மனித மனங்களில் ஊடாடி வினைபுரிகிற போது தத்துவங்கள் பிறக்கின்றன. இவ்வாறு உருவான தத்துவங்கள் மனித குலம் எதிர்கொண்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முயன்றன. இப்பதில்கள் கூட எந்தளவுக்கு புற உலகத்தோடு ஒத்திசைந்திருந்தோ அந்த அளவுக்கு இவை நெடுங்காலத்துக்கு நீடிக்கும் உண்மையாய் இருந்தது. இப்பதில்கள் எந்தளவுக்கு புற உலகிலிருந்து விலகி அகவுலகம் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு அப்பதில்கள் அற்ப ஆயுளில் அடுத்து வந்த கண்டுபிடிப்புகளால் காலாவதி ஆயின.

இரண்டாயித்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சீன சமுதாயம் தாவோயிசம் எனும் சிந்தனை மரபைக் கொண்டிருந்தது. இச்சிந்தனை வாழ்வு, தாழ்வு, பிறப்பு, இறப்பு... ஆகியவற்றைப் பற்றியும் தனக்கே உரிய கருத்துக்களை கொண்டிருந்தன. அதன் ஒரு பகுதியாகவே மனித குல நோய்களுக்குக்கான தீர்வாக அக்குப்பஞ்சர் முன்மொழியப்பட்டது. தாவோயச சிந்தனையின் தொடர்ச்சியாகவே நோய், நோய்க்கான காரணம், நலம், நலத்துக்கான வழிமுறை போன்றவை பற்றிய அக்குப்பஞ்சர். கோட்பாடுகள் அமைந்தன.

அக்குப்பஞ்சர் கோட்பாடுகளில் முதன்மையான சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

அ) அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்பார்களே அதுபோல மனித உடலானது இயற்கையின் ஓர் அங்கம் இயற்கையின் முக்கிய மூலகங்களான நீர், மரம், நெருப்பு, பூமி, உலோகம் ஆகிய ஐந்தும் மனித உடலிலும் உள்ளது.

ஆ) தண்ணிள் மூலகமானது, உடலுக்கு ஊட்டமளிப்பதோடு உடல் நலனை பேணி வருகிறது. இம்மூலகம் பழுதடைகிற போது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை பணிகள் பாதிக்கப்படுகின்றன. மர மூலகமானது ஜீரணம், இதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்றத்துக்கு பொறுப்பு வகிக்கிறது. இம்மூலகச் சீர்கோட்டால் கல்லீரல் மற்றும் பித்தப்பை பணிகள் பழுதடைகின்றன.

நெருப்பு மூலகமானது இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் பேச்சாற்றலுக்கு காரணமாய் அமைகிறது. இதன் சீரன்மையால் இதயம் மற்றும் சிறுகுடல் பணிகள் பாதிக்கின்றன. பூமி மூலகம் உளவியல் சமநிலையை பேணுகிறது. பூமி மூலகத்தின் சமநிலை மற்ற நான்கு மூலகங்களைச் சார்ந்துள்ளது. உலோக மூலகம் நுரையீரல் மற்றும் பெருங்குடலுக்கு பொறுப்பு வகிக்கிறது. சுவாசம் மற்றும் உணவு உட்கிரகித்தலை நெறிப்படுத்துகிறது.

இ) சீனக் கண்ணோட்டப்படி யின் (Yin) மற்றும் யாங் (Yang)ன் சமநிலையில் தான் சிறப்புறுகிறது. இச்சமநிலையைப் பேணும் பணியை கீ (qi) எனும் உயிராற்றல் செய்து வருகிறது.

ஈ) சீனக் கருத்துப்படி நமது வாழ்வு முழுவதும் கீ ஆற்றலால் நிர்வகிக்கப்படுகிறது, வழி நடத்தப்படுகிறது. இந்த ஆற்றல் மரபுரீதியாக பெற்றோரிடமிருந்தும் உண்ணும் உணவிலிருந்தும் சுவாசிக்கும் காற்றிலிருந்தும் நமக்கு கிடைக்கிறது.

உ) கீ ஆற்றல் உடலின் தற்காப்புத்திறனை தூண்டி நோய்களைப் போக்குகின்றன. இந்த ஆற்றல் கண்ணால் காண முடியாத ஆற்றல் பாதைகள் மற்றும் அவற்றின் இடைத் தொடர்பு மூலம் உடலை நிர்வகிக்கிறது.

ஊ) ஓட்ட பாதைகளின் ஆற்றல் செயல்பாடு மிகும்போது அல்லது குறையும் போது நோய்கள் தோன்றுகின்றன. ஓட்டப்பாதைகளின் அமைந்துள்ள புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ஆற்றலைச் சம நிலைக்கு கொள்ளலாம்.

பெரும்பான்மையான மனிதத் துயர்களுக்கு அக்குப்பஞ்சரில் சிகிச்சை உண்டு எனப்படுகிறது. எனினும் அக்குபஞ்சர் நலமாக்கலின் முக்கிய பலன்கள் நரம்பு மண்டலம் தொடர்பான துயர்களோடு தொடர்புள்ளதாகவே உள்ளது. வலிகள், வலிப்பு, வாதம், மது போதை மீட்பு தூக்கமின்மை, மயக்கம், மரமரப்பு... எனப் பட்டியல் நீளும்.

ஆனாலும் அக்குபஞ்சரின் மூல ஆசான்களுக்கு நரம்பு மண்டலம் என ஒன்றுள்ளதோ, மூளை பற்றிய விபரங்களோ தெரியாது என்பதே விந்தையிலும் விந்தையாகும்.

அக்காலத்திய அறிவு நிலைக்கு ஏற்பவே அக்குபஞ்சரின் உடலியல் உடலியங்குயியல் அறிவுநிலை அமைந்திருந்தது. இப்போது நாம் அறிந்திருக்கும் உடலியல், உடலியங்குயியல் அறிவியல் பதினோழாம் நூற்றண்டுக்கு பின்பு வளர்ந்தவை. இவை ஆதிகால அக்குபஞ்சர் அறிஞர்கள் அறியாதவை.

இந்நிலையில், அறிவியலின் பால் மாபெரும் வளர்ச்சியில் ஆர்வமும் உடைய யாரொருவருக்கும் அக்குபஞ்சர் தொடர்பாக சில பயங்கள் கேள்வி களாக எழுவது இயல்பே.

1) அறிவியல் உலகத்தால் பஞ்சபூத தத்துவத்திற்கு பதிலாக தனிமங்கள், அணுக்கள், புரோட்டான் நியுட்ரான், எல்க்ட்ரான் ... என கண்டுபிடிப்புகள் வளர்ந்தபின்னும் இன்னும் பஞ்சபூதங்களின் பலாபலன்கள் பற்றி அக்குபஞ்சர் தொடர்புடையவர்கள் ஆராதிப்பது ஏன்?

2) நவீன உடலியல் குறித்து மறுப்பிற்கிட மின்றி நிருவப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலான போதிலும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முதன்மையான உறுப்பு அமைப்பு தான் என ஏற்காதது ஏன்?

3) மனித உடலின் அடிப்படை அலகு செல்கள். நரம்பு மண்டலம், மூளை மற்றும் சமூகதாக்கத்தின் கூட்டு படைப்பே மனித தனிமனித மனம்.இவைகளில் ஏற்படும் குறைபாடு களே மனித உடல் மற்றும் மன நோய்கள் என அறிவியல் உலகம் நிறுவியுள்ளது. இந்நிலையில் யின், யாங் மற்றும் கீ என்பதென்ன?

4) ஆற்றல் ஓட்டப் பாதைகள் எனப்படும் கோடுகளுக்கும் அதன் தொடர்பாக கூறப்படும் உறுப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

5) அக்குபஞ்சர் சில எல்லைகளில் மகத்தான நலமாக்கலை நல்குகின்றன என்பதில் மாறுபாடில் லை. அக்குபுள்ளிகளில் தூண்டலூட்டும் போது உடல்செயல்பாட்டில் நிகழும் மாற்றமென்ன?

இக்கேள்விகளுக்கு திட்டவட்டமாக பதில்கள் கிடைக்கும் வரை அக்குபஞ்சர் வளர்ச்சியில் சிறு தடை இருக்கவே செய்யும். இக்கேள்விகளும் இதற்கு பதில் தேடும் ஆராய்ச்சிகளும் இப்போது தான் எழுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாகும். 

இன்றைக்கு உள்ள அளவுக்கு அக்குபஞ்சர், இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் 1949 ல் சேர்மன் மாசேதுங் தலைமையில் உருவான மக்கள் சீன அரசேயாகும். மார்க்சிய - லெனினிய - மாசேதுங் - பொதுவுடைமை சிந்தனையின் வழிகாட்டுதலில் நடைபெற்ற புரட்சியின் விளைவே மக்கள் சீனம். மக்கள் சீனத்தில் அறிவியலுக்கு புறம்பான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாரம்பரிய விஷயங்கள் பலவும் புறக்கணிக்கப் பட்டன. அதே வேளையில் சிறப்புமிக்க தொல்சீர் அம்சங்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டன. மேலும், அவை வளர்வதற்கான வழிமுறைகள் வகுப்பட்டன. இவ்வாறு மக்கள் சீனத்தால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட தொல்சீர் அம்சங்களில் ஒன்று தான் அக்குபஞ்சர். 1950 களில் அக்குபஞ்சர் மருத்துவத்துக்கு ஆயிரக்கணக்கான சோதனைகளுடாக அறிவியல் அந்தஸ்து உருவாக்கப்பட்டது. 1958ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய கமிட்டி நவீன மருத்துவமுறைக்கு இணையான அந்தஸ்தை அக்குபஞ்சருக்கு வழங்கியது. இதனை “இரண்டு கால்களால் நடப்போம்” எனும் பிரபலமான சொலவடையின் மூலம் சேர்மன் மாசேதுங் பிரகடனப்படுத்தினார். இதன் விளைவே நவீன அறுவை சிகிச்சைகளில் அக்குபஞ்சரை பயன்படுத்தும் அக்குபஞ்சர் அனஸ்தீஸியா கண்டுபிடிக்கப்பட்டது.

1980களில் பல்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அக்குபஞ்சர் பயன்பாடு பற்றிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டன.

1970களுக்கு பிறகு மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் அக்குபஞ்சர் பற்றிய பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முன் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது போல எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அறிவியலை மட்டும் ஆதரிக்கும் பொதுவுடைமை அரசு உலமெங்கும் பரப்ப காரணமாய் இருந்துள்ளது. எனினும் பகுத்தறிவுக்கு பொருந்தாத பல விஷயங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்துடன் இணைத்து பேசப்படுவதேன்?

இக்கேள்விக்கான பதில் பற்றி யோசிக்கிற போது அக்குபங்சருக்கு வெளியேயுள்ள வேறு சில விஷயங்களும் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவை :

(1) உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாம் உலக நாடு, மிகக் குறைந்த செலவில் அனைத்து மக்களின் மருத்துவ தேவை யை நிறைவேற்ற காரணமானது அக்குபஞ்சர். அத்தகையதொரு மருத்துவத்தை அறிவியல் ரீதியாகவும் நிறுவிவிட்டால் உலகின் முதன்மை மருத்துவமாக அது வளர்ந்து விடும். அப்படி வளர்ந்து விட்டால் பின்னர் அலோபதியின் கொள்ளை லாபம் தரும் மருத்துவச் சந்தை சுருங்கி விடுமல்லவா ?

(2) அலோபதி மருத்துவ திட்டங்களுக்கான நிதியுதவி என்ற பெயரில் வல்லரசுகள் ஏழை நாடுகளை கடன் வலையில் வீழ்த்துவதால் அக்குபஞ்சரின் அறிவியல்ரீதியான வளர்ச்சிக்கு முட்டுகட்டை ஏற்படுமா?

(3) அக்குபஞ்சரை பயில்வது மிகமிக எளிது. அடிப்படை கல்வித் தகுதியை நிறைவு செய்த யார் வேண்டுமானாலும் அக்குபஞ்சர் பயின்று தொழில் புரியலாம். இதனை 1991ம் ஆண்டு நடைபெற்ற 44 வது உலக சுகாதார பேரவையே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அக்குபஞ்சர் பெருமளவு வளர்ந்துவிட்டால் அலோபதி மருத்துவக் கல்வியின் பெயரால் நடைபெறும் மிகப் பெரும் பணப்புழக்கம் உள்ள தொழில் நீடிக்குமா?

(4) அக்குபஞ்சர் வளர்ந்து அதன் எளிய சிகிச்சையாலேயே பெரும்பாலான நோய்கள் நலமாகி விட்டால் யாராவது மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டுவார்களா? நட்சத்திர அந்தஸ்து வசதி கொண்ட மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்புமா?

இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களுடன், அக்குபஞ்சர் ஏன் அறிவியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்னும் கேள்விகளுக்கான பதிலும் இணைந்துள்ளதாகவே தோன்றுகிறது.

நம் காலத்தில் அறிவியல் வளர்ச்சியும் அறிவியலாளர்களின் திறமையும் அளப்பரியது. அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், இதையும் தான்.

Pin It