தலித் முரசு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களில் ஒரு பகுதியினரை எனக்கு நேரடியாகவே தெரியும். இதை எழுதும் கணம் உங்களின் தோழமையுள்ள முகங்கள் வரிசையாக வந்து போகின்றன. அவ்வாறே, உங்களில் பெரும்பான்மையோருக்கு என்னைத் தெரியும். தங்களது ஒடுக்கப்படும் நிலை குறித்த ஓர்மையும், உணர்வுமுள்ள தலித்தாகவோ, தலித்துகளின் சார்பாகவோ நிற்கின்ற – சாதியற்றவராகவோ, குறைந்தளவு சாதியற்றவராகி விட வேண்டும் என்கிற விருப்பமுள்ளவராகவோ உங்களில் பெரும்பான்மையோர் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருடனும் தனித்தனியாக உரையாட, அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள – "தலித் முரசு' எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

Ambedkarவரும் இதழிலிருந்து அம்பேத்கர் நூல் தொகுப்புகள் ஒவ்வொன்றைக் குறித்தும் வரிசையாக உங்களிடம் விவாதிக்க உள்ளேன். அது மிகவும் பயனுள்ள ஒன்றாகவே இருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட தலித் எழுச்சியின் ஒரு பகுதியாக – அவரது நூல்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதையொட்டி, தமிழிலும் அவரது நூல்கள் ஓரளவுக்கு முழுமையாக வரத் தொடங்கின. கெடுவாய்ப்பாக, அவற்றை முன்வைத்து ஒரு விவாதம் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை.

சென்ற ஆண்டு ஈரோட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்றை (திருட்டுத்தனமாகத்தான்! அவ்வமைப்பில் உள்ள நண்பர் ஒருவரின் அனுமதிச் சீட்டைக் காட்டிக் கொண்டு) போய்ப் பார்த்தேன். அங்கு போனதில் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் துலக்கமாகப் புலப்பட்டன : 1. இந்துத்துவ சக்திகளுக்கு தந்தை பெரியார், அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் "சிம்ம சொப்பன'மாய், நினைத்தாலே கிலி கொள்ள வைப்பவராய் இருப்பதை நேரடியாகக் கண்டு கொள்ள முடிந்தது.

2. வந்திருந்த லட்சக்கணக்கானவர்களில் பார்ப்பனர் மற்றும் பிற ஆதிக்கச் சாதியினரின் கூட்டம் மிகச் சொற்பமாகவே இருந்தது. வந்திருந்தோரில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானோர் – தலித்துகளாகவும், அடித்தட்டு சாதியினராகவும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இரண்டாவது உண்மை என்னை மிகவும் உலுக்கி விட்டது. தலித்துகளுக்கென நூற்றுக்கணக்கில் இயக்கங்கள் இருந்த போதிலும், அவர்கள் அவற்றிலிருந்தெல்லாம் அந்நியப்பட்டு, இந்துத்துவ சக்திகள் திரட்டி விடக் கூடிய அளவிற்கு மோசமான சூழலே இங்கு நிலவுகிறது. இதற்கு தலித் மக்களின் அறியாமை மட்டுமே காரணமல்ல; அம்பேத்கரின் சிந்தனைகள் அவர்களிடம் இதுவரை கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை என்பதன் நிரூபண சாட்சியமாகவே அன்றைய நிகழ்வு இருந்தது.

நமது இயக்கங்கள், தங்களது தலைவர்களின் "மூஞ்சி'களை நமது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்டும் அக்கறையிலும், கரிசனத்திலும் நூற்றில் ஒரு பங்குகூட அம்பேத்கரின் சிந்தனைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்டவில்லை. தங்களது சுவரொட்டிகளிலும், வெளியீடுகளிலும் ஒரு மூலையில் அச்சிடப்படும் அம்பேத்கரின் படம் – ஒரு சடங்கு போன்று எவ்விதப் பொருத்தப்பாடுமின்றி, வெறும் வழக்கத்தின் அடிப்படையில் செய்யப்படும் ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால், நமது இயக்கங்கள் அம்பேத்கருடைய படத்தை யும், அவரது பெயரையும் தவிர, அவருடைய சிந்தனைகளை – வழிகாட்டுதல்களை ஒரு சுமையாகக் கருதுகின்றனவோ என்று கூட எனக்கு அய்யம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்பேத்கரின் பெயரும், படமும் ஒரு தாயத்தைப் போல நம்பிக்கை சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது.

"தலித் முரசு' போன்ற இதழ்கள் இதற்கு எதிராக தொடக்கம் முதலே கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. "போன்ற இதழ்கள்' என்று சொல்வதுகூட, ஒரு மரியாதைக்குச் சொல்வதுதான். உண்மையில், தலித் முரசின் குரல் தனியாகத்தான், பலவீனமாகத்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விடாப்பிடியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூப்பாட்டின் தொடர்ச்சியில் ஒன்றாகக்கூட தொடர்ந்து வர இருக்கும் இப்பகுதியை நீங்கள் காண முடியும்.

மற்றபடி, அம்பேத்கருடைய நூல்களை அவருடைய நடையிலேயே படிப்பதற்கு, என்னுடைய வாசிப்பின் பகிர்வாக வருகின்ற இந்தப் பகுதி ஈடாகி விடாது என்பது எனக்குத் தெரியும். ஒரு கருத்தை அல்லது நம்பிக்கையை லாவகமாகத் தூக்கி அதன் நிறத்தை, தன்மையை அதன் நாலா பக்கங்களிலும் திருப்பிக் காண்பித்து, அவர் விவாதித்து அலசும் அழகு தனித்துவம் கொண்டது. தனது கருத்தை முரட்டுத்தனமாக வலியுறுத்தும் அடாவடியான நடை வாசிப்பவரை அந்நியப்படுத்தி, வெளியேற்றி விடுவதாக இருக்கும். வன்முறையான இப்போக்கிற்கு மாறாக, திறந்த மனதுடன் ஜனநாயகப்பூர்வமான உரையாடலின் மூலம் வாசகனை அவன் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குத் தானாகவே வந்து சேர்ந்து விடத் தூண்டுவதாக அம்பேத்கரின் நடையும் எழுத்தும் இருக்கும்.

மூளையைச் சுற்றிலும் சாதி என்னும் நச்சுக்கொடி படர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கும் சாதிமான்களின் இயலாமைதான் – அவரது எழுத்துகளுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதன் காரணமாக இருக்கிறது. எனவே, எவ்விதத்திலும் நான் எழுதும் அல்லது அறிமுகப்படுத்தும் பாபாசாகேப்பின் நூல்களைப் பற்றிய இப்பகுதி அவற்றுக்கு மாற்றீடு அல்ல.

அப்படியெனில், இதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். தமிழில் வெளிவந்த பாபாசாகேப்பின் நூல்கள் எந்தளவுக்கு விற்பனை ஆயின என்பதைப் பற்றி நமக்குத் தெரியவில்லை. தமிழில் நூல்கள் விற்பனையாகும் லட்சணம் நமக்குத் தெரியும். அதை விடச் சிறப்பாக அம்பேத்கருடைய நூல்கள் விற்பனையாகி இருக்கும் என நம்புவதற்கு இடமில்லை. அப்படிச் சொற்பமாய் விற்பனையான நூல்களும், புத்தக அலமாரிகளில் அடுக்கப்பட்ட பூச்சாடிகளைப் போன்று தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. புரட்டுவதற்கு ஆளில்லாமல் அம்பேத்கரின் அரிய ஆய்வுகளும், தீட்டிப் பதப்படுத்தி, வரிகளின் வடிவில் அவர் தந்து விட்டுப் போயிருக்கும் அறிவாயுதமும் தூசி படரக் காத்துக் கொண்டிருக்கின்றன.

அவற்றின் காத்திருப்பு சமீபத்தில் முடிவடைந்துவிடும் என நம்ப முடியாத வகையில், பார்ப்பனப் பிள்ளைகளிலும், பார்ப்பனர் போன்று வளர்க்கப்பட்ட "டூப்ளி கேட்' பார்ப்பனப் பிள்ளைகளிலும் – எவ நன்னா பாடுறா? எவ நன்னா ஆடுறா? என்பதைப் பார்ப்பன நடுவர்கள் தீர்ப்பு வழங் கித் தெரிவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் நெருக்கியடித்துக் கொண்டு அணிவகுத்திருக்கின்றன. இவற்றுக்கிடையே விளம்பர இடைவெளியில் நுனிப்புல் மேய்பவர்களிடம் அம்பேத்கர் சிந்தனைகளை நினைவுபடுத்த முடிந்தால் நல்லது என்ற உத்தேசம்தான் இப்பகுதி வெளிவரக் காரணமாயிருக்கிறது எனலாம்.

மற்றபடி, இதைச் செய்வதற்கு எனக்கு இருக்கும் தகுதி என்ன என்பதைக் குறித்து எனக்கும் உங்களைப் போலவே அய்யமும், அச்சமும் இருக்கின்றன. யாரும் செய்யாததை நாமாவது செய்வோமே என்கிற விழைவும், கொஞ்சம் சிரமப்பட்டேனும் அதை முடிந்தவரை சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்கிற ஆசையுமே இதைச் செய்யத் தலைப்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. அம்பேத்கரியலை ஆழமாகக் கற்றவர்கள், நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் தேவைப்படும் தருணங்களில் ஆற்றுப்படுத்துவார்கள் என நம்புகிறேன். நீங்களும் வாருங்கள்! அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் சுமந்து வந்த கொள்கை, அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே இருக்கிறது.

Pin It