் ஆகும் செலவுகளை நான், பாஸ்கர், பிரபாகரன் பகிர்ந்து கொள்வதுதான் இதன் பொருளாதாரப் பின்னணி. 

2. கீற்றில் சிற்றிதழ்களை வெளியிட அதன் ஆசிரியர்கள் கீற்றிற்கு பணம் செலுத்துகிறார்கள்.

பதில்: இதுவரை எந்த சிற்றிதழ் ஆசிரியரிடமிருந்தும் ஒரு பைசா வாங்கியதில்லை. இலவச சேவையாகவே அவர்களது இதழ்களை கீற்று வலையேற்றம் செய்து வந்திருக்கிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டிய நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளதால், இனி மாதம் ரூ.100 வசூலிக்கலாம் என திட்டமிட்டிருக்கிறோம். 

3. கீற்று சிபிஎம் சார்பு தளமாக இருக்கிற‌து. தமிழ்த் தேசியவாதிகளின் கைப்பிடிக்குள் இருக்கிறது.

பதில்: இரண்டும் உண்மையல்ல. எல்லா அமைப்பினருக்கும் பொதுவான தளமாகவே கீற்று இருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம், உத்தப்புரம் பிரச்சினையின்போது இடதுசாரிகள் அதிகளவு கீற்றைப் பயன்படுத்தியதால், அது இடதுசாரிகளின் தளம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஈழப்பிரச்சினையை அடுத்து இப்போது அதிகளவில் தமிழ்த் தேசியவாதிகள் எழுதுவதால் தமிழ்த்தேசியவாதிகளின் கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. மாற்று இயக்கத்தினர் அனைவருக்குமாக‌ கீற்றின் வாசலைத் திறந்து வைத்திருக்கிறோம். யார் கீற்றை அதிகளவில் பயன்படுத்துகிறார்களோ அவர்களது தளமாக வெளியில் தெரிய வாய்ப்பிருக்கிறது. கீற்று எந்த அமைப்பினரது கருத்துக்களையும் நிராகரித்ததில்லை. நாளை பாபர் மசூதி பிரச்சினை மேலெழுந்தால், நிச்சயம் கீற்று சிறுபான்மையினரின் தளமாகத்தான் தோற்றமளிக்கும். 

என்னைத் தொடர்பு கொண்ட பெரும்பாலானவர்களிடம் கீற்று குறித்த நல்ல மதிப்பு இருந்தது. அவர்களது நியாயமான சில மதிப்பீடுகள் உற்சாகமளித்தன. 

1. கீற்று எப்போதும் ஒடுக்குமுறை, சுரண்டலுக்கு எதிரான தளமாக இருக்கிறது.

2. நட்பு கருதியோ, ஆதாயம் கருதியோ கீற்று செயல்படுவதில்லை. மாற்றுக்கருத்துகளுக்கு, எதிர்வினைகளுக்கு இடமளிக்கிறது. கீற்றின் நேர்மை மீது எங்களுக்கு சந்தேகமில்லை.

3.  அனைத்துவிதமான சிந்தனைகளையும் ஒரே இடத்தில் படிக்கவும், விவாதிக்கவுமான தளமாக கீற்று மட்டுமே இருக்கிறது. 

கீற்று நடத்திய கருத்தரங்குகள் பெரிய அளவில் கீற்றுக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்திருக்கின்றன. குறிப்பாக, 'நளினி விடுதலை ‍அரசியல் சிக்கலும், சட்ட சிக்கலும்', 'இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்',  'பெரியாருடன் ஒரு பயணம்' கருத்தரங்குகள் குறித்து என்னிடம் பலர் விதந்து பேசினார்கள். இருப்பினும், போதிய பொருளாதார பலம் இல்லாமல் இத்தகைய கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்துவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறோம்.

கீற்று செயல்பட ஆரம்பித்து இது ஆறாவது ஆண்டு. வாய்மொழி விளம்பரம் மூலமாக மட்டுமே தமிழ் இணையதளங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த சமயத்தில் கீற்றின் வெற்றிக்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். (இவர்களால்தான் கீற்று வளர்கிறது)

விளம்பர வருவாய் இன்றி இதுவரை கீற்றினை நடத்தியாகிவிட்டது. இனி அவ்வாறு முடியாது என்றே தோன்றுகிறது. விளம்பரங்களைப் பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தவும், வியாபார நோக்கிலான இணையதளம் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் வருவாயைப் பெருக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வாசகர்களும் கீற்றிற்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை நன்கொடையாகவோ அல்லது விளம்பரங்கள் மூலமாகவோ தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன். கீற்று வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருபவர்களையும் வரவேற்கிறேன். தட்டச்சு செய்வது, மொழிபெயர்ப்பது, படைப்புகளை வலையேற்றம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் நீங்கள் கீற்றிற்கு உதவ முடியும். 

யாரென்றே முகம் தெரியாத என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, இவ்வளவு பேர் பணம் அனுப்பியிருக்கிறீர்கள் என்றால், அதற்கு கீற்றின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் முழுக் காரணம். அந்த நம்பிக்கைக்கு என்றும் உரியதாக கீற்று தொடர்ந்து செயல்படும். 

என்றும் அன்புடன்

கீற்று நந்தன்

கீற்று ஆசிரியர் குழு சார்பாக....