பா சிறீதேவன் அவர்கள் தந்திருந்த தூக்குக் கொட்டடியில் தவிக்கும் பதின்மூன்று உயிர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தோம். அவர்களில் கீழ்க்கண்ட அய்ந்து பேர்களின் மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

1. தயாநிதி பிசாய்  ஒடிசா (ஒரிசா) ஆளுநர் குறைப்பு

2. பாண்டு  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குறைப்பு

3. சாத்தான்  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குறைப்பு

4. உபேந்திரா  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குறைப்பு

5. ஆங்குஸ் மாருதி சிண்டே  குற்ற நிகழ்வின்போது சிறராக இருந்தார் என்பதால் தண்டனைக் குறைப்பு

(நாசிக் அமர்வு நீதிமன்றம்)

எஞ்சியுள்ள எட்டுப் பேர்களின் மரண தண்டனையையும் குறைக்கும்படி நீதியரசர்கள் ஏ.பி.ஷா, கே.பி.சிவசுப்பிரமணியம், பி.கே.மிஸ்ரா, பிரபா சிறீதேவன் உள்ளிட்ட பதினான்கு நீதியரசர்கள் புதிய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்துத் தனித்தனியாக மடல்கள் விடுத்துள்ளனர். குடியரசுத் தலைவர் பதவியேற்றதும் பிரணாப் சந்திக்கும் முதல் மரண தண்டனைக் குறைப்பு மனுவாகும் இது.

நீதியரசர் ஏ.கே.கங்குலி கருத்து

தூக்குக் கொட்டடியில் ஒருவரை நீண்டநாள் வைத்திருப்பதே அதனளவில் அவருக்குப் போதுமான தண்டனை ஆகும். கருணை மனுவை முடிவு செய்வதில் காலத்தாழ்வு ஏற்படுமெனில், மரண தண்டனையைக் குறைக்கலாம் என உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

ஒருவர் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டார் என்பதினாலேயே, மரண தண்டனையைக் குறைக்கக் கோரி விண்ணப்பிக்கும் உரிமையை அவருக்கு மறுக்க முடியாது. மரண தண்டனைக் குறைப்பிற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கொள்கை என ஒன்று சட்டப்படி இருக்க இயலாது. தண்டனைக் குறைப்பை வேண்டுகின்றவரின் நடத்தை, குற்றம் நடைபெற்றதற்கான சூழ்நிலைகள், குற்றவாளியின் பின்புலம், கடந்தகாலக் குற்ற வரலாறு ஆகியவை மட்டுமே ஆராயப்பட வேண்டும்.

குற்றத்தண்டனை என்பது வெறும் சட்டச் சிக்கல் மட்டுமன்று. அது மனித வாழ்வோடு தொடர் புடையது; சமூக, அறஞ்சார்ந்த சிக்கல்களை உள்ளடக்கியது.

 உலகமெங்கும் மரண தண்டனைக்கெதிரான கருத்து வலுப்பெற்று வருகிறது. ஏறத்தாழ 138 நாடுகளில் மரண தண்டனை பல்வேறு வடிவங்களூடாகக் குறைக்கப்பட்டோ அலலது ஒரு சில வழக்குகளுக்கென குறுக்கப்பட்டோ உள்ளது. இந்தியாவில் சட்ட ஆணையம் தூக்குத் தண்டனையை நீடிக்க 1967இல் பரிந்துரைத்தது. ஆனால் உலகளவில் உருவாகி வரும் புதிய சூழலில் அதை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது.

தூக்குத்தண்டனை வழக்குகளைக் குறைந்தது மூன்று நீதியரசர்கள் அடங்கிய இருக்கை விசாரிக்க வேண்டும். இம்மூவருள் மாறுபட்ட கருத்து இருக்குமெனில் தூக்குத்தண்டனை விதிக்கக்கூடாது. தூக்குத்தண்டனை தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற மூவர் இருக்கையின் ஒருமனதான தீர்ப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரே வழக்கு; வேறு வேறு தீர்ப்புகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்றம் 1975இல் ஜுட்டாங்சிங், காஸ்மீரா சிங், ஹர்பன்ஸ் சிங் ஆகிய மூவருக்கும் குற்றத்தில் உள்ள சமபங்கை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனையை உறுதிப்படுத்தியது. மூவரும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஜீட்டாங்சிங் முறையீடு நீதியரசர்கள் ஒய்.வி. சந்திரசூட், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், என்.எல்.உண்ட்வாலியா ஆகிய மூவர் அடங்கிய இருக்கை முன் வந்தது; அவர் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. அவர் தூக்கிலிடப்பட்டார்.

நீதியரசர்கள் எம்.பசல் அலி, பி.என்.பகவதி ஆகியோர் முன் உசாவலுக்கு வந்த காஸ்மீரா சிங் வழக்கில் அவர் தூக்குத்தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இன்னொரு இருக்கையில் ஹர்பன்ஸ் சிங் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, ஜீட்டா சிங்குடன் சேர்ந்து தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவர் மறுமுறையீடு செய்தார். தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் கருணைக்குப் பரிந்துரைத்தது; கருணையும் கிடைத்தது. ஹர்பன்ஸ் சிங் தலை தப்பியது.

ஒரே வழக்கு, இருவர் தூக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஒருவர் உயிர் பறிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் நீதியா? இப்படியும் உயிர்கள் பறிக்கப்படலாமா?இது நீதிமன்றக் கொலையல்லவா?

மனைவி, குழந்தைகள் கொலை, மாறுபட்ட தீர்ப்புகள்

தர்மேந்திராசிங் தன் மனைவியின் நடத்தையிலும், குழந்தைகள் பிறப்பிலும் அய்யுற்று, மனைவி, குழந்தைகளைக் கொன்று விடுகின்றார். இது நடந்தது 2002இல். கேராஜ் ராம் என்பவரும் அதே போன்று மனைவி நடத்தையின் மீதும் குழந்தைகள் பிறப்பிலும் அய்யுற்று அவர்களைக் கொலை செய்கிறார். இது நடந்தது 2003இல். முன்னவருக்கு வாழ்நாள் தண்டனை; பின்னவருக்கோ தூக்குத்தண்டனை. இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள்தான்.

வாஸ்ரம், சூடம் ஆகியோர் முறையே 2002இலும், 2011இலும் தம் மனைவிமார்களும் குழந்தைகளும் தங்களைக் கொடுமை செய்தனர் என்ற பேரில் அவர்களைக் கொன்றுவிடுகின்றனர். இதில் முன்னவர் தூக்குத்தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. பின்னவர் தூக்கிற்கு அனுப்பப்படுகிறார். இவையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்தான்.

குழந்தைகள் நரபலி வழக்குத் தீர்ப்புகள்

தாமு என்பவர் மூன்று குழந்தைகளைக் கொடூரமாக நரபலியிடுகிறார். உச்சநீதிமன்றம் அவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கிறது. இது 2000ஆம் ஆண்டுத் தீர்ப்பு. சுசில் முர்மு என்பவர் ஒரு குழந்தையை நரபலி இடுகின்றார். இவருடைய தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் 2004இல் உறுதி செய்கிறது. முதல் வழக்கில் அறியாமையாலும், மூடநம்பிக்கையாலும் நடந்த கொலை எனக்கூறி தண்டனையைக் குறைத்த நீதிமன்றம் இரண்டாவது தீர்ப்பில் தன் தீர்ப்பையே மறுதலிக்கிறது. இது எவ்வகை நீதியோ?

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கொலை வழக்குகள்

நீதியரசர்கள் வேறுவேறு; தீர்ப்புகளும் வேறுவேறு

இரு சிறுமிகளைக் கற்பழித்துக் கொன்ற வழக்கில் மோகன் என்பவருக்கு 2008ல் உச்சநீதி மன்றம் தூக்குத்தண்டனை வழங்குகிறது. இவர் ஏற்கனவே இருமுறை சிறுமிகளைக் கற்பழித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர். செபாஸ்டியன் என்பவர் குழந்தைகள் மீது பாலியல் நாட்டம் கொண்ட வக்கிர வெறியர். இவர் ஏற்கனவே கடத்தல், கற்பழிப்பு, இளங்குழந்தைக் கொலை ஆகிய வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவருக்கு மற்றுமொரு குழந்தைக் கற்பழிப்பு, கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனையே வழங்கப்படுகிறது. மோகன் வழக்கிற்கும், செபாஸ்டியன் வழக்கிற்கும் என்ன வேறுபாடு? ஒரு வேறுபாடும் இல்லை. தண்டனை வழங்கிய நீதியரசர்களே வேறுபட்டவர்கள். தூக்குத்தண்டனை வழங்கிய நீதியரசர் ஏ.பசாயத் என்பவர் ஆவார். வாழ்நாள் தண்டனை வழங்கிய நீதியரசர்கள் கே.ஜி.பாலகிருஷ்ணனும், எஸ்.பி.சின்காவும் ஆவர்.

குழந்தைக் கற்பழிப்பு, கொலை வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் விடுதலை செய்திருந்தாலும் சரி அல்லது தூக்குத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்திருந்தாலும் சரி, நீதியரசர் ஏ.பசயாத் எல்லா வழக்குகளிலும் ஒன்று தூக்குத்தண்டனையை உறுதி செய்வார் அல்லது தூக்குத்தண்டனை விதிப்பார்; மாறாக நீதியரசர்கள் கே.ஜி.பாலகிருஷ்ணன், எஸ்.பி.சின்கா இருக்கை இத்தகைய எல்லா வழக்குகளிலும் தூக்குத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்துள்ளது. தண்டனை வழங்குவதில் நீதியரசர்களிடையே உள்ள இந்த வேறுபாட்டைப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவர் உயிர் வாழ்வது அல்லது சாவது என்பது அவர் வழக்கை உசாவும் இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. தூக்குத்தண்டனை என்பது விருப்பம் சார்ந்ததாகவும், மனம்போன போக்கில் வழங்கப்பட்ட ஒன்றாகவுமே அமைகிறது என்ற நீதியரசர் பகவதியின் கூற்று எவ்வளவு உண்மையானது. தனிமனித விருப்பு வெறுப்புகள் சார்ந்து உயிர்கள் பறிக்கப்பட ஒரு தண்டனைச் சட்டமா? சட்டப் புத்தகத்தில் அதை விட்டு வைக்கலாமா? (இவ்விதழில் வெளியாகியுள்ள தூக்குத் தண்டணை தொடர்பான செய்திகள், தரவுகள் யாவும் பிரண்ட்லைன் (ஆகஸ்ட் 25செப் 07) இதழிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும்)

Pin It