வெற்றி என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு
தோல்வி செரித்தற்கரிய இழப்பு
கைநழுவிய வாய்ப்பு
மீளக் கிடைக்கலாம்
கைகழுவிப்போன கொடுப்பினை
என்றென்றும் இழப்புதான்
அது மரணத்தைப் போல
இறுதியானது.
மற்றவர்க்கு மாற்றித்தர இயலாதது.
படிக்கல்லான தோல்விகளைவிட
நடுகற்களானவையே ஏராளம்.
தோல்வி
துருவேறிய அம்பொன்றின்
முறிந்த நுனியை
இருதயத்தில் இறுத்திவிட்டுப் போகிறது
சடுதியில் பிடுங்கி எறிந்துவிட்டுப்போக
இதுவொன்றும்
காலில்தைத்த கருவேல முள் அல்லவே?
நினைவுகள் நெருடுகிற போதெல்லாம்
காயங்கள் கண்விழிக்கின்றன
இந்த ஊமைக்காயங்கள்
சாமக்கோடங்கிகள்
தலைக்கோழி கூவும்போதுதான்
தலைவிரி ஆட்டம் தளர்ந்து ஓய்கிறது
காலம் காயம் ஆற்றும் களிம்புதான்
அது அற்புதமானது
ஆனால் காயம்பட்டவன் ஆயுள் சொற்பமானது
மனிதன் எதையும் கடந்துசெல்வதில்லை
காலொடிந்த குதிரை
ஓடை தாண்டுவதெப்படி?

ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லும் வார்த்தைகள்
வெந்தபுண்ணில் ஈமொய்க்கும்
இம்சை
விட்டுவிடுங்கள்
சிங்கம் அதன் காயத்தைத்
தன் நாவாலேயே
நக்கிக் கொள்ளட்டும்
வெள்ளப் பெருக்கு
தன்வடிகாலைத் தானே தேடிக்கொள்ளும்
தனிமையும் தேடலுமே
தலைசிறந்த மருந்துகள்
தோல்வியுற்ற மனிதனிடம்
தத்துவங்கள் கூறாதீர்
முடிந்தால்
காகிதமும் பேனாவும் தாருங்கள்
அவர்கள் உங்களிடம் சொல்ல
ஏராளமாய் உண்டு
காத்திரமான கவிதைகள்.

- நவஜீவன்

Pin It