ஈரோடு மாவட்டம் பவானி அருகில் ஆப்பக் கூடலில் அமைந்துள்ளது சக்தி சர்க்கரை ஆலை. இந்த ஆலை 1964களில் தொடங்கப்பட்டது. இதன் முதலாளி அருட்செல்வர் என்று அழைத்துக் கொள்ளும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆவார். இந்த ஆலையின் மூலம் ஈட்டிய இலாபத்தை மூலதனமாக்கி, சிவகங்கை மாவட்டத்தில் அலகு 2, ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் அலகு 3 என இரண்டு ஆலைகளை அவர் மேலும் நிறுவியுள்ளார். (வேறு மாநிலங்களில் உள்ள ஆலைகள் தனி)

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 15,000க்கும் மேற்பட்ட உழவர் குடும்பங்கள் ஒப்பந்த முறையில் கரும்புப் பயிர் செய்து சக்தி சர்க்கரை ஆலைக்குக் கொடுத்து வருகின்றன.

கரும்பிலிருந்து சர்க்கரை மட்டுமின்றி எரிசாராயம், இணைமின்சாரம் என மிக, மிக மதிப்புமிக்க பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் கோடி கோடியாய் மிகப்பெருத்த இலாபத்தைச் சர்க்கரை ஆலைகள் ஈட்டி வருகின்றன.

சக்தி சர்க்கரை ஆலை உழவர்களினதும், தொழிலாளர்களினதும் உழைப்பிலிருந்து ஆண்டுதோறும் கோடி,கோடியாய் இலாபம் ஈட்டி வருகிறது. இவ்வளவு வருமானம் வந்தும் ‘அருட்செல்வர்’ மகாலிங்கத்தின் பணவெறி அடங்கவில்லை. கரும்பைப் 12 மாதம் சொல்லவொண்ணா இன்னற்பட்டு விளைவித்துக் கொடுக்கும் கரும்புஉழவர்களுக்குக் கரும்பிற்கான பணத்தை 1990களிலிருந்து சக்தி ஆலை முறையாகக் கொடுப்பதில்லை.

1966 கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட உழவர்கள் கரும்பை வெளியில் விற்பனை செய்யக்கூடாது. அப்படி வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் அவர்கள்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு காவல்துறையை வைத்து சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பை வெட்டி எடுத்துக்கொள்ளும். இவ்வாறு ஒப்பந்தத்தை மீறிய பல நிகழ்வுகளில் உழவர்கள் மீது வழக்குகளும் பதியப்பட்டன. கரும்பும் காவல்துறை உதவியுடன் வெட்டப்பட்டது. அதே 1966ஆம் ஆண்டுக் கரும்புச் சட்டம் கரும்பை வெட்டிக் கொடுக்கும் உழவர்களுக்கு 14 நாள்களுக்குள் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படிக் கொடுக்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் வருவாய் மீட்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சில ஆலை முதலாளிகள் இந்தச் சட்ட விதியை மீறி உழவர்களுக்குச் சேர வேண்டிய பல கோடி உருபாய்ப் பணத்தைத் தமது தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 1966ஆம் ஆண்டுக் கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய உழவர் தரப்பு மீது நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்து உழவர்கள் வயலிலிருந்து கரும்பைப் பறித்துச் சென்ற அரசு ஒருமுறை கூட முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து உழவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவையைப் பெற்றுத் தரவில்லை.

என்ன செய்வது? முதலாளிகளைப் பாதுகாக்கத்தான் அரசாங்கம் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கிறது.

பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சக்தி சர்க்கரை ஆலை 1990ஆம் ஆண்டு முதல் உழவர்களின் கோடிக்கணக்கான பணத்தைத் தனது வேறு தொழில்களுக்குத் திருப்பி விட்டு வருகிறது. வேறு வழியின்றி உழவர்கள் போராட முன்வந்தால் தவணை, தவணையாகப் பணத்தைக் கொடுப்பது என்பதை நடைமுறையாக்கி வருகிறது. இதுபோதாதென்று எடைபோடுவதில் ஏமாற்றுவது என்பதெல்லாம் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்குக் கைவந்த கலையாகும்.

2009ம் ஆண்டுகளில் சுமார் 60 கோடி உருபாய்த் தொகையைச் சர்க்கரை ஆலை உழவர்களிடம் சுருட்டிக் கொண்டது. கொதித்தெழுந்த உழவர்கள் 42 நாள்கள் கரும்பு வெட்டுவதை நிறுத்தி ஆலையை இழுத்து மூடினார்கள். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி மறுபடியும் தவணை முறையிலேயே பணம் கொடுத்தனர்.

2011ஆம் ஆண்டு முதல் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாகக் கரும்பு உழவர்களுக்குச் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் முறையாகப் பணம் கொடுக்கவில்லை. இது படிப்படியாக வளர்ந்து 2012 மார்ச் முதல் உழவர்களுக்கு மட்டுமல்லாது, கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், சுமையுந்து (லாரி) உரிமை யாளர்கள் என யாருக்கும் பணம் கொடுப்பது முற்றாக நிறுத்தப்பட்டது.

இவ்வளவு மோசடியான சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது உழவர் இயக்கங்கள் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையாக முறையீடு செய்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலபேர் மாறி மாறி வந்தாலும் யாரும் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஆலை முதலாளியைப் பார்த்து சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.

உழவர்களின்களின் தாங்கமுடியாத வேதனையை வெளிப்படுத்தத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் 04&09&2012 முதல் தோழர் முனுசாமி தலைமையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்தது. இந்த உண்ணாநிலைப் பேராட்டத்திற்கு அனைத்து உழவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. காலவரையற்ற உண்ணாநிலையைப் 18 பேர் மேற்கொள்வது எனவும், அவர்களுக்கு ஆதரவாக அன்றாடம் நூற்றுக்கணக்கான உழவர்கள் பங்குகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன் னையன் உட்பட 82 அகவை மூத்த உழவர்களும் கலந்துகொண்டனர். இதில் திரு.மாரப்ப கவுண்டர் கால் முறிந்து அறுவை மருத்துவம் முடிவடைந்த நிலையில் படுக்கையில் படுத்துக்கொண்டு உண்ணா நிலையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.. உண்ணாநிலைப் போராட்டத்தைச் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் லாசர் தொடங்கி வைத்தார்.

உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியவுடன் அரண்டுபோனது சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம். போராட்டக் குழுவினரை அழைத்து, போராட்டத்தைக் கைவிடும்படியும் தங்கள் மானம் போகிறது எப்படியாவது பணத்தைக் கொடுத்து விடுகிறோம் என்றும் நாடகமாடியது. இந்த ஆலையின் மோசடித்தனங்களை நன்கு உணர்ந்திருந்த போராட்டக்குழு பணத்தைக் கொடுக்கத் தொடங்கினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என உறுதிபடக் கூறிவிட்டது.

உழவர்களின் போராட்டத்தைக் காட்டி ஆலை ஊழியர்கள் 700 பேரிடம் ஆலையைக் காப்பாற்றுங்கள் என்று பாட்டுப்பாடி ரூ. 3 கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டது ஆலை நிர்வாகம். இன்னொருபுறம் காவல்துறையை வைத்து ஒலிபெருக்கியில் பேசக்கூடாது என மிரட்டியது. அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளிவராமல் தடுத்தது.

ஆலை நிர்வாகத்தின் அனைத்துத் தகிடுதத்தங்களையும் முறியடித்துத் தோழர் இரவீந்திரன் போராட்டத்தைச் செழுமையாக நெறிப்படுத்தினார். அரசுத்துறையைச் சேர்ந்த அனைத்து உயர் அதிகாரி களையும் இச்சிக்கலில் தலையிட ஏற்பாடு செய்தார். நாள்தோறும் உழவர்கள் பெரும் திரளாக வந்து போராட்டப் பந்தலை நிறைத்தனர். சமஉ தோழர் தங்கவேலு நேரில் வந்து வாழ்த்தினார்.

இனிமேலும் தப்ப முடியாது என்ற நிலையை எட்டியவுடன் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் நிலுவைப் பணத்தை உழவர்களுக்குச் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கொடுக்கத் தொடங்கியது. உடனே ஆலை வாயிலில் போராட்டப் பந்தலுக்கு வந்த கோபிக் கோட்டாட்சியர் பணம் கொடுக்கத் தொடங்கி விட்டதால் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் போராட்டக்குழு, “ஆலை நிர்வாகம் எழுத்து மூலமாகத் தனது உறுதிமொழியை எழுதிக் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம், இல்லையேல் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம்.” என்று நிர்வாகத்தின் முகத்தில் அடித்தாற்போல் விடை யளித்தது. கிடுக்கிப் பிடியில் சிக்கிக்கொண்ட அ(பொ)ருட்செல்வர் வேறு வழியின்றிப் பணம் கொடுக்கும் விவரத்தைக் காலவரிசைப்படி ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு எழுதிக் கொடுத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் உறுதிமொழி கடிதத்தைக் கோபி கோட்டாட்சியர் மூலம் போராட்டக் குழுவிற்கு ஒப்படைத்தார். பின்னர் உழவர்கள் சங்க மூத்த தலைவர் பி.காசியண்ணன் உண்ணாநிலைப் பேராளிகளுக்குப் பழச்சாறு வழங்கி வெற்றியுடன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

Pin It