மே மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 85 கோடி இந்திய மக்களுக்கு மேல் ஆதார் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுக் காலகட்டத்திற்குள், ஆதார் அட்டை வாங்குவது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மூன்று முறையாவது கூறியிருக்கிறது. இருப்பினும் ஏன் அரசும் அரசு நிறுவனங்களும் மறைமுகமாக ஆதார் அட்டை வாங்குவதைக் கட்டாயமாக்க முயற்சி செய்கின்றன? இந்த ஆதார் அட்டையின் பின்னணி என்ன?

adhara card 600ஆதார் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் கீழ் வரும் திட்டம் தான் ஆதார். 2009 ஆம் ஆண்டு இந்தியக் குடிமக்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் தருவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் தனிப்பட்ட அடையாள திட்டம்.

2010 ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத் திற்காக, மக்களின் தனிப்பட்ட தகவல் சேகரிக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி கைரேகை பதிவுகள், கருவிழிப்படலம், விழித்திரை பதிவுகள் ஆகியவையும் சேகரிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் இதுபோன்ற தகவல்கள் சேகரிப்பது சட்டபூர்வமானதல்ல என்பதால் மாநிலங்களவையில் இதற்காக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது.

2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவால் இந்த மசோதா முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டது. இந்த நிலைக்குழுவில் அனைத்து கட்சியினரைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த மசோதாவை மீள்வரைவு செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்தது.

தொடக்கத்தில் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று கூறப்பட்டாலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிக்கையில், சமையல் எரிவாயு வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று கூறியது. இது போன்ற அறிவிப்புகளின் மூலம், ஆதார் அட்டை வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக உருவாக்கியது அரசு.

அப்பொழுது எழுந்த எதிர்ப்புகளினாலும், தன்னகத்தே இருந்த தயாரிப்பின்மையாலும் அதை சிறிதுகாலத்திற்கு ஒத்தி வைத்தது. இப்பொழுது மீண்டும் இதை முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகிறது அரசு. மகாராஷ்டிர மாநில அரசுதான் முதன்முறையாக ஆதார் அட்டையைக் கட்டாய மாக்கியது.

அம்மாநில அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் எண்ணுடன் இணைக் கப்பட்டிருந்தால்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது அந்த அரசு.

2012 ஆம் ஆண்டின் இறுதியில், இதுபோன்று பல்வேறு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கின. எடுத்துக்காட்டாக, புது தில்லி அரசின் வருமானத் துறை வெளியிட்ட ஆணையின் படி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், நாட்டின சான்றிதழ்கள் ஆகிய அனைத்திலும் ஆதார் எண் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி உதவித் தொகையும், மண்ணென்ணெய் மானியத் தொகையும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டது. பின்பு, மானியத் தொகை, உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்கு எண்களும் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. இதே விதிமுறை பல்வேறு மாவட்டங்களுக்கும், பின்பு நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது.

ஆதார் எண் கட்டாயம் தானா?

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இல்லை! அரசாங்க விதிமுறைகளின் படி ஆம்! அப்படியென்றால் அரசாங்கம் விதிமுறை மீறல் செய்கிறதா? ஆம். 2013 ஆம் ஆண்டிலேயே “ஆதார் அட்டை இல்லாததால் எந்தவொரு குடிமகனும் சிரமத்திற்குள்ளாகக் கூடாது” என்று தெளிவாக ஆணையிட்டது உச்சநீதிமன்றம். இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்திய நிதி அமைச்சகம் ஆகியவை சேர்ந்து இதற்கு எதிராக முறையீடு செய்தனர். தீர்ப்பு மாற்றப்படமாட்டாது என்றே கூறியது நீதிமன்றம்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொடுத்த ஒரு தீர்ப்பில், “ஆதார் அட்டை இல்லாததால் யாரும் தங்களுக்கு உரிய சேவைகள் பெறுவதில் இருந்து தடுக்கப்படக்கூடாது” என்று உறுதியாக கூறியது உச்சநீதிமன்றம்.

இது எதையும் காதில் போட்டுக்கொள்ளாத அரசு, ஆதார் அட்டை கட்டாயம் என்று கூறவில்லையென்றாலும், அரசின் அடிப்படை சேவைகள் பெறுவதற்கு இந்த அட்டை அவசியம் என்ற நிலையை உருவாக்கியது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள தன் யோஜனா திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சமையல் எரிவாயு மானியம் ஆகியவை படிப்படியாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த பொழுது, அரசின் இந்தப் போக்கு மனுதாரர்களால் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டது.

அப்பொழுது ”பல்வேறு அரச மையங்களால் ஆதார் அட்டை வலியுறுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இந்திய ஒன்றியமும், அதன் அங்கமான பல்வேறு மாநிலங்களும், அதன் அமைப்புகளும், செப்டம்பர் 2013 இல் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றது அந்நீதிமன்றம்.

நம்பகத்தன்மை

இத்திட்டத்தின் இயக்குனரான நந்தன் நிலேகனி இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, இத்திட்டம் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய ஒரு தளமாக செயல்படும் என்றும், பின்னர் பல்வேறு தரப்பட்ட திட்டங்களுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ்வரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தனிப்பட்டத் தகவல்களைச் சேகரிப்பதற்கு மட்டும்தான் சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும், அதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை வேறு திட்டங்களுடன் இணைக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இந்திய அரசிற்கு சொந்தமானதல்ல. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்திற்கே அது சொந்தமானது. இப்படியிருக்க, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் எந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தகவல்கள்

”ஏழை எளிய மக்கள் தங்களது அடையாளத்தைச் சரிவர நிரூபிக்க முடியாததாலேயே பல்வேறு மானியங்களில் இருந்தும் திட்டங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், ஏழை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கான தனிப்பட்ட அடையாள எண் கொடுக்கும் திட்டம் தான் இது” என்றெல்லாம் ஜாலம் காட்டுகிறது இந்த ஆணையம்.

ஆனால் என்ன நடக்கிறது?

மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், பயோமெட்ரிக் என சொல்லப்படும் உடல்ரேகை பதிவுகள் ஆகியவை பல்வேறு நிலைகளில், பல்வேறு தனித்துறை நிறுவனங்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற உடல்ரேகை பதிவுகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த தனித்துறை நிறுவனங்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவை.

இத்தனை கோடி மக்களின் தனிப்பட்ட கைரேகை பதிவுகள், கருவிழிப்படலம் மற்றும் விழித்திரை பதிவுகள் இதுபோன்ற நிறுவனங்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதில் பங்குபெறும் நிறுவனங்களில் சில, வேறு நாடுகளின் உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவையாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, எல்-1 என்ற நிறுவனம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. சாஃப்ரான் என்ற பிரஞ்சு நிறுவனத்தில் அந்நாட்டு அரசாங்கத்தின் பங்குகள் அதிகளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தகவல்களை வைத்து வருமானமீட்டும் திட்டம் இருக்கிறது என்றும் ஆணையமே கூறியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு இவ்வாணையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ”மக்களின் முகவரி மற்றும் உடல்ரேகை பதிவுகள் மூலம் ஆண்டுதோறும் 288.15 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புதிய மொபைல் போன் தொடர்புகள், பான் அட்டை, சமையல் எரிவாயு தொடர்பு, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு, காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வருமானம் ஈட்டப்படும்” என்று கூறி இருக்கிறது. ஆக, மக்களிடம் இத்திட்டம் முழுவதும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்று பொய் சொல்லி, அதேநேரத்தில் மற்ற அடிப்படை திட்டங்களுடன் (சமையல் எரிவாயு போன்ற) இதை இணைத்து மறைமுகமாக அவர்களைக் கட்டாயப்படுத்தி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதை தனியாருக்கு இலாபமாகவும் உருமாற்றித் தருகிறது அரசு.

தனிப்பட்ட அடையாளம்

இத்திட்டத்தின் முக்கியமான அம்சமாக குறிப்பிடப்படும் ‘தனிப்பட்ட அடையாளம்’ பற்றி குழப்பமே நிலவுகிறது. உடல்ரேகை பதிவுகளின் தனித்தன்மை முழுதாக நிரூபிக்கப்படவில்லை. பிரிட்டனில் 2010ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு தேசிய அடையாள அட்டை திட்டம் தொடங்கப்பட்ட போது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்ததால் பின்னர் கைவிடப்பட்டது.

கைரேகை பதிவுகள் ஒருவருடைய பணியைப் பொறுத்து மாற்றத்திற்கு உண்டாகலாம். குறிப்பாக கடுமையான உடல் உழைப்பு செய்பவர்களின் ரேகைகள் அழிந்துவிடவோ மாறிவிடவோ வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு நடந்தால் தன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை அவர் இழக்க நேரிடும். அப்படி அவர் அதை இழக்க நேர்ந்தால், தனக்கு உரித்தான மானியங்களையும், இன்னபிற சேவைகளையும் அவர் பெறமுடியாது போய்விடும்.

நேரடி பண பரிமாற்றம்

மானியங்களை நேரடியாகவே அரசிடம் இருந்து பெற்று வந்தோம் நாம். இப்பொழுது ஆதார் எண் வேண்டும், அது இல்லையென்றால் வங்கிக் கணக்கு வேண்டும். நாமே சந்தையில் (உ.தா. சமையல் எரிவாயு) வாங்க வேண்டும். மானியத்தொகையை அரசு நமது வங்கிக் கணக்கில் சேர்த்து விடும். இந்த சுற்று வழிக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர்தான் ‘நேரடி பண பரிமாற்றம்’.

இதன்மூலம் அரசு என்ன செய்ய முயல்கிறது? ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு மானியத்துடன் அடிப்படைத் தேவைகளைச் செய்து தர வேண்டியது அரசின் கடமை. அதைதன் கைகளில் இருந்து கழுவிவிட்டு, மக்களை நேரடியாக சந்தைக்கு செல்லுமாறு கூறுகிறது அரசு. இதன்மூலம் என்ன நடக்கும்? சந்தையை நம்பியே நமது வாழ்வு மாறிவிடும்.

பற்றாக்குறை அதனால் விலையேற்றம் என்று சந்தையின் விற்பனையாளர்கள் நாளை சொல்வார்கள். மானியம் இதற்கு மேல் உயர்த்த முடியாது என்று அரசு சொல்லப் போகிறது. இப்படியாக நமது வாழ்வும் உணவும் பறிபோகும். இதே போன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் அனைத்து சேவைகளும் நாளைச் சந்தைக்காக திறந்து விடப்படும்.

அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. குடும்ப அடையாள அட்டையும், ரேஷன் கடைகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது மகாராஷ்டிர அரசு. ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதிக்குள் வாக்காளர் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குள் இதுவரை 85 கோடி பேருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது தனிப்பட்ட அடையாள எண். மக்களின் வாழ்வே முதலாளிகளின் விளைநிலமும், வேட்டைக்காடுமாகும்.

Pin It