கடந்த இதழ் தலையங்கத்தில் ஆதர்ஷ், மைசூர், ஸ்பெக்ட்ரம் ஊழல்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். நூல் வெளியீடுகள் - விமர்சனம் பற்றி எடுத்துக்கூறும் இதழுக்கு ஊழல் பற்றி ஏன் நாட்டம் என வினா எழுவது இயல்பு. ஆனால் பொருளா தாரமே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதை ஏற்ற இவ்விதழ் நாட்டில் நடைபெறுவன பற்றி வேடிக்கை பார்க்கும் அளவில் நின்றுவிட முடிய வில்லை. காரணம் இந்த இதழ் நடத்தும் என்சிபிஎச் என்னும் பேரமைப்பு புதியதொரு சமத்துவ, சோசலிச சமுதாயம் நாட்டில் உருவாக அரும்பணியாற்றும் அமைப்பு. இந்த அடிப்படையிலிருந்துதான் மகத்தான இலட்சியங்கள் நாட்டின் உயர்வுக்காகப் போராடும் போது நம் முன்னோர்கள் கண்ட கனா, இலட்சியம் எவ்வாறு சிதைந்து உருக்குலைந்து காட்சி தருகின்றன என்பதனைக் கண்டும் காணாமல் இருக்க முடிய வில்லை.

நாம் தலையங்கத்தில் நாடு முழுவதிலும் பல் வேறு மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளும், அரசுகளும் (இடதுசாரி அரசு தவிர) ஊழலில் திளைத்து, வளர்ந்து இந்தியச் சமுதாயத்தை அலைக் கழித்து வருகின்றன என்று குறிப்பிட்டோம்.

கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களும் ஊடகங்களும் இவற்றை உண்மையென உறுதி செய்து வருகின்றன. பண்டைக் காலத்தில் ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர் போர்வெறி கொண்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சூறையாடிக் கொன்று குவித்தனர் என்பதனை ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டின் வரலாறும் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் மக்களாட்சி ஜனநாயகம் என்னும் பேரால் இன்று இந்திய நாட்டில் நடைபெற்று வரும் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் இணையே இல்லை.

ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் இந்த அளவில் எந்த நாட்டிலாவது இதுவரை நடைபெற்று இருக்குமா என்று சிந்தித்துப் பார்க்கவே மனம் கூசுகிறது. காரணம் இந்த ஊழலுக்கு ஒப்பானது எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் நடந்ததில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முன் அதற்குக் காரண மாயிருந்த தமிழகம் சார்ந்த அமைச்சர் பெரு மகனார் பதவிபெற பெரிய மனிதர்களிடையே நடந்த இரகசிய உரையாடல்கள் பதிவு செய்யப் பட்டு இப்பொழுது அம்பலமாகியுள்ளன. இச் செய்தியை எப்படி வெளியிடலாம் என ஒரு பெரிய மனிதர் தன் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றம் நாட இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இது சட்ட சம்பந்தப்பட்டதனால் ஏதும் கூற விரும்பவில்லை. மேலும் கூறுவது பயனில்லை.

ஒரு நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அந் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, சமய இலக்கியம், மொழி போன்ற பிரச்சினைகள் பற்றி நல்ல முடிவெடுத்து நாட்டு மக்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் கடமையும் உள்ளது. அறுபதாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டம் இந்தியர்களாகிய நாமே நமக்கு இதனை வழங்கிக் கொள்கிறோம் என்று பிரகடனம் தொடங்குகிறது.

அது மட்டுமல்லாமல் பாராளுமன்றம் சோசலிச பாணி சமுதாயத்தைப் படைப்பதை இலட்சியமாகக் கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. இந்தப் பின்புலத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்னும் கேள்வி எழுகிறது. இந்த இலட்சியத்தை நெருங்கு கிறோமா அல்லது பின்னடைந்துள்ளோமா என வினா எழும்போது நாம் பின்னடைந்ததோடல்லாமல் சரிந்து வீழ்ந்துள்ளோம் என்பதைத்தான் அனுபவம் காட்டுகிறது.

நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்திய தேசிய காங்கிரஸ் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு கண்ட கனா, இலட்சியங்கள், அரசியல் சட்டம் தீட்டும்போது அண்ணல் அம்பேத்கர் நிலைநாட்ட விரும்பிய விழுமியங்கள் யாவும் இன்று சிதைக்கப்பட்டுவிட்டன. இந்த அவலப்போக்குக்கு இந்திய தேசிய காங்கிரஸ் தான் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களையும், பிற அரசியல் கட்சிகளையும் நன்னெறியில் கொண்டு செலுத்த இந்தப் பேரியக்கம் பாடுபட்டிருக்க வேண்டும். முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் தனிமனித ஆதிக்கம், முதலாளித்துவ சார்பு நிலைப்பாடு, தற்சார்பு நிலை விடுத்து அமெரிக்கச் சார்புநிலை எடுத்தல், பொதுத் துறையை நிர்மூலமாக்கித் தனியார்த்துறையை வளர்த்தல், அதிகார வர்க்கத்தின் ஆணவ வீம்பு, மக்கள் நலனைப் புறக்கணித்தல், அதேபோது வாக்கு வங்கிகளைச் சாதி, இனம், மதம் என்பனவற்றின் பெயரால் பிளவுபடுவதை ஊக்குவித்தல் என்னும் சமூகத்தீங்குகள் பெருகுவதற்கு இக்கட்சி கடைப் பிடித்து வரும் கொள்கைகளே காரணம்.

பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்னும் சாதிகள் பின்னால் ஒளிந்து கொள்ளையடித்துச் செல்வம் சேர்த்தல், காவல்துறை தீங்கிழைத்தோர் கைப்பாவையாகித் தடுமாறுதல், கொலை கொள்ளை என்பன பல்கிப் பெருகி இந்த நாட்டை அழித்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கிய பொறுப் பேற்க வேண்டியது இந்திய தேசிய காங்கிரஸ். காந்தி நேரு கண்ட வழியில் மக்களின் நலன்களுக் காக மக்களோடு மக்களாக வாழ்ந்து உழைத்தல் கைவிடப்பட்டது. 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படும் கொந்தளிப்புக்கும் எழுச்சிக்கும் இக்கட்சி சரியான கொள்கை அடிப் படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதே காரணம்.

இப்பொழுது அஸ்ஸாம் காங்கிரஸ் அரசு பல கோடி ரூபாய் ஊழலில் சிக்கியுள்ளதாகச் செய்தி.

ஒருகாலத்தில் அரசு அதிகாரிகள் வீடு, நிலம், சொத்து வாங்கும் முன் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும் என்னும் கடுமையான விதி இருந்தது. ஆனால் ஐம்பதாண்டுக் காலமாக இத்தகைய விதிகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. இதனால் அதி காரிகள் எத்தகைய அட்டூழியங்களிலும் ஈடுபடலாம் என்ற உரிமையைச் சிறிதுசிறிதாகப் பெற்றுவிட்டனர்.

இந்த இதழாசிரியர் ரிசர்வ் வங்கியில் பணி புரிந்தபோது அதிகாரிகளுக்குக் கடுமையான விதிகள் இருந்தன. பி.சி.பட்டாச்சாரியா ரிசர்வ் வங்கி கவர்னராயிருந்தபோது அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கச் செயலாளராயிருந்த யான் சங்கத் தலைவர் வி.ஜி.ராவ் தலைமையில் அவரைச் சந்தித்து ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பைச் சட்டம் வழங்கிய தனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும், பிற வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரினோம். அதனை ஏற்று உயர் நிர்வாக அதிகாரிகளுக்குப் பம்பாயிலும், இடைநிலை அதிகாரிகளுக்குச் சென்னையிலும், எழுத்தர்களுக்கு ஐந்து முக்கிய நகரங்களிலும் பயிற்சிக் கல்லூரிகள் ஏற்படுத்தினார். அப்பொழுது மேல்தட்டு அதிகாரிகள் இச்செயல் சங்கத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்டது என்று சாடினர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பம்பாயிலிருந்து அதே அதிகாரிகள் சென்னைக்கு வந்து வகுப்பெடுக்க வாராவாரம் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பம்பாயிலிருந்து குடும்பத்துடன் வந்து கல்லூரி விடுதியில் தங்குவார்கள். வகுப்பெடுத்தபின் சிலர் குடும்பத்துடன் குருவாயூர், திருப்பதி, சிதம்பரம், மதுரை கோயில்களுக்குச் செல்வார்கள். வேறு சிலர் குடிப்பதற்காகப் பாண்டிச்சேரி செல்வார்கள். நல்ல திட்டம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது. இது என் அனுபவம். தொழிற்சங்க இயக்கத்திலிருந்த போது இந்த அவலப்போக்கை நான் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. என்றாலும் அன்று தொடங்கிய இத்தகைய தீயபோக்கைத் தடுத்து நிறுத்த முடியவே யில்லை.

இதுபோலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கி களின் நிலைமையும். தனியார் வங்கிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. வங்கி அதிகாரிகள் கூடுமானவரை நேர்மையானவர்கள் என்னும் எண்ணம் ஒருகாலத்திலிருந்தது. ஜவகர்லால் நேரு உயிருடன் இருந்தபோது ரிசர்வ் வங்கியும், உயர்நீதி - உச்ச நீதி மன்றங்களும் ஊழலுக்கு அப்பாற் பட்டவை எனச் சொன்னதாக நினைவு.

இன்று ஊழல் தகராறுகளில் குறிப்பாக நில மோசடி என்னும் சமூகத் தீங்குகளுக்கு அவர்களே நடுநாயகமாயிருப்பது பற்றி இன்றைய நாளேடுகள் செய்திகள் தாங்கி வருகின்றன. ஆயுள்காப்பு நிறுவனம் முந்திரா ஊழல் முதல் இன்றளவும் ஊழல் குற்றச் சாட்டிலிருந்து தப்பியதில்லை.

ஒருகாலத்தில் வங்கியில் பணியில் சேர்பவர்கள் இல்லங்கள், கடைகள்தோறும் ஏறி இறங்கி வைப்பு நிதிகள் சேகரிப்பது வழக்கம். சேகரித்த தொகைக் கேற்பப் பணி வழங்குதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு கிடைக்கும். வங்கி ஊழியர் இயக்கம் இந்த இழிநிலையைப் போக்கி, முறையான சம்பள விகிதம், பதவி உயர்வு போன்ற உரிமைகளைப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களே வலியச் சென்று உதவி நாடினாலும் வங்கி ஊழியர்கள் அவர்களைத் தலைநிமிர்ந்து ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். என்னும் புகார்கள் நாளிதழ்களில் வருகின்றபோது நாணித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. விலக்கானவர்கள், நல்லவர்கள் சிலர் இன்றளவும் உள்ளனர் என்பது உண்மை. இவர்கள் பாராட்டப் பட வேண்டியர்கள்.

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன. இமயம் முதல் குமரி வரை பணிபுரியும் அரசு சார்ந்த அதிகாரிகளைப் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. இவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலன்களைப் புறக்கணித்து ஊழலிலும் பொருளாதார சீர்கேடுகளிலும் ஈடுபட்டு நாட்டைப் பாழ்படுத்தி வருகின்றனர். எங்கோ ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அவை விதிவிலக்குகளே தவிர விதிகள் அல்ல. அதிகாரவர்க்கம் முடைநாற்றம் எடுத்துப் போயுள்ளது.

அஸ்ஸாம் முதல் கன்னியாகுமரி வரை - பம்பாய் முதல் கன்னியாகுமரி வரை அரசுகள் ஊழலில் சிக்கி நாட்டைச் சீரழித்து வருகின்றன.

அண்மையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலக நேரிட்டால் காங்கிரசுக்குத்தான் இழப்பு எனத் துணிந்து சூசகமாகப் பேசியதிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆழமும் அகலமும் சற்றேனும் விளங்கும். இந்த எச்சரிக்கை ஓருண்மையைத் தெளிவுபடுத்து கிறது. அதாவது பாராளுமன்றக் கூட்டு விசாரணைக் குழுவை அமைக்க காங்கிரஸ் நடுவண் அரசு ஏற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறது என்னும் ஐயப்பாட்டுக்கு வழிவகுக்கிறது.

பாரத நாடு பழம்பெரும் நாடு ஈடிணையில்லை இதற்கு எனச் சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களைச் சுதந்திர வேட்கை கொண்டு உணர்வு பூர்வமாகத் தட்டியெழுப்பிய பேரியக்கம் இந்திய தேசிய காங்கிரஸ். இன்றைய காங்கிரஸ் தொண்டர்களுக்கு நாட்டங்கள் வேறு, தலைவர் களுக்கு இலக்குகள் வேறு. ஒவ்வொருவரும் தனிக் கட்சியாக சுயநலத்துடன் இயங்குவது வெளிப்படை.

வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் கல்வி வசதியின்மையும் பல்கிப் பெருகி வருகின்றன. வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் உடைமை வர்க்கங்களின் ஏகபோக உரிமைகள் ஆகிவிட்டன. ஜனநாயக இயக்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் இன்று சாதிச் சங்கங்களாகிப் பணம் குவிக்கும் தலைமையின் ஏகபோகச் சொந்தங் களாகி விட்டன.

இந்தப் பின்புலத்தில் இடதுசாரி இயக்கம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல் கோளாறுகளுக்குப் பிறகு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி என்று பிளவு பட்டதோ அன்றே தொடங்கிவிட்டது இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சி. பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவிருந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கோ தள்ளாடி நிற்கிறது. இந்துத்துவாவை அடிப்படை யாகக் கொண்ட மதவாத பாரதிய ஜனதா கட்சி இன்று பெரிய கட்சியாக வளர்ந்து பிரதான எதிர்க் கட்சியாகி நாட்டை அச்சுறுத்தி வருகிறது.

மார்க்சியத்துக்கு இரு கண்கள் உண்டு. முதலாவது வர்க்கப் போராட்டம். இரண்டாவது அதன் வழிப் புதிய சமுதாயத்தைக் கட்டி அமைப்பது. இன்று இந்தியப் பொதுஉடைமை இயக்கம் தொழிலாளி வர்க்கத்தை இழந்து நிற்கிறது என்பது முற்றிலும் உண்மை. நேற்றுப் பிறந்த காளான் கட்சிகள்கூடத் தொழிலாளி வர்க்கப் பிரிவை உருவாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கீழ்த் தரமான அரசியல், சாதி, சமயம் என்னும் பெயரால் பிளவுபடுத்த முடியும் என்பது உண்மை. இந்தப் பின்புலத்தில் இன்று இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் விழிப்புடன் இருந்து மக்களோடு வாழ்ந்து, தலைக்கனம் இறு மாப்பு ஏதுமின்றி எளிமையாக நேர்மையாக வர்க்க நோக்குடன் செயல்படவேண்டும்.

அண்மையில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கம்யூனிஸ்டுகள் மக்களிடமிருந்து பிரிந்து எட்டி நின்று ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்ற எச்சரிக்கை உரிய தருணத்தில் விடப்பட்டதாகும்.

ஆனால் என்று இந்தியப் பொது உடைமை இயக்கம் ஒரே கட்சி ஒரே கொடி ஒரே தலைமை என இயங்கத் தொடங்குகிறதோ அன்றுதான் இந்திய நாட்டில் மக்களிடை விழிப்புணர்ச்சி தோன்ற முடியும், இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும். இது “நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகத்”தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இல்லையேல் அபரிமித பலத்துடன் வளர்ந்துவரும் முதலாளித்துவ கார்ப்பொரேட் கம்பெனிகள் நாட்டை உண்டு விழுங்கிவிடும்

Pin It