மூன்று தலைமுறைகளாக சாலை அருகில் வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்த தலித் மக்களை ஒரு வீட்டுமனை வணிகர், அரசியல் மற்றும் அடியாட்களின் பலத்தோடு அடித்து விரட்டியிருக்கிறார். அரசு அதிகாரிகளும் இதை வேடிக்கை பார்த்திருக்கின்றனர். வீடுகளை இழந்த மக்கள் - முள் காடுகளிலும், மாட்டுக் கொட்டகையிலும் வாழ்ந்து வருகின்றனர். அம்பேத்கர் மாவட்டம் எனப் பெயர் பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தான் இக்கொடுமை நடந்திருக்கிறது.

அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அடக்கப்படும் மக்களுக்கு தெரியாமலேயே அதை நிறைவேற்றுவது. அடையாளத்தை மறைத்துக் கொண்டு அடக்குமுறையை ஏவுவது. வெளிப்படையாக அறிவித்துவிட்டே அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது. இப்படி மூன்று வகையாக அவற்றைப் பிரிக்கலாம். தலித் மக்களுக்கும், வறியவர்களுக்கும் இன்று இழைக்கப்படும் கொடுமைகளை, மேலே சொன்ன மூன்றாவது பிரிவிலே கொண்டு வரலாம். இன்று தலித் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகவும், கண்களாகவும் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றன. சட்டங்கள் காவல் காக்கின்றன. ஊடகங்கள் கவனிக்கின்றன. இவற்றுக்கு இடையேதான் வன்கொடுமைகள் நடந்தேறுகின்றன. கடைவீதியில் எல்லாரும் பார்த்திருக்க ஒருவரை தாக்குவது போல, தலித்துகள் தாக்கப்படுகின்றனர்.

இக்கொடுமைகளை இயல்பானதாக எடுத்துக் கொள்ள பழகிவிட்ட சமூகத்தில், இக்கொடுமைகளை இழைப்பவனின் வெட்கமில்லாத துணிச்சலுக்கு நடுவே வாழ்கின்ற தலித் மக்களுக்கு, அவர்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான காலம் இதுதான். தலித் மற்றும் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நலத்திட்ட நிதியைத்தான் "காமன்வெல்த்' விளையாட்டுப் போட்டிகளுக்கு நடுவண் அரசு செலவிட்டுள்ளது. இத்தகவலை எவ்விதக் கூச்சமுமின்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 27.8.2010). தலித் மக்களின் நலன் நடுவணரசுக்கு "காமன் வெல்த்' - பொதுநலனாகத் தெரியவில்லை!

இந்திய அளவில் 2007இல் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 30,034. முந்தைய ஆண்டில் இக்குற்றங்கள் 33,615 என அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. ஆட்சியில்தான் நேர்மையான தலித் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சி. உமாசங்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுவுடைமைக் கட்சிகளும், இன்னபிற அமைப்புகளும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களை அக்கறையோடு ஆராய்ந்து தீர்க்காமல், மக்களிடையே வீண்கலகம் விளைவிக்கும் வேலை என அரசு குற்றம் சாட்டி வருகிறது. தலித் மக்களுக்கு இது நிச்சயமாக ஆபத்தான காலம்தான்!

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது என்பது தலித் கட்சிகள், அமைப்புகள், செயல்பாட்டாளர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் செயல்படாத தன்மையைக் காட்டுவதற்கான அளவுகோல் என உறுதியாகச் சொல்ல முடியும். தலித் சக்திகள் விலை போவதாலும், எதிர்ப்புக் குரல்கள் குறைவதாலும் ஆதிக்க சாதியினர் அரசு எந்திரத்தையும், காவல் துறையையும், வன்முறையாளர்களையும் துணையாகக் கொண்டு சிறிதும் அச்சமின்றி வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. இப்படியான ஒரு சாதிய வன்கொடுமை மிகக் கொடூரமான முறையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நிகழ்ந்திருக்கிறது.

காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்தவுடன், தில்லி கோட்டையில் முதலில் ஏற்ற தேசியக் கொடியை நெய்து தந்த ஊர், வள்ளுவரை வரைந்த ஊர், காமராசரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து முதலமைச்சராக ஆக்கிய ஊர், பொதுவுடைமைத் தோழர்களை ஆட்சி மன்றத்திற்கு அடிக்கடி அனுப்பும் ஊர் என்ற பெருமிதங்களைக் கொண்ட குடியாத்தத்தின் இதயப்பகுதியில் நடந்தேறியிருக்கும் வன்கொடுமை, அதன் வரலாற்றில் அழிக்க முடியாத கறை.

குடியாத்தம் தங்கம் நகர் ஜோதி மடம் பகுதியில் மேல் ஆலத்தூர் சாலையை ஒட்டியுள்ள 3.29 ஏக்கர் நிலத்தை மா. செல்வம் என்பவர் 9.6.2008 அன்று வாங்கியுள்ளார். இந்த இடம் ஆலத்தூர் சாலையில் உள்ள அஹிலே சுன்னத்வால் ஜமாத் ஜோகி மடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்ப் வாரியம் ஒரு வழக்கையும் தொடுத்திருக்கிறது ("தினகரன்' - 15.8.2010). வக்ப் வாரிய சொத்து என்று சொல்லப்பட்டாலும் தர்காவை நிர்வகித்த சையத் இர்பான் உசேன் உள்ளிட்ட அய்ந்து பேரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கிய வீட்டுமனை வணிகர் செல்வம், அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனைகளை அளந்து விற்பனைக்கு விட்டிருக்கிறார்.

அந்த இடம் நகரின் மய்யப்பகுதியில் இருப்பதால் அதிக மதிப்பு கொண்டது. ஒரு சதுர அடியின் விலை ஆயிரம் ரூபாய். நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்த மனைகளை அணைத்தபடி 35 குடும்பங்களின் வீடுகள் இருந்தன. அவற்றில் பத்து முஸ்லிம் குடும்பங்கள். இரண்டு குடும்பங்கள் மரமேறும் தொழில் செய்கின்ற ஈடிக நாயுடுகளுடையவை. மீதமிருக்கும் 23 குடும்பங்கள் தலித் மக்களுடையவை. இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான கூலி வேலைகளை செய்கின்ற ஏழை மக்கள்.

இம்மக்களை விரட்டிவிட்டு, அவர்களின் வீடுகளை இடித்துவிட்டால் தன் வீட்டு மனைகளுக்கு மேலும் மதிப்பு கூடிவிடும் என திட்டம் போட்ட செல்வம், அப்பகுதி நகரமன்ற உறுப்பினரான பார்த்தீபன் (அ.இ.அ.தி.மு.க.) என்பவரின் துணையோடு, அம்மக்களை மிரட்டி வெளியேற்றிவிட்டு, தனது திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

அம்மக்கள் குடியிருந்த இடம் பாட்டை புறம்போக்கு நிலமாகும். அவ்வீடுகளுக்கு முறையான மின் இணைப்பையும், குடிநீர்க்குழாய் இணைப்பையும் பெற்றிருந்த அம்மக்கள் வீட்டுவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வந்துள்ளனர். உணவு வழங்கல் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் அம்முகவரியின் பேரிலேயே அம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் அம்மக்களின் வாழ்க்கை மூன்று தலைமுறை. வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு, இன்று ஒரு மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களில் 80 வயது நிரம்பிய ஒரு மூதாட்டி, தனது மாமனார் மாமியார் அவ்விடத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறுகிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அம்மக்கள் அங்கே வசித்து வந்துள்ளனர். அம்மக்களின் வீடுகளுக்குப் பின்புறம் குளியல் கொட்டகைகளை போட்டுக் கொள்ள தர்க்கா பொறுப்பாளர்கள் அனுமதித்திருக்கின்றனர்.

இம்மக்களை விரட்டுவதற்கு முயன்ற செல்வம் பலமுறை அவர்களின் குடிசைகளை தீ வைக்க, தனது ஆட்கள் மூலம் முயற்சி செய்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இன்று பெரும் வீட்டுமனை வணிகராக இருக்கும் செல்வம், பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டுமானப்பணிகளை செய்து வந்த தொழிலாளி. பா.ம.க. ஆதரவாளரும் கூட. ஒரு சில மாதங்களுக்குமுன்புதான் அவர் தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். வன்னியரான இவருக்கு இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் செல்வாக்குள்ள ஆளும் கட்சி பிரமுகர்களின் நட்பும் ஆதரவும் கிடைத்திருக்கும் என்று யூகிக்க இடமுள்ளது.

புதிய பலத்துடன் தனது திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கிய செல்வம் தலித் மக்களையும், ஏழைகளையும் அடித்து விரட்டுவதற்கு தேர்ந்தெடுத்த நாள் ஏப்ரல் 14. அம்பேத்கர் பிறந்த நாளன்று அம்மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 14 அன்று காலையிலேயே 12 ஜே.சி.பி. வண்டிகளுடனும், அய்ந்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களுடனும் அடியாட்களோடும் வந்திறங்கிய செல்வம், மக்களை விரட்டிவிட்டு வீடுகளை இடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நூற்றுக்கும் குறையாத அடியாட்கள் நுழைந்து பொருட்களை எடுத்து வந்து சாலையில் எறிந்திருக்கின்றனர். வயதானவர்களையும், குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளியுள்ளனர். காலில் விழுந்து கதறிய பெண்களின் முறையீடை எவரும் பொருட்படுத்தவேயில்லை. அப்புறப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருந்தபோதே நான்கு ஆடுகளை வெட்டி, பிரியாணி தயாரிக்கும் வேலையும் இன்னொருபுறம் நடந்து கொண்டிருந்திருக்கிறது. ஆடு வெட்டிய கத்தியை ரத்தம் ஒழுகக் கொண்டு வந்து, எதிர்க்கும் மக்களின் கழுத்தில் வைத்து, “ஆட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று மிரட்டியுள்ளனர்.

“சக்கிலிய நாய்களே, செருப்புத் தைக்கிற உங்களுக்கு இந்த இடம் கேக்குதா?” என்று எகத்தாளம் பேசிய செல்வம், மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் தலித் மக்களைத் திட்டியுள்ளார். வீடுகளினருகில் இருந்த வாழை மரங்களும், முருங்கை மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. மின் இணைப்புகளும், குடிநீர்க் குழாய்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அம்மக்களுக்கு குடிநீர் வழங்க நகராட்சி கட்டித் தந்திருந்த குடிநீர்த் தேக்கத் தொட்டி (குதூணtஞுது) இடிக்கப்பட்டு, அருகில் உள்ள சுடுகாட்டில் வீசப்பட்டுள்ளது. ஆண்களை கொன்று விடுவதாக மிரட்டி, வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

அக்குடியிருப்புகளை ஒட்டியுள்ள வீடுகளில்தான் குடியாத்தம் நகரின் மாநகராட்சி ஆணையாளரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் வசிக்கின்றனர். அவர்கள் இருவரும் வீடுகளை அப்புறப்படுத்துவதை பார்த்துக் கொண்டே போயிருக்கிறார்கள். ஏனென்று கேட்க அம்மக்களுக்கு ஒரு நாதியும் இல்லை. சுவர்களும் கூரைகளும் இடிந்து விழும் புழுதியில் அம்மக்களின் முகங்களும், எந்திரங்களின் உறுமலில் அவர்களின் ஓலமும் மறைக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று தலைமுறையாய் அம்மக்கள் வாழ்ந்த இடம், சில மணி நேரங்களில் சுவடு தெரியாமல் மாற்றப்படுவதை அம்மக்கள் அழுதுகொண்டு, உயிர் பயத்தில் நடுங்கியபடி, பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். வீடு என்பது வெறும் கட்டடமல்ல. அது அரூப உயிர்கொண்டு நம்÷மாடு வாழும் ஜீவன். அம்மக்களைப் பொருத்தவரை அவர்கள் கண்முன்னாலேயே பகலில், எல்லாரும் பார்த்தறிய நடந்தேறிய கொலைகள்தான் அவை. செங்கற்களும், இடிபாடுகளும் டிராக்டர்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மணி நேரங்களிலேயே அங்கு வீடுகள் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அங்கேயே அமர்ந்து அடியாட்கள் விருந்துண்டு கலைந்திருக்கின்றனர். அடியாட்கள் ஒவ்வொருவருக்கும் கூலியும் மது பாட்டிலும் வழங்கப்பட்டுள் ளன. அங்கு தயாரிக்கப்பட்ட பிரியாணி, முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாளி நிறைய அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது!

இம்மக்களை மிரட்டி - அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டவர்கள் பல்வேறு தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் அம்மக்கள். இச்செய்தி உண்மையாக இருக்குமானால், இதைவிட வெட்ககரமானது வேறொன்றுமில்லை. இவ்வளவு மோசமான வன்கொடுமை நடந்தேறியும் ஏன் இன்னும் ஒரு தலித் கட்சியும் வாய் திறக்கவில்லை என்ற கேள்வி, அந்த அய்யத்தை வலுப்படுத்துகிறது. சென்னை குடிசைவாசிகளுக்காக அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திய செ.கு. தமிழரசன், அவரின் சொந்த ஊரில் நடந்த இக்கொடுமையை கண்டித்தும் உடனடியாக போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும். இப்பகுதியில் பலமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் ஆகிய தலித் கட்சிகள் இதற்காகப் போராட முன்வந்து வதந்திகளின் வாயை மூட வேண்டும்.

வீடுகளை இடித்த பிறகு பதினைந்து நாட் களுக்கும் மேலாக அம்மக்களை எங்கும் போகவிடாதபடி - மிரட்டி வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் புகார்கள் எதுவும் பதிவாகி விடாதபடி தடுக்கப்பட்டிருக்கிறது. தங்க வீடின்றி, அந்த நெடுஞ்சாலையின் எதிர்ப் புறத்திலிருக்கும் முட்புதர்களின் கீழே சில நாட்கள் வாழ்ந்த மக்கள், இறுதியாக மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இன்று அந்த மாட்டுக் கொட்டகையில் 10 குடும்பங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படுத்துக் கொள்ளும் அங்கு, பள்ளி செல்லும் பெண்கள் சிலரும், பேறு காலத்தை எதிர்நோக்கியுள்ள நிறைமாத கர்ப்பிணியும், குழந்தைகளும், வயதான மூதாட்டியும் உண்டு. கொசுக்கடியிலும், பாம்பு பயத்திலும் கழிந்து கொண்டிருக்கிறது அவர்களின் இரவு.

இம்மக்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், செல்வம் தருவதாக சொன்ன மாற்று இடத்தை நம்பி வேறொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து, அவரின் மிரட்டலுக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள். செல்வம் தருவதாக வாக்களித்த இடம் அம்மக்களுக்கு வாழ ஏற்ற இடமல்ல. மேலும் அவர், அம்மக்களுக்கு எழுதித் தந்த "பவர் பட்டா' சில நாட்களிலேயே ரத்து செய்யப்பட்டும் இருக்கிறது. வேறு ஊர்களில் வீடுகளை வைத்திருந்த அய்ந்து குடும்பங்கள், செல்வம் தந்த சில ஆயிரம் ரூபாய்களை வாங்கிக் கொண்டு இடம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால், செல்வம் இப்போது எல்லாருக்கும் மாற்று இடமும், இழப்பீட்டு தொகையும் வழங்கிவிட்டதாக பொய்ப் பரப்புரையையும் செய்து வருகிறார்.

வீடிழந்த மக்கள் புகார் கொடுக்கச் சென்றபோது காவல் துறை அதை வாங்க மறுத்திருக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் அரசு அலுவலர்கள் செல்வத்தின் முகவர்களாக மாறி, “செல்வத்தை பகைத்துக் கொண்டால் உயிரோடு வாழ முடியாது, அவர் சொல்கிறபடி கேளுங்கள்” என பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து காலில் விழுந்து கதறியுள்ளனர் அம்மக்கள். எதுவும் நடக்கவில்லை.

செல்வம் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களை சரியாக வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தவர்களைதான் அவர் அப்புறப்படுத்தியுள்ளார். அம்மக்களுக்கு இழப்பீடும், மாற்று இடமும் வழங்கியுள்ளார். அதை ஏற்று அம்மக்கள் பத்திரம் எழுதி தந்துள்ளனர். எனவே, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறது அரசு நிர்வாகம். கையூட்டுக்கும் சாதி அபிமானத்திற்கும் அடிமையாகிப் போன அரச எந்திரம், இச்சிக்கலில் தன் கொடூர முகத்தை மீண்டும் ஒருமுறை காட்டி இருக்கிறது. தங்களுக்கு பட்டா வேண்டும் என்று நீண்ட காலமாக அம்மக்கள் போராடி வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கை நிறைவேறவில்லை. ஆனால், நிலவணிகர் செல்வம் கேட்டதும் புறம்போக்கு இடத்தையும் அவர் நிலம் என்று சொல்கிறது "வருவாய்'த் துறை. அலுவலர்களுக்கு தேவை காகிதம். மாற்றுவதற்கேற்றதாகக் கொஞ்சம்; மாற்ற முடியாததாகக் கொஞ்சம். மக்களின் அழுகுரல்கள் அவர்களுக்கு கேட்பதேயில்லை. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. இச்சிக்கல் இப்போது வேறுமுகம் எடுத்திருக்கிறது.

உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட அம்மக்கள் இறுதியாக தஞ்சமடைந்த இடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இக்கட்சியின் குடியாத்தம் அலுவலகத்திலேயே அய்ந்து நாட்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் இம்மக்கள். இம்மக்களுக்குரிய இடத்தை மீட்டுத் தரக் கோரியும், வீட்டுமனை வணிகர் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி. லதா தலைமையில் 8.8.2010 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இச்சிக்கலைத் தீர்க்க பலமுறை மனு கொடுத்தும் பயனில்லாததால், 12.8.2010 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஒன்றையும் தலித் மக்கள் பாய், தலையணைகளோடு நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத், பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தீணடாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான லதா உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டு, தலித் மக்களோடு 6 நாட்கள் சிறையிலிருந்தார்கள்.

ஜி. லதா, இருபது லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக செல்வம் மற்றும் நகர மன்ற உறுப்பினர் பார்த்தீபன் ஆகியோர் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்கள். மக்களை குழப்பவும், அவப்பெயரை உண்டாக்கவும் செய்யப்படும் சதியே இந்த வழக்கு என்கிறார் லதா. லதா மீது வழக்குப் பதிவு செய்வதில் வேகம் காட்டுகிறது காவல் துறை. ஆனால் செல்வம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமை வழக்கு, மிகத் தாமதமாக பதியப்பட்டிருக்கிறது. மேலும், காவல் துறை அவர்களை கைது செய்யவில்லை. தலைமறைவாகி விட்டதாக சொல்லிவிட்டு ஊரிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

நில வணிகர் கொடுத்த புகாரையும், செய்திகளையும் வெளியிட்ட நாளேடுகள் எதுவும், தலித் மக்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதை வெளியிடாமல் மறைத்துவிட்டன. அம்மக்களின் குறையை தீர்க்க அரசு முன்வரவில்லை. அவர்களுக்காகப் போராடுகின்றவர்களை கைது செய்கிறது. பொய் வழக்கு புனைகிறது. இன்று சொந்த வீட்டை இழந்த அம்மக்கள் ஏதிலிகளைப் போல மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். குடிசையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என அரசு சொல்லி வருகிறது. இம்மக்களுக்கோ குடிசையும்கூட இல்லை. அரசும், அரசு நிர்வாகமும் செல்வம் என்கிற, பணம் கொழிக்கும் நில வணிகர் ஒருவருக்காக செயல்படுகிறதா? பராரிகளாய் நிற்கும் தலித்துகளின் நலனுக்காக செயல்படுகிறதா? அரசு உடனடியாக இச்சிக்கலில் இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டு, தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் அம்மக்கள் இழந்த இடத்தை மீட்டுத் தர வேண்டும்.

இக்கொடுமையான நிகழ்வால் இப்பகுதி தலித் மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கூவத்தை சுத்தப்படுத்துவதற்கும், மேம்பாலங்கள் கட்டுவதற்கும் சென்னையில் இருக்கிற 5 லட்சம் மக்களை தமிழக அரசு முறையான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் விரட்டுகிறது என்று, மனித உரிமை ஆணையம் கண்டித்திருக்கிறது. தலைநகரில் மட்டும் அல்ல, கிராமங்களிலும்கூட ஏழைகளையும் தலித் மக்களையும் வீடுகளில் இருந்து விரட்டும் திட்டம் நடக்கிறதா எனத் தெரியவில்லை! தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலித்துகளுக்கு எதிரான அரசு என்ற அவப்பெயரை சம்பாதித்துக் கொள்வது ஆளும் கட்சிக்கு நல்லதல்ல. ஏனென்றால், இந்த அரசையோ, வேறு எந்த அரசையோ ஆட்சியில் அமர வைப்பது தலித் மக்கள்தான்; செல்வம் வகையறாக்கள் அல்ல. 

- நல்லான்

Pin It