இலங்கையில் தாங்கள் இரண்டாம் தரக் குடிகளாக நடத்தப்படுவதை ஏற்க மறுத்து, கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் நடத்தும் விடுதலைப் போர், இன்று உக்கிரமடைந்துள்ளது. தமிழகத் தலைநகரில் 24.10.2008 அன்று நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம், ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு மாபெரும் மருந்தாக அமைந்தது. ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே இவ்வுணர்வை சீர் குலைக்கும் வகையில், அரசியல் கட்சிகள் நடந்து கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்களே தவிர, நடுவண் அரசைக் கண்டித்து எவரும் பதவி விலகி, தங்களளவில் தீர்மானத்தை நிறைவேற்றத் தயாரில்லை.


இலங்கை நாட்டுக்குப் பிரதமராக சென்ற ராஜிவ் காந்தி, அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையின்போது மிகக்கொடூரமாகத் தாக்கப்பட்டதை வசதியாக மறைத்து விட்டு, அந்நாட்டுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என காங்கிரஸ் ஆட்சியாளர்களும், அ.தி.மு.க.வும், "இந்து' என். ராம்களும், ஊடகங்களும் விழைகின்றனர். ஆனால், ராஜிவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் முறையாக தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் - அதை திசை திருப்பி தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆட்படுவதை, இவர்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

தெற்காசியாவில், தங்களுக்கு பூகோள ரீதியாகப் பாதுகாப்பு வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே, இந்தியா இலங்கை அரசுக்கு அனைத்து வகை உதவிகளையும் செய்கிறது. இந்திரா காந்தி காலத்தில் இலங்கை அரசைப் பணிய வைப்பதற்காக, போராளிகளுக்கு ஆதரவு அளிப்பது போல செயல்பட்டதும் - இந்தியாவின் சுயநலத்திற்காகத்தான். இன்றைய ஆட்சியாளர்கள் இலங்கை அரசுடன் நேரடியாக நட்புறவு கொண்டு, தமிழர்களை அழிப்பதற்கு உதவுவதும் அதே சுயநலத்திற்காகத்தான். அண்டை நாட்டில் மனித இனம் அழிக்கப்படுகிறதே என்ற கவலையில் இந்திய அரசின் அணுகுமுறை ஒருபோதும் இருந்ததில்லை. நாட்டுப் பற்றுதான் முக்கியம்; மனித நேயம் தேவையில்லை என்று சொல்லுமளவிற்கு இங்கு மனிதர்கள் மலிந்து கிடக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ்த் தேசியவாதிகள் கூட, இப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இடையறாது வலியுறுத்துகின்றனர். காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தன் சொந்த நாட்டு மக்களையே இந்திய ராணுவம் எப்படி ஒடுக்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் எந்தளவுக்கு மனிதநேயத்தோடு நடந்து கொள்வார்கள் என்பது புலப்பட்டு விடும். இந்தியா போரையும் தடுக்காது; ஆயுதங்கள் வழங்குவதையும் நிறுத்தாது என தமிழ்நாட்டுக்கு வந்து அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்கான நம்முடைய தார்மீக ஆதரவு, தமிழ் எல்லையுடன் நின்றுவிடக் கூடாது. காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும்; மணிப்பூர் மக்கள் சந்திக்கும் தொடர் அடக்குமுறைகளுக்கு எதிராகவும்; ஒரிசா கிறித்துவர்களுக்காகவும்; இங்கு நாள்தோறும் வன்கொடுமைகளை சந்திக்கும் தலித்துகளுக்காகவும் குரல் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஈழப் பிரச்சனையில் தலித்துகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதற்கு தடையாக இருப்பது, இப்பிரச்சனையில் முன்னின்று செயல்படும் தலைவர்களின் / அமைப்புகளின் போலியான தமிழ் உணர்வும் ஒரு முக்கியக் காரணம். ஆம், பீறிட்டுக் கிளம்பியிருப்பதாகச் சொல்லப்படும் தமிழுணர்வுக்கும் கூட ஜாதி இருக்கிறது!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார்; உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு சம உரிமையை மறுக்கும் (தான் சார்ந்த) ஜாதித் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார். அதேபோல, இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கான ஆதரவில் முன்னணியில் நிற்கும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஜாதி சங்கம் நடத்தும் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் வெட்கமின்றிப் பங்கேற்கிறார்; ஈழத்தமிழர்களுக்காகவும் கசிந்துருகுகிறார்.

பாட்டாளித் தமிழர்களுக்காக கட்சி நடத்தும் ராமதாஸ், நீதித் துறையில் வன்னியர்களுக்கு மட்டும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ, ஒரு முறையாவது சேரித் தமிழர்களுக்காக சிறை சென்றதுண்டா? சொந்த நாட்டுத் தமிழனிடம் ஜாதி வெறியோடு நடந்து கொள்கின்றவர்கள், அண்டை நாட்டுத் தமிழனிடம் மட்டும் மொழி உணர்வோடு நடந்து கொள்வதாக சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?
Pin It