ஈழக் காற்று தமிழகத்தில் மீண்டும் வலுவாக வீசத் தொடங்கியுள்ளது. சட்டப் பேரவைத் தீர்மானம் இதற்கோர் அறிகுறியே. நாடாளுமன்றத்திலும் சிக்கல் எழுப்பச் சில கட்சிகள் முனைந்துள்ளன. சி.பி.எம் கட்சி கூட ‘இலங்கைத் தமிழர்’களுக்காக மாநாடு நடத்தியுள்ளது. வரட்டும், எல்லாரும் வரட்டும்: தரட்டும், ஆதரவு தரட்டும் என்று ஈழ ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சி காணப் படுகிறது.
ஐ.நா. மூவர் குழு அறிக்கை, இலண்டன் அலைவரிசை - 4 ஒலிபரப்பிய, ‘இலங்கையின் கொலைக் களங்கள்’, அதே அலைவரிசை அண்மையில் ஒலிபரப்பிய கூடுதல் சான்று... இவை யாவும் நம் தரப்பை உலக அளவிலும் வலுப்படுத்தியுள்ளன. தென் சூடான் விடுதலையும் நமக்குப் போரூக்கம் தந்துள்ளது.
ஆனால் எழுந்து வரும் ஆதரவு அலையில் நாம் நிலைதடுமாறி விடாமல் இருக்க எச்சரிக்கை தேவை. சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயும் செம்மறி ஆடுகளாக நாம் மாறிவிடக் கூடாது. இன்றியமையாச் சில அடிப்படைகளில் ஊன்றி நின்றால்தான் எந்நிலைமைக்கும் முகங்கொடுத்து முன்னேற இயலும். இவ்வாறான மூன்று அடிப்படைகளை த.தே.வி., சார்பில் நாம் வலியுறுத்தி வருகிறோம்:
1. இராசபட்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசியல் மற்றும் படைத் தலைமையின் குற்றத்தைப் போர்க் குற்றங்கள் என்றும் மானுட விரோதக் குற்றங்கள் என்றும் வகைப்படுத்தினால் போதாது. இனக் கொலைக் குற்றம் என்றும் வரையறுத்து வலியுறுத்த வேண்டும்.
2. ஈழத் தமிழர் மீதான இனக்கொலை தற்செயலாகத் திடீர் என்று நிகழவில்லை. அறுபதாண்டு கால இன ஒடுக்குமுறை அரசியல், முப்பதாண்டு கால இன அழிப்புப் போர் ஆகியவற்றின் உச்சமே இனக் கொலை. இதற்கு ஒரு தீர்வு தனித் தமிழீழம்தான்!
இன்னமும் சுயாட்சி, சமவுரிமை, குடியுரிமை என்றெல்லாம் பசனை பண்ணிக் கொண்டிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். கொழும்பு அரசு சிங்கள அரசுதான் என்று இவ்வளவு கொடிய முறையில் மெய்ப்பிக்கப்பட்ட பிறகும், தமிழர்களுக்கென்று தனியரசு அமைக்காமல் சிங்களவனுக்கும் தமிழனுக்கும் சமவுரிமை எப்படிக் கிடைக்கும்?
3. இந்தியா குறித்து இந்தக் கட்டத்தில் என்ன செய்வது? ஈழ ஆதரவு நண்பர்களிடம் இது குறித்து ஒரு விதத் தயக்கம் - குழப்பம் காணப்படுகிறது. சிங்கள அரசின் இனக் கொலைக் குற்றத்தில் இந்தியாவும் உடந்தையாக இருந்தது தெரியும் என்றாலும், இராசபட்சே கும்பலைத் தனிமைப் படுத்துவதற்காக வேண்டியாவது இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்பது சில நண்பர்களின் எண்ணம். இந்தியாவின் பிற பகுதியில் ஆதரவு திரட்டும் பொருட்டு இப்படிச் செய்யலாம் என்ற கருத்தும் உள்ளது. எல்லாம் கொக்குத் தலையில் வெண்ணைய் வைத்துப் பிடிக்கும் முயற்சியே தவிர வேறல்ல.
இந்தியா செய்த குற்றங்களை அம்பலமாக்கி, அவற்றுக்குப் பொறுப்பானவர்களைக் கூண்டிலேற்றக்கோரி இயக்கம் நடத்தாமல் இந்திய - சிங்களக் கொலைக் கூட்டணியை முறிக்க முடியாது என்பதை இந்த நண்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர் - சிங்களர் முரண்பாட்டில் இந்தியாவைச் செயலற முடக்கல், சிங்களத்துக்கு எதிராகத் திருப்பல், தமிழீழத்தை ஆதரிக்கச் செய்தல்... இதெல்லாம் கூட கோட்பாட்டளவில் நிகழக்கூடியவைதாம். ஆனால் இதற்கான அடிப்படை வழிமுறை மிரட்டி நெருக்குதலே தவிர, கெஞ்சி நயத்தல் அன்று. இந்தியாவின் மீது எக்குற்றமும் சுமத்தாமல் இந்திய ஆற்றல்களைப் பிளந்து இந்திய அரசைத் தனிமைப்படுத்துவது எவ்வாறு? இந்திய அரசை அனுசரிப்பதும் அரவணைப்பதுமான அணுகுமுறை இந்த அரசால் ஒடுக்கப்படும் தேசிய இன ஆற்றல்களுக்கும் சனநாயக ஆற்றல்களுக்கும் நம் மீது ஐயமுண்டாகச் செய்யும். காலைப் பிடித்தால் கழுத்தைப் பிடிப்பதும், கழுத்தைப் பிடித்தால் காலைப் பிடிப்பதும்தான் தில்லியின் அணுகுமுறையாக இருக்கும்.
தொகுத்துச் சொன்னால்: 1.நடந்தது வெறும் போர்க் குற்றமல்ல, இனக் கொலையே என்ற அடிப்படையில் இராசபட்சே கும்பலைக் கூண்டிலேற்றுக! 2.தமிழீழத் தனியரசே தீர்வு! என்ற அடிப்படையில், அமைதி வழியில் இந்தத் தீர்வை நோக்கிச் செல்ல, ஐ.நா மேற்பார்வையில் ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழர்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்துக! 3.இனக் கொலைப் போரில் இந்திய அரசின் குற்றங்களையும் விசாரித்துக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றுக!
இவை மூன்றும் இன்றியமையா அடிப்படைக் கோரிக்கைகள். இவற்றை அளவுகோலாக வைத்துத் தமிழகச் சட்டப் பேரவைத் தீர்மானத்தை ஆய்ந்து பார்த்தால்தான் அதன் குற்றங்குறைகள் விளங்கும். இந்த மூன்றையும் விட்டுக் கொடுக்காத தெளிவு தமிழகத் தமிழர்களிடமும் ஈழத் தமிழர்களிடமும் உலகத் தமிழர் களிடமும் ஏற்படுவதற்காக உழைப்போம். அரைக்குறைத் தீர்வுகளின்மேல் மயக்கம் உண்டாவதைத் தவிர்ப்போம்.