சத்தீஷ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் 6-4-2010 மத்திய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, மாவோயிஸ்டுகள், அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியதில் 76 பாதுகாப்புப் படையினர் இறந்தனர். இறந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இத்தாக்குதலில் எட்டு மாவோயிஸ்டுகள் மாண்டனர். ஒரே நாளில் 76 பாதுகாப்புப் படையினர் இறந்தது ஆட்சியாளர்களிடம் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. 76 பேரும் ஏழை  எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வயிற்றுப் பிழைப்புக்காகப் படையில் சேர்ந்தவர்கள். இவர்களின் சாவு அவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடியாகும். பண்ணையார்களின், பணக்காரர்களின், பெருமுதலாளிகளின் நலன்களைப் பேணுவதற்காகவே அரசு, இவர்களைப் பலி கொடுத்து வருகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காக இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

1967இல் மேற்கு வங்க மாநிலத்தில் நக்சல்பாரி என்ற ஊரில் பண்ணையார்களின் ஒடுக்கு முறைகளையும் சுரண்டலையும் எதிர்த்து விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஆயுதமேந்திப் போராடினர். “நக்சலைட்டுகள்”, “நக்சல் பாரி இயக்கம்” என்கிற சொற்கள் இதன் அடிப்படையிலே உருவாயின. இதுவே இன்று மாவோயிஸ்டு இயக்கம் என்று உருவெடுத்துள்ளது. நக்சல்பாரி இயக்கம் மேற்கு வங்காளத்திலிருந்து ஒரிசா, ஆந்திரம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்குப் பரவி வளர்ந்தது. கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்த விவசாயத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பண்ணையார்கள் கொடிய முறைகளில் ஒடுக்கி வந்தனர்.  விவசாயிகளை ஒன்று திரட்டி மாவோயிஸ்டுகள் பண்ணையார்களுக்கு எதிராகப் போராடினர். கொடிய வர்க்கப்பகைவர்களை அழித்தொழிப்பது என்பதை மாவோயிஸ்டுகள் கொள்கையாகக் கொண்டிருந்தனர். பல பண்ணையார்கள் கொல்லப்பட்டனர். பல இடங்களில் பண்ணையார்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன.

பண்ணையார்கள் தம் சொந்த குண்டர்படை, அரசு நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் துணையுடன் மாவோயிஸ்டுகளின் புரட்சியைக் கொடுமையாக ஒடுக்கினர். எனவே, பின்வாங்குவதும் மீண்டும் தாக்குவதுமான கொரில்லாப் போர் முறையை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர். 1984இல் இராசிவ்காந்தி பிரதமரான பின், தாராளமயப்பொருளாதாரக் கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இதனால் படிப்படியாக வேளாண்மை புறக்கணிக்கப்பட்டது. தொழில்துறையும், அதைவிட பன்மடங்கு இலாபம் தரும் சேவைத்துறையும் வேகமாக வளரத் தொடங்கின. இவ்விரு துறைகளின் முதலாளிகளுக்கு கனிமவளம் மிக்க பகுதிகளும், பெருமளவிலான நிலங்களும் தேவைப்பட்டன.

நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தி முதலாளியக் குழுமங்களுக்குக் கொடுத்து வருகிறது. இதனால் பல இலட்சம் மக்கள் தம் வாழிடங்களையும் தமக்கு “வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களையும் காட்டுப்பகுதிகளையும் விட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் மாவோயிஸ்டு களின் துணையுடன் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதை, “உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள்” என்று கூறி,  பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் அடக்கி ஒழித்திட முயன்று வருகின்றனர்.

மத்திய இந்தியாவில் உள்ள - முன்பு தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட அடர்ந்த காடுகள் நிறைந்த பெரும்பரப்பு தான், தற்போது மாவோயிஸ்டுகளின் முதன்மையான செயல்களமாக இருந்து வருகிறது. வங்காளத்தில் தொடங்கி ஒரிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட், மகாராட்டிரத்தின் ஒரு பகுதி, ஆந்திரத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் தண்டகாரண்யம் பகுதி. 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட, மலைகளும் அடர்காடுகளும் சூழ்ந்த இப்பகுதியில் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் பழங்குடியினர். இந்தியா என்கிற ஒற்றை அரசு உருவாவதற்கு முன்பிருந்தே இவர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

மாவோயிஸ்டுகள் பல பிரிவுகளாக இயங்கினர். ஆந்திரத்தை வலிமையான அடித்தளமாகக் கொண்ட மக்கள் யுத்தக்குழுவும் பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கர் பகுதிகளில் பரவியிருந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டு மய்யமும் இருபெரும் குழுகளாக இயங்கின. மாவோயிஸ்டுப் பிரிவினர் தமக்குள்ளேயே மோதிக் கொண்டனர். சகோதரயுத்தக் கொலைகள் நடந்தன. எனவே 2004ஆம் ஆண்டில், எல்லா மாவோவியக் குழுக்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) என்ற பெயரில் இணைந்தன. இதன் பின் மாவோயிஸ்டுகளின் செயல்களம் விரிவடைந்தது; கூர்மையடைந்தது.

நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2001இல் மாவோயிஸ்டுகள் 56 மாவட்டங்களில் மட்டும் இருந்தனர். 2009இல் இந்தியாவில் உள்ள 626 மாவட்டங்களில் 223 மாவட்டங்களில் பரவி உள்ளனர். இந்தியாவில் உள்ள 33 மாநிலங்களுள் 16 மாநிலங்களில் இம்மாவட்டங்கள் அமைந்துள்ளன. 70 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் மிகுந்த செல்வாக்குடன் உள்ளனர். இதில் 40 மாவட்டங்களில் 28,000 படையினர், 700 படைப்பிரிவுகளாக மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் செயலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பத்து ஆண்டுக் காலத்திற்குள் மாவோயிஸ்டுகள் பெரும் பரப்பில் படர்ந்து வலிமை பெற்றதற்கான காரணிகள் எவை? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்,  இந்தியா சுதந்தரமடைந்தது. பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போன்ற மயக்க மொழிகளை காங்கிரசுக் கட்சி அள்ளித் தெளித்தது. சோசலிசம் பேசிய நேருவின் 17 ஆண்டுக்கால ஆட்சியில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, மின்சாரம், குடிநீர், சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் வெகுமக்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திராகாந்தியின் ஆட்சியிலும் ‘வறுமையே வெளியேறு’ - ‘வறுமையை ஒழிப்போம்’ போன்ற கவர்ச்சியான முழக்கங்கள் மட்டுமே தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்படவில்லை.

1984இல் இராசிவ்காந்தியின் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டிற்கு ஆண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தாராளமயச் சந்தை அனைவருக்கும் பொது உரிமை உடையது. இதில் அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப வளர்ச்சி அடையலாம் என்று கூறப்படுகிறது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, முதலானவற்றை மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு வேக வேகமாக விலகி வருகிறது. இதனால் இன்று மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை, கல்வி என்பது தனியார் மயமாகி பெரிய வணிகமாகி விட்டது. இதைப் போலவே மக்கள் தம் சொந்தச் செலவில் தனியார் மருத்துவரிடம் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1980இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில்  35 விழுக்காடாக இருந்த வேளாண்மை, இன்று 14 விழுக்காடாகத் தேய்ந்துவிட்டது. ஆனால்,  60ரூ மக்கள் வேளாண்மையைச் சார்ந்தே இன்றும் வாழ்கின்றனர். ஆனால் தொழில் துறையின் பங்கு 28ரூ; சேவைப் பிரிவின் பங்கு 58ரூ ஆக உள்ளது. பெரும்பணத்தைச் செலவிட்டு உயர்கல்வி பெறுவோரில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே தனியார் துறையில் வேலை வாய்ப்பு என்கிற கேவலமான நிலைமை இருக்கிறது.

ஆனால், ‘நாட்டின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தாண்டி விட்டது;  இந்தியா விரைவில் உலக வல்லரசாகப் போகிறது’ என்கிற ஆளும் வர்க்கத்தின் குரல் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுதந்தர இந்தியாவின் வளர்ச்சியின் பெரும் பகுதிப் பயன்கள் பணக்காரர்களுக்கும், பண்ணையார்களுக்கும், இந்திய - அயல்நாட்டு முதலாளிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், உயர் அதிகார வர்க்கத்திற்கும் மட்டுமே சென்று சேர்ந்திருக்கின்றன. இந்த உண்மையைக் கடந்த இருபது ஆண்டுகளில் தாராளமயப் பொருளதாரக் கொள்கையின் செயல்பாடுகளால் சாதாரண மக்களும் தெளிவாக உணரும் நிலை ஏற்பட்டு விட்டது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மேலும் ஏழையாகிறான்.  இதுவே உண்மை.

அறுபதாண்டுக் கால சுதந்தரமும், நாடாளுமன்ற சனநாயகமும், அரசமைப்புச் சட்டமும், நிர்வாக அமைப்பும், நீதித்துறையும் வெகுமக்களாக இருக்கின்ற உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதுடன், அவர்களின் நலன்களுக்கு எதிரானவைகளாகச் செயல்படுகின்றன. எனவே, இது ஒரு போலியான சனநாயகம். பணக்காரர்களுக்கும், முதலாளிக்குமான சனநாயகம், சாதாரண எந்தவொரு குடிமகனிடம் பேசிப்பார்த்தாலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் கொள்ளையடிப்பதற்காகவே தேர்தலும், சனநாயமும், ஆட்சி அமைப்பும் இங்கே இருக்கின்றன - இது சனநாயகமல்ல; பணநாயகம் என்கிற தெளிவான புரிதலை அவர்கள் கொண்டிருப்பதை அறியமுடியும்.

மாவோயிஸ்டுகளும் இதைத்தான் சொல்கிறார்கள். போலியான இந்த நாடாளுமன்ற சனநாயகமும் அரசமைப்பும் நீடிக்கின்ற வரையில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள்; ஒடுக்கப்படுவார்கள் என்று மாவோயிஸ்டுகள் கூறுகிறார்கள். உழவர்கள், தொழிலாளர்கள், உதிரிப் பாட்டாளிகள், சிறுவணிகர்கள் என சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் பிரிவினர் அனைவரும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2010ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை மகாராட்டிரத்தில் 241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பகுதியில் மட்டும் 150 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராட்டிரத்தில் மட்டும் 2009ஆம் ஆண்டில் 916 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் (தி இந்து 20-04-2010). வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் நிலையில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில்தான் இந்த அவலநிலை!

வேளாண்மை நசிந்ததால் கிராமப்புறங்களிலிருந்து ஏழைகள் நகரங்களுக்குச் சென்று, உயிர்பிழைப்பதற்காகக் குறைந்த கூலிக்குக் கிடைக்கின்ற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இன்று இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். ‘இந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் இனியும் பொறுத்துக் கொள்ளக்கூடாது. இதற்குக் காரணமாக உள்ள அரசமைப்பைத் தூக்கி எறிய வேண்டும். அமைதி வழிப்போராட்டங்கள் பயன்தரமாட்டா. ஆகவே, ஆயதமேந்தி இந்த ஆட்சி அமைப்பைத் தகர்த்திட வேண்டும்’ என்று மாவோயிஸ்டுகள் கூறுகிறார்கள்.

தந்தேவாடா நிகழ்ச்சியைக் குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு விளக்க மளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், புதியதாகக் கண்டுபிடித்ததுபோல், ஒரு செய்தியைக் கூறியுள்ளார். 2009 தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். “புனிதமான இந்த நாடாளுமன்றத்தைப் பன்றித் தொழுவம் என்றும், நம்மையெல்லாம் பகைவர்கள் என்றும் மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படையை மக்கள் விடுதலைப் படையாக மாற்றி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும்” என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறார் (தி இந்து 16-4-2010).

1967இல் நக்சல்பாரி இயக்கம் தோன்றிய காலம் முதலே மாவோயிஸ்டுகள் இதைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். போலியான சன நாயகத்தால் பெரிதும் பாதிக்கப்படும் மக்களை அணிதிரட்டி ஆயுத மேந்திப் போராடி வருகின்றனர். 2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி அமைந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலவரான மன்மோகன்சிங் ஆட்சியில், சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஒரிசா, முதலான மாநிலங்களில் கனிமவளம் மிகுந்த காட்டுப்பகுதிகள் இந்தியப் பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசினால் பங்கு போட்டுத் தரப்பட்டன. இதற்காக நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

2005 ஏப்பிரலில் சத்தீஷ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் ரூ.10,000/- கோடியில் டாடா இரும்பு ஆலையும், ரூ.7,000/- கோடியில் எஸ்ஸார் நிறுவனத்தின் இரும்பு ஆலையும் அமைக்க அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் பல இலட்சம் டன் அளவுள்ள இரும்புத்தாது, அலுமினியம் போன்றவை உள்ளன. இப்பகுதியில் மேலும் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், டாலமைட், தகரம், சிலிகா முதலான 28 உலோகத் தாதுகள் புதையுண்டு உள்ளன. இவற்றைக் கொள்ளையடிக்க மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோடன்டோ, பில்லிடன், வேதாந்தா முதலான நிறுவனங்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

வேதாந்தா நிறுவனம்  உலகில் சுரங்கத் தொழிலில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று. இலண்டனில் வாழும் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது இது. ப.சிதம்பரம் அமைச்சர் பதவியில் இல்லாத காலங்களில் பல முதலாளியக் குழுமங்களுக்கு வழக்குரைஞராகவோ அல்லது அவற்றின் இயக்குநர்களில் ஒருவராகவோ இருந்து சேவை செய்வார். 2004ஆம் ஆண்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முதல் நாள் வரையில் சிதம்பரம் வேதாந்தா நிறுவனத்தின் செயல் பொறுப்பு இல்லாத இயக்குநராக இருந்தார். இப் பண்ணைப் பதவியிலிருந்து விலகிய அடுத்த நாளே நிதி அமைச்சரானார். இவர் நிதி அமைச்சரானதும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்த முதல் பட்டியலில் மொரீஷியசில் உள்ள டுவின் ஸ்டார் ஹோல்டிங்ஸ்  நிறுவனம் இந்தியாவில் ஸ்டர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனுமதித்தார். வேதாந்தா குழுமத்தின் கிளைகளில் ஒன்றுதான் ஸ்டர்லைட்.

2008 நவம்பரில் மேற்குவங்க மாநிலம் லால்கர் மாவட்டத்தில் உள்ள சிறப்புப் பொருளியல் மண்டலப்பகுதியில் ஜிண்டால் குழுமத்தின் ஆலைப்பணியைத் தொடக்கி வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா சென்றார். லால்கர் பழங்குடி மக்களோ - தம் உயிரை விடுவோமே தவிர, தங்கள் நிலத்தை இழக்க மாட்டோம் என்று கூறிக் கடுமையாக எதிர்த்தனர். அப்போது கையெறி குண்டு புத்ததேவ் மீது வீச முயற்சிக்கப்பட்டது. அதனால் லால்கர் பகுதியில் பழங்குடி மக்களைக் காவல்துறை கண்மூடித்தனமாகத்தாக்கியது. ஆனால், ‘காவல்துறையின் அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் படை’ என்கிற அமைப்பை உருவாக்கி, காவல்துறை தங்கள் பகுதியில் நுழைய முடியாதவாறு பழங்குடியினர் மாவோயிஸ்டுகளின் துணையுடன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பழங்குடியினர் வாழும் பகுதியிலிருந்து அவர்களை விரட்டி விட்டு, இரும்பு உருக்கு ஆலைகள், தேனிரும்பு ஆலைகள், அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், சுரங்கங்கள் முதலானவற்றை அமைத்திட முதலாளியக் குழுமங்களும் அரசும் முனைந்து நிற்கின்றன. முதலாளிய அறிவு ஜீவிகள், “நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் போது ஒரு பகுதியினருக்கு இழப்பும், துன்பமும் நேர்வது என்பது தவிர்க்க முடியாதது. காட்டு வாசிகள் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைவதே அவர்களின் முன்னேற்றத்திற்கான வழி” என்று கூறுகிறார்கள். அருங்காட்சியகக் கலாச்சாரத்தில் (ஆரளநரஅ ஊரடவரசந) பழங்குடியினர் இன்னும் இருப்பது நியாயமில்லை. நவீன காலத்தின் வளர்ச்சியின் பயன்களை அவர்களும் துய்க்க வேண்டாமா? என்று ப.சிதம்பரம் கேட்கிறார். இதன் பொருள் என்ன? பழங்குடியினர் தங்கள் வாழிடங்களை விட்டு அமைதியாக வெளியேற வேண்டும். இல்லாவிடில் அரசு அவர்களை விரட்டி அடிக்கும் என்று மறைமுகமாகக் கூறும் மிரட்டல் அல்லவா இது?

பழங்குடியினர், சிறிய அளவில் விவசாயம் செய்தும் பெருமளவில் காடுகளில் கிடைக்கும் தேன், காய், கனி, கிழங்கு முதலானவற்றை உண்டும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தனர். இந்தியா குடியரசானதும் பழங்குடியினர்க்குக் காடுகள்மீது காலங்காலமாக இருந்து வந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. காடுகளுக்குள் சுதந்திரமாகத் திரிவதும் கால்நடைகளை மேய்ப்பதும், இலை, காய், கனிகளைப்பறிப்பதும் சட்டப்படியான குற்றச் செயலாக்கப்பட்டன. ஆனால் காடுகளைக் கொள்ளையடிக்க ஒப்பந்தக்காரர்களுக்கும், வணிகர்களுக்கும் அரசு உரிமை வழங்கியது. இவர்களிடம் காடுகளில் இலை பறிக்க, மரம் வெட்ட கூலிவேலை செய்யும் நிலைக்குப் பழங்குடியினர் தள்ளப்பட்டனர்.

ஒரு புறம் வனத்துறையினர், பழங்குடியினர் வனச்சட்டத்தை மீறுவதாகக் கூறிப் பல வகையிலும் அவர்களைக் கொடுமைப்படுத்தினர். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்குள்ளாயினர். மறுபுறம் ஒப்பந்தக்காரர்களால் குறைந்த கூலிக்குச் சுரண்டப்பட்டனர். பீடி சுருட்டப் பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளை காடுகளில் பறிக்க 50 இலை கொண்ட கட்டுக்கு மூன்று காசு மட்டுமே கூலியாகத் தரப்பட்டது. 1980இல் மாவோயிஸ்டுகளின் தொடர்பு ஏற்பட்டபின், பழங்குடியினர் பல போராட்டங்களை நடத்தினர். வேலை நிறுத்தம் செய்தனர். இக்கூலி ஒரு உருபாயாக உயர்த்தப்பட்டது. கூலி உயர்வைவிட, ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பழங்குடியினரிடம் வளர்ந்தது. 1986-2000 காலத்தில் மாவோயிஸ்டுகள் மூன்று இலட்சம் ஏக்கர் காட்டு நிலத்தைப் பழங்குடியினருக்குப் பிரித்தளித்தனர். மக்கள் அரசு (ஜனதா சர்க்கார்) என நிறுவி நிர்வாகம் நடத்துகின்றனர்.

இதைப் பார்த்து, “சனநாயக நாட்டில் சட்டம் ஒழுங்கை  - நீதி வழங்கலை சிறுகும்பல் தன் கையில் எடுத்துக் கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும்?” என்று அரசு கொக்கரிக்கிறது. நகர்ப்புற அறிவு ஜீவிகளும் ஊடகங்கள் வாயிலாக இக்கேள்வியை எழுப்புகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் தமக்கு எள்ளளவும் பயன்தராத - எல்லா வகையிலும் தம்மை ஒடுக்கிச் சுரண்டுகின்ற இந்த சனநாயக அமைப்பு தமக்கானதல்ல என்று உறுதியாக நம்புகிறார்கள். மேலும் இந்த சனநாயகக் கட்டமைப்பு, தம் எதிரிகளுக்கு ஆதரவாக நின்று தம்மை ஒடுக்கி வருகிறது என்பதையும்  உணர்ந்திருக்கிறார்கள். எனவே தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்துகிறார்கள்.

1949 நவம்பர் 25 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் தம் இறுதி உரையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “1950 சனவரி 26 அன்று இந்தியா ஒரு குடியரசாக மலரும். அப்போது அரசியலில் சமத்துவம் இருக்கும். ஒருவருக்கு ஒரு வாக்கு. ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற நிலை இருக்கும். ஆனால் சமூக நிலையிலும் பொருளாதாரத்திலும் மக்களிடையே சமத்துவம் இருக்காது. மிக விரைவில் சமூக சமத்துவத்தையும் பொருளியல் சமத்துவத்தையும் நாம் ஏற்படுத்தாவிட்டால், இதனால் பாதிக்கப்படும் மக்கள் நாம் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள இந்த சனநாயகக் கட்டமைப்பையே தூக்கி எறிவார்கள்” என்று ஆளும் வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

தமக்குப் பயன்படாத - பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே பாதுகாவலாக இருக்கின்ற  இந்த ஆட்சிமுறை மாற வேண்டும் என்று உழைக்கும் மக்கள் எல்லோரும் நினைக்கிறார்கள். பழங்குடியினர் இதற்குச் செயல்வடிவம் கொடுக்கிறார்கள். ஆயுதம் ஏந்துகிறார்கள். ஆயுதம் ஏந்துவது வன்முறை - அராஜகம், சனநாயக வழிமுறைகள் மூலம் போராட வேண்டும் என்று முதலாளிய அறிவு ஜீவிகள் இலவச ஆலோசனை வழங்குகிறார்கள். நருமதையில் பெரிய அணைகளைக் கட்டுவதால் பல இலட்சம் பழங்குடியினரின் வாழ்வு அழியும் என்று கூறி அமைதியான வழிகளில் பல ஆண்டுகள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்படும் மக்களை மீண்டும் குடியமர்த்தவும், மறுவாழ்வு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பழங்குடியினர் பஞ்சைப் பராரிகளாகி விட்டனர். ஒரிசாவில் கலிங்கா நகர்ப் பகுதியில் போஸ்கோ நிறுவனம் அலுமினியத் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து பழங்குடியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். வெற்றி பெறவில்லை. குறைந்த அளவில் வன்முறை பயன்படுத்தப்பட்டதால் தான் நந்திகிராம், சிங்கூர், லால்கர் மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றன.

இனியும் இதுபோன்ற மக்கள் போராட்டங்களுக்கு இடந்தரக் கூடாது என்று ஆளும் வர்க்கம் தீர்மானித்துவிட்டது. எதிர்ப்போரையெல்லாம் ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரைகுத்துகிறது. பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. கனிம வளங்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தடையாக யார் வந்தாலும் அவர்களை அழிப்பதே அரசின் குறிக்கோள். இதற்காக 40,000 துணை நிலைப்  படைகளை தண்டகாரண்யப் பகுதியில் ஏவி விட்டுள்ளனர்.

2005இல் சல்வா ஜுடும் என்கிற கூலிப்படையையும் அரசு உருவாக்கியுள்ளது. மகேந்திர கர்மா போன்ற பழங்குடியினப் பெருச்சாளிகளையும் அவர்களின் கைக்கூலிகளையும் கொண்டு சல்வா ஜுடும் அமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் பேசும் கோண்டு மொழியில் சல்வாஜுடும் என்றால் “அமைதி இயக்கம்” என்று பொருள். தன் விரலைக் கொண்டே தன் கண்ணைக் குத்துவது போல், பழங்குடியினரைக் கொண்டே பழங்குடியினரை வேரறுக்கும் வேலையை சல்வாஜுடும் மூலம் அரசு செய்கிறது. பழங்குடியினரைத் தாக்குவது, அவர்களின் வீடுகளைக் கொளுத்துவது, பெண்களைக் கற்பழிப்பது முதலான செயல்கள் மூலம் பழங்குடியினரை வெளியேற்றுவது, அதன்பின் இப்பகுதிகளை முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்பதே இதன் நோக்கமாகும். 644 சிற்றூர்களிலிருந்து 3,50,000 பழங்குடியினர் சல்வா ஜுடும்  படையின் கொடுமைகளால் வெளியேறினர். இவர்களில் 60,000 பேர் அரசு அமைத்துள்ள முகாம்களில் உள்ளனர். ஆனால், மாவோயிஸ்டுகளின் துணையுடன் சல்வா ஜுடும் இயக்கத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டனர் பழங்குடிகள்.

எனவே, ப. சிதம்பரம் பசுமைவேட்டை என்ற பெயரில் 2009 நவம்பர்  முதல் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் போரை நடத்திக் கொண்டிருக்கிறார். ஈழத்தில் வலிமையான விடுதலைப் புலிகளை இராசபக்சே அரசு ஒடுக்கி அடக்கி அழித்ததுபோல், மாவோயிஸ்டுகளை அழிக்க வேண்டும் என்று நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள 11 நிலப்பகுதிகளில், முதலில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் அரசின் படைவலிமையை ஒரு முகப்படுத்தி அப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளை அழிப்பது, அதன் பின், அப்பகுதியில் வேகமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு பழங்குடியினரின் குறைகளைப் போக்கி அவர்களின் மனங்களைக் கவர்வது (றுinniபே ழநயசவள யனே ஆiனேள - றுழஹஆ) என்பதே பசுமை வேட்டையின் குறிக்கோள். இவ்வாறு படிப்படியாக 11 பகுதியிலும் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதே அரசின் திட்டம்.இதற்கு எதிர்வினையாக, மாவோயிஸ்டுகள் தாக்கியதால் 6-4-2010 அன்று தந்தேவாடாவில் 76 மத்திய ரிசர்வ் படையினர் கொல்லப்பட்டனர்.

படைவலிமையை ஏவிப் பழங்குடியினரின் எதிர்ப்பை - மாவோயிஸ்டுகளை அடக்கி விடலாம் என்று அரசு நினைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆறு இலட்சம் படையினரை நிறுத்தி ஆண்டுதோறும் பலகோடி உருபாய்களைச் செலவிட்டு வந்த போதிலும் காஷ்மீர் சிக்கல் தீரவில்லை. காஷ்மீர் மக்களுக்குத் தன்னாட்சி உரிமை வழங்காத வரையில் இச்சிக்கல் தீராது. காஷ்மீர் பள்ளத்தாக்கு சிறிய பரப்பளவு கொண்டது. ஆனால், 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பலகோடி பழங்குடியினர் வாழுகின்ற தண்டகாரண்யம் பகுதியில் எவ்வளவு படைகளை அனுப்பினாலும் வெற்றி கொள்ள முடியாது.

மாவோயிஸ்டுகளாலும் அரசின் வலிமையான படைகளை வெல்ல முடியாது. சீனாவில் மாவோ தலைமையின்கீழ் நடந்த புரட்சி 1949இல் வெற்றி பெற்றது. அந்த சீன மாதிரியைக் கொண்டு இப்போது இந்தியாவில் வெற்றி பெறலாம் என்று மாவோயிஸ்டுகள் நினைப்பது மார்க்சிய ஆய்வு முறைக்கே முரணானது. சீனாவில் சோசலிசம் தோல்வி கண்டு வேகமாக முதலாளியப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலக அளவிலும் சோசலிசத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மாவோயிஸ்டுகள் கணக்கில் கொள்ளாமல் வன்முறை மூலம் வர்க்கப் பகைவரின் ஆட்சி அமைப்பை அழிப்போம் என்று கூறுவது உழைக்கும் மக்களை மேலும் பலியிடுவதாகவே இருக்கும்.

வெகுமக்களை அரசியல் படுத்தாமல், காடுகளில் இருந்து கொண்டு, பாதிக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களில் சிறுபகுதியினரை அணிதிரட்டி,  இந்திய வல்லரசைத் தூக்கி எறிய முடியும் என்று கூறுவது இன்றைய அரசியல் போக்கைப் புரிந்து கொள்ளாமையே என்று கருத வேண்டியுள்ளது. அறுபது ஆண்டுகால சுதந்தர இந்தியாவில், சனநாயக நாடாளுமன்ற ஆட்சி முறையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் உமியளவு நன்மையே விளைந்துள்ளது. அரிசி முழுவதையும் ஆளும் வர்க்கம் தின்று ஏப்பம் விடுகிறது. இப்போதுள்ள ஆட்சி முறை மாற வேண்டும் என்று உழைக்கும் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்,  ஆயுதப் போராட்டத்திற்கு மட்டுமே முதன்மை தருகின்ற மாவோயிஸ்டு வழியில் இந்த ஆட்சிமுறையை வீழ்த்த முடியாது. தமக்குப் பயன்படாத இந்த ஆட்சி முறையைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்கான ஆட்சிமுறையை அமைப்பதே தீர்வு என்கிற புரிதலுடனும் போர்க் குணத்துடனும் மக்கள் போராட வேண்டும். இப் போராட்டத்தில் வன்முறை தவிர்க்க முடியாததாக இருக்கும்.                       

Pin It