ஏட்டுலகின் ‘போல்பாத்’ நீர்தானே?

(இந்தியாவில் பாரத ரத்னாக்கள் பலர் இருப்பினும் சிறிலங்கா ரத்னா ஒரே ஒருவர்தான் இந்து ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் என். ராம். இவர் சிங்கள அரசின் நண்பர். தமிழீழ விடுதலையின் பகைவர். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு மகிந்த இராசபட்சரின் அழைப்பை ஏற்றுக் கொழும்பு சென்று அதிபர் மாளிகையில் விருந்துண்டு, பேட்டி கண்டு, உள்நாட்டுப் புலம் பெயர்ந்தோர் முகாமையும் பார்த்து வந்து சிலாகித்தவர்.

கார்டியன் ஏட்டில் (2009 சூன் 2) ஒரு காலத்தில் நானறிந்த இலட்சியவாதி தமிழர்களின் போல்பாத் ஆனார் (The idealist I once knew became the Tamil’s Polpot) என்ற தலைப்பில் ராம் எழுதிய கட்டுரை, இந்து ஏட்டின் செய்தி வெளியீட்டு முறைக்குச் சான்றான சில செய்திகள், இந்துவின் சில ஆசிரியவுரைகள், இந்து வெளியிட்ட இராசபட்சரின் பேட்டி (2009 சூலை 6,7,8), ஃபிரண்ட் லைன் ஏட்டில் வந்த சில கட்டுரைகள், ஜுனியர் விகடனில்(2009 சூலை 12) இலங்கையில் பார்த்தது என்ற தலைப்பில் வெளிவந்த ராம் பேட்டி ஆகியவற்றின் அடிப்படையில் சிறிலங்கா ரத்னா என். ராமைக் கூண்டிலேற்றிக் குறுக்கு விசாரணை செய்கிறோம்.)

1. நீர் ஒரு காலத்தில் பிரபாகரனை இலட்சியவாதியாக அறிந்து வைத்திருந்ததாகச் சொல்கிறீர். அந்த இலட்சிய வாதியின்  இலட்சியமான தமிழீழ விடுதலையை அப்போது--- அல்லது எப்போதாவது  நீர் ஆதரித்த துண்டா? நீர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை இலட்சியமாகக் கொண்ட பிரபாகரன் உமக்கு ஒரு காலத்தில் இலட்சியவாதியாகத் தெரிந்தார் என்பது முரண்பாடு அல்லவா? இந்த முரண்பாட்டுக்கு நீர் தரும் விளக்கம் என்ன?

2.  ‘போல் பாத்’ என்பவர் யார்? அவர் என்ன செய்தார்? என்பதையயல்லாம் ஒரு முறை கூட விளக்காமலே பிரபாகரனைத் தமிழர்களின் போல் பாத் என்றும், விடுதலைப் புலிகளை ‘போல் பாத்திஸ்டு இயக்கம்’ என்றும் போகிற போக்கில் தூற்றி விட்டுப் போகிறீர், போல் பாத்தின் ‘கிமர் ரூஜ் இயக்கம்’ கம்பூச்சிய நாட்டை ஆண்ட போது செயற்கையானதொரு பொருளியல்  கட்டமைப்பை அந்நாட்டு மக்கள் மீது திணித்தது, இந்தத் திணிப்பை எதிர்த்தவர்களை ஒழித்துக் கட்டியது என்பது குற்றச்சாட்டு. தமிழீழத்தின் பெரும் பரப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட பொருளியல், அரசியல் கொள்கைகளையும் கம்பூச்சியாவில் போல் பாத் செயலாக்கிய பொருளியல், அரசியல் கொள்கைகளையும் ஒப்பிட்டுக் காட்டி உம்மால் உமது குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியுமா?

3. போல்பாத் ஆட்சியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரின் எலும்புக் கூடுகள் தோண்டியயடுக்கப்பட்டனவே, அதுபோல் புலிகளின் ஆட்சியில் யாராவது கொன்று புதைக்கப்பட்டார்களா? சிங்கள ஆட்சியில் ஏராளமான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. செம்மணிப் புதைகுழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர். அதற்காக எந்தச் சிங்களத் தலைவரையாவது ‘சிறிலங்காவின் போல் பாத்’ என்று வருணித்தீரா? சந்திரிகாவைப் ‘பெண் போல்பாத்’ என்று நீர் வர்ணித் திருந்தால் உமக்கு அவர் உயரிய விருது கொடுத்திருப்பாரா?

4. போல்பாத் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளைக் கண்டறிவதற்காக கம்பூச்சியாவில் மண்ணைத் தோண்டி எலும்புக் கூடுகளை எடுத்தது போல், இறுதிப் போர் நடைபெற்ற முள்ளி வாய்க்கால்  மண்ணைத் தோண்டி எலும்புக் கூடுகளை எடுக்கக் கோருவீரா?

இந்த எலும்புக் கூடுகளின் அடிப்படையிலோ, அங்கு நடந்த முழுப் பேரழிவுக்கான பிற சான்று களின் அடிப்படையிலோ மகிந்த இராசபட்சரை ‘சிறீலங்கா வின் போல் பாத்’ என்று வருணிப்பீரா?

5. ‘இறுதியாட்டத்தில் (end game) முன்னுக்கு வந்த மனிதாபிமான நெருக்கடி குறித்து உலகம் கவலையுற்றது நியாயமே என்கிறீர். உலகமே கவலையுற்றது, ஆனால் நீர் கவலையுற்றதுண்டா? பிரபாகரனும்  தளபதிகளும் தப்பி விடுவார்களோ, யாராவது தலையிட்டுப் போரை நிறுத்தச் செய்து விடுவார்களோ, சிங்களப் படைகளின் இரக்கமற்ற அரக்கச் செயல்கள் வெளியுலகுக்குத் தெரிந்து விடுமோ என்று மட்டுமே கவலைப்பட்டீர், எத்தனைப் பொது மக்கள் செத்தாலும் பிரபாகரனையும் புலிப்படைத் தளபதிகளையும் கொன்று விட வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டீர்  எனக் குற்றஞ்சாட்டு கிறோம், உம்மால் மறுக்க முடியுமா?

6. போரில் சாதாரணப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்விதத்தும் குறைவானதன்று (The civilian toll has by no means been light)  என்று கார்டியன் கட்டுரையில் நீரே சொல்கிறீர். போரில் பொது மக்கள் பெருமளவில் கொல்லப் பட்டதை ஒப்புக் கொள்கிறீர் என்று பொருள். அப்படியானால் இப்படிப் பெருமளவில் பொதுமக்களைக் கொன்றது யார் என்பதைச் சொல்வீரா? புலிகள்தாம் கொன்றார்கள் என்றால் உடனே அலறிப்புடைத்துச் சொல்லி யிருப்பீர். சிங்களப் படையினர் செய்த கொலை என்பது உமக்கே தெரிந்திருப்பதால்தான் ‘பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று சொல்லி விட்டு யார் ஏற்படுத்திய இழப்பு என்ற சொல்லாமல் நழுவுகிறீர். சிங்களப் படையினர் பொதுமக்களைப் பெருமளவில்  கொன்றனர் என்பதை நீரே ஒப்புக் கொள்வதாகப் பொருள். சிங்களப் படையினர் இப்படிச் செய்வதற்கு ஆணையிட்டவர்கள் யார்? அவர்களின் பெயரைச் சொல்ல மாட்டீரா? பொதுமக்களுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தி யவர்கள், அதாவது இனப்படு கொலை செய்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் என்று தெரிந்து வைத்துக் கொண்டே அவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடவும், அவர்களது மாளிகைக்குச் சென்று விருந்துண்டு அளவளாவி மகிழவும் உம்மால் எப்படி முடிந்தது? உமது மாந்தநேயத்துக்கு(?) இதையே அளவு கோலாக வைத்துக் கொள்ளலாமா?

7. சிறிலங்காவுக்குப் பெருமளவில் வெளியுதவி தேவை என்றும், என்ன தவறு நடந்தது என்ற பிடிவாதமாக ஆராய்ந்து கொண்டிருக்காமல் பரிவுடன் முன்னோக்கிடும் அணுகுமுறையும் தேவை என்றும் கார்டியன் கட்டுரை யில் சொல்கிறீர். இதைச் சொல்கிற நீர் பிடிவாதமாகப் புலி களையும் பிரபாகரனையும் குறை சொல்லிக் கொண்டிருப்பவர் என்பது ஒரு புறமிருக்க, பரிவுமிக்க அணுகு முறை தேவைப்படுவது பொது மக்களுக்குப் பேரிழப்பு உண்டு செய்ததாக நீரே சுற்றடியாக ஏற்றுக் கொள்ளும் சிங்கள அரசினர்க்கா, அல்லது பேரிழப்புக்கு ஆளானதோடு இப்போதும் பேரிடர்க்கு ஆளாகித் தவிக்கும் தமிழர்களுக்கா?

8. சர்வதேசம், குறிப்பாக மேற்கு அய்ரோப்பா நெருக்கடிக் கான பொறுப்பை எந்திரத்தனமாக சம நிலைப்படுத்தும் போக்கு காணப் படுவதாகச் சொல்கிறீர். தீவிரவாத அமைப்பின் நிர்க்கதியான இறுதிக் கட்டச் செயல்களைச் சட்ட முறைப் படியான அரசாங்கத்தின் எதிர் வினைகளோடு சமப்படுத்தும் போக் கையும் குறை சொல்கிறீர். நெருக் கடிக்கு மூல காரணமாகிய தேசிய இனச் சிக்கலுக்கு யார் பொறுப்பு? இனச் சிக்கலே இல்லை என்கிறீரா? சிக்கலே இல்லாமல்தான் கிட்டத் தட்ட அறுபதாண்டு காலமாகப் போராட்டமும், கிட்டத்தட்ட முப்பதாண்டு  காலமாகப் போரும் நடைபெற்றனவா? சட்டமுறைப் படியான அரசாங்கம் (Legitimate government) என்கிறீரே, சட்டமுறைப் படியான அரசாங்கம் தன் குடிமக்கள் மீதே போர் தொடுக்கலாமா? உலகி லேயே தன்னாட்டுக் குடிமக்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தும் ஒரே அரசு சிறிலங்காதான் என்று உம்மைப் போன்ற ஒரு பத்திரிகையாளர் (லசந்தா விக்கிரமதுங்கா) தம் இறுதி மடலில் எழுதியதைப் படித்தீரா? சட்டமுறைப் படியான அரசாங்கம் தன்னாட்டு மக்களை முள்வேலிச் சிறைமுகாம் களில் அடைத்து வைத்திருக்கிறதே, எந்தச் சட்டத்தின்படி என்று சொல்வீரா? அம்மக்கள் செய்த குற்றம் என்ன? தமிழராகப் பிறந்ததே குற்றம் என்பீரா?

தமிழர்களுக்கு ஒரு நாடு அமையக்கூடாது என்பதற்கு எத்தனைத் தமிழர்களையும் படு கொலை செய்யலாம், அதை நியாயப்படுத்தலாம் என்பதை இதழியல் கொள்கையாகக் கடைப் பிடிக்கும் உம்மை ஏட்டுலகின் போல்பாத் என்றும், இந்துவை போல்பாத்திஸ்டு ஏடு என்றும் வருணிக்கலாமா?

9. இரண்டே முக்கால் இலட்சம் பொதுமக்களை இராணுவ வழியில் மீட்ட அபார சாதனைக்காக மகிந்த இராசபட்சரின் அரசுக்கு நீதி செய்யப்படவில்லை என்று வருத்தப் படுகிறீர். அதாவது உம்மைப் போலவே உலக அரசுகள் எல்லாம் இராசபட்ச ஆராதனை செய்ய வேண்டும் என்கிறீர். இராணுவ வழியில் மீட்பது என்றால் என்ன? சற்றே விளக்கமாகச் சொல்வீரா? கனரகப் போர்க் கருவி களால் தாக்குதல் நடத்தியும் கொத்துக் குண்டுகள் வீசியும், ஆயிரக் கணக் கானவர்களைக் கொன்று, ஆயிரக் கணக்கானவர்களைக் கொடுங் காயப்படுத்தி, மருந்தோ உணவோகூட கிடைக்க விடாமல் தடுத்து, பாதுகாப்பு வளையம் என்று ஒரு பகுதியை அறிவித்து அப்பகுதிக்குள் பொதுமக்களை வரவழைத்துக் கோரப்படுகொலை செய்வதன் மூலம் பீதியுண்டாக்கி மக்கள் கூட்டத்தைத் தெறித்து ஓடச் செய்வதுதானே நீர் சொல்லும் இராணுவ வழியலான மீட்பு நடவடிக்கை? இந்தச் ‘சாதனை’க்காக இராசபட்சரைப் பாராட்ட உம்மை விட்டால் யாரும் இல்லை என்பது தானே உம் வருத்தம்? இந்தக் கொடுமைக்காக இராசபட்சக் கும்பலையும், அதற்கு உடந்தையாக முனைந்து செயல்பட்ட மன்மோகன் கும்பலையும் போர்க் குற்றங்களுக் காகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும், இனக் கொலைக் குற்றங்களுக்காகவும் கூண்டிலேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைப் பற்றாளர்கள் எழுப்ப, நீரோ கொலைக் குற்றவாளிகளைப் பாராட்டச் சொல்கிறீரே, உம்மை மனிதகுலத்தின் பகையாளியாகக் கருதுவதில் என்ன தவறு?

10. இரண்டே முக்கால் இலட்சம் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத் துவதற்காக புலிகள் அடைத்து வைத்திருந்ததை உலகமே பார்த்ததாகச் சொல்கிறீர்; உலகம் பார்த்தது இருக்கட்டும், நீர் பார்த்தீரா? புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்தார்கள் என்று என்ன ஆதாரத்தின் பேரில் சொல்கிறீர்? போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீரோ உம் செய்தியாளரோ அம்மக்களைச் சென்று பார்த்தீரா? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பீரா? செய்தியாளர் களையும் செஞ்சிலுவைச் சங்கத் தினரையும் தொண்டு நிறுவனத் தினரையும் அய்.நா. பணியாளர் களையும் அத்தனைப் பேரையும் வெளியே அனுப்பி விட்டு இராசபட்சர் நடத்தியது சாட்சி யில்லாத போர் என்றும், புதுமக் கால வரலாற்றில் இதுவே இவ்வகையில் முதல் போர் என்றும் உலக ஊடகர்கள் சொல்கிறார்களே, உம்மால் இதை மறுக்க முடியுமா?

11. எப்பக்கமும் சாராத ஊடகர்களைப் போர்ப் பகுதிக்குள் அனுமதித்து உண்மைச் செய்திகளை வெளியிட வழிவகை செய்யுமாறு இந்து சார்பில் நீர் சிறிலங்கா அரசைக் கோராதது ஏன்? சாட்சியில்லாத போரை நடத்திய இராசபட்சர் கும்பலுக்கு ஆதரவாக அவர்கள் வாந்தியயடுத்த பொய்களை அள்ளி விழுங்கி மறுவாந்தி எடுக்கிறீரே, இதுதான் உம் ‘பத்திரிகா தர்ம’மா?

12.   இராசபட்சரின் தயவில் முகாம் பார்க்கச் சென்று நீர் சந்தித்த தமிழ் மக்களில் யாரேனும் புலிகள் தம்மை மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்ததாக உம்மிடம் சொன்னார்களா?

13.       புலிப்படை பொது மக்களை மனிதக் கேடயமாய்ப்  பயன்படுத்தியதாக நீர் திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுவது அம்மக்களை சிங்களப் படை கொத்துக் கொத்தாய்க் கோரப் படுகொலை செய்த உண்மையை மறைப்பதற்குத் தான், மறைக்க முடியாத போது நியாயப்படுத்துவதற்குத்தான் என்கிறோம், உம்மால் மறுக்க முடியுமா?

14.     மூன்று இலட்சத் துக்கு மேற்பட்ட மக்களை வதை முகாம் களில் அடைத்து வைத்துத் துன்புறுத்தி இழிவுபடுத்திக் கொண்டி ருப்பது,  ஈழப் போராட்டம் மீண்டெழாமல் தடுக்க இராசபட்சரின் அரசு செய்யும் முயற்சிதான் என்பதை உம்மால் மறுக்க முடியுமா? ஈழ மக்களை நேசிப்பவர்கள் சிங்கள ஆட்சியாளர் களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற வேண்டுகோள் பிறந்திருப்பது ஏன் என்று புரிகிறதா? சிங்கள அரசு ஈழப் போராட்டத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக இம்மக்களைப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளது என்று இதிலிருந்து விளங்க வில்லையா? இப்போது சொல்லுங்கள், அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவது புலிகளா, சிங்கள அரசா?

15. போரின் இறுதி நாள்களில் தங்கள் காப்பாளர் களிடமிருந்து தப்பி நந்திக் கடலைக் கடந்து அஞ்சி நடுங்கி ஓடிவந்த, ஆண்கள், பெண்கள், குழந்தைகளின்படங்களைப் பார்த்ததாகச் சொல்கிறீரே, அந்த அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் சிங்களப் படை நிகழ்த்திய படுகொலைகளே காரணம் என்று தெரியாதா உமக்கு? தங்கள் காப்பாளர்கள் புலிகள் அல்ல, இராணுவத்தினரே என்று நம்பித் தான் அம்மக்கள் வந்தார்கள் என்றால், அடுத்தடுத்துப் போர் நடைபெற்ற ஒவ்வொரு பகுதியி லிருந்தும் அவர்கள் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? புலிகள் போகட்டும் என்று அவர்கள் இராணுவத்தின் பாதுகாப்பிலேயே தங்கியிருக்கலாமே?

16.   இறுதிக் கட்டத்தில் போர்ப் பகுதியில் தங்கி நின்று செய்தி சேகரித்து அனுப்ப சிறிலங்கா அரசால் அனுமதிக்கப் பட்ட அயல்நாட்டு ஊடகங்கள் இந்து/ஃபிரண்ட்லைன், அனைத்திந்திய வானொலி/தூர்தர்சன் மட்டுமே என்று உங்கள் செய்தியாளர் முரளிதர் ரெட்டி ஃபிரண்ட்லைனில் (2009 சூன் 5 மற்றும் 19) எழுதியுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவோடு இணைந்து (பொதிந்து- embedded) நின்று தாம் திரட்டிய செய்திகளை அவர் ஃபிரண்ட்லைன் எட்டின் சூன் 5 இதழில் இறுதித் தாக்கு (Final Assault) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரையை நீரும் படித்திருப்பீர். புதிய பாதுகாப்பு வளையம் (NSZ) என்றும், சூடில்லா வளையம் (NFZ) என்றும் அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் சாதாரணப் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பாவித்ததாகவும், இது வாக்கு மீறிய செயல் என்றும் முரளிதர் எழுதியதை நீரே வெளியிட்டுள்ளீர். போர் முனையில் இறுதிக் கட்டத்தில் செய்தி திரட்ட அனுமதிக்கப்பட்ட ஒரே ஓர் அச்சு ஊடகரான உம் ஆளே இப்படி வெளிப்படையாகப் போட்டு உடைத்த பிறகும், மான வெட்கமின்றி ‘மகிந்தாராதனை’ செய்கிறீரே, ஃபிரண்ட்லைன், படிக்கிற தமிழன் சுரணையற்றவன் என்ற  நினைப்பா?

17.      எழுபதுகளில் புலிகள் இயக்கத்தின் பயணம் ஒரு வகையான விடுதலை அரசியல் நோக்குடனும், இலட்சிய வேட்கை யுடனும் கூட தொடங்கியது என்றும், பிற்காலத்தில் அது மனித உயிரையும் நல்வாழ்வை யும் மதிக்காமல் போல் பாத்திய இயக்கமாகி விட்டது என்றும் சொல்கிறீர். புலிகள் இயக்கத்தின் தொடக்க கால விடுதலை அரசியல் நோக்கத்தையும் இலட்சிய வேட்கையையும் நீர் போற்றுவது உண்மையயன்றால், புலிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறேன் என்று அறிவிப்பீரா? அது கூட வேண்டாம், எதற்கு எதிராகப் புலிகளின் விடுதலை நோக்கும் இலட்சிய வேட்கையும் பிறந்தனவோ அந்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கவாவது செய்வீரா?

18.    படையியல், அமைப்பியல் மேதை என்று பிரபாகரனைப் புகழ்கிறீர். ஆனால் நோக்கம் வழிமுறையை நியாயப்படுத்தும் என்ற கொள்கை யைக் கடைப்பிடிக்கும் கொடுங் கோலராக அவர் மாறிப் போன தற்காக வருத்தப்படுகிறீர். ‘பயங்கரவாத  ஒழிப்பு’ என்ற பெயரில் விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிப்பது என்ற நோக்கத்தை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனைப் பொதுமக்களை வேண்டு மானாலும் படுகொலை செய்யலாம் என்ற கொள்கையை இராசபட்சர் கடைப்பிடிக்க வில்லையா? நீரே உமது இந்து (2007 திசம்பர்1) ஆசிரியவுரையில் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காண பிரபாகரனை ஒழித்துக் கட்டப் பரிந்துரைத்தீரா, இல்லையா? நோக்கத்துக்கேற்ப வழிமுறையை வகுத்துக் கொள்ளும் உரிமை இராசபட்சருக்கும் உமக்கும் உண்டு, பிரபாகரனுக்கு மட்டும் இல்லையா?

(குறுக்கு விசாரணை தொடரும்)

Pin It