“தமிழ் ஒளி இறந்துவிட்டதாகக் கூறினார்களே! இதோ அந்தக் கவிஞர் உயிருடன் இருக்கிறாரே! சஞ்சீவி அவரை உயிர் பிழைக்க வைத்துவிட்டாரே!”
தோழர் செ.து.சஞ்சீவி தமது கடமையாக, கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளைத் திரட்டி முதல் நூலை அச்சிட்டு வெளியிட்ட போது, கவிஞரின் நெருங்கிய நண்பர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு இப்படிக் கூறினாராம். இந்த மாதவி காவியத்தைப் படித்தபோது நாமும் அவ்வாறு கூற வேண்டும் போல இருக்கிறது.
1957-58 ஆண்டு வாக்கில் இந்தக் காவியத்தை வடித்து அதனை நூலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பற்பல பதிப்பகங்களுக்கும் அலைந்து திரிந்து அலுத்துப் போய் விட்டார். யாரும் வெளியிட முன்வராத இந்தக் காவியத்தைத் தானே வெளியிடுவதாகக் கூறி அதற்குரிய தொகையையும் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டார்.
தம் புலமையால் உருவாக்கப்பட்ட படைப்புகள் உடனடியாக அச்சுவடிவம் பெற்று மக்களிடம் பரவ வேண்டும் என்னும் நோக்குடையவர் கவிஞர். அவை நடவாதபோது எரிச்சலுடன் அந்தப் படைப்புகளைக் கிழித்து எறிந்து விடுவதும் உண்டு. இதனையறிந்த சஞ்சீவி இந்நிலை மாதவி காவியத் துக்கும் வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் அதனை வாங்கி இத்தனை காலம் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். 1995ஆம் ஆண்டு முதல் பதிப்பும், 2003ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2010 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்துள்ளன.
சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியான மாதவியின் கதைப் பகுதியே மாதவி காவியமாகியுள்ளது. இதைப் படித்து முடித்த போது பிரமிப்பும், வியப்புமே மேலிட்டது. இப்படியும் ஒரு மாகவிஞன் இந்தக் காலத்தில் வாழ்ந்து மறைந்து போனானா? அவனை அடையாளம் காணமுடியாத தமிழ்நாட்டை என்னென்பது?
கவிஞனுக்குப் பிறப்பு மட்டுமே உண்டு, இறப்பு என்பதே கிடையாது, அவன் எப்போதும் வாழ்கிறான். அதனால்தான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்.
“தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவ தில்லை
தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்த துண்டோ”
என்று கேட்கிறான்.
“நான் நிரந்தமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை”
என்று கவிஞர் கண்ணதாசன் பிரகடனம் செய்கிறான்.
“வஞ்சக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா - எனில்
செஞ்சொற் கவிஞன் காலனை வென்று
சிரிப்பது இயற்கையடா”
என்று கவிஞர் தமிழ்ஒளியே பாடுவதும் அவனுக்கும் அப்படியே பொருந்துகிறது.
இந்தக் காவியத்துக்குப் பேராசிரியர் பூவண்ணன் அளித்துள்ள அணிந்துரை நல்ல அறிமுகமாகிறது. தலைப்பு : ‘காலனை வென்ற கவிஞர் தமிழ் ஒளி’ மிகச் சரியானது என்று கூறவும் வேண்டுமோ?
“இருபதாம் நூற்றாண்டில் கவிதை சிறக்காது; காவியம் பிறக்காது” என்று மேனாட்டுத் திறனாய் வாளன், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படிக் கூறினான். உலக மொழிகள் பலவும் இக்கூற்றைத் தொடர்ந்து பொய்யாக்கி வந்தன. இதோ கவிஞர் தமிழ் ஒளியின் ‘மாதவி காவியம்’ அதே பணியைச் செய்கிறது. ‘காவியம் பிறக்கும், சிறக்கும்’ என்பதை மெய்ப்பிக்கிறது. இவ்வாறு பேராசிரியர் பூவண்ணன் மாதவி காவியத்துக்கும், தமிழ் ஒளிக்கும் அரண் செய்கிறார்; படிப்பவர் களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்.
காவியத்துக்குச் சிறப்புப் பாயிரம் பேரா. வல்லம் வேங்கடபதி. ‘மாதவி காவியம் - ஆடும் தெய்வ அழகு சமுத்திரம்’ என்கிறார். அணிந்துரையும், சிறப்புப் பாயிரமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது; ஆய்வுக்கு ஆய்வு செய்கிறது.
‘மாதவி காவியம்’ மூன்று காண்டங்களும், 27 காதைகளும் கொண்டது. புகார்க் காண்டம், பட்டினக் காண்டம், துறவுக் காண்டம் என்று மூன்று காண்டங்களுக்குள்ளேயே மாதவியின் கதை முடிந்துவிடுகிறது. ஆசிரியரே ‘கதையும் கருத்தும்’ என்று கதைச் சுருக்கத்தை 35 வரிகளில் தந்து விடுகிறார்.
மரபுக் கவிதையில் பாவினங்களுக்குக் குறைவா, என்ன? அழகிய சந்தங்களை அள்ளித் தெளிக்கிறார்; எதுகையும், மோனையும் காவியத்தில் இடம் கேட்டுத் தவிக்கிறது. இதனைத் தமிழுலகம் இதுவரை கண்டு கொள்ளாதது வேதனையளிக்காதா?
“நீலமாய் கவிந்து வெள்ள
நீரெனப் பொலிந்து தோன்றும்
கோலமாய் வளைந்த கடல் மேலே - ஒளி
கொண்டுவரு கின்றகதிர் வேலே”
என்று ‘ஞாயிறு வணக்கம்’ கூறிக் காவியம் கம்பீரமாகத் தொடங்குகிறது.
“உளங்கோயில் என்றிருக்க
ஒருகடவுள் வாழ்கின்றார்
இளங்கோ அவர் புகழை
இன்றுநாம் பாடுதுமே!”
என்ற வாழ்த்துப் பாடலில் மூலநூலாகிய சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவன் புகழை நன்றியுடன் பாடுகிறார்.
பூர்வ காதையில் ஊர்வசியின் மரபில் வந்த மாதவியின் அழகும், ஆட்டமும் சந்தங்களில் துள்ளி விளையாடுகின்றன.
“தாழ்ந்தகுலம் உயர்ந்தபுகழ்
தவளநகை பவளஇதழ்
வீழ்ந்தஇடை எடுத்தநடை
விரிந்தவழி சரிந்தகுழல்”
என முரண்தொடையமையப் பாடுகிறார்; முரண் பட்ட அக்காலச் சமுதாயத்தைச் சாடுகிறார்.
பாணன் மாதவியைப் பார்த்து வியக்கிறான்; அவளது அழகையும், ஆட்டத்தையும் கோவலனிடம் கூறித் தொடர்புக்கு வழி வகுக்கிறான்.
“பாதங்கள் பாதங்கள்நடை
பயிலும்! பதஞ் சிலம்பு
பயிலும்! பயிலும் மயிலும்!
வேதங்கள் வேதங்கள் இனி
விளையும்! மாதவி யென்ற
விண்மகள் மண்மகள் என்றதால்”
மாதவியின் அரங்கேற்றம் காண மக்கள் வந்தனர்; கோவலனும் வந்தான்.
“தேடினர் ஓடினர் வந்தார்
தேரினர் ஊரினர் வந்தார்
ஆடினர் பாடினர் வந்தார்
ஆடிடம் நாடி நடந்தார்”
ஆடற்காதையில் மாதவியும், தோரி மகளிரும் பாடுகின்றனர். இறைவனை வாழ்த்தாமல் எக்கலையும் தொடராதே!
“கங்கை பொங்கும் சடைய னாரைக்
காலன் அஞ்சும் விடைய னாரை
மங்கலந் துலங்க இன்று
பாடுவோம் - புகழ்ந்
தாடுவோம் - உமை
பங்கனின் கழற்சிலம்பு
பாடுவோம்!”
ஆடற்கலையையும், பாடற்கலையையும் பிரிக்க முடியுமா? இதோ பாடலும் ஆடலும்,
“மயில் எனப் புள்ளிப் புள்ளி
மான் எனத் துள்ளித்துள்ளி
குயில் எனக் கள்ளிக் கள்ளி
குரல் இசைத்தாள் - ஒரு
குழல் இசைத்தாள் - தமிழ்ப்
பதம் பிடித்தாள் - அபி
நயம் பிடித்தாள்
இந்த ஆடலிலும் பாடலிலும் மனதைப் பறி கொடுத்தான் கோவலன். தனக்காகவே காத்திருக்கும் கண்ணகியை மறந்துவிட்டு மாதவியிடம் போய்ச் சேர்ந்தான் கோலவன். அதனை ஒரு வெண்பாவில் வடிக்கிறார் கவிஞர்.
“தேர்மறந்தான் ஊர்மறந்தான் தெய்வ மனைமறந்தான்
நீர்மறந்த கெண்டை நிலையுற்றான் - ஏர்புனைந்த
காளைபின் செல்லும் கலப்பையே போன்றான்காண்
வேளை எவன்வென்ற வன்”
கூனி கோவலனைக் கொண்டுவந்து மாதவியிடம் கூட்டி விட்டாள். கோவலனும், மாதவியும் காதல் மயக்கத்தில் இருப்பதையறிந்து நற்றாய் கூறுவதாக ஒரு பாடல்.
“கூனி அக்கா வாடி
குறுக்கே நமக்கென்ன?
தேனில் விழட்டும்!
தினைமா” என்றாள் நற்றாய்!”
தலைவன், தலைவியின் புணர்ச்சிக்குத் தேனையும், தினைமாவையும் உவமையாக்கும் அழகே அழகு. இதுமட்டுமா?
“வெள்ளமும் வெள்ளமும்போல்
வேனிலும் தென்றலும்போல்
உள்ளமும் உள்ளமும்போய்
ஒன்றிட ஒன்றலானார்”
இவ்வாறு ஏராளமான உவமைகள் காவியம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இதற்கிடையில் மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடுகிறார். புகார் நகரைப் பூதம் காப்பதாகக் கூறப்படுவதைப் பரிகசிக்கிறார். பூதத்தைத் தொழுபவர் புகழையும் இழப்பர் என்று பாடுகிறார்.
“மாதவி நகைக்க மாலை
வயந்தியும் நகைத்தனள்” ஆம்!
பூதத்தை வணங்கு வார்தம்
புகழையும் இழப்பர்” என்றாள்.
இராமாயணத்தில் ஒரு கூனி; இங்கும் ஒரு கூனி. இருவருமே தீமையின் உருவகங்கள்.
“ஆசையும் பொய்யும் ஒன்றாய்
அழுத்திய உருவம் பெற்றாள்!
வேசையர் உள்ளத் திற்கோர்
விளக்கெனும் விளக்கம் பெற்றாள்”
தமிழ்நாட்டின் அன்றும், இன்றும் மதவெறிக்கு இடம் இல்லை. சமய நல்லிலக்கணம் அன்று எப்படியிருந்தது என்பதற்கு ஒரு பாடல்.
“சமணவர், சைவர், புத்தர் எலாமும்
சந்திக்கின்ற இடம்
அமைதி நிரம்பும் தமிழ்நா டெ”ன்றான்
அன்பன் கோவலனே!”
பின்னர் மாதவியும், மணிமேகலையும் புத்த மதத்தைத் தழுவப் போகின்றனர். இதற்கு முன் கூட்டியே அறவண அடிகளை அறிமுகம் செய்கிறார். அவர் மூலம் 48 குறள் வெண்பாக்களில் அறக் கருத்துகளை அடுக்குகிறார்.
“மனங்காத்துக் கொள்வோன் மனிதன்! அவனே
சினங்காத்தற் செய்யும் திரு”
என்பது ஒரு சோறு பதம். காவியத்தின் இறுதியில் விதி விளையாடுகிறது; விளையாட்டு வினையாகிறது. மாதவியை விட்டுப் பிரிகிறான் கோவலன். இதனை ஓரு இசைப் பாடலாகவே வடிக்கிறார் கவிஞர்.
“வேடிக்கை வினையாவ துண்டோ? - வெறும்
வேடிக்கை வினையாவ துண்டோ?
மூடிக்கை திறந்திட்டால் முடமாவ துண்டோ?
வேடிக்கை வினையாவ துண்டோ?
கோவலனின் பிரிவையாற்றாத மாதவியின் உள்ளம் யாழிசையுடன் மோதிக் குமுறிப் பாடுகிறது.
“யாழிற் பிறந்த இசை
யாழிற் பிறந்த இசை
ஊழிற் பிறந்த இசையோ? - வெறும்
பாழிற் பிறந்த இசையோ?”
கோவலன் பிரிவிற்கு யாழ் என்ன செய்யும்?
“போனார் உனைப் பிரிந்து
கானா றெனக் கடந்து
மானார் மொழி வெறுக்க
லானார் - இரை
ஆனார் வழிதொடர்ந்து
கூனார் கொடும் விதிக்கு
நானார் எனைவெறுக்க
லானார்...”
இவ்வாறு கவிஞர் எதுகைகளை அடுக்குகிறார். எதுகைகளும் மோனைகளும் இவரிடம் கெஞ்சு கின்றன. எதை எடுத்துக்கொள்வது என்று தடுமாறுகிறார்.
“சின்னக் கணிகை எனத் தோன்றிக் கோவலன்
சொன்ன கருத்தில் துயரெய்தி - அன்னந்தன்
காதலன் வீழக் கடுந்துறவை மேற்கொண்டாள்
மாதவியும் மாதவமும் காண்”
என்று காவியம் நிறைவடைகிறது.
“இவ்வளவு பெரிய ஒரு கவிஞன் என் காலத்தில் என் அருகே வாழ்ந்த போதும், அவன் பெருமையை அறிந்துகொள்ளாமல் எப்படி இருந்துவிட்டேன் என்று நான் அங்கலாய்த்தேன். அவருடைய வாழ்க்கை ஒரு சோக நாடகம் என்று நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறினர். ஆனால் அவர் கவிதை சோக நாடகமன்று. தொழிலாளர் உலகுக்கும், இலக்கிய உலகுக்கும் அது பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகும்...” என்பது பன்மொழிப் புலவர் டாக்டர் கா.அப்பாத்துரையாரின் மணிமொழியாகும்.
இது தனிமனிதரின் மொழியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுவே தமிழ்கூறு நல்லுலகத்தின் ஒப்புதல் வாக்குமூலம். ‘மாதவி காவியம்’ - தமிழ் ஒளி இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை உறுதி செய்கிறது.
கவிஞர் தமிழ் ஒளியின் மாதவி காவியம்
நூல் கிடைக்குமிடம் :
புகழ்ப் புத்தகாலயம்,
48, பிள்ளையார் கோயில் தெரு,
செனாய் நகர், சென்னை - 600 030
விலை : ரூ. 120/-