அநீதிகளின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது! உலகமயமாக்கம், ஒரு கிராமம் அளவிற்கு உலகை சுருங்கச் செய்துவிட்ட இந்தக் காலத்திலும் அநீதிகளின் வீச்சு மிகக் கூர்மை அடைந்தே இருக்கிறது. தனி மனித தாக்குதல்களாக நடந்தேறுபவை எல்லாம் இச்சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அதைப் போலவே கூட்டாக நடக்கும் கொடுமைகள் தனி மனிதர்களை மிக பயங்கரமாக எச்சரிக்கின்றன. ஆக, அநீதி என்பது அறுக்க முடியாத ஆணிவேரைப் போல நிலைத்துவிட்டது. இச்சமூகம் பொதுவாக அநீதிகளுக்கு மிக மந்தமாக எதிர்வினையாற்றுவதாக கடுமையான புகார் இருந்தாலும், சில தனி மனிதர்கள் எந்தப் பின்னணியும் ஆதரவும் இல்லாமலேயே உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து, அநீதிக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர்களான கலா, லட்சுமி, மீனா ஆகியோர் கடந்த இரண்டாண்டுகளாக எதிர்கொள்ளும் அநீதிகளும் அவற்றுக்கெதிராக அவர்களே நடத்தி வரும் போராட்டங்களும் அத்தனை எளிதானவை அல்ல! ஓர் ஆணின் ஆதிக்க இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணின் உடலும் முகமும் எரிக்கப்பட்டது. இந்த கொடுமையைத் தட்டிக் கேட்ட இன்னும் இரண்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தீராத இழிவுகளையும் தொடரும் வன்கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அநீதியை வென்றுவிடத் துடிக்கும் இப்பெண்களுக்கு எதிராக, குடும்ப அரசியல் அமைப்பு, காவல் துறை, நீதித் துறை என ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து நிற்க ... சுயமரியாதைக்காகவும் கிடைக்க வேண்டிய நியாயத்திற்காகவும் இடையறாது போராடுகிறார்கள். அவர்களின் போராட்ட வாழ்வு இங்கே வாக்குமூலங்களாகத் தரப்படுகிறது.

போராடும் பெண்களை இந்த சமூகம் கேலிப் பொருளாகவும் தீயவர்களாகவும் சித்தரிக்க முனைந்தாலும், தனக்கெதிரான உரிமை மீறல்களை எதிர்த்து ஒவ்வொரு முறையும் குரல் கொடுக்கும் போதும் – இந்த சமூகமும் ஆதிக்கவாதிகளும் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள். எந்த பின்புலமும் இல்லாத இப்பெண்கள், தங்களின் மன உறுதியையும் நேர்மையையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டு, தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் அவர்களின் போர்க்குரலையும் போராட்ட வாழ்வையும் பறை சாற்றும் முயற்சிதான் இக்கட்டுரை.

கலாவின் வாக்குமூலம்

Kala“என்னோட சொந்த ஊர் வந்தவாசி பக்கம் எச்சூர். திண்டிவனம் பூதேரியைச் சேர்ந்த லட்சுமணனை கல்யாணம் செஞ்சு 11 வருசமா இங்கதான் வாழ்ந்து வர்றோம். எனக்கு இப்போது 29 வயசு ஆவுது. எங்களுக்கு இந்துமதி (10), இளவரசி (8), ஈஸ்வரி (7) என்ற 3 பெண் குழந்தைகள் இருக்கு. என்னோட கணவருக்கு நிரந்தர வேலையில்லை. அப்பப்ப ஏதாவது கூலிவேலைக்குப் போவார். யாராவது லாரிக்கு கிளீனராக கூப்பிட்டாலும் போய்டுவார். இந்த மாதிரி நேரத்தில் வீட்டுக்கும் வரமாட்டார். இதனால், குடும்பத்தை நடத்த நான் திண்டிவனத்துல வீட்டுவேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். இதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் பரத் என்பவன், நான் திண்டிவனத்துக்கு வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் பின்னாடியே வர்றது, பேசறதுக்கு முயற்சி பண்றதுன்னு இருந்தான். அதுக்கப்புறம் தொல்லைகள் கொடுக்க ஆரம்பிச்சான். அதற்கு நான் உடன்பட மறுத்து எதிர்த்தேன், திட்டினேன். உங்க வீட்டிலேயே வந்து சொல்லிடுவேன்னும் மிரட்டினேன்.

இப்படி சொன்ன கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு நாள் வேலை முடிஞ்சி திண்டிவனத்திலிருந்து எங்க வீட்டுக்குப் போய்கிட்டு இருந்தேன். அப்ப இரவு மணி 8 இருக்கும். திண்டிவனத்திலிருந்து எங்க வீடு 2 கி.மீ. இருக்கும். பஸ் வசதி கிடையாது. நடந்துதான் போகணும். எங்க ஊருகிட்ட இருந்த அகல்குளத்துகிட்ட நான் போனபோது, திடீர்னு அந்த பரத் வந்து என்னை கையைப் பிடிச்சி இழுத்து, “இப்பவே, என் கூட நீ படுக்கணும், இல்லன்னா இங்கேயே உன்ன காலி பண்ணிடுவேன்''னு மிரட்டி, வாயைப் பொத்தி, பக்கத்தில் இருந்த முட்புதருக்கு இழுத்துட்டுப் போனான். அந்த நேரத்தில் அந்த ரோட்ல யாருமே வரல. அவனோட சண்ட போட்டு, அவன புடிச்சி கீழ தள்ளிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன். இது நடந்தது 26.9.2007 அன்னிக்கு. அந்த ஊர்ல எனக்குன்னு யாரும் இல்ல.

மறுநாள் காலையில விடிஞ்சதும், திண்டிவனம் போய் எனக்கு தெரிஞ்ச லட்சுமி, மீனா ரெண்டு பேருகிட்டையும் நடந்தத சொன்னேன். நான் உறுப்பினரா இருக்கிற சுய உதவிக் குழுவுக்கு லட்சுமி பிரதிநிதியா இருக்காங்க. ராத்திரி எனக்கு நடந்தத சொன்னதும், “வா, நாம போய் இப்பவே அவனோட அப்பாகிட்ட சொல்லுவோம்''னு சொன்னார். நான், லட்சுமி, மீனா, என்னோட வீட்டுக்காரர் கிளீனரா வேலை பாக்குற லாரி டிரைவர் கனகசபை எல்லோரும் சேர்ந்து மறுநாள் 27.9.2007 அன்னிக்கு பரத்தோட வீட்டுக்குப் போனோம். அவனோட அப்பாகிட்ட, பரத் ராத்திரி எங்கிட்ட நடந்தத சொல்லி, "கண்டிச்சி வைங்க இனிமே இந்த மாதிரி பின்னாடி வந்தான்னா, கேஸ் கொடுப்போம்' என்று சொன்னேன். அதுக்கு பரத்தோட அப்பா, “என்னோட மகன் அப்படித்தான் இருப்பான். தேவிடியாளுங்க நீங்க என்னா இப்பதான் பெரிசா கேக்க வந்தீட்டீங்க''னு பொம்பளங்கன்னுகூட பாக்காம அவனமானப்படுத்திப் பேசினார். அதற்கு பதில் பேசப்போன எங்களை அடிக்கறதுக்கு வந்தார்.

அதனால பயந்துபோன நாங்க, எங்க வீட்டுக்குப் போனோம். மனசு கஷ்டத்துல வீட்டகூட திறக்காம வெளியிலேயே உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். "இவன இப்படியே விடக் கூடாது, கேஸ் கொடுத்தாதான் கம்முன்னு இருப்பான். இல்லன்னா தொடர்ந்து தொல்லை கொடுப்பான்' னு பேசிட்டிருந்தோம். நான் எழுந்து வீட்டுக்குள்ள போனேன்.

அப்போ பரத்தோட அப்பா நடராஜன் வீட்டுக்குள்ள நுழைஞ்சு, என்னுடைய முடியைப் பிடிச்சு தரதரனு வெளில இழுத்துட்டுப் போனார். அங்க வெளியில பரத், அவனோட அக்கா சங்கீதா, அவங்களோட சொந்தக்காரங்க ஆண்டாள், கண்ணம்மா எல்லாம் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நடராஜன் என்ன முடியை பிடிச்சி இழுத்துகிட்ட வந்தத பார்த்ததும், லட்சுமியும், மீனாவும் தடுக்க வந்தாங்க. ஆனா பரத் அவங்களா எங்கிட்ட விடாமத் தடுத்துகிட்டு இருந்தான்.

அப்ப சங்கீதா, ஆண்டாள், கண்ணம்மா எல்லாம் சேர்ந்து என்னை வீட்டுக்குப் பின்னாடி இழுத்துக்கிட்டு போய் மிதிச்சு அடிச்சாங்க. அடி தாங்க முடியாம, “என்ன விட்டுடுங்க நான் கேஸ்லாம் கொடுக்கல''னு கதறி அழுதேன். ஆனா அவங்க விடாம அடிச்சாங்க. அப்போ என்னைக் காப்பாற்ற ஓடிவந்த லட்சுமி, மீனாவை பரத் வேகமாக பிடித்து தூர கீழே தள்ளினான். கீழே விழுந்த மீனாவை தூக்கச் சென்றார் லட்சுமி. அப்ப “இவமேல மண்ணெண்ணெய் ஊத்துடா, கொளுத்திடலாம்''னு நடராஜன் கத்தினார். பரத் கையில் வச்சிருந்த கேனிலிருந்து மண்ணெண்ணெயை என் மேல ஊத்தினான். நான் பயந்து கண்ண மூடினேன். அந்த நொடியே என்னோட உடம்பும் தீப்பிடிச்சி எரிஞ்சுது. நான் மயங்கி கீழ விழுந்தேன். அதான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் நடந்தத, ஆஸ்பத்திரியில லட்சுமியும், மீனாவும் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரிஞ்சது.''

லட்சுமியின் வாக்குமூலம்

“விபத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்ட எனது கணவர் கோவிந்தன், பிள்ளைகள் கோபி (18), வனஜா (15), தினேஷ் (5) ஆகியோருடன் திண்டிவனம், மயிலம் ரோட்டில் போலிஸ் லைன் பின்புறம் வாழ்ந்து வருகிறேன். நான் "பவ்டா சுய உதவிக்குழு'வில் ஒரு குழுவின் பிரதிநிதியாகவும் இருந்து வருகிறேன். எங்களுக்கு உள்ள இரு கடையின் வாடகையிலும், எனது மகன் கோபி கிளீனராக வேலை செய்து வரும் வருமானத்திலும் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

Lakshmiதிண்டிவனம் நகராட்சியின் 23 ஆவது வார்டு, பூதேரியில் வாழ்ந்து வரும் கலாவிற்கு அந்தப்பகுதியில் யாரும் ஆதரவாக இல்லை. அவருடைய கணவர் லட்சுமணன் மூட்டை தூக்குதல், லாரி கிளீனர் போன்ற வேலைக்குச் செல்வார். 3 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, கணவனின் வருமானமும் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். மேலும், கலா என்னுடைய குழுவில் உறுப்பினராக உள்ளார். பணம் கட்ட, வாங்க என அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். அப்போதெல்லாம் அவருடைய குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். நான் ஆறுதல் சொல்வேன்.

இந்நிலையில் ஒருநாள் காலையில் கலா எனது வீட்டிற்கு வந்து, அதே பகுதியைச் சேர்ந்த பரத், தன்னை கையைப்பிடித்து இழுத்ததாக கூறினார். இவன் தொல்லை தந்து வருவதாக ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அன்னைக்கு அதற்கப்புறம் என்ன நடந்தது என்றால்... தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கலாவின் மேல் தண்ணீரை ஊற்றி அணைத்து, ஆட்டோவில் ஏற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். செய்தி கேள்விப்பட்டு மருத்துவமனை வந்த சங்கீதாவின் கணவர் (பரத்தின் மாமா) ராஜேஷ் என்னிடமும், கலாவிடமும் தானாகவே கொளுத்திக் கொண்டதாக சொல்லச் சொன்னார். ஆனால் தன்னை விசாரித்த மருத்துவர்களிடம் கலா உண்மையைச் சொன்னார். மருத்துவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஆம்புலன்சில் அந்த ராஜேஷûம் உடன் வந்தார். வழியில், “கொளுத்தியது தப்புதான். அதுக்கு என்னா செய்யனுமோ செய்றோம், கேஸ் மட்டும் வேண்டாம். தானாகவே கொளுத்திக்கிட்டதா சொல்லுங்க'' என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

புதுவை அரசு மருத்துவமனையிலும் தன்னை 5 பேர் சேர்ந்து கொளுத்தினார்கள் என்று கலா சொன்னார். அன்று இரவு கலாவின் கணவர் லட்சுமணன், தந்தை தேவராஜ், தாயார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். சம்பவம் நடந்து 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் திண்டிவனம் போலிசார் வந்து விசாரிக்கவில்லை. மூன்றாவது நாள் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறினேன். “நீ பொம்பள தனியா வந்தா கேஸ் எடுக்க மாட்டாங்க. போய் தெரிஞ்சவங்க யாரையாவது அழைச்சிக்கிட்டு வா'' என்று அனுப்பினார்கள்.

உடனடியாக நான், எங்கள் வார்டு கவுன்சிலரும், நகர மன்றத் துணைத் தலைவர் கவிதாவின் கணவரும், தி.மு.க. பிரமுகருமான முரளி அவர்களை சந்தித்து நடந்தவைகளைக் கூறி உதவி கேட்டேன். அவர் பரத்தின் சித்தப்பா செல்வத்தை வரவழைத்தார். நான் பக்கத்து அறையில் இருந்தேன். அங்கு வந்த செல்வம், "கொளுத்தியது உண்மை என்றும், கலா குடும் பத்திற்கு பணம் கொடுத்துவிடுவதாகச் சொன்னார். அவர் போனபின்பு முரளி என்னை அழைத்து, “அவங்க நீண்ட நாள் பழக்கம். அதனால இந்த வழக்குல உனக்கு நான் உதவி செய்ய முடியாது. உனக்காக 30 வருசத்து பழக்கத்த பகைச்சிக்க முடியாது. நடராஜன், சங்கீதா, பரத் இந்த 3 பேரையும் கேஸ்ல சேர்க்காம இருந்தா நான் உதவி செய்றேன்'' என்று கூறிவிட்டார்.

பின்பு நான் என்னுடைய வீட்டிற்குச் சென்றேன். கொஞ்ச நேரத்தில் எனது வீட்டிற்கு, கலாவை கொளுத்திய சங்கீதாவின் மாமியார் சந்திரா, கணவர் ராஜேஷ், செல்வம், பூதேரியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் வந்தனர். “போலீஸ் வந்து விசாரிச்சா அந்தப் பொண்ணு உண்மையைச் சொல்லிடப்போவுது... மாத்தி சொல்லச் சொல்லு'' என்று என்னை மிரட்டினார்கள். அன்று மருத்துவமனைக்கு விசாரிக்கச் சென்ற போலிசாரிடம் கலா நடந்த உண்மைகளைச் சொல்லியுள்ளார்.

மறுநாளும் மேற்படி நபர்கள் எனது வீடு தேடி வந்து என்னிடம் கலாவை மாற்றிச் சொல்லச் சொல்லும்படி வற்புறுத்தத் தொடங்கினார்கள். அதற்கு நான், “கலா ஏற்கனவே போலிசிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டாள்'' என்று கூறினேன்.

அதற்கடுத்த நாள் எனது வீட்டிற்கு வந்த பரத்தின் சித்தப்பா செல்வம், கவுன்சிலர் முரளி கூப்பிடுவதாக, முரளி நடத்தும் கணபதி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு முரளி, ராஜேஷ், நடராஜனின் இன்னொரு தம்பி சின்னய்யா, முனியாண்டி, வேலு, டயர் குமார், அருள், ஜப்பார் என சுமார் 20 பேர் இருந்தார்கள். மேற்படி முரளி என்னைப் பார்த்து, “கொஞ்சம்தான் எரிஞ்சிருக்கு... அதுக்காக கலாவுக்கு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ தருகிறோம்.... வாங்கிகிட்டு விட்டுட்டு போங்க... உனக்கும் தனியா பத்தாயிரம் தருகிறோம்... சின்ன கூரை வீடு... விளக்கு விழுந்துட்டு துன்னு சொல்லச்சொல்லு...'' என்றார். அதற்கு நான், “என்னால அப்படியெல்லாம் சொல்ல முடியாது'' என்றேன். அப்போது அங்கிருந்த டயர் குமார், அருள், ஜப்பார் ஆகிய மூவரும் என்னைப் பார்த்து, “இவ்வளவு பேரு சொல்கிறோம்... நீ கேட்க மாட்டேங்கிற... எங்க உதவி இல்லாம இந்த ஊர்ல இருந்துருவியா... உன் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவோம்'' என்று மிரட்டினார்கள்.

மறுநாள் கலாவைப் பார்க்க நான் மருத்துவமனை சென்றேன். அன்று ஒரு நாள் கலாவுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு மறுநாள் வீடு வந்தேன். அப்போதும் நடராஜனின் உறவினர்கள் என்னிடம் வந்து சமாதானம் பேசினார்கள்.

கலா கொளுத்தப்பட்ட ஒரு வாரம் கழித்து ஒருநாள் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த செல்வம், "கலாவை விசாரிக்க போலிஸ் போறாங்க, உன்னையும் அழைச்சிகிட்டு வரச்சொன்னாங்க' என்று காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அங்கு தயாராக இருந்த காரில் என்னை ஏற்றினார்கள். அதில் ஒரு போலிஸ்காரர், எஸ்.அய். சந்திரசேகர், மற்றும் ராஜேஷ், முனியாண்டி ஆகியோர் ஏறினார்கள். இன்னொரு காரில் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஆகியோர் வந்தனர். ஆஸ்பத்திரியில், சப் இன்ஸ்பெக்டர் என்னிடம், “கலாவை அதுவாகவே எண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டதாக சொல்லச்சொல்லும்படி'' என்னை முதலில் கலா இருக்கும் அறைக்குள் அனுப்பினார்கள்.

உள்ளே சென்ற நான் கலாவிடம், “என்னை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டாங்க. நீ பயப்படாம உண்மையைச் சொல்லு..'' என்று அவள் காதருகே மெதுவாக சொல்லிவிட்டு வந்தேன். பின்பு போலிசார் கலாவை தனியாக விசாரித்தனர். நாங்கள் கதவுக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். போலிசார் வெள்ளைத்தாளில் கலாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். வெளியில் வந்த எஸ்.அய். யிடம் ராஜேஷ், “என்ன சார் சொல்லிச்சு'' என்று கேட்டார். அதற்கு எஸ்.அய். தலையில் அடித்துக் கொண்டு, “என்னய்யா இது பெரிய தொல்லையா இருக்கு. எத்தன தடவ கேட்டாலும், அது கரக்டா நடந்தத சொல்லுது. பெரிய தலவலியா இருக்கு'' என்று கூறினார்.

சில நாள் கழித்து கலாவின் அப்பா தேவராஜ், வந்தவாசி எச்சூரில் இருந்து ஜெயசங்கர் என்ற வழக்கறிஞரை அழைத்து வந்தார். மாலை 6.30 மணிக்கு கேஸ் போடப்போவதாகவும், காவல் நிலையம் போக துணைக்கு வருமாறும் கலா அப்பா என்னை அழைத்திருந்தார். நானும், மீனாவும் உடன் சென்றிருந்தோம். அன்று பகலில் மருத்துவமனை சென்ற வழக்கறிஞர் கலாவிடம் வெள்ளைத்தாளிலும், டைப் அடித்திருந்த தாளிலும் கையெழுத்து வாங்கியுள்ளார். கொஞ்ச நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்த வழக்கறிஞர் எப்.அய்.ஆர். போட்டுவிட்டதாகக் கூறி தந்தார். மீனா எப்.அய்.ஆரில் உள்ளதைப் படித்துக் காட்டினார். உடனே நான், “என்ன சார் இது. சொத்து தகராறுன்னு பொய் கேஸ் போட்டிருக்காங்க. காரணமே பரத்துதான். அவன் பேரே இல்லையே'' என்றேன். அதற்கு வழக்கறிஞர் “போலிஸ்னா அப்படித்தான். நம்ம தனியா கோர்ட்ல கேஸ் போட்டு கைது பண்ண வைக்கணும்'' என்றார்.

அவரே மேலும், "நீதான் கலாவை கொளுத்திக் கொல்லச் சொன்னதாக நடராஜன் தரப்பினர் புகார் கொடுத்து, போலிசார் வழக்குப் போட்டு வைத்திருப்பதாகவும், என்னை இரவே கைது செய்யப்போகிறார்கள் என்றும், 5000 ரூபாயை இப்பவே கொடுத்தால், பெயில் போட்டு கைது செய்யாம இருக்க ஏற்பாடு செய்றேன்' என்றும் கூறி என்னைப் பயமுறுத்தினார்.

15 நாள் கழித்து கலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வந்தவாசி எச்சூரில் அவரது அம்மாவுடன் இருந்தார். காயங்கள் சரியாக ஆறாத நிலையில் 3 நாட்களில் மீண்டும் திரும்பி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போதுதான், கலா பாதிக்கப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி, எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்து மாவட்ட, மாநில அரசு, காவல் அதிகாரிகள், சென்னை உயர்நீதி மன்றம் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்பட்டது.

இதுவரை எங்களிடம் வாயால் பேசிக் கொண்டிருந்த நடராஜன் தரப்பினர் இதற்குப்பிறகுதான் எங்களுக்கு, குறிப்பாக எனக்கும் மீனாவிற்கும் ஏகப்பட்ட தொல்லைகள் தந்து வன்கொடுமைகள் இழைக்கத் தொடங்கினர். என்னை அடித்தும் தகாத வார்த்தைகளில் திட்டியும் அவமானப்படுத்தினார்கள். நான் கொடுத்த புகார்களின் மேல் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்நிலையில், பாதிக்கப்படும் பல பெண்கள் புகார் கொடுப்பது மற்றும் ஆலோசனை கேட்பது போன்றவைகளுக்காக எங்களிடம் வந்தார்கள். அதன்பிறகுதான், பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர் மு. கந்தசாமி, நசீர் அகமது, வழக்கறிஞர்கள் ராஜகணபதி, பூபால் உள்ளிட்டோர் சேர்ந்து "திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கம்' ஆரம்பித்தோம். பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக புகார் எழுதித் தருவது போன்ற பணிகளை முக்கியமாகச் செய்வது என முடிவெடுத்தோம். கலா வழக்கிலிருந்து எந்தவித மிரட்டல்களுக்கும் பின்வாங்காத நிலையில்தான் – உச்சக்கட்டமாக என்னையும், மீனாவையும் பொய் வழக்கில் கைது செய்து, விழுப்புரம் கிளைச்சிறையில் வைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தார்கள்.''

மீனாவின் வாக்குமூலம்

“கலாவை பரத்தும், அவனோட குடும்பமும் கொலை செய்யறதுக்காக கொளுத்துன சம்பவத்திற்கு நானும், லட்சுமியும் நேரடி சாட்சிகளாக உள்ளோம். ஆனால், போலிசார் எங்களை சாட்சியா சேர்க்கல. குற்றவாளிகளான பரத், அவனது அப்பா நடராஜன், அக்கா சங்கீதா, உறவினர்கள் ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோருக்கு ஆதரவாக தி.மு.க. பிரமுகர் முரளி, பா.ம.க. வழக்கறிஞர் ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டயர் குமார், காங்கிரஸ் பிரமுகர் ஜப்பார் ஆகியோர் அப்போதைய திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் உதவியோடு செயல்பட்டனர். கொளுத்திய உண்மைச் சம்பவத்தை மாற்றி வழக்குப் பதிவு செய்திருந்தனர். திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து கலாவிற்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தோம். இதனால் மேலே குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும், காவல் துறையினருக்கும் என் மீதும், லட்சுமி மீதும் பெருங்கோபம் உருவானது.

Meenaஇந்த நிலைமையிலதான புகார் கொடுக்கப் போன எங்கமேல பொய் கேஸ் போட்டு கைது செஞ்சது போலிஸ். எங்க "பவ்டா சுய உதவிக்குழு'வுல இருந்த மீனாட்சிக்கும் எங்களுக்கும் உண்டானப் பிரச்சனைல, எங்க மேல எந்த தப்பும் இல்லாதப்ப மீனாட்சியோட சேர்த்து எங்களையும் கைது செஞ்சாங்க. நீதிபதி முன்னால ஆஜர்படுத்திட்டு எங்களை கிளைச் சிறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனாங்க. பின்பு எங்களை செக்கப் செய்யனும்னு ஒரு அறைக்கு அழைச்சிக்கிட்டு போனாங்க. அந்த அறையில் வாசலில் 10 பெண் கைதிகள், சில சிறைக்காவலர்கள் இருந்தனர். அந்த அறைக்குள் வந்த இந்திரா என்ற சிறைக்காவலர் முதலில் லட்சுமியைப் பார்த்து, “உன் துணியை அவுறு'' என்று கூறினார். லட்சுமி சேலையை மட்டும் அவிழ்த்து கீழே போட்டார். அதுக்கு இந்திரா “பாவாடை ஜாக்கெட்டு எல்லாத்தையும் கழட்டு'' என்றார். லட்சுமி தயங்கினார். உடனே இந்திரா “கழட்டுடின்னா'' என்று சத்தம் போட்டார். வேறு வழியில்லாமல் லட்சுமி தன்னோட பாவாடை, ஜாக்கெட்டை கழட்டிப் போட்டுவிட்டு வெறும் பிராவுடன் நின்றார். அதையும் கழட்டு என இந்திரா மிரட்டினார். லட்சுமி முழு நிர்வாணமானதும், அவமானப்பட்டு எதிர்ப்பக்கம் திரும்பினார்.

உடனே இந்திரா “இங்க என் பக்கம் திரும்புடி'' என்றார். அதற்கு லட்சுமி, “மேடம், கதவ மூடுங்க அசிங்கமா இருக்கு எல்லாம் வேடிக்கை பாக்குறாங்க'' என்றார். அதற்கு இந்திரா, “அசிங்கம் பாக்குறவ ஏண்டி ஜெயிலுக்கு வந்த என்று திட்டி மிரட்டினார். அதனால் லட்சுமி இந்திரா பக்கம் திரும்பினார். அப்போது இந்திரா, பெரிய மேடத்திடம், “இவளுக்கு அசிங்கமா இருக்குதாம்மா'' என்று கிண்டலடித்து சொல்லி சிரித்தார். வேடிக்கை பார்த்த பிற கைதிகளும் சிரித்தனர். பின் என்னையும் இதே போல கொடுமைப்படுத்தினார்கள். ஆனா மீனாட்சியை எதுவுமே செய்யல.

அடுத்த ரெண்டு நாளில் கடலூர் சிறைத்துறையிலிருந்து பெரிய அதிகாரி, விழுப்புரம் கிளைச் சிறைக்கு வந்து எங்கள விசாரிச்சார். அடுத்த ரெண்டு நாள் கழிச்சி காவல் துறை அதிகாரியும், அதுக்கப்புறம் கலெக்டர் ஆபிசில் இருந்தும் வந்து விசாரிச்சாங்க. எல்லோரிடமும் எங்க ரெண்டு பேருக்கும் நடந்தத சொன்னோம். விசாரித்த பெரிய அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம், "சோதனை போடும் போது இப்படி செய்வது வழக்கம்தான்' என்று கூறியுள்ளனர்.

எங்கள வெள்ளிக்கிழமை கைது செஞ்சாங்க. மீனாட்சிய திங்கள் கிழமை விட்டுட்டாங்க. ஆனா 15 நாள் கழிச்சு எங்களுக்குத்தான் பெயில் கிடைச்சது. அப்புறம் நாங்க வெளியில வந்த பிறகுதான் எங்க மேல போட்ட பொய் கேச பத்தி தெரிஞ்சிகிட்டோம்.

நான் எஸ்.சி.ன்றதால் எம்பேர்ல எஸ்.சி./எஸ்.டி. சட்டம் இல்ல. லட்சுமி வன்னியர்ன்றதால அதுபேர்ல அந்த சட்டத்தை போலிஸ் போட்டாங்க. கலா கேசுலயும், அதுக்கப்புறம் நாங்க கொடுத்த கேசுலயும் போலிஸ் ஒழுங்கா நடவடிக்கை எடுக்கலன்னு உயரதிகாரிங்க எல்லாருக்கும் புகார் அனுப்பினோம். அதனால திண்டிவனம் போலிஸ் எங்க பேர்ல மீனாட்சிய வச்சி ஒரு பொய் புகார வாங்கி வழக்குப்போட்டு ஜெயில்ல அடைச்சு சித்தரவதை செஞ்சாங்க. பதிலுக்கு நான் கொடுத்த புகார்ல மீனாட்சி மேல சின்னதா ஒரு கேச போட்டு உடனே பெயில்ல விட்டுட்டாங்க. இந்த வழக்கு விழுப்புரம் செசன்ஸ் கோர்ட்ல நடந்துகிட்டு இருக்கு.

இடைப்பட்ட நாட்களில் கலாவிற்கு தீக்காயம் மிகவும் மோசமானது. கழுத்தை திருப்பக் கூட முடியாமல் இருந்தார். அப்புறம் புதுச்சேரி சுகுமாரன், சாமி இவர்கள் மூலம், திரும்பவும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து காயங்கள் ஆறிய பிறகு, வேற இடத்துல இருந்து தோல எடுத்து, காயம்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தார்கள். இப்போது பரவாயில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அன்றாட கூலிக்காக கழனி வேலைகளுக்கு சென்று வருகிறார்.

சனவரி மாதம் 4ஆம் தேதி அன்று சாயங்காலமா நான், என்னோட மகள் வனஜா, மீனா மூணு பேரும் வீட்டில் இருந்தோம். தண்ணி பிடிக்க குடத்தை எடுத்துக் கொண்டு வெளியில் தெருவுக்கு வந்தேன். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த "டெக்கு' பிரபு, அவர் கூட ஆரிப், மனோதீபன், குமாரன் எல்லாம் வந்தாங்க. கிட்ட வரும்போதே "டெக்கு' பிரபு, “ஏய், நில்லுடி தேவிடியா'' என்று திட்டிக்கொண்டே வந்தார். சத்தம் கேட்டு மீனா வெளியே வந்தார். நான் குடத்தை அங்கேயே போட்டுவிட்டு மீனாவை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல முயன்றேன்.

அப்போது "டெக்கு'பிரபு என் மாராப்பு புடவையை பிடித்து இழுத்து, என் கன்னத்தில் ஓங்கி அடித்தார். மீனா என்னை இழுத்தார். புடவை "டெக்கு' பிரபு கையில் இருந்ததால் பிறகு அப்படியே விட்டார். “டெய்லி நான் ராத்திரி ஒருமணிக்கு வருவேன். ஒன்பொண்ண என் கூட அனுப்பனும், நீயும் படுக்கணும்டி தேவிடியா'' என்று என்னைத் திட்டிய டெக்கு பிரபுவிடம், நான் அழுதுகொண்டே “நீங்க என் அண்ணன் மாதிரி, நீங்க இப்படி நடக்கலாமா, எல்லாரும் பாக்குறாங்க, மானம்போவுது'' என்றேன். ஆனாலும் அவன் கேட்காமல், “என்னாடி பெரிய அண்ணன், வாடின்னா.. என் கூட இப்ப நீ படுத்துதான் ஆவுனும்...'' என்று கூறி என்னை கட்டிப்பிடித்து சுவர் மீது தள்ளி சுவரோடு சுவராக சேர்த்து அணைத்து, பேண்ட் ஜிப்பை அவுத்துக் காட்டினான். மேலும் என்னை நகரவிடாமல் சுவரோடு சேர்த்து அழுத்திக்கொண்டே, “தினம் பத்து பேருகூட போற தேவிடியா... நீ... போஸ்டர் ஒட்டிட்டா பெரிய... என்ன இனிமே இங்க வாழவிட்டாதானே... நீ நாலு நாளைக்கு முன்னாடி ஏண்டி போலிஸ் ஸ்டேஷனுக்கு போன... உனக்கு இனிமே நான் தான் எதிரி... நீ இருந்தா ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருப்ப.. உன்ன கொல்லாம விடமாட்டேன்... நீ.. போலிஸ்கிட்ட போனாலும் என்ன ஒன்னும் ஆட்டமுடியாது'' என்று திட்டி மிரட்டியபடியே, கீழே கிடந்த மனைக்கட்டையை எடுத்து “இதோட சாவுடி நீ'' என்று கூறி ஓங்கி அடித்தான்.

ஒரு கையால் என்னை சுவற்றில் அழுத்தி பிடித்திருந்ததால், தள்ளிவிட்டு ஒதுங்கினேன். அதனால் அடி என்மேல் படவில்லை. அவன் ஓங்கின வேகத்துக்கு அடிபட்டிருந்தா நான் அன்னிக்கே செத்துப்போயிருப்பேன். அப்போது "டெக்கு' பிரபு, கூட வந்த மூணுபேரையும் பார்த்து, “இவ பொண்ண இழுத்துக்கிட்டு வாங்கடா அவகிட்ட படுக்கலாம்'' என்று கூறினான். நிலைமைய பார்த்த மீனா, என் பொண்ணை வீட்டுக்குள் வைத்து கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு காப்பாற்றினார். பூட்டியிருந்த கதவை அவர்கள் தள்ளிப் பார்த்து எட்டி எட்டி உதைத்தார்கள். "டெக்கு' பிரபு என்னை விட்டுவிட்டு “கதவ தொறங்கடி தெவிடியாளுங்களா'' என்று திட்டி அவனும் கதவை உடைக்கப்பார்த்தான். நான் போலிஸ் ஸ்டேஷன் போக திரும்பினேன். உடனே பிரபு “போலிஸ் ஸ்டேஷனுக்கு போனா உன்னைப் பொணமா ஆக்கிடுவேன்'' என்று கூறி என்னை துரத்தினான். நான் வெண்ணிலா ஓட்டல் பக்கம் ஓடி, காசியம்மாள் என்பவர் வீட்டில் பதுங்கினேன். அதுக்கப்புறம் தப்பிச்சி அரசு மருத்துவமனைக்குப் போயி, வக்கீலிடம் சொல்லி புகார் எழுதி காவல் நிலையத்துல கொடுத்தேன். போலிஸ் அன்னிக்கே வழக்கு போடல. மறுநாள் காலையில "டெக்கு'பிரபுவை அழைச்சிக்கிட்டு அவன் கட்சியோட நகரப் பொறுப்பாளர் வந்து எங்களிடம் சமாதானம் பேசினார். கட்சியில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அதன்பிறகுதான் போலிஸ் வழக்கு போட்டு, "டெக்கு' பிரபுவ கைது செஞ்சாங்க. மறுநாளே பெயிலும் கொடுத்துட்டாங்க. 10ஆவது படிக்கிற என்னோட பொண்ணு மட்டும் அவனுங்ககிட்ட மாட்டியிருந்தா... யப்பா என்னால நெனச்சிக்கூட பார்க்க முடியல... குடும்பத்தோடு தற்கொலைதான் செஞ்சிக்கிட்டிருந்திருப்போம்.

இதுக்கப்புறம், பிப்ரவரி 2ஆம் தேதி, கலாவோட கணவர் லட்சுமணனை, கலாவை தீ வைத்து கொளுத்திய நடராஜன் குடும்பத்திற்கு பழக்கமான காதர்பாஷா என்பவரின் மகன்கள் அப்பாஸ், சித்திக் ஆகிய இருவரும் கடுமையாகத் தாக்கி, காயப்படுத்தினார்கள். கேட்கச் சென்ற கலாவை திட்டினார்கள். அதன்பின்பு, லட்சுமணனை மருத்துவமனையில் சேர்த்து புகார் கொடுக்க கலாவிற்கு உதவியாக இருந்தேன். போலிஸ் வழக்கு போடாத நிலையில் சி.எஸ்.ஆர். கேட்பதற்காக 5ஆம் தேதி கலாவும் மீனாவும் காவல் நிலையம் சென்றார்கள், சி.எஸ். ஆர். தரமுடியாது என்று போலிசார் மறுத்துள்ளனர். அதற்கு மீனா நாங்கள் எஸ்.பி. அவர்களிடம் சொல்லுவோம் என்று கூறியுள்ளார். உடனே அங்கிருந்த காவலர் சரவணன் “ஏய்.. நீ என்ன பெரிய மயிரா, நீ யார வேணாலும் போய்ப்பாரு.. பொட்டச்சி உன்னால என்ன செய்ய முடியும்... நீ எதுக்கு ஸ்டேஷனுக்கு வந்த... ச்சி... வெளியே போடி'' என்று கேவலமாக திட்டி அடிக்க வந்துள்ளார்.

இதுக்கப்புறம் ரெண்டு வாரம் கழிச்சி 18ஆம் தேதி கலா குடும்பத்திற்கு உதவியதற்காக, லட்சுமணனை தாக்கிய காதர்பாஷா குடும்பத்தினர் உறவினர் எல்லாம் ஒரு 10 பேர் சேர்ந்து, நான் என் வீட்டில் தனியா இருக்கிற நேரமா பார்த்து வந்து, என்னை கடுமையாக கட்டையால் அடித்து, முடியைப் பிடித்துக் கொண்டு என் தலையை சுவற்றில் வைத்து இடித்தார்கள். கட்டையால் என் வயிற்றில் அடித்ததில் எனக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. என்ன அதோட விடாம, வீட்டில் வச்சிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, கலாவை கொளுத்தின மாதிரி இவளையும் கொளுத்திட்டு, அவளா பத்தவச்சிக்கிட்டான்னு சொல்லிடலாம் என்று கைரா என்பவர் சொன்னதும், ஒருவர் கேனை எடுத்து என் மீது ஊற்ற வந்தார்.

அப்போது அங்கிருந்த புருஷோத்தமன் வெளியே ஓடி காப்பாத்துங்க, காப்பாத்துங்க, கொளுத்துறாங்கன்னு சத்தம் போட்டதும் எல்லோரும் ஓடிட்டாங்க. அவங்க போகும் போது என் வீட்டு பீரோவில் இருந்த சீட்டுப்பணம் 35,000 ரூபாயை எடுத்து சென்றுவிட்டார்கள். அதன்பிறகு நான் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து 4 நாள் கழித்து உதிரப்போக்கு நின்ற பிறகு வீட்டிற்குத் திரும்பினேன். இதற்கும் நான் புகார் கொடுத்தேன். நான் அவர்களை அடித்ததாக என் மீதும் சேர்த்து போலிசார் வழக்குப் போட்டனர். இதில் என்னை கைது செய்யவும் முயன்றார்கள். இதுக்கும்மேல் எங்களுக்கு என்னா நடக்கப்போவுதுன்னு தெரியல. எப்படியாவது என் பொண்ண மட்டும் நல்லபடியா ஏதாவது படிக்க வச்சிட்டா எனக்கு ஒரு கவலையும் இல்லை. அப்படி நாங்க என்னா தப்பு பண்ணிட்டோம்? பாதிக்கப்பட்ட கலாவுக்கு ஆதரவா இருந்தது தப்பா? நடவடிக்கை எடுக்காத போலிஸ் மேல புகார் எழுதனது தப்பா...?

Pin It