தற்பொழுது, எகிப்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இருந்த தடைச்சுவர், சூயஸ் கால்வாயைக் கைமாற்றிக் கொடுத்ததற்குப் பிறகு அகற்றப்பட்டுள்ள நிலைமையில், முஸ்லிம் நாடுகள் பாகிஸ்தானுடன் அணி சேர்ந்து, அந்தப் பக்கம் ஒரு முகாமாக அமைத்துக் கொள்வதில் அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்தப் பக்கத்தில் லாஸாவை (திபெத்தை) வசப்படுத்திக் கொள்வதற்கு சீனர்களை அனுமதித்ததன் மூலம், சீனர்களுக்கு அவர்களுடைய எல்லையை இந்திய எல்லையைத் தொடும்படியாகச் செய்வதற்கு நடைமுறையில் பிரதமர் சீனர்களுக்கு உதவி செய்துள்ளார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, இந்தியா – இப்பொழுதே ஆக்கிரமிப்பு ஆபத்திற்கு ஆட்படாத போதிலும்கூட, ஆக்கிரமிப்பு ஆபத்து இருக்கவே செய்கிறது – எப்போதும் ஆக்கிரமிப்பு செய்யும் பழக்கம் உள்ளவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படக் கூடும் என்று நம்பாவிட்டால், அது நாட்டு நலனில் அக்கறையற்ற செயலாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இனி, நான் பிற கேள்விகளுக்கு வருகிறேன். நாம் ‘சியாட்டோ'வில் (தென்கிழக்கு ஆசிய ராணுவக் கூட்டணி) சேர்ந்தால் ரஷ்யா என்ன சொல்லும்? நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். ரஷ்ய வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அம்சம் என்ன? நமது அயல்நாட்டுக் கொள்கையின் கேந்திரமான அம்சம், பிற நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதானே தவிர, நமது சொந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதல்ல. நமக்கு காஷ்மீர் பிரச்சினை இருக்கிறது. அதற்குத் தீர்வு காண்பதில் நாம் ஒருபோதும் வெற்றியடையவில்லை. அது ஒரு பிரச்சினை என்பதையே எல்லோரும் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால், திடீரென்று ஒரு நாள் விழிப்படைந்து, அந்தப் ‘பேய்' அங்கே இருப்பதைக் காண்போம்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப் பாதை தோண்டும் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார் என்று நான் காண்கிறேன். அய்யா! இது பிரதமர் செய்யக் கூடிய மிகவும் ஆபத்தான விஷயங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்துடன் பிரான்சை இணைப்பதற்கு இங்கிலீஷ் கால்வாயின் அடியில் ஒரு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்பது பற்றி கடந்த 50 ஆண்டுகளாக நாம் கேள்விப்படுகிறோம். யாரோ இந்த யோசனையைக் கூறி வருகிறார்கள். ஆனால், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆங்கிலேயர்கள் இதுவரையிலும் ஏதும் செய்யவில்லை. ஏனெனில், அது இருபுறமும் கூரான ஓர் ஆயுதம்.

எதிரி, பிரான்சைப் பிடித்துவிட்டால், அந்த சுரங்கப் பாதையைப் பயன்படுத்தி, இங்கிலாந்துக்கு துருப்புகளை விரைவாக அனுப்பி, இங்கிலாந்தையும் பிடித்துக் கொள்ள முடியும். அதுவும் நடக்கக் கூடும். பிரதமர், அந்த சுரங்கப் பாதையைத் தோண்டுவதன் மூலம், அதைத் தான் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறார். அது எப்பொழுதும் இரு வழிப்பாதையாகவே இருக்க முடியும் என்பதை அவர் உணரவில்லை. எதிர்ப் பக்கத்தில் வரும் ஓர் ஆக்கிரமிப்பாளன் காஷ்மீரையும் பிடித்துக் கொண்டால், நேராக அவன் பதான் கோட்டுக்கேகூட வர முடியும்; ஒருவேளை பிரதமரின் வீட்டுக்கே வந்துவிட முடியும் – எனக்குத் தெரியாது.

இனி, ஒன்றிரண்டு சிறிய செய்திகளைப் பற்றி பேசுவோம். ஆம், திரு. மாவோவினால் உருவாக்கப்பட்டு, திபெத்தை ஆக்கிரமிக்காத ஓர் ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டு ‘பஞ்சசீலம்' என்றழைக்கப்படுவதை பிரதமர் சார்ந்து நிற்கிறார். சரி, இந்தப் பஞ்சசீலத்தை ஆழ்ந்த நோக்குடன் பிரதமர் எடுத்துக் கொண்டிருப்பது எனக்கு ஓரளவு வியப்பை ஏற்படுத்துகிறது. அய்யா! பஞ்சசீலம் என்பது புத்த மதத்தின் சாரமான பகுதியாகும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். பஞ்சசீலத்தில் மாவோவுக்கு ஏதாவது நம்பிக்கையிருக்குமானால், அவர் தன்னுடைய சொந்த நாட்டிலேயே புத்த மதத்தவர்களை முற்றிலும் வேறுவிதமாக மதித்து நடத்துவார். அரசியலில் பஞ்சசீலத்திற்கு இடமில்லை. அதுவும் கம்யூனிச நாட்டு அரசியலில் அதற்கு இடமே இல்லை. ஒரு கம்யூனிஸ்ட் நாடு இரு நன்கு அறிமுகமான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. அவை எப்போதும் அதன் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. ஒன்று ஒழுக்க நெறி. எப்பொழுதும் தொடர்ந்து மாறிய வண்ணம் இருக்கும். ஒழுக்க நெறி என்று ஒன்று கிடையாது. இன்றைய ஒழுக்க நெறி நாளைய ஒழுக்க நெறியல்ல.

இன்றைய ஒழுக்க நெறிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றலாம். அதே அளவு நியாயத்துடன் நீங்கள் உங்கள் வாக்கை நாளை மீறலாம். ஏனெனில், நாளைய ஒழுக்க நெறி வேறாக இருக்கும். இரண்டாவது செய்தி என்னவெனில், ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசு பிற நாடுகளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது, ஒவ்வொரு பரிமாற்றமும் தனித்தனியானவையாக இருக்கும். நாம் ஒருவருடன் பரிமாற்றம் செய்யும்போது நல்லெண்ணத்துடன் தொடங்குவோம், நன்றியுடன் முடிப்போம். ரஷ்யர்கள் ஒருவருடன் பரிமாற்றம் செய்யும்போது, அவர்கள் நல்லெண்ணத்துடன் தொடங்குவதில்லை. அது போன்றே முடிக்கும்போதும் எத்தகைய நன்றியையும் தெரிவிக்க மாட்டார்கள். ஒவ்வொரு பரிமாற்றமும் அதனதனுடனேயே தொடங்கி, அதனதனுடனேயே முடிந்துவிடும். நிலைமை பக்குவமடையும்போது, பிரதமர் இதைக் காண்பார் என்று உறுதியாக எண்ணுகிறேன்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 15, பக்கம் : 881)

Pin It