கறுப்பு மை குறிப்புகள் - 8

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனின் தூக்குத் தண்டனைக்கு எதிரான தமிழகத்தின் தன்னெழுச்சி, தொடர்ச்சியாக மரண தண்டனைக்கு எதிராக செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைவிட வியப்பை அளித்திருக்கக் கூடும். மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, செப்டம்பர் 9 தீர்ப்பு நாளாக நிர்ணயிக்கப்பட்ட கணத்தில், ஆழிப் பேரலையைப் போல எங்கிருந்து கிளம்பியது இத்தனை பெரிய கிளர்ச்சி? பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலூர் சிறை நோக்கி பைக் பேரணி, மூன்று பெண்களின் உண்ணாநிலைப் போராட்டம், இறுதியாக செங்கொடியின் ஏற்பதற்கியலாத கொடிய மரணம் இவை அனைத்திற்கும் தார்மீக உணர்வோடு திரண்டு வந்த தனிநபர்களின் பங்கேற்பு என – கண்கூடான, வீரியமிக்க எழுச்சி நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், இந்த எழுச்சியானது எந்தப் புள்ளியில் சாத்தியப்பட்டிருக்கிறது? மரண தண்டனை ஒழிப்பின் உண்மையான கூறுகளை உணர்ந்து, அதை முற்றிலுமாக ஒழிக்கிற வரை அடங்காமல் அது கொதித்துக் கொண்டே இருக்குமா? அது மட்டுமின்றி, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் இதே போல திரண்டு வருமா என்பதைப் போன்ற ஆழமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இறுக மூடிய சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் 21 ஆண்டுகளை கழித்திருக்கின்றனர் மூவரும். கொடூரமான விசாரணை முறை, அதிகாரத்திற்கு சாதகமான வாக்குமூலங்களுக்காகவும், பொய்யை மறுத்துப் பேசாமலிருக்கவும் அனுபவித்த உடல் மற்றும் உளவியல் ரீதியான வதைகள், தூக்கு தண்டனை என தீர்ப்பெழுதி, பேனாமுனையை வளைக்கும்வரை தொடர்ந்த துன்புறுத்தல்கள், வாழ்வதற்கான பேராவலைச் சுமந்தபடி மரணத்தின் நிழலில் யுகத்தை கடக்கிற அயர்ச்சியோடு – தனிமைச் சிறையில் நொடிகளைக் கடந்த கொடுங்காலத்தில் இளமை தொலைந்து, புதிதாக ஒரு தலைமுறையே தோன்றிவிட்டது.

இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் செங்கொடி. ராஜிவ் கொல்லப்பட்டபோது அல்லது யாருக்காக அவருடைய உயிரை மாய்த்துக் கொண்டாரோ அவர்கள் கைது செய்யப்பட்டபோதுதான் செங்கொடி பிறந்திருப்பார். சமூகப் பிரச்சனைகளுக்காக நேர்மையாகவும் துணிவுடனும் போராடி வந்த செங்கொடி, இங்கு பரவிக் கிடக்கும் அநீதிகளின் வேர் எதுவென்பதை அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை. நிகழ்வுகளுக்கு மட்டுமே எதிர்வினையாற்றும் நமது அமைப்பு முறையில், எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் ஆதிக்க கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கிய, ஆட்டங்காண வைத்த எத்தனையோ தலைவர்கள் இருந்தும், போராளி குணம் கொண்ட செங்கொடி தனக்கு முன்னுதாரணமாகக் கொண்டது முத்துக்குமாரை எனில், என்ன மாதிரியான சமூகப் புரிதலை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்?

கொலைக்கு கொலையே தண்டனையாகாது என்ற முழக்கத்தின் நியாயங்கள் சரியாகப் பரிமாறப்பட்டிருக்குமானால், மரண தண்டனையை ஒழிக்க மரணத்தையே ஆயுத மாக்கும் அவலம் இங்கு நிகழ்ந்திருக்காது. கிளர்ச்சியின் குறியீடாகவும் தியாகத்தின் அடையாளமாகவும் போற்றப்படும் முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேரின் இனப்படுகொலைக்கு எதிரான சுயகொலை, செங்கொடி போன்ற சமூகப் போராளிக்கு தவறான தூண்டுகோலாகி விட்டது. மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து உரிமை மீறல்களையும் சமூக அவலங்களை யும் எதிர்த்துப் போராடும் வலு கொண்ட பிள்ளைகளை அதீதத்தின் எல்லையில் தனிமையில் நிறுத்தி கையறு நிலையில் சாக விட்டுக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கிப் போராட வேண்டும், எம்முறையில் போராட வேண்டும், எதைத் தகர்த்தால் எல்லா அநீதிகளும் முடிவுக்கு வரும் என்ற பாடத்தை கற்காததால், நிகழ்வுகளின் தீவிரங்களைத் தாங்க மாட்டாமல் ஒவ்வொருவராய் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையையும், சட்டமன்ற தீர்மானத்தையும் செங்கொடியின் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிடுகிறவர்கள் முத்துக்குமார், செங்கொடியைப் போல சமூகக் கோபத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் நிலையை கருதியேனும் அப்படி சொல்வதை நிறுத்துங்கள். கொதிநிலையின் உச்சப் புள்ளியிலும் இயலாமையின் வெடிப்பிலும்தான் செங்கொடி தீயிட்டுக் கொண்டாரெனில், அந்த உணர்ச்சிப் பிழம்பின் வெவ்வேறு அளவுகோலில்தான் மரண தண்டனை மீதான வெறுப்பை இச்சமூகம் பகிர்ந்து கொள்கிறதென்றால், இந்த தன்னெழுச்சியின் தற்காலிகம் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டும்.

மூவரின் தூக்கு தண்டனை எதிர்ப்பைப் பொருத்த வரையிலும் நடந்த கிளர்ச்சிகளெல்லாம் கவன ஈர்ப்பு தானே ஒழிய, சட்டம்தான் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். உணர்ச்சிகளை ஓரம் வைத்துவிட்டு, இவ்வழக்கின் சூழ்ச்சிகளை உடைக்கப் போராடுவோருக்கு இறுதி வரையிலும் தார்மீக ரீதியாக துணை நிற்க வேண்டியதுதான் நம் முதற் கடமை. முடிவான கடமை எதுவெனில், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் வரை ஓயாமல் இருப்பது.

2007இல் அய்க்கிய நாடுகள் பொதுச் சபை உருவாக்கிய மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தில் 104 நாடுகள் கையெழுத்திட்டன. தீர்மானத்தை ஏற்க மறுத்த 54 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அகிம்சை நாடு என்ற பட்டத்தைப் பெற்ற இந்தியா, மரண தண்டனையை நடைமுறையில் வைத்திருக்க, இரண்டு முக்கியக் காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று, அதன் முன்னோடிகளான அமெரிக்காவும் சீனாவும் இன்னும் நீதிக் கொலையை நடைமுறையில் வைத்திருப்பது. இரண்டாவது, இங்கு வேரூன்றி நிற்கும் மத ஆதிக்கம் மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள்.

உலகிலேயே அதிகளவு மனித உயிர்களை கொண்ட சீனாவுக்கு அவ்வுயிர்களின் மதிப்பு துச்சமானதாகவே இருக்கிறது. மரண தண்டனையை வழக்கத்தில் வைத்திருக்கும் பிற நாடுகள் கொடூரமான கொலை மற்றும் தேசத் துரோகம் போன்ற அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்குகையில், பொதுவுடைமை நாடான சீனா மட்டும் திருட்டு, வரி ஏய்ப்பு, ஊழல் போன்ற பொருளாதார முறைகேடுகள் உள்ளடக்கிய 55 வகையான குற்றங்களுக்கு மரண தண்டனையை விதிக்கிறது. உயிரை விடவும் பணத்திற்கே மதிப்பதிகம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். அரசியல் மற்றும் சமூகப் பின்னணி இதில் பெரும்பங்கு வகிப்பதை நாம் கவனித்தாக வேண்டும். அதைப் போலவே அமெரிக்காவிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள்தான் என்கிறது அம்னஸ்டி. உலகம் முழுக்கவே நீதி அமைப்பு அதிகாரம் படைத்தவர்களின் ஆயுதமாக இருந்து அடிமைகளாகப் பிறக்க நேர்ந்தவர்களின் உயிரை சட்டத்தாலும் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்பின்னணியில்தான் சாதி ஒடுக்குமுறையும் மத ஆதிக்கமும் நிறைந்த இந்தியாவின் மரண தண்டனை மோகத்தை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பார்ப்பனர்களை தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாகக் குறிக்கிறது, இந்து சனாதன தர்மம். தனிநபர் வாழ்விலும் சமூக இயங்குதலிலும் மதக் கருத்தியல்கள் தீவிரமாகக் கடைப் பிடிக்கப்படும் இந்நாட்டில், தண்டனை விதிக்கப்படுவோர் யாராக இருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 64 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் காவல் துறையால் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாகி, நீதியமைப்பால் விசாரணையே இன்றி தண்டனை பெற்று சிறையில் பன்னெடுங்காலமாக துன்பத்தில் உழல்வோருக்கு கணக்கில்லை.

இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களும் தலித்துகளுமாகத்தான் இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இந்திய நீதியமைப்பின் பாரபட்சம் குறித்துப் பெருமளவில் ஆய்வு கள் மேற்கொள்ளப்படவில்லை எனினும், விசாரணையே இன்றி சிறையில் தவிக்கும் முஸ்லிம்கள் பற்றி சச்சார் குழு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

இந்து சனாதன உளவியல் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது, அரசமைப்புச் சட்டத்தின் நியாயங்கள் அதற்கு வளைந்து கொடுத்தே செயல்பட்டாக வேண்டிய நிலையில், வெளிப்படைத்தன்மை அற்ற, கேள்வி கேட்க முடியாத நீதியமைப்பின் சர்வாதிகாரம் மிக எளிதாக சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை பலி கொள்கிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், அவர்களின் சமூகப் பின்னணி, குற்ற விவரங்கள் போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்படும்போது இந்த உண்மைகள் பட்டவர்த்தன மாகும். சட்டத்தின் உறையில் ஒளிந்திருக்கும் ஆதிக்கத்தின் ஆயுதமே மரண தண்டனை. நின்று நிதானமாகவும் தேடித் தேடியும் அது கொல்வது ஒடுக்கப்பட்ட மக்களைத்தான் எனும்போது, திட்டமிட்ட இக்கொலையை தடுத்து நிறுத்த, இத்தனை ஆண்டு காலமும் வலுவான எதைச் செய்தோம் நாம்?

மரண தண்டனை எதிர்ப்பு என்பது ஆழமான சமூகப் புரிதலிலும், அழுத்தம் மிகுந்த மனித நேயத்திலும், உரிமைகள் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்தும் எழுந்து வர வேண்டும். பகுத்தறிவு முதிர்ச்சியின் விளைச் சலாக அன்றி வெறுமனே சாதி, மத, இன, மொழி உணர்வின் வெளிப்பாடாக மட்டுமே அது பீறிட்டு வருமானால், இது போன்ற போராட்டங்கள் நோக்கங்களை குலைத்து நமத்து விடும் வாய்ப்பே அதிகம். ராஜிவ் கொலை வழக்கில் தொடக்கம் முதலே இருந்து வரும் முரண்களும், நெடிய விசாரணையில் இன்று வரை அடைக்க முடியாத ஓட்டைகளும், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் ஏற்கனவே அனுபவித்துவிட்ட அதிகபட்ச தண்டனையுமாக இதில் குவிந்து கிடக்கும் அநீதிகளும் மீறல்களும் கண்கூடானவை. முன்னாள் பாரதப் பிரதமரையே கொன்றவர்கள் என்னும் வறட்டுத்தனமான தேசப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், பிறழ்வில்லாத சிந்தை கொண்ட எவருமே இதன் நியாயங்களைப் புரிந்து கொள்ளக்கூடும்.

ஆனாலும், ஆதிக்க வர்க்கமும் அவர்களின் கைகளில் இருக்கும் அரசதிகாரமும், அவர்களுக்கான ஊடகங்களும் இந்நாட்டின் கடைநிலை மனிதர்களுக்கு, அநீதியை எதிர்க்கின்றவர்களுக்கும் வலுவான பாடத்தைப் புகட்ட விரும்புகின்றன. இத்தனை ஆண்டுகளில் சாட்சிகள் பிறழ்ந்துவிட்டன. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் வளையத்திற்குள் வரவேயில்லை. வாக்குமூலங்கள் வன்முறையால் வாங்கப்பட்டவை என தெரிந்துவிட்டது. விசாரணை அதிகாரிகளும் நீதிபதிகளும் ஓய்வு பெற்ற நிலையில் தவறுகளை சுட்டிக்காட்டி மரண தண்டனை கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். சோனியா காந்தி கூட, மரண தண்டனையில் உடன்பாடில்லை என கூறிவிட்டார். என்றாலும் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்நாட்டின் நீதி அமைப்பும் அரசதிகாரமும் நீதியைப் புறந்தள்ளி, மேலடுக்கில் இருப்பவர்களின் கூட்டு மனநிலைக்கு நியாயம் செய்யவே விழையும் எனில், எட்டு வோல்ட் பேட்டரி வாங்கப் போய் நீங்களும் நானும் நாளையே கூட தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்படலாம். அதற்கான எல்லா அநீதி சூழல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன.

உலகம் முழுவதும் குற்றத்தில் சிக்க வைக்கப்படுவதும், சரியான வழக்குரைஞர்களின்றி தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் போவதும், முடிவாக மரண தண்டனை என்னும் சூழ்ச்சிக்கு பலியாவதும் யாராக இருக்கிறார்களெனில் – சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களே என்கிறது அம்னஸ்டி. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சமூக ஏற்றத் தாழ்வுகள் தண்டனைகளில் பிரதிபலிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனும்போது, சாதி, மத, இன, மொழி வர்க்க, பாலின ரீதியான எல்லா விதமான ஏற்றத் தாழ்வுகளையும் உள்ளடக்கிய இந்தியா போன்றதொரு நாட்டில் பரவிக் கிடக்கும் பாகுபாடுகள், நிச்சயம் அதன் நீதியமைப்பிலும் பிரதிபலிக்கவே செய்யும்.

இந்நாட்டின் அத்தனை வகையான உரிமை மீறல்களுக்கும் யார் பலியாகிறார்களோ அவர்கள்தான் மரண தண்டனை எனும் அரசதிகாரக் கொடுஞ்செயலுக்கும் பலியாகிறார்கள். பெரும்பாலும் குற்றவாளியின் மதமும் சாதியுமே தண்டனைகளை தீர்மானிக்கின்றன. இதற்கு முரணாக, குற்றங்களின் தீவிரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறது பொதுச் சமூகம். "கொலை, வல்லுறவு, தீவிரவாதம் போன்ற குற்றங்களைப் புரிவோரை தூக்கில் போடலாம்' என்ற உளவியல், சமூகத்தின் பொதுவான சிந்தனையாக இருக்கிறது. இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யச் சொல்லி திடீரென முழங்கும் பொது சமூகத்திற்கு, இந்த வழக்கின் சூழ்ச்சிகளைப் புரிந்து விழித்தெழ 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன எனும் போது, இதே நியாயத்தை மரண தண்டனை வழங்கப்பட்ட பிற வழக்குகளுக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம் தானே?

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குரு, இந்திய ராணுவத்தினரால் தாம் சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டதாகக் கூறுவதை நம்ப பொதுச் சமூகம் தயாராக இல்லை. மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தூக்கு விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப்பின் மீது பரவிக் கிடக்கும் வெறுப்புணர்வு, உணர்ச்சிவசப்பட்ட கூட்டுமனநிலைக்கான சான்று. காவல் துறை, ராணுவம், நீதிமன்றம், ஊடகம் போன்ற உயர் அதிகார மய்யங்கள் யாரை குற்றவாளி என கை காட்டினாலும், அவர்களுக்கெதிரான மனநிலையை பொதுச் சமூகம் வளர்த்துக் கொள்கிறது. குறிப்பாக, தீவிரவாதம், கலவரம் போன்ற வன்முறை நிகழ்வுகளில் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்கள் மீது ஏற்கனவே வேரூன்றிக் கிடக்கும் வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ள, தூக்கிலிட்டுக் கொள்வதற்கான நியாயங்கள் வலுப்பெற்று விடுகின்றன.

மரண தண்டனையை ஒழித்து கையெழுத்திட்ட உலக நாடுகள், வெகு மக்களின் உணர்வுக்கு எதிராகவே அதை செயல்படுத்த வேண்டி யிருந்தது. மரண தண்டனை இல்லையென்றால் குற்றங்கள் பெருகும். குற்றம் புரிந்தவர்கள் மீண்டும் அதே குற்றத்தைப் புரிய வாய்ப்பு உண்டாகும். பாதுகாப்பில்லாத நிலை உருவாகும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளே மரண தண்டனை ஒழிப்பை மக்கள் எதிர்க்கக் காரணம். இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. இதற்கு மாறாக, மரண தண்டனையை ஒழித்த பல நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக 2004 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் தனஞ்செய் சாட்டர்ஜி. இந்த தண்டனையால், சமூகத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்ன? சிறுமிகள் மீதான அத்துமீறல்கள் அன்றாட நிகழ்வாகத் தொடர் கின்றன. சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. வேலைக்காக மாநிலம் கடந்து போகும் சிறுமிகள் வீடு திரும்பாத எத்தனையோ கதைகள் இங்கு நிறைந்து கிடக்கின்றன. அரசமைப்பின் உறுதுணையுடன் நடந்தேறும் சமூக அவலத்திற்கு, தனஞ்சய் சாட்டர்ஜி மட்டும் ஏன் கொல்லப்பட வேண்டும்?

தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படும் போது தனஞ்சய் பக்குவப்பட்ட மனிதராக இருந்தார். ஆனால், தனஞ்செய்க்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் என்ன தொடர்பு? சட்டத்தின் பார்வையில் அவர் கொடூர குற்றவாளி. இன்று நாம் யாரை ஆதரிக்கிறோமோ, அவர்களும் அதே பார்வையில் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மரண தண்டனையை ஒழிக்கும் வரை, இதுவொரு முடியாத துயர விளையாட்டாக தொடரத்தான் போகிறது.

இந்திய நீதியமைப்பு என்பது, அதன் ராணுவத்தைப் போலவே மர்மமும் ரகசியமும் சூழ்ந்ததாகவும் வெளிப்படைத் தன்மையற்றதாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியலமைப்பில் வெறும் 52 பேருக்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் தெரிவிக்கிறது அரசின் அதிகாரப்பூர்வத் தகவல். சட்டக் கமிஷனின் ஆய்வறிக்கையின் படி, 1953 – 1963 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் அம்பலப்படுத்தியிருக்கிறது. பத்தாண்டுக்கு ஆயிரம் பேர் என வைத்து கொண்டாலும் அடுத்த நான்கு பத்தாண்டுகளில் நான்காயிரம் பேராவது தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் என வாதிடுகின்றனர் மனித உரிமையாளர்கள். 1947 தொடங்கி இன்று வரையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறித்தும், அவற்றின் வழக்கு விவரங்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினரும் பொய்வழக்குகளில் நாள்தோறும் பிணைக்கப்படும் அவலச் சூழலில், மரண தண்டனை குறித்து மறைக்கப்படும் உண்மைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. மனித நீதி என்பது குறையுள்ளதாக அமைந்த சமூகத்தில், நிரபராதிகளும் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க முடியாதவர்களுமே தண்டிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், குற்றவாளிகள் தப்பினாலும் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட நீதியின் அடிப்படையில், பாகுபாடுகளோ தயக்க வுணர்வோ இன்றி மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் இங்கு எத்தனை பேருக்கு இது குறித்த புரிதல் விதைக்கப்பட்டிருக்கிறது? தூக்கு தண்டனையை ரத்து செய்யச் சொல்லி நிகழ்ந்த போராட்டங்களில் முழங்கியவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும் அவர்களுக்காக உயிரை விட்ட செங்கொடியையும் "எங்கள் ரத்தமே' என்று குறிப்பிட்டனர். தமிழர்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட அநீதியாகவே இந்த மரண தண்டனையை பலரும் எதிர்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்டோர் மீதான உரிமை மீறல் என்பது நிரந்தரமாகிவிட்ட சமூகத்தில், இப்படியான நிகழ்வுகளுக்கு மட்டுமே எதிர்வினையாற்றிக் கொண்டிருப்போ மானால், நமது போராட்டம் முடிவுறப் போவதே இல்லை. உணர்ச்சிவசப்படும் நிலையைக் கடந்து மரண தண்டனையின் அரசியல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தவறிக் கொண்டே இருக்கிறோம்.

கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்ல நாள் குறிக்கப்பட்ட இந்த நேரத்திலும் உயிர் வாழ்தலுக்கான ஒரு மனிதனின் அடிப்படை உரிமைக்கான முழக்கத்தை, கோரிக்கையை தமிழ் உணர்வின் அறைகூவலாக மட்டுமே மாற்றுவது சரியாகாது. அநீதிகள் ஒன்றோடு ஒன்று கைகோத்தும் பிணைந்தும் நிற்கையில், அதற்கெதிராகப் போராடுவோர் கருத்தியல்களால் பிரிந்தே நிற்கின்றனர். இச்சமூகம் ஒன்றிணைய வேண்டியது மனித அடையாளத்தோடு மட்டும்தானே தவிர சாதி, மத, இன, வர்க்க, மொழி, பாலின ரீதியாக அல்ல. ஒவ்வொருவரும் தன் புற அடையாளங்களைத் துறந்து மனிதனாக உணரும்போதுதான் சக மனிதன் மீது நிகழ்த்தப்படும் மீறல்களின் வன்மத்தைப் புரிந்து கொள்ள முடியும். மரண தண்டனைக்கு எதிரான முழக்கம் என்பது இதிலிருந்துதான் எழுகிறது.

இந்த உண்மையை தன் மக்களுக்கு புரிய வைக்கும் இயக்கங்கள் இங்கில்லை. மனிதராக இருப்பதையே ஒரே அடையாளமாகக் கொண்டு, பாகுபாடுகளின்றி மக்களைத் திரட்டும் வலிமைமிக்க தலைமையும் இங்கில்லை. ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் ஆதிக்கத்தால் அரிக்கப்பட்டு சரிந்து கிடக்கின்றன. இந்நிலையில் அறிவுத் தளத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வரும் மரண தண்டனை ஒழிப்பிற்கான நியாயங்கள் மக்களை சென்றடைய வழியே இல்லாமல் இருக்கிறது.

13 நாட்கள் தொடர்ந்து ஓட்டப்பட்ட அண்ணா ஹசாரே ஆதரவு "ஷோக்'கள் முடிந்ததும் நிதானமாகவும் அதே வேளை காட்டமாகவும் ஆங்கில ஊடகங்கள் தூக்கு தண்டனை எதிர்ப்பு களத்திற்கு பார்வையைத் திருப்பின. மூவரின் தண்டனையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிமன்ற தீர்ப்பு. கொண்டாட்டத் தருணமாக மாறியிருப்பதைப் பொருட்படுத்தாமல் நீதி மேலும் தாமதிக்கப்படுவதாக அவை புலம்பின. இன்னொரு பக்கம் தமிழ் ஊடகங்கள், கிளர்ந்தெழுந்த உணர்ச்சிவசத்திற்கு தீனி போடவும், அதை வைத்தே விற்பனையைப் பெருக்கவும் முனைந்தனவே ஒழிய அறிவார்ந்த நிலையில் மக்களை வழிநடத்தவே இல்லை. 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, 'லீவர் சத்தம் காதில் கேட்க' காத்திருந்த ஊடகங்கள், எப்போதும் சராசரியான கூட்டு மனநிலையின் பிரதிபலிப்பாகவே இயங்குகின்றன.

ஒடுக்குமுறைகளுக்கு அப்பாற்பட்டும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்தும் மனித உயிர் மேல் பற்று கொள்ளும், அதன் வாழும் உரிமைக்கான உத்திரவாதத்தை அளிக்கும் உயர் நிலையே மரண தண்டனை ஒழிப்பின் அடிநாதம். பாகுபாடுகளுக்கு சாத்தியமிருக்கிற எல்லா கூறுகளாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மக்களை "மனித உரிமை' என ஒற்றைக் குரலில் முழங்க வைப்பது எளிதல்ல. ஆனால், இன்றைய பெருந்தேவை அதுதான். வாழ்வின் நெருக்கடிகளும் அழுத்தங்களும் யாரை வேண்டுமானாலும் உணர்ச்சிவசப்படச் செய்யலாம். பகுத்தறிய முடியாத மனிதன் உணர்ச்சிகளிடம் தோற்று குற்றங்கள் புரிகிறான். மரண தண்டனை எதிர்ப்பு என்பது ஒரு சதவிகிதம்கூட குற்றங்களுக்கான ஆதரவாகாது.

குற்றமிழைத்தவரைக் கொல்வது ஒருபோதும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியாகாது. வெறுமனே அது பழிவாங்கும் செயல். உணர்ச்சி மீறலில் ஒருவர் நிகழ்த்திய குற்றத்திற்கு திட்டமிட்ட கொலை எப்படி தண்டனையாக முடியும்? நமது நீதியமைப்பு சரியாக இயங்குமானால், தண்டனை காலத்தில், பக்குவப்பட்ட மனிதனாக மாற்றி மீண்டும் உலகோடு இணைத்துவிட வேண்டும். திருந்துவதற்கும் மறுவாழ்விற்குமான வாய்ப்பை நல்குவது உயர்ந்த மனித மாண்பு. அந்த வாய்ப்பைப் பெற எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காகத் தொடங்கிய உரிமைக் குரல், மரண தண்டனையை முற்றிலுமாக இந்தியா ஒழிக்கிற வரை ஓயக் கூடாது.

Pin It