சங்கரன் கோயில் காந்தி நகரில் உள்ள சமூக நலக் கூடம் நிரம்பி வழிகிறது. செந்தட்டியில் நடந்த இரட்டைக் கொலைக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய 45 தலித் குடும்பங்களும் தங்கியிருக்கும் இந்தக் கூடத்தில், காந்தி நகர் மக்கள் சோறு பொங்கிப் போட்டு ஆதரவு அளிக்கிறார்கள். வேலைக்கும் போகாமல், இனி அடுத்த என்ன செய்வது என்றும் புரியாமல் திகைத்து நிற்கிறது இந்த மக்கள் கூட்டம்.

12.3.2009 அன்று கண்டனப் பேரணி நடைபெற்றது. எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் இல்லாமல் "தேவேந்திரகுல வேளாளர்கள் சங்க'த்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டும் சுமார் 5000 பேர் பங்கேற்ற அமைதிப் பேரணி அது. சுட்டெரிக்கும் வெயிலில் நண்டும் சிண்டுமாக சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்ற பேரணி. சங்கரன்கோவில் காந்தி நகரில் தொடங்கிய பேரணி, ஊரை வலம் வந்து பின் கோயிலையும் சுற்றி வந்து, இறுதியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. கடுமையான வெப்பத்துடன் மனம் நிறைய ஆத்திரம் இருந்தாலும், ஒரு கட்டுப்பாட்டுடன் பேரணியில் வந்தவர்களின் முகங்களில் ஆழ்ந்த சோகம் அப்பிக் கிடக்கிறது.

தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்? 22 வயது பரமசிவனும், 60 வயது ஈஸ்வரனும் அப்படி என்ன தான் தவறு செய்தார்கள் – இப்படிப் படுகளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு?

சங்கரன் கோவில், நெல்லை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு நகரம். புலித்தேவன் கோட்டை இருந்த நெல்கட்டும் செவலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டத் தலைநகர் இது. முக்குலத்தோர், யாதவர், ரெட்டியார், நாயக்கர், வாணியச் செட்டியார், செங்குந்தர், தலித்துகள் உள்ளிட்ட பல சாதிப் பிரிவுகளைக் கொண்ட ஊர் இது. இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமமான செந்தட்டியில் யாதவர்களும் வாணியச் செட்டியார்களும், தலித்துகளும் வசிக்கிறார்கள்.

ஊரின் மய்யத்தில் முப்பிடாத்தியம்மன் கோயில் உள்ளது. சிறிய கோயிலாக இருந்ததைப் பெரியதாகக் கட்டி ஆண்டுக்கு இரண்டு முறை பொங்கல் வைத்துக் கும்பிடுகிறார்கள். பங்குனியில் செட்டியார்களும், புரட்டாசியில் யாதவர்களும் பொங்கல் வைப்பது முறை. செந்தட்டி தலித்துகள் சிறுதொழில்கள் மூலம் வளர வளர, அவர்களது பொருளாதார நிலையும் வளரவே, அம்மன் கோயில் திருப்பணிக்காக ஒரு லட்சம் நன்கொடை கொடுக்கவும் அவர்களால் முடிந்தது.

இயல்பாகவே பிற சமூகத்தைப் போல தாங்களும் அம்மனுக்குப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்குள் வளர்ந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசினார்கள். ""சாமி கும்பிடத் தடையில்லை; ஆனால் பொங்கல் வைக்க அனுமதிக்க முடியாது'' என்று அவர்கள் மறுக்கவே விவாதம் சூடானது. கோயிலுக்கு நாங்களும் வரி கொடுக்கிறோம், நன்கொடை கொடுக்கிறோம். நாங்கள் ஏன் பொங்கல் வைக்கக் கூடாது என்று கேட்ட தலித் மக்கள் மிரட்டப்பட்டார்கள். அமைதிப் பேச்சுவார்த்தை மூன்று முறை நடந்தது. நான்காவது கூட்டத்தில் மாரியம்மாள் என்ற தலித் பெண்மணி தாக்கப்பட்டார்.

இந்நிலையில்தான் 6.3.2009 அன்று இரவு வேலைக்குப் போய்விட்டு குறுக்குப் பாதையில் இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது புதருக்குள் மறைந்திருந்த 18 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களால் வெறித்தனமாகத் தாக்கியிருக்கிறது. தாக்குதலில் ஈஸ்வரன் (60) மற்றும் பரமசிவன் (22) இருவரும் உயிரிழந்தனர். கிருஷ்ணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். தப்பி ஓடிய சுரேஷ் கொடுத்த தகவலால்தான் அந்தப் பாதையில் வரவிருந்த மற்றவர்கள் தாக்கப்படாமல் தப்பிக்க முடிந்திருக்கிறது.

இந்த செய்தியை நாளிதழ்கள் பலவிதமாகப் பதிவு செய்திருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரிய மாடசாமி என்பவர், பாதையோரம் மலம் கழித்துக் கொண்டிருந்தபோது வேறு சாதிப் பெண் ஒருவர் வந்தும் அவர் எழுந்து நிற்காமல் மலம் கழித்துக் கொண்டிருந்ததை அந்தப் பெண் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பெரிய மாடசாமி, தன் உறவினர்களுடன் அவர் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுதான் பிரச்சினைக்கு மூல காரணம் என்கிறது நெல்லை "மõலை முரசு' (மார்ச் 7). இதனையே "தீக்கதிர்' நாளிதழும் பதிவு செய்திருக்கிறது.

ஆனால், ஊரில் ஆகச் சிறுபான்மையினராக வாழும் தலித் மக்களிடம் அத்தகைய அடாவடிப் போக்கு இருந்தது என்பதை எப்படி நம்ப முடியும்? "பொதுவாக தலித் மக்கள் மீதான தாக்குதல்களில் இது போன்ற கதைகள் கட்டி விடப்படுவது எப்போதும் நடப்பதுதான்'' என்கிறார், தலித் மக்கள் மீதான வன்முறை குறித்து ஆய்வு செய்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரகுபதி.

படுகொலையில் யாதவர்கள் மட்டுமின்றி, செட்டியார்களும் இணைந்திருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனின் தலையைத் தனியாகத் துண்டித்து எடுத்து, அவரது கால்களுக்கிடையில் வைத்துச் சென்றுள்ளனர். இது நிமிட நேரத்தில் நடக்கக் கூடிய சம்பவம் அல்ல! மாறாக, ஆழ்ந்த வன்மத்துடனும் வெறுப்புடனும் நடைபெற்ற நிகழ்ச்சி என்பதற்கு இது ஒரு சான்று.

இதே சங்கரன் கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பந்தப்புளி என்ற கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோயிலை தலித் மக்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடுவதை எதிர்த்து சாதி இந்துக்கள் (நாயக்கர், ரெட்டியார், யாதவர்) ஊரைக் காலி செய்துவிட்டு, மலை மேல் போய்க் குடியிருந்தார்கள் என்பது ஒரு பின்னணிச் செய்தி.

நெல்லை மாவட்டத்தில் தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் மோதல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. ஆனால் சங்கரன் கோயில் பகுதியில் தேவர்களுக்கு இணையான ஆதிக்க சாதியாக – வட்டித் தொழில், கட்டப் பஞ்சாயத்து, கான்டிராக்ட், அரசியல் செல்வாக்கு என வளர்ந்து வருபவர்கள் யாதவர்கள்.

செந்தட்டியில் நிகழ்ந்த படுகொலை தலித்துகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு மிரட்டல். ஆனால் 12.3.09 அன்று 5000 பேர் பேரணியாகத் திரண்டிருப்பது, தலித்துகள் மிரளவில்லை என்பதை காட்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்து 17.3.09 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலம் தழுவிய மாவட்ட ஆர்ப்பாட்டங்களில் செந்தட்டிப் படுகொலை கண்டனம் செய்யப்பட்டது. சங்கரன்கோயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.

கடைசியாக வந்த தகவலின்படி, பாதுகாப்பு தருவதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று, செந்தட்டி மக்கள் தற்போது ஊர் திரும்பியிருக்கிறார்கள். - ஆனால் ஊரில் கடுமையான மவுனம் நிலவுகிறது...

Pin It